வாழ்க்கை+வங்கி=வளம்! (மகளிர் பக்கம்)
வாழ்க்கை வங்கியோடு இணைந்துவிட்டதால் நாம் வங்கிகளில் தினமும் பயன்படுத்தும் பொதுவான சொற்களைப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது. கே ஒய் சி (KYC), ஓ டி பி (OTP), ஐ எஃப் எஸ் சி (IFSC), டி டி எஸ் (TDS), என் இ எஃ ப் டி (NEFT), ஆர் டி ஜி எஸ் (RTGS ), ஐ எம் பி எஸ் (IMPS), கே ஒய் சி (KYC), எம் ஐ சி ஆர் (MICR), நாணய பரிமாற்றம் (Currency Exchange), வரைவோலை (Draft ) வழங்கல், நிதி ஆலோசனைகள் (Financial Consultation) , காப்பீடு வசதி (Insurance) இதர பரிவர்த்தனைகள் (Other Transactions) என்று இந்தப் பதங்களை, சொற்றொடர்களை நாம் அடிக்கடி கேட்கிறோம். இனி வரும் தொடர்களில் இவை குறித்து அறிந்து கொள்வோம். சில ஆங்கிலப் பதங்களை அப்படியே வழங்குவதற்கு காரணம், எல்லோரும் புரிந்து கொள்வதற்கு என்ற முன்னுரையை மீண்டும் பதிவு செய்கிறோம்.
வாடிக்கையாளரை வங்கி அறிதல் (Know Your Customer – KYC)
வங்கியில் நாம் கணக்கைத் துவங்க முனையும்போது வங்கி நமது தனிநபர் அடையாளம், நமது இருப்பிட விவரம், வருமானமீட்ட நாம் செய்யும் பணி உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்தச் செயல்பாட்டை வாடிக்கையாளர் விவரங்களை வங்கி அறிதல் (KYC) என்கின்றோம். ஒவ்வொன்றையும் அடையாளப்படுத்த அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களான ஆதார் அட்டை, வருமான வரித்துறை வழங்கும் நிலைக்கணக்கு எண் அட்டை (PAN), ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, அரசுத்துறை வழங்கும் அடையாள அட்டை, ஓய்வூதியதாரர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றில் வங்கி குறிப்பிடும் இரண்டு ஆவணங்களின் கையொப்பமிட்ட நகல்களை வங்கிக்கு வழங்கவேண்டும். வழங்கும்போது அசல் ஆவணத்தையும் வங்கியிடம் காண்பித்துவிட்டு திருப்பிப் பெற வேண்டும். ஒரு வாடிக்கையாளர் கணக்கின் தன்மையை ஒட்டி வங்கி இரண்டு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் இந்த ஆவணங்களின் நகல்களை வாங்கி நமது கணக்குக்குரிய கோப்பில் இணைத்துக்கொள்ளும்.
ஒருமுறை பயன்படும் கடவுச்சொல் (One Time Password – OTP)
ஒரு குறிப்பிட்ட பரிவர்த்தனையை இணையத்தின் மூலம் வங்கி அனுமதித்து அங்கீகரிக்க வங்கி அனுப்பும் கடவுச்சொல் தான் OTP என்பதாகும். வங்கியுடன் இணைக்கப்பட்ட நமது மொபைல் தொலைபேசி எண்ணுக்கு இந்த ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படுகிறது. இது எண் குறியீடாகவோ அல்லது எண்ணும் எழுத்தும் கலந்த குறியீடாகவோ இருக்கும்.
IFSC CODE (Indian Financial System Code)
வங்கியின் அனைத்து கிளைகளையும் தொழில்நுட்ப ரீதியில் மையமாக இணைத்து கணக்குகளைப் பராமரிக்கும் மைய வங்கியியல் (Core Banking) சென்ற நூற்றாண்டின் இறுதியில் உலகின் ஆணிவேரானது. இந்த இணைப்பு வங்கிகளுக்கிடையேயும் கணக்குப் பரிமாற்றத்தை எளிதாக்கிவிட்டது. இந்த முறையில் வங்கிகளின் பல கிளைகளின் கணக்குகளையும் பாதுகாப்பான வலைத்தளத்தின் மூலம் ஒன்றிணைத்து விடப்படும். ஒவ்வொரு கிளைக்கும் ஒரு குறியீட்டு எண் (Code) தரப்படும். இதற்கு இந்திய நிதி அமைப்பின் குறியீடு – Indian Financial System Code (IFSC) என்று பெயர். இந்த கட்டமைப்பில் எந்த ஊரில் கணக்கு இருந்தாலும் மற்றொரு ஊரில் உள்ள வங்கிக் கிளை மூலம் உடனடியாக பணத்தை அனுப்ப முடியும். இது ஒரு வங்கி மூலம் நடக்கும்.
