தன்னம்பிக்கையில் உருவான குழம்புக்கடை!! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 45 Second

‘‘கேட்டரிங்ன்னா யாரு ஆர்டர் கொடுப்பாங்க? எந்த ஒரு உணவகம் ஆரம்பிக்கும் முன்பு நம்முடைய உணவு மக்களுக்கு பிடிக்கணும். அதன் பிறகுதான் இங்க ஆர்டர் கொடுக்கலாம்னு முடிவுக்கு வருவாங்க. எங்களின் கைப்பக்குவத்தை முதலில் மக்கள் ருசிக்கத்தான் கூட்டு, பொரியல், குழம்புக் கடையை ஆரம்பிச்சேன். இப்போது கேட்டரிங்கும் சேர்த்து செய்து வரேன்’’ என்கிறார் மதுரையை சேர்ந்த ராதிகா. இவர் மதுரை சின்னக்கடைத் தெருவில் ‘பகவதி கேட்டரிங்’ என்ற பெயரில் இதனை நடத்தி வருகிறார்.

‘‘என்னுடைய சொந்த ஊரு மதுரைதான். எனக்கு ஒரு அண்ணன், தம்பி. நாங்க குடும்பமா உள்பாவாடை பிசினஸ் செய்து வந்தோம். அதாவது மொத்தமா துணி வாங்கி அதை உள்பாவாடையா வெட்டி தைச்சு விற்பனை செய்து வந்தோம். 2001ல் கல்யாணமாச்சு. என் கணவரின் குடும்பம் மதுரையில் ‘பகவதி ஸ்வீட்ஸ்’ என்ற பெயரில் ஸ்வீட் கடை வச்சிருக்காங்க. என் கணவருடன் சேர்த்து நான்கு பேர். கூட்டுக்குடும்பமா தான் இந்த ஸ்வீட் கடையை நடத்தி வந்தோம். மாமனார், மாமியார் என எல்லாருமே இந்த கடையில் வேலை பார்ப்போம்.

அப்ப ஒரு ஸ்வீட் கடைதான் வச்சிருந்தோம். இன்னொரு கடை ஆரம்பிக்கலாம்ன்னு என் மாமனார் சொன்னார். காரணம் ஒரே கடையில் மொத்த குடும்பத்தையும் நடத்துவது கொஞ்சம் கஷ்டம் தான். அதனால் இன்னொரு கடை வச்சா மேலும் வருமானம் வரும்னு திட்டமிட்டோம். இதற்கிடையில் என் மாமியார் காலமாயிட்டாங்க. என்ன செய்யலாம்ன்னு பேசிய போது தான், நான் என் மாமனாரிடம் நாங்க தனியா கேட்டரிங் செய்ய இருப்பதாக கூறினேன்.

கூட்டுக்குடும்பமாக நாங்க கடையை நடத்தி வந்ததால், எல்லாமே அவங்க அண்ணன்கள் தான் பார்த்துப்பாங்க. இவர் அதில் பெரிய அளவில் ஈடுபாடு காட்டமாட்டார். அவங்களும் அவருக்கு தொழிலை கற்றுத் தரல. எங்களுக்கு ஒரு பொண்ணு, பையன்னு இரண்டு பசங்க. அவங்க வாழ்க்கையை பார்க்கணும்ன்னு நான் தனியே போறதா சொல்லிட்டு வந்துட்டேன்’’ என்றவர் அவர் மாமனாரின் சொந்த வீட்டில் குடி இருந்தாலும், அதற்கான வாடகையை கொடுத்து வருகிறார்.

‘‘தனியே வந்தாச்சு. இனி நம்முடைய குடும்பத்திற்கான வருமானத்தை பார்க்கணும்ன்னு முடிவு செய்தேன். அவங்க ஏற்கனவே ஸ்வீட் கடை வச்சிருக்காங்க. அதனால நான் கேட்டரிங் ஆரம்பிக்க நினைச்சேன். எடுத்தவுடனே கேட்டரிங் ஆர்டர் எல்லாம் வராது. அதனால வெறும் குழும்பு, கூட்டு, பொரியல்னு செய்து விற்கலாம்னு திட்டமிட்டேன். நான் கல்யாணமாகி வந்த போது எனக்கு சமையல் எல்லாம் பெரிசா தெரியாது. இங்க வந்து தினமும் 20 பேருக்கு சமையல் செய்யணும் என்பதால் அதை செய்ய கற்றுக் கொண்டேன். அந்த தைரியம் தான் என்னால் ஒரு தொழிலை செய்ய முடியும்ன்னு எனக்குள் ஒரு நம்பிக்கையை கொடுத்தது. நானும் என் கணவரும் சேர்ந்து ஆரம்பிச்சோம்.

