ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)

Read Time:16 Minute, 37 Second

மாறிவரும் ஃபேஷன் குறித்து அலசுகிறார் ஃபேஷன் டிசைனர் ஷண்முகப்பிரியா

பெண் குழந்தைகள் டீன் ஏஜ் பருவம் அடையும் வரைதான் உடை விஷயத்தில் பெற்றோர் சொல்லைக் கேட்பார்கள். அந்த பருவத்தை அடைந்த பிறகு அவர்களின் தோழிகளே ஃபேஷன் டிசைனராக அவதாரம் எடுப்பார்கள். அப்படியே பெற்றோர்கள் ஆலோசனை கூறினாலும்… ‘‘எல்லாரும் அணிகிறார்கள்… என்னை மட்டும் ஏன் அணிய வேண்டாம் என்று சொல்கிறீர்கள்… எனக்கு என்ன உடை பிடிச்சிருக்கோ அதைத்தான் நான் அணிவேன்’’ என்று வாதிடுவார்கள்.

அவர்கள் தங்களை ஒரு தனி மனுஷியாக நினைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 10 முதல் 19 வயதிற்குள் அடங்கும் இந்த பருவம் குழந்தைப் பருவம் மற்றம் முதிர்வயதிற்கு இடைப்பட்ட பருவம். ஒரு மனிதனின் வளர்ச்சி நிலையில் மிகவும் தனித்துவமான பருவம் இந்த பருவம். டீன் ஏஜ் பருவத்தில் இருக்கும் பெண்ணின் உடல் மட்டுமில்லாமல் அவர்கள் உளவியல் ரீதியாகவும் பல மாற்றங்களை சந்திப்பார்கள். டீன் ஏஜ் பருவம் எப்போது ஆரம்பிக்கிறது? ஒவ்வொருவருக்கும் அது மாறுபடும். சிலர் அந்த பருவத்தை அடையும் முன்பே பூப்படைந்திடுவார்கள். சிலர் தாமதமாக அந்த பருவத்தினை அடைவார்கள். சிலர் மெதுவாகவும் நிலையாகவும் வளர்வார்கள். சாதாரணம் என்று கருதப்படும் இந்த பருவத்தில் பல வரம்புகள் உள்ளன.

ஒரு பெண் குழந்தை பருவமடைவதற்கும் அவர்களின் இளமை பருவத்திற்கும் இடையே வேறுபாடுகளை காண்பது மிகவும் அவசியம். பெண்களின் உடலில் ஏற்படும் பல மாற்றங்களான மாதவிடாய் காலம், மார்பக வளர்ச்சி போன்றவைதான் பருவமடைதல் என்று நாம் எல்லாரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். இவை எல்லாம் பருவமடைவதற்கான முக்கிய அறிகுறிகள் தான் என்றாலும், சில பெண் குழந்தைகளுக்கு உடலில் இது போன்ற மாற்றங்கள் வெளிப்படையாக தெரியவில்லை என்றாலும் அவர்களும் அதற்குண்டான மாற்றங்களை உணர்வார்கள். ஒரு சில குழந்தைகளின் நடவடிக்கை மூலம் அவர்கள் டீன் ஏஜ் பருவத்தை அடைந்துவிட்டார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

பெற்றோர்களிடம் இருந்து விலக ஆரம்பிப்பார்கள். தங்களுக்கு என்று ஒரு பிரைவசி வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குறிப்பாக அவர்களது சகாக்கள், தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பற்றி சிந்திப்பார்கள். அவர்கள் சார்ந்த முடிவுகளில் கூட பெற்றோரை விட அவர்களின் தோழிகள் மிகவும் முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.இளமைப் பருவம் என்பது பெண் குழந்தைகளின் உடல் மாறத் தொடங்கும் நேரம். அந்த சமயத்தில் அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று புரியாது. ஒருவித பயத்தினை ஏற்படுத்தும். அவர்களின் உடல் தோற்றத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்குவார்கள். தங்களின் உடலைப் பாதுகாக்க வேண்டும் என்று உள்ளுக்குள் உணர்வார்கள்.

