உணவே மருந்து: நோயில்லா வாழ்விற்கு பாரம்பரிய அரிசி!! (மருத்துவம்)
இன்று அரிசி என்று சொன்னாலே எட்டிச் செல்கிறவர்களை நிறைய பார்க்க முடிகிறது. அரிசி சாப்பிட்டால் நீரிழிவு வரும், அரிசி சாப்பிட்டால் குண்டாகிவிடுவோம் போன்ற எண்ணங்கள் வேகமாக உருவாகி வருகிறது.
பழங்காலத்திலிருந்தே தினந்தோறும், வாழ்க்கை முழுவதும் சாப்பிடக்கூடிய ஓர் உணவாக அரிசியை உருவாக்கியிருக்கிறார்கள். மற்ற உணவுகள் உடலின் சில உறுப்புகளுக்கு மட்டுமே நன்மை பயக்கும். ஆனால், அரிசி உடல் உறுப்புகள் அனைத்துக்குமே பயன் தரக்கூடியது. எந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அரிசியால் செய்த உணவை எடுத்துக் கொள்ளலாம்.
அதனால்தான் காய்ச்சல் நேரத்தில் கூட அரிசிக் கஞ்சியைக் குடிக்கிறோம்.இந்தியா, சீனா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாட்டு மக்கள் அதாவது உலக மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் அரிசி உணவைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள். முக்கியமாக நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற சரியான உணவு அரிசி.அரிசியின் வரலாற்றைப் பார்க்கும் போது, இதன் தாவரப் பெயரான ‘ஒரைசா’ என்பதே நம் தமிழ் மொழியிலிருந்துதான் தோன்றியிருக்கிறது. 2000 – 3000 முந்தைய அகநானூறு, தொல்காப்பியம் நூல்களில் அரிசியின் வகைகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
திருநெல்வேலி பக்கம் ஆதிச்சநல்லூர் மற்றும் பழனி பக்கத்தில் பொருந்தாள் என்ற ஊர்களில் அகழ்வாராய்ச்சியில், 2500 வருடங்களுக்கு முன்பு சேமித்து வைக்கப்பட்ட அரிசி பெட்டகங்களை கண்டெடுத்ததில், அந்த அரிசி பூச்சி, வண்டு இல்லாமல், இன்றுவரை கெட்டுப்போகாமல் இருப்பதைப் பார்த்தால் சிறந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விளைவித்து அறுவடை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று ஆச்சரியப்படுகிறார்கள் அகழ்வாராய்ச்சியாளர்கள்.
உமி நீக்கப்படாத சிவப்பு, கருப்பு அரிசி வகைகளில் ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும், 18 வகையான அமினோ அமிலங்களும் இருப்பதால் உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவாக அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி ஆய்விலும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதிலிருந்தே நம் பாரம்பரிய அரிசியின் பெருமையை அறியலாம்.. பொதுவாக அரிசி உணவுகளில் கலோரி அதிகம், கிளைசமிக் இன்டெக்ஸ் அதிகம் என்பதுதான் மக்களிடம் இருக்கும் பயத்துக்குக் காரணம். அதுவும் தவிர, பச்சரிசி நல்லதா? புழுங்கலரிசி நல்லதா? என்பது மற்றொரு மிகப்பெரிய விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
நெல்லை அவிக்காமல் அதிலிருந்து அப்படியே அரிசியை எடுப்பதுதான் பச்சரிசி. இதை வேகவைக்காமல் எடுப்பதால் செரிமானம் ஆக கடினமாகவும், செரிக்க அதிக நேரம் எடுப்பதாகவும் இருக்கிறது. உடல் எடை கூட வேண்டும் என்று நினைப்பவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். ஆனால், புழுங்கலரிசி எளிதாக, விரைவாக செரிமானம் ஆகக்கூடிய தன்மை கொண்டது என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் புழுங்கலரிசியை சாப்பிடலாம்.