அவருக்கு காய்கறியை எப்படி நறுக்கணும்னு எல்லாம் சொல்லிக் கொடுத்தேன். நான் சமையல் வேலையை பார்த்துக்கிட்டேன். அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமா நானும் அவரும் சேர்ந்து சமைக்க ஆரம்பிச்சோம். எங்களின் வீடு ஒரு சந்து தெரு என்பதால், அந்த பக்கம் போறவங்க மட்டும் பார்த்து வாங்க ஆரம்பிச்சாங்க. ஒரு நாளைக்கு 500 ரூபாய் தான் வியாபாரம் ஆகும். இரண்டு மூணு மாசம் இப்படித்தான் போச்சு. தினமும் 500 வருமானத்தைக் ெகாண்டு எப்படி குடும்பம் நடத்துறதுன்னு சங்கடமா இருக்கும். நான் சமையல் செய்வதை தெரிந்து கொண்டு என் தாய்மாமா தான் முதன் முதலில் சின்ன விழாவிற்கு கேட்டரிங் ஆர்டர் வாங்கிக் கொடுத்தார்.

தனியா செய்ய முடியாதுன்னு எங்க ஸ்வீட் கடையில் ஆஷா அக்கான்னு ஒருத்தர் வேலை பார்த்தாங்க. அவங்க கேட்டரிங் வேலையிலும் இருந்ததால், அவங்களை போன் செய்து வரச்சொன்னேன். அவங்க வந்தது எனக்கு பெரிய உதவியா இருந்தது. வீட்டு வாசல் முன்பு ஒரு டேபிள் போட்டு அதில் குழம்பு பாத்திரம் எல்லாம் வச்சு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம். அதன் பிறகு தான் நாங்க இப்படி ஒரு விற்பனை செய்கிறோம்ன்னு மத்தவங்களுக்கு தெரிய வந்தது. வியாபாரமும் நல்லபடியா நடந்தது. அதனால் சின்னதா ஒரு கடை திறக்க இருப்பதாக என் மாமனாரிடம் சொன்னேன். அவரோ, ‘அதெல்லாம் வேண்டாம், வேணும்ன்னா தெரு முனையில் வச்சு விற்பனை செய்துக்கோ’ன்னு சொல்லிட்டார். அதன்படி எங்க வீட்டில் தெரு ஆரம்பத்தில் வச்சோம். குழம்பு, கூட்டு, பொரியலுடன் சாப்பாடும் கேட்டாங்க.

அதுவும் செய்தோம். தொடர்ந்து கலவை சாதமும் கொடுக்க ஆரம்பிச்சோம். சந்தில் வரப்போறவங்க எல்லாரும் வாங்க ஆரம்பிச்சாங்க. நல்லா பிக்கப் ஆச்சு. இந்த கடை இல்லாமல், கேட்டரிங் ஆர்டரும் வந்தது. எல்லாம் நல்லபடியா போய்க் கொண்டிருந்த சமயம் மறுபடியும் கடையை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. நாங்க கடைப் ேபாட்டிருந்த தெருவில் தான் எங்க மாமனாரின் ஸ்வீட் கடைக்கான கொடவுன் இருந்தது. கடையில் கூட்டம் அதிகம் இருப்பதால் கொடவுனில் இருந்து பொருட்கள் எடுக்க முடியலைன்னு சொன்னாங்க. அதனால் மறுபடியும் வீட்டு வாசல் முன்பு கடையை ஷிப்ட் செய்தோம். நிறைய பேர் கடையை மூடிட்டதா நினைச்சாங்க.