இதைப் புரிந்து கொண்டு தாய்மார்கள் அவர்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி பேசவேண்டும். இந்த பருவத்தில் இவை எல்லாம் ஏற்படக்கூடிய மாற்றம் என்று அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். எல்லாவற்றையும் விட தோழமையாக பழகவேண்டும். அவர்கள் கேட்கும் கேள்விக்கு ெவளிப்படையாக பதில் அளிக்க வேண்டும். இதன் மூலம் கடினமான விஷயங்களை அவர்களாகவே தெரிந்து கொள்வதற்கு பதில் அதை அம்மாக்கள் ெவளிப்படையாக பேசினால் அதை மிகவும் தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்வார்கள். அவர்கள் மேல் அக்கறை செலுத்தி நீ வளர்கிறாய் பெண்ணே என்று புரிய வையுங்கள். இவை எல்லாம் உடல்ரீதியாக அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை மனரீதியாக பேசி போக்கக்கூடியவை. அதே சமயம் அவர்களின் உடலுக்கு ஏற்ற உடையினையும் சரியாக தேர்வு செய்து கொடுப்பதும் ஒவ்வொரு அம்மாக்களின் கடமை.

இந்த பருவத்தில் குறிப்பாக 12 முதல் 14 வயதில் ஆடையினை மிகவும் ஆர்வத்துடன் அணிய விரும்புவார்கள். இந்த நேரத்தில் நுட்பமாகவும் அதே சமயம் அவர்களுக்கு என தனித்துவமாக உணரக்கூடிய உடை அணியும் பாணியைக் கண்டறிய உதவ வேண்டும். பெரும்பாலானவர்கள் இந்த வயதில் அவர்களுக்காக நீங்கள் தேர்வு செய்யும் உடையினை நிராகரிக்கலாம். காரணம் அவர்கள் தங்களுக்கென ஒரு ஸ்டைலினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்கு என்ன மாதிரியான உடைகள் அணிய விருப்பம் என்று கேட்டு தெரிந்து கொண்டு அதற்கேற்ற உடையினை தேர்வு செய்து கொடுக்கலாம்.

இதனால் பணமும் மிச்சமாகும். காரணம் நீங்கள் காசு கொடுத்து வாங்கும் உடையினை அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் அதை அணியவே மாட்டார்கள். இப்போது உள்ள டிரன்ட் என்ன என்று புரிந்து ெகாண்டு அதற்கு ஏற்ப உடையினை அவர்களுக்கு தேர்வு செய்து கொடுத்து உதவலாம்.

டீன் ஏஜ் பெண்கள் ஆடைகளின் முக்கிய அம்சங்கள் உள்ளாடைகள்: உள்ளாடைகளை கண்டிப்பாக அணிவது அவசியம். இது பெண்களின் மார்பகப் பகுதியில் இருக்கும் தசைகளை இறுக்கிப்பிடித்து அதை முழுமையாக மறைக்கவும் தாங்கிப்பிடிக்கவும் உதவும். மேலும் இதனை அணியும் போது உங்கள் உடைகள் நேர்த்தியாகவும் அதே சமயம் உங்களின் தோற்றத்தினை அழகாகவும் எடுத்துக்காட்டும். மார்க்ெகட்டில் பல வகையான உள்ளாடைகள் பலவித தேவைக்காக உள்ளன. அதை உங்களின் டீன் ஏஜ் குழந்தைகளின் தேவை என்ன என்று ெதரிந்து ெகாண்டு அதற்கேற்ப வாங்க வேண்டும். அதாவது சாதாரண உடை அணிந்தால் அதற்கென தனிப்பட்ட உள்ளாடைகள் உள்ளன.

இதுவே அவர்கள் விளையாட்டு துறையில் ஈடுபடும் போது, ஸ்போர்ட்ஸ் உள்ளாடைகள் என பிரத்யேகமாக உள்ளன. உள்ளாடைகள் போட துவங்கும் போது அவர்களுக்கு ‘பிராலெட்ஸ்’ மூலம் ஆரம்பிக்கலாம். இது மிகவும் வசதியானது, எளிதாக அணியக்கூடியது, இறுக்கிப்பிடிக்காது என்பதால் அந்த பருவத்தில் ஏற்படக்கூடிய மார்பக வளர்ச்சிக்கு மிகவும் சிறந்தது. அடுத்து பருத்தி உள்ளாடைகள். பேடெட், வயர்ட் இல்லாதவை.

