சங்ககால உணவுகள்!! (மகளிர் பக்கம்)
அகத்தியம், தொல்காப்பியம், பதினெண் மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐசிறு காப்பியங்கள் இவை அனைத்தும் சங்ககால இலக்கியங்கள் ஆகும். இதில் பண்டைய மக்கள் உண்ட உணவைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. சங்ககாலத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு ஆரோக்கிய உணவினை உண்டு வந்தனர். அதனை தற்காலத்துக்கேற்ப எளிய முறையில் எவ்வாறு சமைக்கலாம் என்பதை பற்றி விளக்குகிறார் சமையல் கலைஞர் பிரியா.
குறமகள் குழம்பு
தேவையானவை:
பலாக்கொட்டை – 5,
நறுக்கிய மாங்காய் – 100 கிராம்,
உப்பு – தேவையான அளவு,
மூங்கிலரிசி – 200 கிராம்,
தனியா – 1 டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
புளிக்காத மோர் – 1 கப்,
புளிச்சாறு – 2 மேஜைக்கரண்டி,
சீரகம் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
மிளகுத்தூள்,
தண்ணீர் – தேவையான அளவு,
மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்.
செய்முறை :
பலாக்கொட்டையை வேகவைத்து, தோல் உரித்து நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து, கடுகு, சீரகம் தாளித்து அதனுடன் பொடித்த தனியாவை சேர்த்து வதக்கவும். உடன் கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகுத்தூளை சேர்க்கவும். நன்கு வதங்கியதும், பலாக்கொட்டை, மாங்காயைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கூடவே கரைத்த புளிச்சாறு, மோர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிட்டு இறக்கவும். மூங்கில் அரிசி ஒரு பங்கிற்கு, மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து குழைய வேக வைக்கவும். இது குழம்பிற்கு சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
புளிச்சோறு
தேவையானவை :
அரிசி – 200 கிராம்,
மல்லித்தழை சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
புளி – 1 எலுமிச்சை அளவு,
உளுந்து – 1 டீஸ்பூன்,
பொடித்த மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நெய் – 2 மேஜைக்கரண்டி,
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை:
அரிசியை கழுவி குழையாமல் வேக விடவும். கடாயில் நெய் சேர்த்து, கடுகு, உளுந்து, மஞ்சள்தூள் சேர்த்து தாளிக்கவும். அதனுடன் தனியே கரைத்து வைத்திருந்த புளித்தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விடவும். நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை, தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். புளித்தண்ணீர் ஓரளவு கெட்டியாகி நெய் தனியே பிரிந்து வரும் போது இறக்கி, வேகவைத்துள்ள சாதத்தை அதனுடன் கலந்து நன்கு பிரட்டினால் சுவையான புளிச்சோறு தயார்.
சங்ககால தேனுடன் கிழங்கு
தேவையானவை :
மரவள்ளிக்கிழங்கு – 500 கிராம்,
தேங்காய் துருவல் – 2 மேஜைக்கரண்டி,
உப்பு – 1 டீஸ்பூன்,
தேன் – 3 மேஜைக்கரண்டி,
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,
தண்ணீர் – தேவையான அளவு.
செய்முறை :
கிழங்கை சுத்தம் செய்த தோலை நீக்கவும். பாத்திரத்தில் போதுமானத் தண்ணீரைச் சேர்த்து, துண்டுகளாக நறுக்கிய கிழங்குடன் உப்பு சேர்த்து வேக வைக்கவும். பிறகு நன்கு மசித்து தேங்காய்த் துருவல், தேன், மிளகுத்தூள் சேர்த்து மிக்ஸ் செய்யவும். கிழங்கை மசிக்காமலும் சிறுத் துண்டுகளாக நறுக்கித் தேனைத் தொட்டும் சாப்பிடலாம்.
துவையல்
தேவையானவை:
முற்றிய தேங்காய் – 100 கிராம் (துருவியது),
மல்லித்தழை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
சீரகம் – 1 டீஸ்பூன்,
புளி – 1/2 எலுமிச்சை அளவு,
மிளகு – 5-7 எண்ணிக்கை.
தாளிக்க:
கடுகு – 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி – 1 டீஸ்பூன்,
உளுந்து – 1/2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
நெய் – 1/2 டீஸ்பூன்.
செய்முறை :
தேங்காய், சீரகம், மிளகு, கொத்தமல்லி, புளி, கறிவேப்பிலை, மல்லித்தழையுடன் போதுமான உப்பைச் சேர்த்து மைய அரைக்கவும். கடாயில் நெய் சேர்த்து, கடுகு, உளுந்து தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதையும் உடன் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். சுவையான நம் முன்னோர் செய்த துவையல் தயார்.
இனிப்பு பண்ணியம்
தேவையானவை:
பச்சரிசி – 1 கிலோ,
தோல் உளுந்து – 200 கிராம்,
வெல்லம் – 500 கிராம்,
உப்பு – 2 டீஸ்பூன்,
நெய் – தேவையான அளவு,
ஏலக்காய் – 3-5,
தேங்காய்த் துருவல் – 2 கப்.