வியாபாரமும் குறைய ஆரம்பிச்சது. பலரும் இப்படி இடத்தை மாற்றிக் கொண்டு இருந்தா எங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அப்ப முடிவு செய்தேன். கடை ஒன்றை கண்டிப்பா திறக்கணும்ன்னு. வீட்டில் சமைத்துவிட்டு கடையில் பார்சல் மட்டும் கொடுக்கலாம்ன்னு திட்டமிட்டோம். இதற்கு வீட்டு அருகிலேயே சின்னதா கடை இருக்கான்னு தேடினோம். எங்களின் அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும். நாங்க எதிர்பார்த்தபடியே கடையும் அமைஞ்சது. இங்க வந்து 5 மாசமாச்சு. கடைன்னு வச்ச பிறகு நிறைய பேருக்கு தெரிய ஆரம்பிச்சது. கடையில் வியாபாரம் மட்டுமில்லாமல் கேட்டரிங்கும் செய்கிறோம். ரொம்ப கஷ்டப்பட்டு தான் நான் இவ்வளவு தூரம் வளர்ந்திருக்கேன்’’ என்றவர் சைவம் மற்றும் அசைவம்
இரண்டையுமே கொடுத்து வருகிறார்.

‘‘சாம்பார் தினமும் இருக்கும். அதைத் தவிர வத்தக்குழம்பு, மோர் குழம்பு, ரசம் இருக்கும். புளிக்குழம்பு மட்டும் கத்தரிக்காய், முருங்கை, நூல்கோல், காலிஃபிளவர்ன்னு ஒவ்வொரு நாளும் மாத்தி மாத்தி வைப்போம். நவதானியத்தில் கூட்டு வாரத்தில் இரண்டு நாட்கள் இருக்கும். இதைத் தவிர காய்கறி பொரியல், கூட்டு கண்டிப்பா இருக்கும். முழு சாப்பாடு, அளவு சாப்பாடும் உண்டு. குழம்பு, கூட்டு, பொரியல் மட்டும் வேண்டும் என்பவர்களுக்கு அதை மட்டும் தனியா தருகிறோம். எங்க கடையில் வடகறி ரொம்ப ஃபேமஸ். இது சவுராஷ்ரியா உணவு. கடலைமாவில் செய்யக்கூடியது. சாப்பிடும் போது மட்டன் சாப்பிடுவது போல் இருக்கும். இவை தவிர கலவை சாதம், பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் கிரேவி, முட்டையும் உண்டு. அசைவ உணவு மட்டும் என் அப்பா, அம்மா செய்து தராங்க. அவங்களுக்கும் ஒரு வருமானம் கிடைக்குமே’’ என்றவர் ஒரு நாள் கூட கடையை மூடியதில்லையாம்.

‘‘கொரோனா போது, வீட்டில் இருந்தபடியே சமைச்சு கொடுத்தேன். என்னுடைய வாட்ஸப் ஸ்டேட்டசில் இன்றைய மெனுவை போட்டிடுவேன். அதைப் பார்த்து ஆர்டர் செய்வாங்க. அந்த சமயத்தில் ஆட்கள் யாரும் இல்லாமல் நானும் என் கணவர் மட்டுமே பார்த்துக் கொண்டோம். முதலில் மதியம் மற்றும் இரவு நேரம் டிபன் என்று இரண்டு வேளையும் வச்சிருந்தோம். இரண்டு நேரமும் செய்வது கொஞ்சம் சிரமமா இருந்தது. அதனால் ஒரு வேளை செய்தாலும் அதை திருப்தியா செய்யணும்னு மதியம் உணவு மட்டுமே வழங்கி வருகிறோம். இப்ப என்னிடம் எட்டு பேர் வேலை பார்க்கிறாங்க. எல்லாரும் ஷிப்ட் முறையில் ஒரு நாள் விட்டு மறுநாள் வருவாங்க. மக்களுக்கும் எங்களின் உணவு பிடிச்சிருப்பதால், பார்சல் மட்டுமில்லாமல் உட்கார்ந்து சாப்பிடுவது போல் ஒரு கடையை பார்க்கிறேன். வீட்டில் சமைத்து இங்கு பரிமாறுவதால், அடுத்த கடையும் வீட்டின் அருகே பார்த்து வருகிறேன்’’ என்றார் ராதிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இசையில் நான் ஃப்ரீ பேட்!! (மகளிர் பக்கம்)
Next post நாட்டு ஆப்பிள் பேரிக்காய்!! (மருத்துவம்)