மணப்பெண்களின் ஃபேவரைட் மாடர்ன் தமிழ் லுக் !! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 33 Second

சமீபத்திய கொரோனா திருமணங்களில், உறவினர்கள் இல்லாமல், பெரிய விருந்து இல்லாமல் ஏன் மணமகன் இல்லாமல் கூட திருமணங்கள் நடந்தன. ஆனால் போட்டோகிராஃபரும் மேக்கப்பும் இல்லாமல் மட்டும் திருமணங்கள் நடப்பதே இல்லை.இன்றைய இந்திய திருமணங்களில், மேக்கப் ஒரு முக்கிய அங்கம் வகித்து வருகிறது. மேக்கப் குறித்த புரிதல்களும் மாறி வருகின்றன. ஐந்தாண்டுகளுக்கு முன்பு வரைக் கூட, மேக்கப் என்றால் வெள்ளை நிறமாக முகத்தை மாற்றுவது என்றே பலரும் நினைத்தனர். சில ஒப்பனைக் கலைஞர்களும் கூட வாடிக்கையாளர்களை வெள்ளை நிற தோற்றத்திலேயே அவர்களின் உருவத்துடன் அடையாளத்தையே மாற்றினர். திருமணங்கள் நிச்சயமாவதிலும் நிறத்திற்கு முக்கிய பங்கு இருந்து வந்தது. முக்கியமாக மணப்பெண்ணை முடிந்தளவு வெள்ளையாக மாற்ற வேண்டும் எனப் பெண் வீட்டார் முனைப்புடன் இருந்தனர்.

ஆனால் இப்போது பெண்கள் படிப்பு, வேலை என நல்ல நிலையில் இருப்பதால், அவர்களுக்கு தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் கூடியிருக்கிறது. பொதுவாகவே தாங்கள் அழகுதான் என்பதை இன்றைய பெண்கள் மனமார ஏற்றுக்கொண்டுள்ளனர். அந்த அழகை மேலும் மெருகேற்றிக்கொள்ள மட்டுமே மேக்கப்பினை பயன்படுத்துகின்றனர்.இப்போது பெண்களின் ஃபேவரைட் ஒப்பனை – நோ மேக்கப் லுக் தான். இந்த வார்த்தையைச் சென்னையில் அறிமுகப்படுத்தியதே நான்தான், எனப் பேசத் தொடங்குகிறார் ஒப்பனைக் கலைஞர் ரிஹானா பானு. “நான் லண்டனில்தான் ஒப்பனைக் கலையைப் பயின்றேன். என் கணவர், இம்தியாஸ் அஹமத் அங்கு ஐ.டி சார்ந்த துறையில் பணிபுரிந்து வந்தார். நான் பொழுதுபோக்காக மேக்கப் கற்றுக்கொண்ட போதுதான், அந்த கலை மீதான ஆர்வம் அதிகரித்தது. உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய மேக்கப் பிடித்து போனது.

சென்னை வந்து முழுநேர ஒப்பனைக் கலைஞராக மாறினேன். என் கணவரின் முகத்தை பல சமயம் என்னுடைய மேக்கப் பயிற்சிக்காக பயன்படுத்துவேன். அவரும் பொறுமையாக அதற்கு சம்மதிப்பார். மேக்கப் போடும் போது அவருடைய பரிந்துறைகளையும் சொல்லுவார். அவர் சொல்லும் டிப்ஸ் எல்லாமே புதியதாக இருக்கும். அப்போது தான் அவருக்கு மேக்கப்பை தாண்டி ஸ்டைலிங் சார்ந்த திறன்கள் இருப்பதை அறிந்தோம்.நானும் என் கணவரும் சேர்ந்து மேக்கப் மற்றும் ஸ்டைலிங் துறையில் முழுமையாக இறங்கினோம். இதில் நல்ல வரவேற்பு கிடைக்க என் கணவர் அவரது ஐ.டி வேலையைவிட்டு, ஆண்களுக்கான முழு நேர ஒப்பனை கலைஞராகவும், ஸ்டைலிஸ்ட்டாகவும் மாறினார். இப்போது நாங்கள் இருவரும் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோக்கள், விளம்பரங்கள் மற்றும் குறும்படங்களில் மேக்கப் ஆர்டிஸ்டாக இருக்கிறோம். சென்னை, ஷெனாய் நகரில் DE HAIR & MAKEUP LOUNGE (டி ஹேர் & மேக்கப் லவுஞ்ச்) எனும் மேக்-அப் ஸ்டுடியோவையும் இயக்கி வருகிறோம்” என்கிறார்.

முதல் முறையாக லண்டனிலிருந்து சென்னை திரும்பியதும் அவர் சந்தித்த சுவாரஸ்யமான ஒரு அனுபவத்தை விவரித்தார். ”நான் சென்னையில் என்னுடைய முதல் மணப்பெண்ணிற்கு அலங்காரம் செய்த போது. அந்த மேக்கப் யாருக்குமே பிடிக்கவில்லை. அந்த பெண்ணுடைய வீட்டார், என்னது இது எங்க பொண்ணு வெள்ளையாகவே இல்லையே என்றனர். இன்னும் கொஞ்சம் வெள்ளையா மாத்துங்க என்றார்கள். எனக்கு இது ரொம்பவே அதிர்ச்சியாக இருந்தது. அவர்களின் விருப்பப்படி மீண்டும் மேக்கப் செய்து அவர்களை அப்போதைக்கு திருப்திபடுத்தினாலும், ஏதோ அமைதியற்ற நிலையிலேயே மனது இருந்தது.

