ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது? (கட்டுரை)
ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மற்றோர் அமர்வு வருகிறது. இம்மாதம் இறுதிப் பகுதியிலிருந்து, சுமார் ஒரு மாத காலமாக அது நடைபெறும்.
இந்த நிலையில், அரசாங்கமும் தமிழ் அரசியல் கட்சிகளும் அதற்குத் தயாராகி வருகின்றன. இது, அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்தது முதல், நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும்.
போரின் போது இடம்பெற்ற மனித உரிமைகள் மீறல்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் அதற்காக, மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ் தரப்பினர் அப்பேரவையின் ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்னரும் வலியுறுத்தி வருகின்றனர். அரச தரப்பினர், அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ஏதாவது செய்து காலத்தைக் கடத்தி வருகின்றனர். இவ்வாறே, 12 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.
மனித உரிமைகள் பேரவை, ஒவ்வொரு வருடமும் போர்க்கால மற்றும் அதற்குப் பின்னரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் வகையில் ஏதாவது செய்கிறது. இலங்கை அரசாங்கமும் அப்போது ஏதாவது கூறி, காலத்தை கடத்த அவகாசத்தைப் பெற்றுக் கொள்கிறது.
இது, கடந்த ஒரு தசாப்த காலமாக நடைபெற்று வந்த போதிலும், பிரச்சினை தீர்ந்ததாகத் தெரியவில்லை. மனித உரிமைகள் பேரவையும் இந்தப் பிரச்சினையை பாரதூரமாகக் கணக்கில் எடுத்துள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது.
உதாரணமாக, சில அண்மைக்கால சம்பவங்களைச் சுட்டிக் காட்டலாம். 2014ஆம் ஆண்டு, மனித உரிமைகள் பேரவை, போர்க் காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று இருக்கின்றனவா என பொதுவானதொரு விசாரணையை நடத்தியது. பின்னர், போரில் ஈடுபட்ட இருசாராரும், மனித உரிமைகளை மீறியுள்ளனர் என அறிக்கை ஒன்றில் மூலம், 2015ஆம் ஆண்டு தெரிவித்தது.
அதன்பின்னர், 2019ஆம் ஆண்டு வரை, மனித உரிமைகள் பேரவை முக்கிய நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக எவருக்காவது எதிராக சாட்சியங்கள் இருந்தால், ஐ.நாவின் உறுப்பு நாடுகள் அவருக்கு எதிராக, தத்தமது நாடுகளிலேயே வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என, மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் 2019ஆம் ஆண்டு, தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், மனித உரிமைகள் பேரவையால் அந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரரணையில், அது குறிப்பிடப்படவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 2021ஆம் ஆண்டு, அதாவது கடந்த ஆண்டே அந்த விடயம், பேரவையில் பிரேரணையாக நிறைவேற்றப்பட்டது. அந்தப் பிரேரணை மூலம், இலஙகையில் மனித உரிமைகளை மீறியவர்களுக்கு எதிராக, தத்தமது நாடுகளிலேயே வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறிய மனித உரிமைகள் பேரவை, அந்த வழக்குகளுக்காக ஆதாரங்களைத் திரட்டுவதற்காக ஒரு பொறிமுறையை அறிமுகப்படுத்தியது. அந்தப் பொறிமுறைக்காக நிதியையும் ஒதுக்கியது.
ஆனால், அதன் பின்னர் அந்தப் பொறிமுறை இருக்கிறதா, இயங்குகிறதா என்பதே தெரியாமல் போய்விட்டது. இது, இலங்கையில் மனித உரிமை விடயத்தில், மனித உரிமைகள் பேரவை எந்தளவு அக்கறை செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், 2020 மார்ச் மாதத்திலேயே முதலாவதாக மனித உரிமைகள் பேரவை கூடியது. அப்போது, வெளிநாட்டமைச்சராக இருந்த தினேஷ் குணவர்தன, மனித உரிமை விடயத்தில் நீதி வழங்குவதற்காக, அந்த விடயம் தொடர்பாக இதுவரை நியமிக்கப்பட்ட குழுக்கள், ஆணைக்குழுக்கள் ஆகியவற்றின் அறிக்கைகளை ஆராந்து, அவற்றில் எந்தெந்தப் பரிந்துரைகளை அமலாக்கலாம் என்பதைப் பற்றிய அறிக்கையொன்றைத் தயாரிப்பதற்காக, உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படும் என அக்கூட்டத்தில் கூறினார்.
ஆனால், ஒரு வருடம் செல்லும் வரையிலும் ஜனாதிபதி அவ்வாறானதொரு குழுவை நியமிக்கவில்லை. கடந்த வருட மனித உரிமைகள் கூட்டத் தொடர் நெருங்கி வந்த நிலையில், கடந்த வருடம் ஜனவரி மாதத்திலேயே அவர் அதற்கு நடவடிக்கை எடுத்தார். அதன் பிரகாரம், உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் தலைமையில், மூவர் அடங்கிய ஆணைக்குழுவை நியமித்தார். அக்குழு ஆறு மாதங்களில் தமது அறிக்கையை, ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடைபெற்றதாகத் தெரியவில்லை.
இப்போது, அந்த ஆணைக்குழுவுக்கு ஒரு வருடம் பூர்த்தியாகிவிட்ட நிலையில், அடுத்த ஜெனீவா அமர்வும் வந்துவிட்டது. இந்த விடயத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் என்ன என்பதை, அரசாங்கம் அறிவிக்கவில்லை. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்குச் சென்று, வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் என்ன தான் கூறப் போகிறாரோ தெரியாது?
