ஒற்றை தலைவலியை விரட்டும் யோகாசனங்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:15 Minute, 4 Second

உலக மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் மைக்ரேன் என்கிற ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுவதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. மூளையில் நரம்பு மண்டலம், மூளை தண்டுவட பகுதி ஆகியவற்றின் இயல்பு நிலை மாறும்போது, மைக்ரேன் தலைவலி வருகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

எலக்ட்ரானிக் பொருட்களை அதிகம் பயன்படுத்துவது, மூளையில் செரட்டோனின் ஹார்மோன் அதிகமாக சுரப்பது, மூளை அதிர்வுக்குள்ளாகும் காரணங்களாலும் மைக்ரேன் வருகிறது என்றும் விளக்குகிறார்கள்.

போதிய ஓய்வு, தியானம் இவற்றோடு இங்கு விவரிக்கப்படும் சில யோகா பயிற்சிகளையும் செய்வதன் மூலம் மைக்ரேனிலிருந்து இயற்கையாக விடுபடலாம் !

அதோ முக விராசனம்

யோகா விரிப்பின்மேல் முழங்கால்களிட்டு அமர வேண்டும். முழங்கால்கள் இரண்டையும் ஒரு சேர வைத்து பாதங்களை பின்புறமாக நீட்டியவாறு அமர்ந்துகொள்ள வேண்டும். பின்னர் மெதுவாக கைகள் இரண்டையும் இணைத்தவாறு முன்புறம் குனிந்து, தரையில் உள்ளங்கைகள் படும்படி வைக்க வேண்டும்.

தோள் பட்டை, மார்பு, இடுப்பு ஆகியவை நேராக தளர்த்தியபடியும் கைகள் காதுகளோடு ஒட்டியவாறும் இருக்க வேண்டும். முகத்தை தரையில் ஊன்றி, கண்கள் மூடிய நிலையில் 10 – 20 வினாடிகள் மூச்சை உள்ளிழுத்தவாறு இருக்கலாம். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு மெதுவாக முதலில் தலையைத் தூக்கி பழைய நிலைக்குத் திரும்பலாம்.

நன்மைகள்

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் செரட்டோனின் சுரப்பு சமநிலைப்படுத்தப்படுகிறது. முழங்கால்கள், கணுக்கால்களை நன்கு மடக்கி அமர்ந்து செய்வதால், இடுப்பு தசைகளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு தளர்வடைகின்றன.

வாயு தொல்லைகளை நீக்கி நல்ல செரிமானத்துக்கு உதவுகிறது. முதுகு தண்டுவடம் விரிவடைவதால் முதுகில் கூன் விழாமல் நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.

கவனத்தை ஒருமுகப்படுத்தி செய்யும்போது, நினைவாற்றல் மேம்படுகிறது.கணுக்கால், பாதங்களை நன்றாக நீட்டி செய்வதால், தட்டைப்பாதம்(Flat foot) நீங்கி பாதங்களில் முறையான வளைவுகள் உருவாகின்றன.

அதோ முக ஸ்வனாசனம்

கைகள் மற்றும் கால்களை தரையில் ஊன்றி நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு இடுப்பை சற்று உயர்த்தி, முழங்கைகளை முன்புறமாகவும், முழங்கால்களை பின்புறமாகவும் நீட்டி ‘V’ வடிவில் நிற்க வேண்டும். கைகள் இரண்டும் தோள்பட்டைகளை ஒட்டியும், கால்கள் இரண்டும் இடுப்பை ஒட்டியும் இருப்பது நல்லது.

இப்போது தலையை குனிந்து வயிற்றை பார்த்தநிலையில் 10 நொடிகள் நிற்க வேண்டும். பின்னர் மெதுவாக பழைய நிலைக்கு திரும்புங்கள்.

நன்மைகள்

அடிவயிற்று தசைகள் அழுத்தம் பெறுவதால் வலுவடைகின்றன. தலை நன்றாக மார்புக்கு கீழாக குனிந்தும், இடுப்பு பகுதியை உயர்த்திப்பிடிப்பதாலும் தலைப்பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்கிறது. மூளைக்கு பிராணவாயு கிடைப்பதால் தலைவலி போயே போய்விடும். வயிற்று தசைகள் வலுவடைந்து, கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் போன்ற செரிமான உறுப்புகளை கட்டுப்படுத்துகிறது.

உடல் எடை முழுவதும் கை, கால்களில் சமநிலைப்படுத்தி செய்யும்போது கை,கால் உறுப்புகள் வலுவடைகின்றன. கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள் விரிவடைவதால் அப்பகுதியில் இறுக்கம் குறைகிறது. தலைப்பகுதிக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தால் மன அழுத்தம் குறைகிறது.