பொதுவாகவே வெளிநாடுகளில் மேக்-அப் என்றாலே அதை தங்களுடைய ஸ்கின் டோனிற்கு ஏற்ற நிறத்தில்தான் அணிவார்கள். ஒரு ஷேட் அதிகரித்தாலும், அது அவர்களை அவமதிப்பதற்குச் சமமாகும். சிலர், இதை இனப் பாகுபாடாகவும் பார்ப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு செயலை இங்கு அனைவரும் சேர்ந்து ஒரு பெண் மீது திணிப்பதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை.அதனால் எங்களின் ஸ்டைலில், நிறத்தை மாற்றாமல், முகத்திற்கு பொலிவை மட்டும் தரும் மேக்-அப் முறையைதான் நாங்கள் பின்பற்றினோம். நோ மேக்-அப் லுக் (No Makeup Look) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியதே நாங்கள் தான். பொதுவாக சினிமாக்களில் நடிகைகள் அனைவருமே நோ மேக்கப் லுக்கில் தான் இருப்பார்கள்.

சமீப காலமாக பெண்களே நோ மேக்கப் லுக்கைதான் விரும்புகிறார்கள். இப்போது நாங்கள் சந்திக்கும் அனைவருமே ‘‘என் தோற்றத்தை மாற்றாமல் என்னை போலவே அழகாக காட்டுங்கள்” என்றுதான் கேட்கிறார்கள். ஒருவரை அவராகவே காட்டுவதுதான் அழகு. ஒட்டு மொத்த தோற்றத்தையும் மாற்ற நாம் மேக்கப்பை பயன்படுத்தக் கூடாது” என்கிறார்இவர் சமீபத்தில் உருவாக்கிய லேட்டஸ்ட் ப்ரைடல் லுக் பற்றிய விவரங்களை பகிர்கிறார்.

“பெண்கள் தங்களுடைய திருமணத்தில் தனித்துவமாக தெரிய வேண்டும் என்று விரும்புவார்கள். ஸ்டைலாகவும், அதே நேரம் குடும்பத்தினரின் விருப்பப்படி அவர்களின் பழக்கவழக்கங்களை முன்னிலைப்படுத்தும் விதமாகவும் இருக்க விரும்புகிறார்கள். அவர்களுக்காக நாங்கள் சமீபத்தில் உருவாக்கியது தான் இந்த மாடர்ன் தமிழ் ப்ரைடல் லுக். போட்டோகிராஃபர் ஜீவனுடன் இணைந்து நோ மேக்கப் லுக்கில் கனடா, லண்டன், மலேசியா வாழ் தமிழ் பெண்களின் திருமண அலங்காரத்தை முழுவதுமாக ஆராய்ச்சி செய்து, இந்த லுக்கை உருவாக்கியுள்ளோம்.

பொதுவாக இங்கு நம் தமிழ்நாட்டில், பெரிய ஜடை, தங்க நகைகள், சிவப்பு அல்லது பிங்க் புடவைக்கு கான்ட்ராஸ்ட் கலரில் பிளவுஸ் என அணிவார்கள். ஆனால் வெளிநாடுகளில் மோனோ க்ரோம் ஷேடில் ஒரே கலரில் சேலையுடன் பிளவுஸ் அணிவார்கள். அதிலும் குறிப்பாக லைட் கலர் சேலைகள்தான் அங்கு பிரபலம்.ஜடைக்குப் பதிலாக கொண்டை இருக்கும். பெண்கள் கொண்டை போட்டு பூ அணிவது நம் தமிழ் பாரம்பரியம்தான். நடுவில் அது ஃபேஷனில்லை என்பதால் காணாமல் போனது. இப்போது மீண்டும் பெரிய கொண்டை அணிந்து அதைச் சுற்றி பூக்களால் அலங்கரிப்பது ஃபேஷனாகி வருகிறது. அதை மெஸி பன் என்கிறோம்.

இப்போது பெரும்பாலும் திருமணங்களில் தங்க நகைகள் அணிவது கிடையாது. அதற்கு பதிலாக சாதாரண டெம்பிள் நகைகள் அல்லது ஆன்டிக் நகைகளை வாடகைக்கு வாங்கி சேலைக்கு மேச்சாக அணிகிறார்கள். வெளிநாடுகளில் தங்க நகைகளுக்குப் பதிலாக வைரம், முத்துகள், மரகதம், குவார்ட்ஸ் போன்றவற்றால் ஆன நகைகளை
அணிகிறார்கள்.

இதையெல்லாமே ஒன்று சேர்த்து, பாரம்பரியத்தையும் ஃபேஷனையும் முன்னிலைப்படுத்தும் ப்ரைட் லுக்கை உருவாக்கியுள்ளோம். இது நம் தென் இந்திய மணப்பெண்கள் அனைவருக்குமே பொருந்தக்கூடிய ஸ்டைல்தான்” என்கிறார்.
ரிஹானா பானு, இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் நடக்கும் திருமணங்களுக்கும் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றுகிறார். இது தவிர மேக்கப்பிற்கு இணையாக எந்த மாதிரியான நகைகளை அணிய வேண்டும், எந்த மாதிரியான உடைகளை தேர்வு செய்யலாம் போன்ற ஸ்டைல் டிப்சையும் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். மேலும், தன்னுடைய ஸ்டுடியோவில் மேக்கப் பயிற்சியும் அளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்திய இன்பத்தின் போது தவிர்க்க வேண்டியவை!! (அவ்வப்போது கிளாமர்)
Next post மேக்கப் ரிமூவர்!! (மகளிர் பக்கம்)