நிதி ஆதாரம் வழங்குமிட வரி பிடிப்பு (Tax Deducted at Source)
ஊதியம் அல்லது வட்டியை ஒரு நிறுவனம் வழங்கும் போது அந்த பணம் நமது வருமானம் என்பதால் அத்தொகைக்கான வருமான வரியை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தில் கணக்கிட்டு கழித்து மீதமுள்ள நிலுவைத்தொகையை நமக்கு வழங்குவர். அவ்வாறு கழிக்கப்படும் தொகையை நிதி ஆதார வழங்குமிட வரி பிடிப்பு (Tax Deducted at Source – TDS) என்பர். நாமே நமது வருமானத்திற்கான வரியைக் கணக்கிட்டுச் செலுத்தும் நிலையிருந்தால் வரி பிடிப்பினை நிறுத்த அதற்குரிய படிவங்களான Form 15H அல்லது Form 15G என்பதை பூர்த்தி செய்து வங்கியிடம் உரிய காலத்திற்கு முன்னரே வழங்கவேண்டும். வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் நிலைவைப்பு, தொடர் வைப்பு ஆகிய திட்டங்களில் சேமிப்பவர்களுக்கும், சேமிப்புக் கணக்கில் ஒரு வருடத்திற்கு ரூபாய் 10000/- அல்லது அதற்குமேல் வட்டியாகப் பெறுபவர்கள் இந்த வரி பிடித்தம் குறித்துத் தெரிந்துகொண்டு திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
மின்னணுவழிச் சேவை (Electronic Clearing Service – ECS)
வங்கிக்கு மின்னணுவழிச் சேவைக்கான நிலைக்கட்டளை (Standing Instruction -ECS) வழங்கிவிட்டால் ஒவ்வொரு மாதம் அல்லது ஒவ்வொரு தவணையில் நாம் செலுத்த வேண்டிய தவணைத் தொகையை / கட்டணத்தை வங்கியே நமது சேமிப்புக் கணக்கில் பற்று வைத்து (Debit) மின்னணு மாற்றவழியில் (Electronic Clearing) செலுத்திவிடும். இதற்கு கட்டணம் உண்டு. உதாரணத்திற்கு நாம் வீடு கட்டக் கடன் வாங்கியிருந்தால் நாம் செலுத்தவேண்டிய மாத தவணைக்காக ஒவ்வொரு மாதமும் நாம் வங்கிக்குச் செல்லவேண்டிய அவசியமில்லை. ECS படிவத்தில் நமது வங்கிக்கணக்கு மற்றும் கடன்கணக்கு விவரங்களைப் பதிவிட்டு வங்கியிடம் வழங்கிவிட்டால் போதும். ஆனால் நாம் ஒவ்வொரு மாதமும் நமது சேமிப்புக்கணக்கில் தவணைத் தொகையை வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் வங்கிக்கும் நமக்கும் நேரமிச்சமும், பயணச் செலவும் பெருமளவு குறைகிறது.