இது, மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். ஏனெனில், போர்க் கால மனித உரிமைகள் மீறல்களை விசாரணை செய்ய, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மனித உரிமைகள் பேரவையின் வலியுறுத்தலாகும். அதனை அரசாங்கம் செய்யாதமையாலேயே, பேரவை 2012 ஆம் ஆண்டு முதல் இலங்கை விடயத்தில் எட்டு பிரேரணைகளை நிறைவேற்றி இருக்கிறது. அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே, அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்தது.
அதற்கான ஆலோசனையை, அரசாங்கம் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்தும் இரண்டு ஆண்டுகள் சென்றுவிட்டன. இந்த விடயத்தில், ஆணைக்குழுவுக்கு பெரிதாக எதுவும் செய்வதற்கும் இல்லை. முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வாசித்து, பரிந்துரைகளில் எவை அமலாக்கப்பட்டுள்ளன, எவை அமலாக்கப்படவில்லை என்பதைப் பிரித்து அறிவது மட்டுமே, அதன் கடமையாக இருக்கிறது. அதில் ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டு இருந்தால், தாமதம் ஏற்படலாம். அவ்வாறு எதுவும் தெரிய வரவும் இல்லை.
அந்தப் பணி பூர்த்தியடையாவிட்டாலும், மனித உரிமைகள் பேரவையை கருத்திற்கொண்டு, அரசாங்கம் வேறு சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில், நீதி அமைச்சர் வடக்கில் ஆரம்பித்த தமது அமைச்சின் நடமாடும் சேவை, அதில் ஓர் அம்சமாகும்.
இது, தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கு மேற்கொண்ட முயற்சியைப் பார்க்கிலும், சர்வதேச சமூகத்துக்கு ஒரு செய்தியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்பது, வெளிநாட்டு அமைச்சர் அதில் கலந்து கொண்டதன் மூலம் தெரிகிறது.
அத்தோடு, மனித உரிமை உயர் ஸ்தானிகரின் கடந்த அறிக்கையில், பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டு இருந்த கவிஞர் அஹ்னாப் ஜஸீம்மை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
அதேபோல், அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை அனுமதிப்பதை எதிர்க்கப் போவதில்லை என, சட்ட மா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கிறார். அரசாங்கம், பயங்கரவாத தடைச் சட்டத்தைத் திருத்தி அமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவை, அரைகுறை நடவடிக்கைகள் என்பது தெளிவானதாகும். ஜஸீம், ஹிஸ்புல்லா ஆகியோரின் வழக்குகள், தற்போது சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதால், அரசாங்கம் அவற்றை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து இருக்கலாம்.
அதேவேளை, பயங்கரவாத தடைச் சட்டத்துக்கான திருத்தங்கள் கண்துடைப்பு என்றும் கூற முடியாத அளவுக்கு, அர்ததமற்றவை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருந்தார்.
நீதி அமைச்சின் நடமாடும் சேவை என்பது, மனித உரிமைகள் பேரவையை நோக்கமாகக் கொண்டது மட்டுமல்லாது, குறிப்பாக காணாமலாக்கப்பட்டடோருக்கான மரணச்சான்றிதழ்களை வழங்கியும் அவர்களுக்கான நட்டஈடு வழங்கியும், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான விடயத்தை முடிவுக்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.
அதாவது, காணாலாக்கப்பட்டோர் இறந்துவிட்டார்கள் என்று அரசாங்கம் கூறுகிறது. இதை ஏற்பது, காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு உணர்வு ரீதியாக, மிகவும் கடினமான விடயமாகும். ஆனால், மனித உரிமைகள் பேரவை, இதற்காக என்ன செய்யப் போகிறது என்பதும் முக்கியமான கேள்வியாகும்.
எவ்வளவு ஆர்ப்பாட்டங்களை நடத்தியும் அரசாங்கம் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக, கொஞ்சமேனும் அசைந்து கொடுக்கவில்லை. பொதுவாக, காணாமலாக்கப்பட்டோர் அனைவர் தொடர்பாகவும், மனித உரிமைகள் பேரவை ஏதாவது ஒரு பிரேரணையை நிறைவேற்றலாம். அதற்காகச் சில படை அதிகாரிகளை, சிப்பாய்களைக் குறி வைத்து நடவடிக்கை எடுக்கலாம். அது, அரசியல் ரீதியாகவே முக்கியமானதாக இருக்கும்.
ஆனால், காணாமலாக்கப்பட்ட குறிப்பிட்ட தனித் தனி நபர்கள் தொடர்பில், ஏதாவது நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை உறுதி செய்ய, அதனால் முடியுமா என்பதே பிரச்சினையாகும். அவர்களது சொத்துப் பிரச்சினை, அவர்களது மனைவி, கணவன் ஆகியோரது வாழ்க்கைப் பிரச்சினைகள் இருக்கின்றன.
இதுவும் அரசியல் தீர்வா, அபிவிருத்தியா என்ற பிரச்சினை போலானதாகும். தீர்வுக்குப் பின்னர் தான், அபிவிருத்தி என்று இருந்தால் அதற்காக எவ்வளவு காலம் பொறுத்திருப்பது என்ற கேள்வி எழுகிறது.
ஆட்களை காணாமல் செய்தவர்களைத் தண்டித்துவிட்டுத் தான், அவர்களது தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்றால், அதற்காக எவ்வளவு காலம் காத்திருப்பது? அரசாங்கத்துக்கு இது பிரச்சினையில்லை. இந்தத் தெரிவை மேற்கொள்வதே, தமிழ் தலைவர்கள் முன் இருக்கும் சவாலாகும்.
Average Rating