ப்ரசரித்த பதோத்தனாசனம்

விரிப்பின் மேல் இரண்டு கால்களுக்கும் இடையில் 4 அடி இடைவெளியில் நன்றாக கால்களை அகட்டி, அதேசமயம் நன்றாக ஊன்றி நிற்க வேண்டும். மார்பிலிருந்து கைகளை தலைக்கு மேல் உயர்த்த வேண்டும். மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு, கைகள் இரண்டையும் தோள்பட்டை அகலத்துக்கு விரித்த நிலையில் உடலை முன்னோக்கி வளைத்து கீழே குனிய வேண்டும்.

உடலை நன்றாக வளைத்து, முழங்கைகளை மடித்தவாறு, இரண்டு கைகளையும் இரண்டு கால்களின் பாதங்களுக்கு நேராக கொண்டு வர வேண்டும். தலை தரையில் ஊன்றிய நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். முதுகுத்தண்டு நன்றாக வளையும் வகையில் இடுப்பு தூக்கி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மெதுவாக தலையை உயர்த்தி பழைய நிலைக்கு திரும்புங்கள்.

நன்மைகள்

கால்களின் உட்பகுதி, வெளிப்பகுதி தசைகள் மற்றும் கணுக்கால் தசைகள் நன்றாக வளைந்து கொடுப்பதால் வலுவடைகின்றன. மூளைப்பகுதிக்கு ரத்தஓட்டம் அதிகரிப்பதால் தலைவலி, தலைசுற்றல் நீங்குகிறது. முதுகுத்தண்டு, இடுப்பு எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடைகின்றன. மூளை புத்துணர்ச்சி பெற்று தலைவலிக்கு காரணமான மன அழுத்தம், மனப்பதற்றம் நீங்குகிறது. தோள்கள் வலுவடைகின்றன.

உத்தனாசனம்

கைகளை இடுப்பில் வைத்துக்கொண்டு தரையில் கால்களை நன்றாக ஊன்றி நேராக நிற்க வேண்டும். இப்போது மூச்சை வெளியேற்றியவாறு, இடுப்பை வளைத்து மெதுவாக தலையை குனியுங்கள். கால்கள் வளையாமலும், வயிறு தொடைகளில் அழுந்தி இருக்குமாறும் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது கைகளை கால்களுக்கு பக்கவாட்டில் கொண்டுவந்து, தரையில் ஊன்றி நிற்க வேண்டும். தலை உள்பக்கமாக பார்த்து இருக்க வேண்டும். இந்த நிலையில் 10 வினாடிகள் தொடர வேண்டும்.

நன்மைகள்

மூளைப்பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், மூளைக்கு அமைதி ஏற்பட்டு, மனஅழுத்தம், மனப்பதற்றம் குறைகிறது. இதனால் தலைவலியிலிருந்து விடுதலை. சிறுநீரகம் மற்றும் கணையத்தை சீராக்குகிறது. பின் கால், கெண்டைக்கால் மற்றும் இடுப்பு தசைகள் விரிவடைகின்றன. தொடை, இடுப்பு தசைகள் வலுவடைகின்றன.

செரிமானம் தூண்டப்படுகிறது. மெனோபாஸால் ஏற்படும் தலைவலி போன்ற அறிகுறிகள் குறைகின்றன. தலைசுற்றல், மயக்கம் குறைகிறது. அமைதியான தூக்கம் பெறலாம். ஆஸ்துமா, உயர் ரத்த அழுத்தம், மலட்டுத்தன்மை, மூட்டுவலி மற்றும் சைனஸ் நோய்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது.

ஊர்த்வ முக ஸ்வனாசனம்

யோகா விரிப்பில், வயிற்றுப்பகுதி தரையில் படுமாறு கால்களை நீட்டி படுக்க வேண்டும். பாதங்களையும், முன்கைகளையும் தரையில் ஊன்றி இடுப்பை மட்டும் சற்றே மேலே தூக்க வேண்டும். உடல் எடை முழுவதும் பாதங்களிலும், கைகளிலும் தாங்கியவாறு தலையை மேலே உயர்த்திப் பார்க்க வேண்டும்.

தோள்பட்டையை ஒட்டி கைகள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மூச்சை உள்ளிழுத்த நிலையில் 10 வினாடிகள் இருக்க வேண்டும். மூச்சை வெளியேற்றியவாறு பழைய நிலைக்குத் திரும்புங்கள்.

நன்மைகள்

மணிக்கட்டுகள், தோள்பட்டை எலும்புகள் வலுவடைகின்றன. இடுப்பின் கீழ்பகுதி தசைகள் தளர்ந்து வலுவடைகின்றன. மார்பு மற்றும் தோள் தசைகள் விரிவடைகின்றன. அடிவயிற்று தசைகள் மற்றும் உறுப்புள் சமநிலைப்படுகிறது. தொப்பை குறைந்து, கூன் நீங்கி உடல் தோற்றம் சீராகிறது. இதயம் வலுவடைகிறது.