மேலும், இப்போதுள்ள குறுகிய காலத்தில் விளைவிக்கப்படும் நெல் வகைகளில், உமி நீக்கப்படுவதால் கிளைசமிக் இன்டெக்ஸின் அளவு 59-க்கும் அதிகமாகவும், தீமை செய்யும் கொழுப்புச்சத்து மிகுந்து இருப்பதாலுமே மருத்துவர்கள் அரிசியை தவிர்க்கச் சொல்கிறார்கள். இதனால் தற்போது, பாஸ்மதி அரிசி, சிவப்பரிசி மற்றும் கேரளா அரிசி பிரசித்தி பெற்றிருக்கின்றன.
ஆனால், தமிழ் பாரம்பரிய அரிசி வகைகளான சீரகச்சம்பா, குதிரைவாலி, மரநெல், கருப்பு கௌலி, தங்கச்சம்பா, வாடான்சம்பா, கலியன் சம்பா, புலிவெடிச்சான், வெள்ளைக்குருவை, கார், கல்லுருண்டை போன்றவற்றில் அறிவுறுத்தப்பட்ட அளவான 55-க்கும் குறைவான கிளைசமிக் இன்டெக்ஸ்தான் இருக்கிறது. கலோரி அளவும் குறைவாகவே இருக்கிறது.
இவற்றை சமைத்து சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவோ, கொழுப்பு அளவோ ஏறாது. உமி நீக்கப்படாத பாரம்பரிய அரிசி வகைகளில் நார்ச்சத்தும், நல்ல கொழுப்பும்கூட சிறிதளவுதான் கிடைக்கிறது. பயிரிடப்படாத நெல் வகையல்லாத மரவகை மூங்கிலரிசிதான் இருப்பதிலேயே சிறந்த அரிசி. எளிதில் கிடைக்கக்கூடிய சில தென்னிந்திய அரிசி வகைகளின் மருத்துவ பயன்களைப் பற்றி பார்ப்போம்…
பிரவுன் ரைஸ்
பிரவுன் ரைஸ், நேரடியாக அப்படியே பயனுக்கு வருகிறது, இதில் தவிடு அடுக்குகள் (Bran layers) 6-7 சதவீதமும், ஒரு கரு (Embryo) 2-3 சதவீதமும், ஒரு எண்டோஸ்பெர்ம் (Endosperm) சுமார் 90 சதவீதமும் உள்ளன. எனவே, பழுப்பு அரிசி ஒரு முழு தானியமாக கருதப்படுகிறது, அதாவது அதில் ஒரு முழு தானியத்திற்கான அனைத்து பகுதிகளும் உள்ளன. வெள்ளை அரிசியுடன் ஒப்பிடும்போது
100 கிராம் பழுப்பரிசியில்,
நார்ச்சத்து 4.43 கிராம்,
பி1 வைட்டமின் 0.27 மிலி கிராம்,
பி3 3.40 மிலி கிராம்,
பி6 0.37 மிலி கிராம்,
பி9 11.51 மைக்ரோ
கிராம் அளவில் பி வைட்டமின்களைக் கொண்டுள்ளது.
மெக்னீசியம் 93.9 கிராம்,
பொட்டாசியம் 199 மிலிகிராம் அளவும் நடுத்தர அளவான கிளைசமிக் குறியீடு 50ம் கொண்டுள்ளது.
உணவு நார்ச்சத்து நிறைந்த முக்கியமான உணவு பிரவுன் ரைஸ், இதய நோய் மற்றும் நீரிழிவு நோயைக் குறைக்கும். இதில் அதிக அளவு மெக்னீசியம் உள்ளதால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதையும் தடுக்கலாம்.தவிடு நீக்கப்படாத பிரவுன் அரிசியில் செய்த சாதம் பார்ப்பதற்கு அழுக்கு நிறத்தில் இருப்பதாலும், குறைந்த செரிமானம் மற்றும் எளிதில் சமைக்க முடியாத தன்மை காரணங்களாலும் சிலர் தவிர்க்கின்றனர். அதுவே, சிலர், முளைத்த வடிவத்தில் (Germinated form) உள்ள பிரவுன் அரிசியை வெகுவாக ஏற்றுக் கொள்கிறார்கள்.
