காதலர்களை கவர்ந்து வரும் பெர்ஷியன் லவ் கேக்!! (மகளிர் பக்கம்)
சென்னையில் ஹோம் பேக்கர் கீர்த்தி ஞானசேகரன் தயாரித்து வரும் ‘பெர்ஷியன் லவ் கேக்’தான் இந்த வேலன் டைன்ஸ் டேவில் காதலர்களின் முக்கிய கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது. இதன் சுவையை தாண்டி, இந்த கேக்கிற்கு பின்னால் இருக்கும் வரலாறுதான் இந்த புகழுக்கெல்லாம் காரணம். ஈரானிய இலக்கியங்களில் பல புராண காதல் கதைகள் இடம்பெற்றிருக்கும். அதில், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், பாரசீகத்தில் வசித்து வந்த ஒரு பெண், அந்நாட்டின் இளவரசரை காதலித்து வந்தாள். சமையற்கலையில் மிகவும் திறமைசாலியான அவள், தன் காதலை இளவரசனுக்கு தெரிவிக்கும் விதத்தில் உலகத்திலேயே ருசியான, அழகான ஒரு கேக்கை தயாரிக்கிறாள்.
அந்த கேக், காதலும், மேஜிக்கும் கலந்து தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த சுவையான கேக்கை சாப்பிட்ட இளவரசன் அவள் காதலை ஏற்கிறானா இல்லையா என்பதற்கு உலகெங்கும் பல விதமான கதைகள் சொல்லப்பட்டாலும், பெரும்பான்மையானோர் இரண்டு முடிவுகளை நம்புகின்றனர். ஒன்று, பாரசீக பெண் தயாரித்த இந்த கேக்கை உண்ட இளவரசன் உடனே அந்த பெண் மீது காதல் வயப்பட்டு அவர்கள் நூறாண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததாகவும், இரண்டாவது கதையில், இளவரசன் கேக்கையும் காதலையும் மறுத்ததால் மனமுடைந்த அப்பெண், தனியாக அந்த கேக்கை சாப்பிட்டதும் அவளது கவலை எல்லாம் மறைந்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
முடிவாக, காதலுடன் தயாரிக்கும் எந்தவொரு உணவும், சுவையாக இருக்கும் என்பதுதான் இந்த கதையின் மையக்கருவாக இருக்கிறது. இப்போது நவீன காதலர்கள், தாங்கள் காதலிக்கும் ஒருவருக்கு இந்த பெர்ஷியன் கேக்கை கொடுத்தால், அவர்களது காதல் கை கூடும் என்று நம்புகிறார்கள். அதனால், காதலர்கள் தினத்தில், காதலிப்பவர்களின் பிறந்த நாட்களில் இந்த கேக்கை ஒருவர் மற்றொருவருக்கு பரிமாறி தங்கள் காதலை இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.
‘‘சாதாரண கேக் செய்வது போல, சிங்கிள் லேயர் கேக்கை தயாரித்து, க்ரிமுக்கு பதிலாக வொயிட் சாக்லெட் ஃப்ரோஸ்டிங் செய்து, பிஸ்தா, பாதாம், முந்திரி, ரோஜா இதழ்கள் சேர்த்து இதை செய்யலாம். ரோஜா, ஏலக்காய், பிஸ்தா, பாதாம் போன்ற காதல் ததும்பும் பொருட்கள் இந்த கேக்கிற்கு சுவையுடன் நல்ல மணமும் அழகும் கொடுக்கிறது” என்கிறார் கீர்த்தி.பொதுவாக வெனிலா அல்லது சாக்லேட் கேக்கில் இந்த பெர்ஷியன் கேக்கை தயாரிப்பார்கள். ஆனால் நம் ஹோம் பேக்கர் கீர்த்தி, ரோஸ் மில்க் ஃபிளேவரில் பெர்ஷியன் லவ் கேக் தயாரிக்கிறார். வாடிக்கையாளர்கள் மத்தியில் அது சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருக்கிறது.
கடந்த ஏழு வருடங்களாக செல்ஃப்-மேட் பேக்கராக இருக்கும் கீர்த்தி, எந்த வகுப்புகளுக்கும் போகாமலேயே கேக், சாக்லேட், கப்-கேக், டெஸர்ட் ஜார், டெஸர்ட் டேபிள், மினி லோஃப், கேக் பாப்ஸ் என விதவிதமாக டெஸர்ட் வகைகளை செய்கிறார். இவருடைய கேக்குகள் அனைத்துமே ஹோம்-மேட் அண்ட் ஹாண்ட்-மேட் தான்.
Average Rating