தேசிய மின்னணு நிதி பரிமாற்றம்
National Electronic Fund Transfer (NEFT)
உடனடி கட்டண சேவை
Immediate Payment Srrvice (IMPS)
நிகழ்நேர மொத்த தீர்வு
Real Time Gross Settlement (RTGS)
மேலே குறிப்பிட்ட வசதிகள் மூலம் ஒரு வங்கியிலுள்ள ஒருவரின் அல்லது ஒரு நிறுவனத்தின் கணக்கிலிருந்து மற்றவர் அல்லது மற்ற நிறுவனத்தின் பிற வங்கிக் கணக்கிற்கு வலைத்தளம் வழியாக பணப்பரிமாற்றம் செய்யலாம். தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்தின் மூலம் (NEFT) ரூபாய் இரண்டு லட்சத்திற்கும் கீழுள்ள தொகையை மட்டும் அனுப்ப முடியும். அதற்குமேல் உள்ள தொகையை நிகழ்நேர மொத்த தீர்வின் மூலம் (RTGS) அனுப்பலாம். ரூபாய் ஐந்து லட்சம் வரை உள்ள தொகையை உடனடி கட்டண சேவையின் மூலம் (IMPS) உடனடியாக அனுப்ப முடியும். இதற்கு கட்டணம் உண்டு. நமது வீடு அல்லது அலுவலகத்திலிருந்து கணினி / இணைய வங்கியியல் (Internet Banking) மூலம் இந்தப் பணப்பரிமாற்றங்களை செய்யமுடியும். இந்த சேவைகள் அனைத்திற்கும் கட்டணம் செலுத்தவேண்டும். கட்டணம் எவ்வளவு என்பதை அந்தந்த வங்கியே நிர்ணயிக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் இயங்கும் தேசிய தீர்வக மையத்தின் (National Clearing Cell ) மூலம் பணம் மாற்றப் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. நிகழ்நேர மொத்த தீர்வில் (RTGS) ஒவ்வொரு பரிவர்த்தனையும் தனித்தனியாக உடனடியாக பணம் போய்ச் சேர வேண்டிய கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. தேசிய மின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) சேவையில் பல பரிவர்த்தனைகள் (Transactions) ஒரு கால அளவில், அதாவது அரைமணிக்கு ஒரு முறை, ஒட்டுமொத்தமாக மின்னணு மூலம் மாற்றப்படுகின்றன. அதனால்தான் NEFT என்பதன் மூலம் சற்று காலதாமதமானாலும், அதே நாளில் பணம் மாற்றம் செய்யப்படுகிறது.
IMPS என்பது மொபைல் செயலியின் மூலம் வங்கிகளுக்கிடையேயான மின்னணு நிதி பரிமாற்ற சேவையாகும். இருபத்து நான்கு மணிநேரமும் வாரத்தின் அனைத்து நாட்களும் இந்தச் சேவை வசதி கிடைக்கும். மொபைல் குறியீட்டெண் என்னும் MPIN தேவை. வங்கியிடமிருந்து இந்த வசதி சேவையைப் பெற முதலில் வங்கியில் விண்ணப்பிக்க வேண்டும்.
அனைத்துவிதமான பணப்பரிமாற்றங்களுக்கும் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பெயர், வங்கி கிளையின் பெயர், அதன் ஐ எப் எஸ் சி (IFSC) குறியீட்டெண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், கணக்கு எண், அவரது தொலைபேசி எண் ஆகியவை தேவை.
நேரடியாக வங்கிக்குச் சென்று இந்தச் சேவையைப் பெற்று பணம் பரிமாற்றம் செய்ய அதற்குரிய விண்ணப்பத்தில் எழுதி கையொப்பமிட்டு வங்கியிடம் வழங்கவேண்டும். நாம் இணைய வங்கிச் சேவை வசதி பெற்றிருந்தால் தாளில் எழுதும் விண்ணப்பம் தேவையில்லை. இணையத்தில் விவரங்களை முதலில் பதிவு செய்து பணம் பெறவேண்டியவரின் விவரங்கள் பதிவானவுடன் 30 நிமிடங்கள் கழித்து பணம் அனுப்பலாம். NEFT வசதியை வங்கியில் கணக்கு வைத்திராதவர்கள் ரூபாய் 50000/- வரை பணம் அனுப்பப் பயன்படுத்தலாம். ஆனால் RTGS பணம் செலுத்தும் வசதி வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே உண்டு.
ஒருங்கிணைந்த பணம் செலுத்தும் முகமை (Unified Payment Interface – UPI)
மொபைல் செயலி, குறியீட்டெண் மூலம் இந்தியாவில் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பணம் செலுத்துதலை முறைப்படுத்தி நிர்வகித்து, பரிமாற்றத்தைப் பூர்த்திசெய்வது இந்த சேவையாகும். மின்னணுப் பயன்பாட்டின் மூலம் இதன் இயக்கம் நடைபெறுகிறது. இதற்கான கடவுச்சொல்லை (Password ) நாம் கவனமாகக் கையாண்டு நிர்வகிக்க வேண்டும். பயன்படுத்துவோரின் வங்கிக்கணக்கு இதனுடன் இணைக்கப்பட்டிருத்தல் அவசியமாகும். குறைந்த ரூபாய் 1/- அதிகபட்சம் ரூபாய் 2 லட்சம் என்று பணம் பரிமாற்ற கட்டமைப்பு உள்ளது. சில வங்கிகளில் அதிகபட்ச பணம் பரிமாற்றத் தொகை ரூபாய் 5 லட்சம் என்று நிர்ணயித்துள்ளனர்.
