மேக்கப்-மாய்ச்சரைஸர் !! (மகளிர் பக்கம்)
எந்த சீசனாக இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் சரி ஒவ்வொரு பெண்ணுடைய மேக்கப் பாக்ஸில் இருக்க வேண்டிய முக்கியமான மேக்கப் சாதனம் என்றால் அது மாய்ச்சரைஸர். சருமத்தை பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் இந்த மாய்ச்சரைஸரை அந்தந்த சருமத்திற்கு ஏற்ப எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்ற முழு விபரங்கள் கொடுக்கிறார் அரோமா
தெரபிஸ்ட் கீதா அசோக். ‘முன்பெல்லாம் முகத்தில் அதிகமாக பருக்கள் வருது, எண்ணை வழியுதுன்னு அதற்கு தீர்வு கேட்கும் நபர்களைதான் நாம் அதிகம் பார்த்திருக்கோம்.
ஆனா இன்றைய நிலையே வேறு. பெரும்பாலான மக்களுக்கு வறண்ட சருமம்தான் இருக்கு. காரணம் மொபைல், கம்ப்யூட்டர், டிவி பயன்பாடு அதிகமாயிடுச்சு. இதில் ஆன்லைன் வகுப்புகள் வேறு, குழந்தைகளுக்கே வறண்ட சருமம் பிரச்னை வரத் துவங்கிடுச்சு. இதற்கு காலநிலை மாற்றமும் கூட ஒரு காரணம். அதனால இயற்கையாவே சருமத்தில் இருக்கக்கூடிய ஈரப்பதம் குழந்தைப் பருவத்திலேயே குறைய ஆரம்பிச்சிடுது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்யதான் மாய்ச்சரைஸர் அவசியம்.
மாய்ச்சரைஸரின் முக்கிய வேலை என்ன?
‘‘சருமத்தில் வறட்சி காரணமாக சரும துவாரங்கள் சுருங்கி இதனால் இயற்கையா சருமத்தில் இருந்து வெளியேறக் கூடிய கழிவு வெளியேறாமல் உள்ளேயே தங்கிடும். மேலும் ஈரப்பதமும் குறைஞ்சிடும். இதனால் சருமத்தில் குளிர் காலத்தில் இறந்த செல்களால் வெள்ளை தழும்பு ஏற்படும். சிலருக்கு அதிக வறண்ட சருமம் காரணமா சருமத்தில் வெடிப்புகள் கூட உண்டாகும். இதையெல்லாம் சரி செய்யறது தான் மாய்ச்சரைஸரின் வேலை’’ என்னும் கீதா அசோக் எந்த சருமத்திற்கு எந்த மாய்ச்சரைஸர் என தொடர்ந்து விளக்கினார்.
நம் சருமம் எந்த வகையைச் சேர்ந்தது அப்படிங்கறதுல ஒரு அடிப்படை தெளிவு இருக்கணும். வறண்ட சருமம் உள்ளவங்க கிரீம் மாய்ச்சரைஸர் பயன்படுத்தனும். சிலருக்கு சென்சிடிவா, பருக்கள் அல்லது ஆயில் சருமமா இருக்கும். அவங்க ஜெல் அடிப்படையிலான மாய்ச்சரைஸர் பயன்படுத்தலாம். எனக்கு சின்ன அலர்ஜி கூட ஆகாது என்போர் நீர் அடிப்படையிலான மாய்ச்சரைஸர் பயன்படுத்தலாம். அதாவது காமெடோஜெனிக் இல்லாத (non-comedogenic) என்று குறிப்பிட்டு இருக்கும் மாய்ச்சரைஸரை பயன்படுத்தலாம்.
சரி மாய்ச்சரைஸர் எப்படி பயன்படுத்த வேண்டும்? எப்போ பயன்படுத்த வேண்டும்?
இதை பலரும் சரியா பயன்படுத்துறதே கிடையாது. மிக முக்கியமான விஷயம் பகல் நேரத்தில் அல்லது வெளியே போகும் போதும் மாய்ச்சரைஸர் பயன்படுத்தவே கூடாது. காரணம் அதனுடைய முக்கிய வேலை சரும துவாரங்களை ஓபன் செய்து விடுவதுதான். எனில் வெளியே போகும்போது மாய்ச்சரைஸர் பயன்படுத்தினால் அத்தனை அழுக்கும், தூசியும் நம்ம சரும துவாரங்களில் படிய நிறைய வாய்ப்புகள் இருக்கு.
இதனால் சிலருக்கு முகத்தில் சின்ன சின்ன கருப்பு மருக்கள் உண்டாவதைப் பார்க்கலாம். பகலில் எப்போதுமே எந்த சருமத்துக்கும் சன்ஸ்கிரீன்தான் போட்டுக்கணும். சாயங்காலம் வீடு திரும்பினதுக்கு பிறகு மேக்கப் ரிமூவர் கொண்டு ஒரு காஜல் போட்டிருந்தா கூட அதை கிளீன் செய்துட்டு உங்க சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை நல்லா கழுவிட்டு தூங்குவதற்கு முன்பு மாய்ச்சரைஸர் பயன்படுத்தனும்.
மாய்ச்சரைஸர் பொறுத்தவரை நல்ல பிராண்ட்களிலேயே ரூபாய் 150 துவங்கி அவரவர் பட்ஜெட்டுக்கு ஏற்ப நிறைய வெரைட்டிகள் மார்க்கெட்டில் இருக்கு. எதுவுமே வேண்டாம் எனக்கு எந்த காஸ்மெட்டிக்ஸ் போட்டாலும் சருமத்தில் பிரச்சனைகள் வரும் அப்படிங்கிற மக்கள் நான் முன்பு சொன்னது போல காமெடோஜெனிக் இல்லாத மாய்ச்சரைஸர் பயன்படுத்தலாம். அதுவும் வேண்டாம் என்போர் இயற்கையாகவே வீட்டில் இருக்கக்கூடிய தேங்காய் எண்ணெய், பாலாடை, இவைகள பயன்படுத்தலாம். அதேபோல வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்து தலை குளிப்பது அவசியம். போலவே நிறைய தண்ணீர் குடிக்கணும்.
சருமத்திற்கு மேலே மட்டும் இல்ல உள்ளேயும் சிறந்த ஈரப்பதம் தக்க வைக்க நீர்தான் பெரிய மருந்து. குறிப்பா பல மணி நேரங்கள் கம்ப்யூட்டர் முன்னாடி வேலை செய்கிறவர்களுக்கு இந்த எண்ணெய் குளியல், தண்ணீர் குடித்தல் ரொம்ப அவசியம். சரியான வயது காலத்தில் இதை கடைபிடிக்கலைன்னா ரொம்ப சீக்கிரமே சருமம் வயதான தோற்றத்தை கொடுத்திடும். அதே போல அதிக நறுமணம் உள்ள சோப்பு, ஃபேஸ் வாஷ் இவைகளையும் தவிர்ப்பது நல்லது’’ என்று ஆலோசனை வழங்கினார் கீதா அசோக்.
Average Rating