முளைத்த பழுப்பு அரிசி, ரத்த உயர்கொழுப்பு நோய்களுக்கு (Antihyperlipidemia) எதிரான, உயர் ரத்த அழுத்தத்திற்கு (Antihypertension) எதிரான மற்றும் புற்றுநோயின் குறைவான ஆபத்து மற்றும் அல்சைமர் நோய் உள்ளிட்ட பல உடலியல் விளைவுகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது, இதனால் இது ஒரு முழு உணவாக கருதப்படுகிறது.
பாஸ்மதி அரிசி
இந்தியாவில் உற்பத்தியாகும் அரிசியில் பாஸ்மதி அரிசியும் ஒன்று. எவ்வாறு புழுங்கல் அரிசியில் பல்வேறு ரகங்களும், பல்வேறு விலைகளிலும் விற்கப்படுகிறதோ அதுபோலவே, பாஸ்மதி அரிசியிலும் ஏராளமான வகைகள் உள்ளன. பாஸ்மதி அரிசி இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது மற்றும் இந்திய உணவு வகைகளில் பிரதானமானது. இது வெள்ளை மற்றும் பிரவுன் ஆகிய இரண்டு வகைகளில் வருகிறது, வெள்ளை பாஸ்மதி அரிசி அதிகம் பதப்படுத்தப்படுகிறது.
மற்ற அனைத்து அரிசி வகைகளையும் விட பாஸ்மதி அரிசியில் நிறைய நார்ச்சத்து அடங்கியுள்ளது. இதில் பல வகையான உணவு வகைகளை தயாரிக்கலாம். இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரிசிக்கு என்று தனியாக மணமும், சுவையும் உண்டு. இதில் உடலுக்கு நன்மை பயக்கும் சில வேதி குணங்களும் அடங்கியிருப்பதால், மற்ற ஏனைய அரிசிகளை விட, பாஸ்மதி அரிசி உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன.
100 கிராம் பாஸ்மதி அரிசியில்,
ஆற்றல் 129 கிலோ கலோரி,
புரோட்டீன் 2.7 கிராம்,
கொழுப்பு 0.3 கிராம்,
கார்போஹைட்ரேட் 28 கிராம்,
நார்ச்சத்து 0.4 கிராம்
சோடியம் 240 மி.கி
போன்ற ஊட்டச்சத்துக்களும், பாஸ்பரஸ், துத்தநாகம், பி வைட்டமின்களும் நிறைந்துள்ளன.2015ம் ஆண்டின் உடலியக்க ஆய்விதழில் வெளியான அறிக்கைப்படி, மற்ற அரிசிகளோடு ஒப்பிடும்போது, இந்தியாவில் உற்பத்தியாகும் பாஸ்மதி அரிசியில் குறைந்த அளவே ஆர்சானிக் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட பாஸ்மதி அரிசியில், அதிகமான அமிலோஸ் உள்ளடக்கம் (Amylose content) உள்ளதாலும், அதிக நார்ச்சத்து உள்ளதாலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்ற பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசி வகைகளைக் காட்டிலும், பாஸ்மதி அரிசியை அளவாக உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் பி-வைட்டமின்களும் கிடைப்பதால், ரத்தத்தில் நல்ல கொழுப்பு அதிகரித்து இதயத்தை பாதுகாக்கிறது. அதோடு, இதில் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.
சிவப்பரிசி
உமி நீக்கப்படாத, பதப்படுத்தப்படாத ஒருவிதமான பச்சை வாசனை மற்றும் சுவையுடன் இருக்கும் சிவப்பரிசியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிக புரதச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்துக்களை கொண்டிருக்கிறது. வெள்ளை அரிசியைவிட 3 மடங்கு அதிகம் துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்தை கொண்டுள்ளது.