தினமும் பயன்படுத்தக்கூடிய எளிமையான உள்ளாடைகள். இவை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது. மேலும் டி-ஷர்ட் அணிவதற்கும் வசதியாக இருக்கும். உங்கள் குழந்தை விளையாட்டு துறையில் ஈடுபட்டால் அதற்கு ஸ்போர்ட்ஸ் உள்ளாடைகள் சிறந்தது. இவை மார்பகங்கள் நகராமலும் விளையாட்டில் முழு கவனத்தோடு ஈடுபடவும் உதவும். எப்போதும் வெள்ளை நிற உள்ளாடைகளை தேர்வு செய்வதை தவிர்க்க வேண்டும். இவை நாம் அணியும் உடைகளுக்கு மேல் வெளிப்படையாக தெரியும். அதனால் வெளியே செல்லும் போது மிகவும் சங்கடமாக உணர்வார்கள்.

இந்தியாவில் எடு மீடியா எடுத்த ஆய்வின் படி இந்திய பெண் குழந்தைகளில் 72% பேர் இந்திய உடைகளுக்கு மாறாக மேற்கத்திய உடைகளையே அணிய விரும்புகிறார்கள். இதில் 38% டீன் ஏஜ் பெண் குழந்தைகள் தாங்கள் இந்திய ஆடைகளை விட மேற்கத்திய ஆடைகளில் தான் பார்க்க அழகாக இருப்பதாக கருதுகிறார்கள். இதில் எஞ்சிய 34% பேர் மேற்கத்திய உடைகள் மிகவும் வசதியானது மற்றும் எளிதாக அணியக்கூடியது என்று கூறியுள்ளனர்.

ஜீன்ஸ் : மேற்கத்திய உடைகளிலேயே டீன் ஏஜ் பெண்கள் விரும்பி அணியும் உடை ஜீன்ஸ். அதன் ஸ்டைல் மற்றும் அணிவதற்கு வசதியானது என்பதால் பலர் அதனையே விரும்புகிறார்கள். ஒரு நான்கு நிறத்தில் ஜீன்ஸ் பேன்ட் இருந்தால் போதும். அதையே எல்லா விதமான குர்த்தி, டாப்ஸ்களுக்கு அணிந்து கொள்ளலாம். இதுவே ஒரு ஸ்டைலான மற்றும் புதிய தோற்றத்தினை ஏற்படுத்தும். ஜீன்ஸ் எல்லா பெண்களுக்கும் பிடித்த உடை தான் என்றாலும், ஒருவருக்கு எந்த மாதிரியான ஜீன்ஸ் அணிந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். ஹைவெயிஸ்ட் என்று சொல்லக்கூடிய இடுப்பில் அணியக்கூடிய ஜீன்ஸ் எல்லாருக்கும் ஏற்றது.

இது அணிவதற்கு மிகவும் வசதியானது மட்டுமில்லாமல் ஒருவரின் இடுப்பு பகுதியினை முழுமையாக மறைக்கக்கூடியது. இதனை கிராப் டாப் அல்லது ஷர்ட்டுகளுக்கு அணியலாம். ஹீல்ஸ் அல்லாத ஷூக்கள் அல்லது ஸ்னீக்கர் வகை ஷூக்கள் அணிந்தால் மிகவும் நேர்த்தியாக இருக்கும். ஸ்கினி ஜீன்ஸ் தொடை மற்றும் கால் பகுதியினை இறுக்கி பிடிக்க கூடிய ஜீன்ஸ் டிரண்டில் இருக்கும் ஸ்டைலான உடை. இவை கால்களை இறுக்கி பிடித்திருப்பதால், ஒரு நாள் முழுக்க நீண்ட நேரம் அணிந்திருக்க முடியாது.

டி-ஷர்ட் மற்றும் டாப்ஸ்: சாதாரணமாக அணியக்கூடிய உடைகளில் டீன்ஏஜ் பருவத்தினருக்கு மிகவும் வசதியான மற்றும் அவர்கள் அதிகம் விரும்பும் உடைகள் என்றால் அது டி-ஷர்ட் மற்றும் டாப்ஸ் போன்ற உடைகள் தான். டி-ஷர்ட்களில் நிறைய வகை உள்ளது. மேலும் அவை பல வித டிசைன்கள் மற்றும் வடிவங்களில் வருகின்றன. சாதாரண காலர் கொண்ட டி-ஷர்ட்கள் இருந்தாலும் பெண்களை மிகவும் அழகாக எடுத்துக் காட்டுவது பீட்டர் பேன் காலர் டி-ஷர்ட்கள். இதில் அடுத்த வகை ஓவர்சைஸ் டி-ஷர்ட். இதை பல வகையில் நாம் வடிவமைத்துக் கொள்ளலாம். இது பல வகை டிசைன்கள் மற்றும் வண்ணங்களில் வருகின்றன.