இடுப்பு மேல்பகுதி, கீழ்பகுதி வலுவடைவதால் முதுகுவலி, இடுப்புவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. சியாடிக்கா என்னும் கெண்டைக்கால் வலியைப் போக்குகிறது. மார்பு விரிவடைவதால் நுரையீரல் அடைப்பு நீங்கி ஆஸ்துமா நோயிலிருந்து குணம் பெறலாம்.தலையை மேல்நோக்கி பார்க்கும் போது மூளைக்கு பிராணவாயு கிடைப்பதால் தலைவலி, தலைசுற்றல் நீங்குகிறது. தைராய்டு சுரப்பு சமநிலை அடைந்து, தைராய்டு கட்டி கரைகிறது.

அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

விரிப்பில் காலை நீட்டி, உடலை நேராக நிமிர்த்தியபடி அமர வேண்டும். இடதுகாலை வலப்பக்கமாக மடக்கி வைக்க வேண்டும். வலது காலை இடதுகாலிற்கு வெளிப்புறமாக கொண்டுவந்து தரையில் ஊன்றிக் கொள்ள வேண்டும்.

மூச்சை வெளியேற்றியவாறு உடலின் மேல்பாகத்தை வலதுபக்கமாகத் திருப்ப வேண்டும். முதுகுத்தண்டுவடம் வளையாமல் நேராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

வலதுகால் பாதத்தை இடதுகையால் பிடித்துக்கொண்டு வலதுகையை பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும். இயல்பாக மூச்சிழுத்தவாறு 20 முதல் 30 நொடிகள் இதே நிலையில் இருக்கலாம். இப்போது மெதுவாக இந்நிலையிலிருந்து வெளியே வந்து திரும்பவும் மறுபக்கம் இதேபோல செய்ய வேண்டும்.

நன்மைகள்

இடுப்பு மற்றும் முதுகு எலும்புகள் நெகிழ்ச்சியடைகின்றன. தலையோடு, உடல் முழுவதும் நன்றாகத் திருப்பி செய்யும்போது மூளைக்குச் செல்லும் ரத்தஓட்டம் சீராகிறது. இதனால் மைக்ரேன் தலைவலிக்கு காரணமான மூளை நரம்புகளின் இறுக்கம் தளர்வடைகிறது. கழுத்து, இடுப்பு மற்றும் தோள்பட்டை தசைகள் விரிவடைகின்றன.

செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகளை அகற்றி செரிமானத்தை தூண்டுகின்றன. இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உறுப்புகளை தூண்டுகிறது. உடல்சோர்வு, முதுகெலும்பு, முதுகுவலி மற்றும் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் அசௌகரியங்களிலிருந்து விடுவிக்கிறது. உள்ளுறுப்புகளை சுத்தம் செய்கிறது.

உள்ளுறுப்பு திசுக்களில் இருக்கும் அதிகப்படியான நச்சுகள் மற்றும் வெப்பத்தை வெளியேற்றுகிறது.நீரிழிவு, மலச்சிக்கல், முதுகெலும்பு பிரச்னைகள், கர்ப்பப்பை வாய் தொற்றுகள், சிறுநீர்த்தாரை தொற்று நோய்களை போக்குகிறது.

சவாசனம்

விரிப்பில் மல்லாந்த நிலையில் படுக்க வேண்டும். கால்கள் இரண்டும் ‘v’ வடிவில் இருக்க வேண்டும். கைகள் பக்கவாட்டில் தரையில் கவிழ்த்த நிலையில் இருக்க வேண்டும். உடலை தளர்வாக வைத்துக் கொண்டு, கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து இழுக்க வேண்டும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து, வெளியேற்றுங்கள். ஒவ்வொரு சுவாசத்தின் போதும், எந்த சிந்தனையும் இல்லாமல் முழு கவனத்துடன் உடல் தளர்வாக இருப்பதை உணர்ந்து செய்ய வேண்டும்.

நன்மைகள்

முழு உடலையும் அமைதியடையச் செய்கிறது. ஒற்றைத் தலைவலிக்கு காரணமான மன அழுத்தம், பதற்றம் நீங்குகிறது. கவனத்தை ஒருமுகப்படுத்த உதவுகிறது. தசைகள் தளர்வடைவதால் இரவில் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது.மனஅமைதி கிடைப்பதால் மன ஆரோக்கியம் மேம்படும். உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீரடைகிறது.நரம்பு சம்பந்தமான நோய்கள், ஆஸ்துமா, மலச்சிக்கல், செரிமானமின்மை மற்றும் நீரிழிவு நோய்களுக்கு இது ஒரு சிறந்த யோகாசனம் ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரத்த விருத்தியாக்கும் வெங்காயம்!! (மருத்துவம்)
Next post Flying Bird YOGA!! (மகளிர் பக்கம்)