ஜர்னல் ஆஃப் லைஃப் சயின்சஸ் மற்றும் ஜர்னல் ஆஃப் இன உணவுகள் வெளியிட்ட ஆய்வறிக்கைப்படி, சிவப்பரிசியின் நிறத்திற்கு காரணமான அந்தோசயினின் (Anthocyanin) என்னும் நிறமி மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிஜன் விளைவுகளை கொண்டிருப்பதால், உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது. மிதமான மற்றும் அடர்த்தியான சிவப்பு நிறத்தில் கிடைக்கக்கூடிய சிவப்பரிசியில் பாலிபினால்கள் (Polyphenols) மற்றும் அந்தோசயனின்கள் (anthocyanin) போன்ற ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளன.
100 கிராம் சிவப்பரிசியில்,
ஆற்றல் 341 கலோரிகள்
புரோட்டீன் 10.49 கிராம்
கார்போஹைட்ரேட் 70.19 கிராம்
கொழுப்பு 1.81 கிராம்
இரும்புச்சத்து 13.9 மிலிகிராம்
துத்தநாகம் 1.91 மிலிகிராம்
கால்சியம் 8.71 மிலிகிராம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாக அரிசி ஆய்வு இதழ் வெளியிட்டுள்ளது.சிவப்பரிசியில் 192.27 மிலிகிராம் அளவில் மெக்னீசியம் தாதுப்பொருள் இருப்பதால் ஆஸ்துமாவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உடலில் ஆக்ஸிஜன் சுழற்சியை துரிதப்படுத்துகிறது.சிவப்பரிசி 2.71 கிராம் அளவு நார்ச்சத்தை கொண்டிருப்பதால் செரிமான மண்டலத்தை தூண்டுகிறது. உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றி மலக்குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.
கருப்பு கவுனி அரிசி
அரிசிகளின் மன்னன், சொர்க்க அரிசி போன்ற மதிப்புகளைப் பெற்றுள்ள கருப்பு கவுனி அரிசியானது, அரிசி வகைகளிலேயே மிகச்சிறந்ததாக இருக்கிறது. நார்ச்சத்துக்களின் மூலாதாரமாக விளங்குகிறது கருப்பு கவுனி அரிசி, தாவர அடிப்படையிலான புரதத்தினையும் உள்ளடக்கியுள்ளது. மேலும்,கருப்பு கவுனி அரிசியில் லைசின் (Lysine), டிரிப்டோபான் (Tryptophan) போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன; வைட்டமின் பி 1, வைட்டமின் பி 2, ஃபோலிக் அமிலம் போன்ற வைட்டமின்கள்; இரும்பு, துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் செலினியம் உள்ளிட்ட தாதுக்களின் நல்ல மூலமாகும். இதில், அனைத்து அரிசி வகைகளையும் விட, அதிக அளவு ஆக்ஸிஜனேற்றிகள், புரதம் மற்றும் உணவு நார்ச்சத்து உள்ளது.50 கிராம் அளவிலான கருப்பு கவுனி அரிசியில்,
ஆற்றல் 16 கலோரிகள்
புரோட்டீன் 5 கிராம்
நார்ச்சத்து 2 கிராம்
இரும்புச்சத்து 1 மிலிகிராம்
அளவில் உள்ளது. நிறம் நீக்கப்படாத கருப்பு கவுனி அரிசியில் பிரவுன் அரிசியைக்காட்டிலும் 6 மடங்கு அதிகமான ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளன. மேலும், மற்ற அனைத்து அரிசி வகைகளைக்காட்டிலும் 100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் உயர்ந்த அளவிலான அந்தோசயனின்கள் (anthocyanin) நிறைந்துள்ளன. இந்த அரிசியில் மற்றொரு அத்தியாவசிய ஆன்டிஆக்ஸிடன்டான வைட்டமின் E மற்றும் நார்ச்சத்துக்களும் அதிகம் உள்ளன. சர்க்கரை மிகக்குறைந்த அளவே உள்ளது.