காந்தமை எழுத்து அங்கீகாரம் (MICR)
காசோலைகளை அடையாளப்படுத்தவும் காசோலைத் தீர்வுக்காகவும் (Clearing) பயன்படுத்தும் தொழில்நுட்பம் இது. இதன்வழி தீர்வக இயந்திரம் (Clearing House Machine Reader) காசோலையைப் படித்து, அதில் குறிப்பிட்டுள்ள பரிவர்த்தனையைச் செயலாக்குகின்றது. MICR குறியீட்டெண் வசதியினால் காசோலை தீர்வுகள் வெகு விரைவாக நடைபெறுகின்றது. இதனால் நேரச் செலவும் பணச் செலவும் மிச்சமாகும். இதனை காந்தமை எண்ணெழுத்து அடையாளக்கோடு என்றும் கூறுவர்.
கூடுதல் அட்டை (Add – on Card)
பற்று (ATM Card) அட்டை அல்லது கடன் அட்டையுடன் (Credit Card) இணைத்து வழங்கப்படும் அட்டைதான் இது. அதாவது உங்கள் முதன்மை கிரெடிட் கார்டின் பலன்களை உங்கள் குடும்பத்திற்கு நீட்டிக்க வழங்கப்படும் கூடுதல் அட்டைதான் Add On Card. இதற்கும் குறியீட்டெண் (PIN) உண்டு. பயன்படுத்தும் முறையும் முதன்மை அட்டையைப் போலத்தான். நமது ஏ டிஎம் அட்டை அல்லது கடன் அட்டை தொலைந்துவிட்டால் தொலைந்த அட்டையை பயன்பாட்டிலிருந்து நிறுத்தி ரத்து செய்வதை Hotlisting என்று வங்கிகள் குறிப்பிடுகின்றன. ஐ பின் (IPIN) என்பது இணைய வங்கிச் சேவைக்காகப் (Internet Banking) பயன்படுத்தும் குறியீட்டெண் ஆகும்.
சராசரி காலாண்டு இருப்பு (Average Quarterly Balance (AQB)
சராசரி காலாண்டு இருப்பு என்பது ஒரு காலாண்டில் கணக்கில் விட்டு வைக்கின்ற சராசரி பண இருப்பாகும். இந்தத் தொகையைச் சார்ந்துதான் வங்கி நமது கணக்கை நிர்வகிக்க கட்டணம் வசூலிக்கலாமா அல்லது கட்டணச் சலுகை வழங்கலாமா என்பதைத் தீர்மானித்து நடைமுறைப்படுத்தும், கூட்டு வட்டி / ஒட்டு மொத்த வட்டி / எளிய வட்டிகூட்டு வட்டி என்பது வட்டியை மூலதனத்தோடு சேர்க்கும் பொழுது உருவாகிறது.
மூலதனத்தோடு சேர்ந்துவிடும் இந்தக் கூடுதலான வட்டி கூட்டு வட்டி என்றழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த வட்டி என்பது இது நாள் வரை கணக்கிடப்பட்ட வட்டியின் மொத்தமாகும். எளிய வட்டி (Simple Interest) என்பது ஒவ்வொரு முறை வட்டி கணக்கிடும்போது அசல் தொகையின் மீது மட்டுமே வட்டி கணக்கிடப்படுவதாகும். வட்டிமேல் வட்டி கணக்கிடப்படுவதில்லை.
நிலையான வட்டியும் மிதக்கும் வட்டியும்
கடனின் முழுகாலத்திற்கும் மாற்றமில்லை என்று தீர்மானிக்கப்பட்டு நிலையான அதே விகிதத்தில் கணக்கிடப்படுவது நிலையான வட்டியாகும். மாறுதலுக்கு உட்பட்ட வட்டி விகிதம் என்பது அந்தந்த காலகட்டத்தில் நிலவும் சந்தைச் (Market) சூழ்நிலைகளுக்கு ஏற்ப வட்டி விகிதம் கூடும் அல்லது குறையும். பொதுவாக வீட்டுக்கடன் மற்றும் சொத்துகளின்மேல் வழங்கப்படும் கடன்களுக்கு இத்தகைய வட்டி விகிதங்கள் அந்தந்த வங்கிகளின் திட்டப்படி நிர்ணயிக்கப்படுகின்றன. வங்கியுடன் நமது வாழ்க்கையின் பல நிமிடங்கள் இணைந்துவிட்ட நிலையில் நமக்கு இந்தப் பதங்களை அறிவது நமது வங்கிப் பயன்பாட்டை எளிதாக்குகிறது. இன்னும் பல விவரங்களை அறிவோம் வாழ்க்கையில் உயர்வோம்.
Average Rating