இது உடலை இறுக்கிப்பிடிக்காமல் இருப்பதால் நாம் அன்றாடம் அணியும் ேபாது மிகவும் வசதியாகவும் அதே சமயம் பார்க்க அழகாகவும் இருக்கும். எவ்வளவு தான் டி-ஷர்ட்கள் இருந்தாலும், பிரின்ட் செய்யப்பட்ட ஒரு டி-ஷர்ட்டாவது டீன் ஏஜ் பெண்களின் அலமாரியில் அவசியம் இருக்க வேண்டும். கருப்பு நிற பிரின்டெட் டி-ஷர்ட் நீல நிற ஜீன்சுக்கு மிகவும்
எடுப்பாக இருக்கும்.

சில பெண்கள் ஜீன்ஸ் எல்லாம் எனக்கு வேண்டாம் அதற்கு பதில் அழகான உடையினை அணிய விரும்புவார்கள். அவர்களுக்கு அழகான பிராக் அல்லது டிரஸ் தேர்வு செய்யலாம். 90களில் இருந்த ஃபேஷன்கள் இப்போது மீண்டும் பிரபலமாகிவருவதால், அழகான டிரஸ் அதற்கு ஏற்ப மேட்சிங் ஷூக்கள் அணிந்தால் பார்க்க அழகாக இருக்கும். இந்த ஸ்டைல் உடைகளை ‘பிரப்பி’ என்று அழைப்பார்கள். ஒரு உடைக்கும் அழகான ஷூக்கள் மட்டுமே அணியும் போது அது அந்த உடைக்கான மொத்த அமைப்பையே மாற்றி அமைத்திடும்.

பொதுவாக டீன் ஏஜ் பருவத்தில் உள்ள பெண்கள் பல வித உடைகளை ஆய்வு செய்ய விரும்புவார்கள். தங்களுக்கு எந்த உடை நன்றாக இருக்கும் என்று தேடிக் கொண்டே இருப்பார்கள். எல்லாரும் அணியக்கூடிய அதே நிலையான சுடிதார், புடவைகளில் இருந்த இவர்கள் மாறுப்பட்டு எக்ஸ்ப்ளோர் செய்ய பெற்றோர்களாகிய நீங்கள் அவர்களுக்கு முழு சுதந்திரம் ெகாடுக்க வேண்டும். அதே சமயம் அவர்கள் எது வேண்டும் என்றாலும் அணியலாம் என்று விட்டுவிடக்கூடாது. அவர்கள் தேர்வு செய்யும் உடைகள் உங்களுக்கும் பிடிக்கும், நீங்கள் உறுதுணையாக இருக்கிறீர்கள் என்று தெரிந்தாலே உடை விஷயத்தில் உங்களைத் தவிர அவர்கள் வேறு யார் மேலேயும் நம்பிக்கை வைக்க மாட்டார்கள்.

மேலும் அவர்கள் ஒரு உடையினை தேர்வு செய்யும் போது, அது அவர்களுக்கு சரியாக இல்லாத பட்சத்தில் கூச்சல் போடாமல் அவர்களுக்கு புரியும் பாஷையில் எடுத்துச் சொல்லுங்கள். அவர்களுக்கு உடையினை தேர்வு செய்ய அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதே சமயம் அவர்கள் விரும்பி தேர்வு செய்த அந்த உடையினை மற்றவர்கள் கிண்டல் செய்யும் போது அவர்கள் கொஞ்சம் பதட்டமடைவார்கள். அவ்வாறு நிகழாமல் இருக்க உங்களின் உறுதியான வார்த்தைகள் மற்றும் ஸ்டைல்களை பரிந்துரைப்பது மூலம், உங்கள் பதின்ம வயது பெண் குழந்தைக்கு ஸ்டைலான ஃபேஷன் உலகினை அமைத்துக் கொடுக்க முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உண்டி சுருக்கல் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் அழகு!! (மருத்துவம்)
Next post கோதுமை டிலைட்ஸ் !! (மகளிர் பக்கம்)