கருப்பு அரிசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலில் எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களை குறைக்கிறது. இந்த அரிசியில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள், சில வகையான புற்றுநோயைத் தடுக்க உதவக்கூடியவை.
கருப்பு அரிசியில் இருக்கும் மிக அதிகமான நார்ச்சத்து , குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, மேலும் செரிமான செயல்முறைகளுக்கு உதவுகிறது.
கருப்பு அரிசியில் உள்ள அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் (Lipoprotein) ஆனது, (எச்.டி.எல்) கொழுப்பை அதிகரிக்கும் தன்மை கொண்ட, ஒரு “நல்ல” கொழுப்பின வகையைச் சேர்ந்ததாகும். இது ஆரோக்கியமான இதய அமைப்பு சரியாக செயல்பட உதவுவதாக ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் கண்டறிந்துள்ளது.
கருப்பு அரிசியில் உள்ள அந்தோசயின்கள் (Anthocyanins), ஆன்டிஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு மூலகாரணமாக இருக்கும், உடலில் ஏற்படும் உயிரணு சேதத்தை தடுத்து, நம் உடலை பாதுகாக்கிறது.கருப்பு அரிசியில் இருக்கக்கூடிய ஆக்ஸிஜனேற்ற பண்புகள், செல்லுலார் ஆக்ஸிஜனேற்ற பாதுகாப்பு முறையை அதிகரிக்கவும், அதன் மூலம் ஃப்ரீ ரேடிக்கல்களை நீக்கவும், செல்களின் சேதாரத்திற்குக்காரணமான லிப்பிட் பெராக்ஸைடேஷனைத் (Lipid peroxidation) தடுக்கவும், அழற்சி எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும், கல்லீரலை மேலும் சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன.
கருப்பு அரிசியில் உள்ள அந்தோசயினின்கள் (Anthocyanins), இன்சுலின் எதிர்ப்பை மேம்படுத்துவதன் மூலமும், பீட்டா உயிரணுக்களைப் பாதுகாப்பதன் மூலமும், இன்சுலின் சுரப்பை அதிகரிப்பதன் மூலமும், சிறு குடலில் உள்ள சர்க்கரைகளின் செரிமானத்தைக் குறைப்பதன் மூலமும் நீரிழிவு நோய்க்கெதிரான பண்புகளை வெளிப்படுத்துகின்றன. மேலும் நினைவகத்தை அதிகரிக்கவும், முன்கூட்டிய அறிவாற்றல், மங்கும் வயதைத் தடுக்கவும் உதவுகின்றன.
மாப்பிள்ளை சம்பா
சிவப்பு நிறத்தில் உள்ள பாரம்பரிய அரிசி வகையைச் சார்ந்த மாப்பிள்ளை சம்பா அரிசி இளைய வயதினருக்கு அதாவது திருமணத்திற்கு தயாராக இருக்கும் மற்றும் திருமணமான ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கத் தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்த அரிசி என்பதாலேயே இந்த பெயரைப் பெற்றது. முக்கியமாக தமிழ்நாட்டில் வளர்க்கப்படுகிறது.
100 கிராம் மாப்பிள்ளை சம்பா அரிசியில்,
கார்போஹைட்ரேட் 80 கிராம்,
புரதம் 7.18 கிராம்,
கொழுப்பு 1 கிராம்,
நார்ச்சத்து 7.07 கிராம்,
கால்சியம் 50.8 மிகி,
இரும்பு 5 மி.கி
பொட்டாசியம் 90 மி.கி,
பாஸ்பரஸ் 310 மி.கி உள்ளது.
