மேக்கப் ரிமூவர்!! (மகளிர் பக்கம்)
மேக்கப் என்பது இன்றைய காலக்கட்டத்தில் பெண்களுக்கு மிகவும் அவசியமானதாக மாறிவிட்டது. கல்யாணத்தில் மணப்பெண் அலங்காரம் செய்து கொள்வது தான் மேக்கப் என்றில்லை. சாதாரணமாக கல்லூரி மற்றும் அலுவலகம் செல்லும் பெண்கள் கூட ஃபவுண்டேஷன், காம்பேக்ட் பவுடர், கண்மை, லிப்ஸ்டிக் என சிம்பிளான மேக்கப்பினை போட்டுக் கொள்வது வழக்கமாகிவிட்டது. இதில் ஒரு சிலர் நான் மேக்கப்பே போட்டுக்க மாட்டேன் கண்களுக்கு வெறும் கண்மை மற்றும் உதட்டிற்கு லிப்பாம் மட்டும்தான் என்று சொல்லும் பெண்களின் மேக்கப் பாக்ஸில் கூட கட்டாயம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் மேக்கப் ரிமூவர். பத்தில் இரண்டு பெண்கள் கூட இதைப் பயன்படுத்துவதில்லை என்பதுதான் உண்மை.
காரணம் மேக்கப் துறையையற்ற சாதாரண பெண்களுக்கு மேக்கப் ரிமூவர் என்றால் என்ன அதன் அவசியம் கூட தெரிவதில்லை. ‘‘மேக்கப் எவ்வளவு முக்கியமோ, அதை விட முக்கியம் மேக்கப் ரிமூவர்’’ என்று தீர்க்கமாக சொல்கிறார் கவிதா பவுலின். ‘‘நம்ம முகத்துல மேக்கப் இவ்வளவு நேரம்தான் இருக்கணும்னு ஒரு கால அளவு இருக்கு. அதை பெரும்பாலான பெண்கள் கடைபிடிக்கறதே இல்லை.
மேக்கப் அதிக நேரம் முகத்தில் இருந்தால் இயற்கையான சரும துளைகள் வழியா மேக்கப் சாதனங்களில் பயன்படுத்தப்படும் ரசாயன மூலக்கூறுகள் நம் சருமத்திற்குள் இறங்கி பருக்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதுவே மருக்கள், சருமத்தில் தடிப்புகள், எல்லாமே ஒவ்வொன்றாக தோன்றும். குறிப்பாக தூங்குற நேரம் நிச்சயம் நம்முடைய முகத்தில் மேக்கப் இருக்கவே கூடாது’’ என்று கூறும் கவிதா மேக்கப் ரிமூவ் செய்வதன் அவசியம் குறித்து விளக்கினார்.
‘மேக்கப் ரிமூவரை பொறுத்தவரை நீர் அல்லது எண்ணெய் அடிப்படையில் வரும். இப்போது ஜெல் வடிவமான ரிமூவர், மேக்கப் ரிமூவ் வைப்ஸ் என மெல்லிய துணி போன்றவையும் கிடைக்கிறது. இவை இரண்டிலும் அதிக அளவு ரசாயனம் இருப்பதால் பெரும்பாலான மேக்கப் கலைஞர்கள் அதை பயன்படுத்த மாட்டார்கள். எங்களின் வாடிக்கையாளர்களுக்கும் அதை பரிந்துரைக்க மாட்டோம்.
நம்ம உடலிலேயே முக சருமம்தான் ரொம்ப மென்மையா இருக்கும். பெண்கள் இப்போது எல்லா துறையிலும் வளர்ந்து வருகிறார்கள். வேலைக்காக ெவளிநாட்டிற்கும் செல்கிறார்கள். அது மட்டுமில்லாமல் ஏதாவது ஒரு விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் தங்களை அழகாக எடுத்துக்காட்ட நினைக்கிறார்கள். அதற்கு மேக்கப் அவசியம். அதே சமயம் அதை ரிமூவ் செய்யறதும் அவசியம். இல்லைன்னா ரொம்ப சீக்கிரமே சருமம் சுருக்கங்கள், பருக்கள்னு வயசான தோற்றத்தை கொடுக்க ஆரம்பிச்சுடும்’’ என்னும் கவிதா மேக்கப் ரிமூவர் பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார்.
‘‘ஒரு காலத்திலேயே குழந்தைகளுக்கு கண்மை வெச்சா, அடுத்த நாள் தேங்காய் எண்ணெய் வெச்சு மெதுவா அதைத் துடைச்சிட்டு அப்புறம் தான் குளிக்க வைப்பாங்க. இதுதான் நம்ம பாரம்பரிய மேக்கப் ரிமூவர். குறைந்தபட்சம் இந்த முறைகூட செய்யாம அப்படியே மேக்கப்புடனே தூங்கி அடுத்த நாள் குளிக்கும்போது சோப்பை போட்டு அழுத்தித் தேய்க்கறதால சருமத்திலே இருக்கற இயற்கையான ஈரப்பதம் குறைந்து, சருமத்தில் சுருக்கம் மற்றும் பொலிவற்ற தோற்றம் ஏற்பட ஆரம்பிச்சிடும். சிலருக்கு சருமம் வறண்டு போகவும் வாய்ப்புள்ளது. மேலும் நாளடைவிலே பொலிவும் குறைய ஆரம்பிச்சிடும். எனக்கு மேக்கப் ரிமூவர்கள்ல உடன்பாடு இல்லைங்கற பெண்கள் இந்த பாரம்பரிய தேங்காய் எண்ணெய் கான்செப்ட்டை ஒரு பஞ்சு அல்லது பட்ஸ் வெச்சு பயன்படுத்தலாம்.
எந்த ஒரு மேக்கப் சாதனமாக இருந்தாலும் தரமான நல்ல பிராண்டினை பயன்படுத்த வேண்டும். இவை ரூ. 150ல் இருந்து ரூ. 6000 வரையிலான மேக்கப் ரிமூவர்கள் மார்க்கெட்டில் உள்ளது’’ என்றவர் மேக்கப்பினை மேக்கப் ரிமூவர் கொண்டு நீக்கிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்று அறிவுரை கூறினார் கவிதா. ‘‘சன் ஸ்கிரீன் பயன்படுத்துபவர்களாக இருந்தாலும், மேக்கப் ரிமூவர் கொண்டு சருமத்தில் உள்ள மேக்கப்பினை நீக்கிய பிறகு Ph அளவு குறைவான ஃபேஸ் வாஷ் அல்லது கிளென்சிங் மில்க் வெச்சு முகத்தை சுத்தம் செய்த பிறகு தான் தூங்கணும். சிலர் இரவு நேரத்தில் பயன்படுத்தும் கிரீம்களை உபயோகிப்பார்கள்.
அவர்கள் அதை பயன்படுத்தலாம் அல்லது மாய்ச்சுரைஸர்கள் இருந்தால் அதை உபயோக்கிக்கலாம். மேக்கப் ரிமூவர் இல்லை என்றாலும் பரவாயில்லை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய் கொண்டு முகத்தை சுத்தம் செய்து கொள்ளலாம். இது இயற்கையான மேக்கப் ரிமூவர். ஆனால் மேக்கப் கிரீம், லிப்ஸ்டிக் இதெல்லாம் சருமத்திலே அப்படியே விட்டுட்டு தூங்கவே கூடாது என்பதை எல்லாரும் கவனத்தில் வைத்துக் கொள்வது அவசியம்’’ என்று கறாராகச் சொல்கிறார் கவிதா.
Average Rating