செய்முறை:
பச்சரிசி உளுந்தை மூன்று மணி நேரம் ஊறவைத்து, மைய அரைக்கவும். உடன் வெல்லம், தேங்காய்த் துருவல், உப்பு, ஏலக்காயை சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மாவைப் புளிக்க வைக்க தேவையில்லை. கடாயில் நெய் சேர்த்து, கெட்டியாக அரைத்த மாவை ஒரு குழிக்கரண்டி எடுத்து சூடான நெய்யில் சேர்த்து, இருபுறமும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
மாங்காய் ஊறுகாய்
தேவையானவை:
மாங்காய் – 3,
வெந்தயம் – ½ டீஸ்பூன்,
உப்பு – 250 கிராம்,
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் – தேவையான அளவு,
மஞ்சள்தூள் – 1 மேஜைக்கரண்டி,
கடுகு – 2 டீஸ்பூன்,
நெய் – 4 மேஜைக்கரண்டி.
செய்முறை:
மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும். கடாயில் பாதியளவு நெய்யைச் சேர்த்து சூடானதும் தனியே வைக்கவும். மற்ெறாரு கடாயில் வெந்தயத்தை வறுத்து பொடித்து தனியே வைக்கவும். அதே கடாயில் மீதமுள்ள நெய் சேர்த்து, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூளைச் சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பில் பிரட்டிய மாங்காயை கிளறவும். நன்கு பிரட்டியப் பின்பு, தனியே சூடு செய்த நெய்யை மாங்காய் கலவையுடன் சேர்த்து கிளறினால், மாங்காய் ஊறுகாய் தயார்.
சங்ககால இனிப்பு அப்பம்
தேவையானவை:
பச்சரிசி – 500 கிராம்,
நெய் – தேவையான அளவு,
பால் – 1 லிட்டர்,
வாழைப்பழம் கனிந்தது – 2,
தேங்காய்த்துருவல் – 200 கிராம்,
பொடித்த வெல்லம் – 300 கிராம்,
ஏலக்காய் – 2.
செய்முறை:
பச்சரிசியை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும். தேங்காய்த் துருவல், வெல்லம், தோல் நீக்கிய வாழைப்பழம், ஏலக்காய், அரிசியுடன் சேர்த்து அரைத்து, பஜ்ஜி மாவு பதத்தில் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கவும். கடாயில் நெய் சேர்த்து, சூடானதும் ஒரு சிறு கரண்டியினால் மாவை எடுத்து நெய்யில் அப்பம் போல் ஊற்றவும். இருபுறமும் திருப்பி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். சூடான பாலில் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேவையெனில் 1 லிட்டர் பாலை அரை லிட்டர் வரை சுண்ட காய்ச்சி அப்பத்தை சேர்க்கலாம். சுவை கூடுதலாகயிருக்க கொதிக்கும் பாலில் பாதாம் அல்லது முந்திரி விழுதை சேர்த்து சுண்டக் காய்ச்சலாம்.
சங்ககால அரிசிக்களி
தேவையானவை:
இட்லி அரிசி மாவு – 250 கிராம்,
பொடித்த மிளகு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1 மேஜைக்கரண்டி.
மோர் – 200 மி.லி,
தண்ணீர் – தேவையான அளவு,
மல்லித்தழை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு.
செய்முறை:
ஒரு அகலமானப் பாத்திரத்தில் 500 மி.லி. தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் அரிசி மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். சுவைக்கு உப்பு, பொடித்த மிளகு, சீரகத்தைச் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். மாவு வேகும் வரை நன்கு கிளறவும். தண்ணீர் வற்றி, களித் திரண்டு வரும் போது அடுப்பை அணைத்து, உடன் நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலையைச் சேர்த்து கலக்கவும். சுவையான அரிசி களித் தயார். மோர் சேர்த்து கரைத்து வெங்காயத்துடன் சாப்பிடலாம். அல்லது கருவாட்டுக் குழம்புடன் சேர்த்து சாப்பிடலாம்.
கரும்புடன் அவல்
தேவையானவை:
கரும்புச்சாறு – 200 மி.லி,
இஞ்சிச்சாறு – 1 மேஜைக்கரண்டி,
அவல் – 100 கிராம்,
தேன் – 2 டீஸ்பூன்.
செய்முறை:
அவலை கழுவி சுத்தம் செய்து, கரும்புச் சாற்றில் ஊறவிடவும். நன்கு ஊறியதும் தேன், எலுமிச்சை சாறு, இஞ்சிச் சாற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு
15 நிமிடம் ஊறவிட்டு கரும்புச்சாற்றில் ஊறிய அவலைச் சுவைக்கவும்.
பால் பாயசம்
தேவையானவை:
பால் – 400 மி.லி,
வெல்லம் – 150 கிராம்,
தேங்காய்த்துருவல் – 50 கிராம்,
நெய் – ஒரு மேஜைக்கரண்டி,
ஏலக்காய் – 2.
செய்முறை:
கடாயில் நெய் சேர்த்து சூடானதும் துருவிய தேங்காயை உடன் சேர்த்து வதக்கவும். அதனுடன் சூடான பாலைச் சேர்த்து லேசாக கொதிக்க விடவும். பொடித்த வெல்லத்தையோ அல்லது தனியே தயார் செய்த வெல்லப்பாகினைச் சேர்த்து கலக்கவும். அனைத்தும் ஒன்றாக கலந்து திக்கான பதம் வந்தவுடன் பொடித்த ஏலக்காயைச் சேர்த்து இறக்கவும். சுவையான பால் பாயசம் தயார்.
Average Rating