மாப்பிள்ளை சம்பாவின் சராசரி கிளைசெமிக் குறியீடு 68.8% எனக் கூறப்படுகிறது. இந்த வகையிலிருந்து தயாரிக்கப்பட்ட, மாப்பிள்ளை சம்பா அரிசி குறுணை 100 கிராமில், கார்போஹைட்ரேட் – 85 கிராம், புரதம் – 11 கிராம் மற்றும் கிளைசெமிக் குறியீடு 55.65% உள்ளன. மாப்பிள்ளை சம்பா அரிசியில் வைட்டமின் ஈ, ஃபிளாவனாய்டு மற்றும் அந்தோசயனின் உள்ளடக்கங்கள் உள்ளன.
மாப்பிள்ளை சம்பா அரிசியில் உள்ள பின்வரும் நுண்ணூட்டச்சத்துக்களான கிளைசிடால் ஸ்டீரேட் (Glycidol stearate) ஆண்களுக்கு வரக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோய்க்கு எதிராகவும், உயர்கொழுப்பு செயல்பாடுகளுக்கு எதிர்வினையாவும் செயல்புரிகிறது.
மற்றொரு நுண்ணூட்டச்சத்தான ஸ்குவாலி (Squalene) னுக்கு பாக்டீரியாக்களுக்கு எதிராக செயலாற்றும் (Antibacterial) தன்மை, ஆக்ஸிஜனேற்றம் (Antioxidant), புற்றுநோய் தடுப்பு (Cancer Preventive), நோயெதிர்ப்புத்திறன் ஊக்கி (Immunostimulant) மற்றும் ஆஸ்துமா, அழற்சி, புற்றுநோய் போன்ற நோய்கள் தடுப்பான் (Lipoxygenase-Inhibitor) ஆக செயலாற்றும் திறன்கள் உண்டு.
காம்பெஸ்டெரோ (Campestero) நுண்ணூட்டச் சத்தில் ஆக்ஸிஜனேற்றம் (Antioxidant) மற்றும் ரத்தத்தில் கொழுப்பு உற்பத்தித்திறன் குறைபாட்டை நீக்கும் (Hypo cholesterolemic) செயல்பாடு உள்ளது.இதிலிருக்கும் ஸ்டிக்மாஸ்டெரால் (Stigasterol) ஊட்டச்சத்தானது, கல்லீரல் நோய்களுக்கு எதிராகவும் (Antihepatotoxc), அழற்சி எதிர்ப்புத்திறன் (Antinflammatory), வைரஸ் எதிர்ப்புத்திறன் (Antiviral), புற்றுநோய் எதிர்ப்புத்திறன் (CancerPreventive) போன்ற செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.
சமையல்கலை நிபுணர் நித்யா நடராஜன் கருப்பு கவுனி அரிசியில் பொங்கல் செய்யும் முறையை இங்கே விவரிக்கிறார்.
கவுனி அரிசி பொங்கல்
தேவையான பொருட்கள்
கவுனி அரிசி – 200 கிராம்
வெல்லம் – 400 கிராம்
முந்திரி உடைத்தது – 2 டேபிள்ஸ்பூன்
திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பவுடர் –
1 சிட்டிகை
நெய் – 5 டேபிள் ஸ்பூன்
தேங்காய் (துருவியது) – 1 கப்.
செய்முறை
முதலில் அரிசியை நன்கு கழுவி, அதை 8 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், பிரஷர் குக்கரில் 1 பாகம் அரிசி 5 பாகம் தண்ணீர் என்ற விகிதத்தில் ஊற்றி மிதமான தீயில் 5 முதல் 6 விசில் விடவும். பிரஷர் அடங்கியதும் அரிசி வேகவில்லை என்றால் மறுபடியும் 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கவும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அதை வெந்த அரிசியில் சேர்த்து கிளறவும். பின்னர் அதில், பொடித்து வைத்துள்ள ஏலக்காய் மற்றும் தேங்காய் சேர்த்து கிளறவும். பின்னர் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து அதில் சேர்த்து கிளறவும். ஆரோக்கியமான கவுனி அரிசி பொங்கல் ரெடி. சூடாக சாப்பிட்டால் ருசி அருமையாக இருக்கும்.
Average Rating