தற்காப்புக்கலையை பெண்களும் கற்கவேண்டும்! (மகளிர் பக்கம்)
‘‘பெண்கள் தைரியமானவர்கள்… ஆனால் அதே சமயம் அவர்களின் பாதுகாப்பிற்காக ஏதாவது ஒரு தற்காப்புக் கலையினை கற்றுக் கொள்வது அவசியம்’’ என்கிறார் பாலி சதீஷ்வர். இவர் கடந்த 21 ஆண்டுகளாக தற்காப்புக் கலையில் ஈடுபட்டு வருகிறார். பாக்ஸிங், கிக்பாக்ஸிங், ஜூடோ, மோய்தாய் போன்ற தனி விளையாட்டுகளிலும் கலந்துகொண்டு இதுவரை மாநில, தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார்.
கடந்த மாதம் மறைந்த பிரபல குத்துச்சண்டை வீரரான புரூஸ்லீ அவர்களின் 16 குத்துகளை செய்து சோழன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸில் இடம் பெற்றுள்ளார். உலகின் ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டில் முதன்மையாக விளங்குவது மிக்செட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) விளையாட்டு. உயிருக்கு ஆபத்தான, உண்மையாக வீரத்தை வெளிப்படுத்தும் போட்டியில் எந்தவித பின்புலமும் இல்லாத எளிய குடும்பத்தில் பிறந்த சதீஷ்வர் தமிழகத்திலிருந்து முதன்முறையாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
“தற்காப்புக் கலையில் ஆண்கள் மட்டும் சிறந்து விளங்கமுடியும் என்பது இல்லை. தற்போது பெண்களும் உலகளவில் தற்காப்புக்கலைகளில் சிறந்த வீராங்கனைகளாக விளங்குகிறார்கள்” என்ற பாலி சதீஷ்வர் பெண்களுக்கு தற்காப்புக் கலைக்கான பயிற்சியும் அளித்து வருகிறார். பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி குறித்த உங்களின் கருத்து?
என்னிடம் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் தற்காப்புக் கலையினை மிகவும் ஆர்வத்துடன் கற்றுக் கொள்ள வருகிறார்கள். பயிற்சி பெறுவது மட்டுமில்லாமல் போட்டியிலும் பங்கு பெற்று தேசிய அளவில் சாம்பியன் பட்டமும் வென்று வருகிறார்கள். எட்டு வயது சிறுமி பரமேஸ்வரி. இவர் கராத்தேயில் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். இப்போது அந்த கலையில் பிளாக் பெல்ட் பெற்றது மட்டுமில்லாமல், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் பங்கு பெற்று சாம்பியன் பட்டமும் பெற்றார். அந்த சிறுமியை யாராலும் வெல்ல முடியவில்லை. ஆண்களுக்கு நிகராகப் போட்டியிட்டு வெற்றி வாகை சூடி வருகிறார். அடுத்து சங்கரி, இவர் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக தான் என்னிடம் பயிற்சி எடுக்க வந்தார்.
அதோடு தற்காப்புப் பயிற்சியான குத்துச்சண்டையையும் கற்றுக்கொண்டார். இவரும் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார். இவர்களைப் போல் நிறைய பெண்கள் என்னிடம் தற்காப்புக் கலையான கராத்தே, குத்துச்சண்டை போன்றவற்றை கற்றுக் கொண்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருக்கிறார்கள். 2019ம் ஆண்டு கோவிட் பாதிப்புக்கு முன் பெண்கள் தினத்தன்று எல்.என்.டி. நிறுவனத்தில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான பெண்களை குழுவாக அமைத்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்தேன். அந்த பயிற்சியில் கலந்து கொண்ட பல பெண்கள் இது போன்ற தற்காப்புக் கலை ஆண்களுக்கானது. அவர்களால் மட்டுமே தான் கற்கமுடியும்.
பெண்களால் நடனம், பாட்டு, ஓவியம் போன்ற மென்மையான கலைகளைத்தான் கற்கமுடியும் என்ற எண்ணத்தில் இருந்தனர். அவர்களின் எண்ணம் தவறானது என்பதை இங்கு பயிற்சி எடுத்து கொள்ள ஆரம்பித்த பிறகு புரிந்துக் கொண்டனர். பெண்களால் எதையும் செய்ய முடியும். பலமான ஆண்களையும் சில உத்திகளின் மூலம் தாக்கி சமாளிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கையை இந்தப் பயிற்சியின் மூலம் அவர்கள் பெற்றதை உணர்ந்தார்கள். அதோடு நில்லாமல் அங்கிருந்த ஆண்களுடன் அவர்கள் பயின்ற தற்காப்புக்கலை உத்திகளைப் பயன்படுத்தி சண்டையிட்டு நிரூபிக்கவும் செய்தார்கள்.
பெண்களுக்குத் தற்காப்புக்கலை எவ்வளவு முக்கியமானது?
எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியும். எல்லா நேரமும் பையில் பெப்பர் பவுடரையும் வைத்திருக்க முடியாது. இந்தக் கலையைக் கற்ற பெண்கள் பிறர் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை. தாங்கள் மட்டுமில்லாமல் மற்ற பெண்கள் ஆபத்தில் இருக்கும்போது கூட அவர்களுக்குப் பாதுகாப்பு தரமுடியும். தற்காப்புக்கலை என்பது ஆண்களுக்கான துறை மட்டுமல்ல. இந்தத் துறையில் பெண்கள் நிறைய சாதித்திருக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் தற்காப்புக்கலையில் பெண்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள்.
அதற்குப் பெரிய உதாரணம் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம். ஏனென்றால் ஆண்களே முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதிற்குள் போட்டியிலிருந்து ஓய்வு பெறும்போது மூன்று பிள்ளைகளுக்குத் தாயான 39 வயதாகும் மேரிகோம் போட்டியிலிருந்து விலகாமல் பல போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்று வருகிறார். ஆறு முறை வேர்ல்டு சாம்பியனாகவும், இந்தியாவின் முதல் பெண் குத்துச்சண்டை வீராங்கனையாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றுள்ளார்.
எடை, உயரம் குறைவான பெண்களும் தற்காப்புக்கலை பயிற்சி எடுத்துக் கொள்ளலாமா?
தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள பெண்களுக்கு எடை, உயரம், பலமோ, வயதோ தடை இல்லை. ஆர்வமும் முறையான பயிற்சியும் இருந்தாலே போதும். எல்லாவிதத்திலேயும் ஆண்களுக்குப் பெண்கள் சரிசமம். தற்காப்புக்கலை ஆண்களுக்கு மட்டுமே சாத்தியப்படும் என்பது இப்போது மாறிவிட்டது. தற்காப்புக்கலை பயிற்சியாளர், பிரபல நடிகர் புரூஸ்லி மிகவும் சக்தி வாய்ந்தவர், பலசாலி என்பது எல்லாருக்கும் தெரியும். அப்படிப்பட்ட பலசாலி உருவாகக் காரணமாக இருந்தவர் ஒரு பெண். அவர் கற்றுக்கொண்ட தற்காப்புக்கலை மார்சல் ஆர்ட் விஞ்ஜுனோ. அந்த விஞ்ஜுனோவை உருவாக்கியவர் ஒரு பெண். பெயர் நாக்மாய். சீனாவைச் சேர்ந்தவர்.
அவரை ஒரு ஆண் திருமணம் செய்ய விரும்புகிறார். அந்தப் பெண்ணோ, என்னிடம் மோதி வெற்றி பெற்றபின் தான் திருமணம் என்கிறார். அந்த ஆண் நாக்மாயிடம் மோதி எளிதாக வென்று விடலாம் என்ற எண்ணத்தில் ஒத்துக்கொள்கிறார். ஆனால் நாக்மாயை அவரால் அவ்வளவு எளிதில் வெல்லமுடியவில்லை. மிக விரைவாகவே தோற்றுவிடுகிறார். அப்போதுதான் விஞ்ஜுனோ என்கிற தற்காப்புக்கலை பற்றிய புகழ் உலகில் பரவுகிறது. ஆண்கள் பலர் நாக்மாயியிடம் வந்து விஞ்ஜுனோ கலையைக் கற்றுக்கொள்கிறார்கள். அதில் கைதேர்ந்தவர்தான் கிப்மேன் என்கிற
ஐ.பி. மேன். அவர்தான் புரூஸ்லியின் குரு.
தற்போது மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளில் பெண்கள் தற்காப்புக்கலைகளில் முன்னணியில் இருக்கிறார்கள். சர்தேச அளவில் சொல்லவேண்டுமென்றால் மறைந்த பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியின் மகள் லைலாலியா மற்றும் எம்.எம்.ஏ., யூ.எப்.சி. பைட்டர் காண்டா ரோஸி. அமேண்டோ மோனி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
எதிர்கால லட்சியம்?
வருகிற மார்ச் மாதம் சிங்கள குத்துச்சண்டை வீரனை எதிர்த்து பாக்ஸிங் சாம்பியன்ஷிப்பில் சண்டையிட இருக்கிறேன். ஏப்ரல் மாதம் சென்னையில் முதன்முறையாக எம்.எம்.ஏ. எனப்படும் உலகின் மிக ஆபத்தான விளையாட்டான மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் வேர்ல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் மேலை நாட்டு குத்துச்சண்டை வீரனை எதிர்த்து மோதி வெற்றி பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பேன். உலகளாவிய சாம்பியன்களை உருவாக்க, நாட்டிலேயே பெரிய சர்வதேசத் தரம் வாய்ந்த மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சிக் கூடம் ஒன்றை சென்னை மதுரவாயலில் தொடங்கி இருக்கிறேன். இதில் எளிய பின்னணியில் உள்ள திறன் வாய்ந்த இளைஞர், இளைஞிகளுக்குப் பயிற்சி தந்து அவர்களை உலகளாவிய சாம்பியன்களாக உருவாக்க வேண்டும் என்றார் பாலி சதீஷ்வர்.
Average Rating