புத்தாண்டு ஸ்பெஷல் கேக்ஸ் !! (மகளிர் பக்கம்)
தீபாவளிக்கு பலகாரம் என்பது போல் புத்தாண்டு என்றால் கண்டிப்பாக கேக் பிரதானமாக இருக்கும். கேக் தயாரிப்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரம் முதலே துவங்கிடும். பெரும்பாலும் இதனை நாம் கடைகளில் வாங்கிதான் சாப்பிட்டு வந்தோம். ஆனால் இப்போது பெரும்பாலான பெண்கள் யுடியூப் மற்றும் சமையல் சேனல்களைப் பார்த்து வீட்டிலேயே கேக்கினை தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்காகவே, சமையல் கலைஞர் குப்பம்மாள் இங்கு சிறப்பு கேக்குகளை வழங்கியுள்ளார்.
வாழைப்பழ கேக்
தேவையானவை:
மைதா- 2 கப்,
முட்டை- 3,
பேக்கிங் பவுடர்- 1 டேபிள் ஸ்பூன்,
முந்திரி பொடித்தது- ½ கப்,
உப்பு – 1 டீஸ்பூன்,
சர்க்கரை- 1 கப்,
எண்ணெய்- ¼ கப்,
வாழைப்பழம் – 4 (மசித்தது).
செய்முறை:
முதலில் மைக்ரோ கேக் அவன் பாத்திரத்தில் லேசாக எண்ணெய் தடவவும். ஒரு பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர், சர்க்கரை, உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். இதனுடன் எண்ணெய், முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும். மேலும் இதனுடன் மசித்த வாழைப்பழம், பொடித்த முந்திரி சேர்த்துக் கலக்கி உடனே மைக்ரோவேவ் பாத்திரத்தில் ஊற்றவும். மைக்ரோவேவ் ஹையில் நான்கு நிமிடம் வைக்கவும். பிறகு இறக்கி ஆறியதும் கட் செய்து பரிமாறவும்.
மாம்பழ சீஸ் கேக்
தேவையானவை:
மேரி பிஸ்கெட் ½ பாக்கெட்,
வெண்ணெய் – 100 கிராம்,
பனீர் – 50 கிராம்,
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்,
மாம்பழத் துண்டுகள் – தேவையான அளவு,
ஜெலட்டின் – 1 ஸ்பூன்,
லெமன் ஜூஸ் – 1 டீஸ்பூன்,
பொடித்த சர்க்கரை – 100 கிராம்,
மாம்பழச் சாறு – ½ கப்.
செய்முறை:
மேரி பிஸ்கெட்டை உருகிய வெண்ணெயுடன் பொடித்து சேர்த்து நன்றாக கிளறவும். இந்தக் கலவையை வட்ட வடிவப் பாத்திரத்தின் அடியில் மட்டும் நிரப்பவும். ஜெலட்டினை சுடுநீரில் கரைத்து ஆறியதும், மாம்பழம் சாறு, தயிர், பனீர், லெமன் ஜூஸ், சர்க்கரைச் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி அதை பாத்திரத்தில் பிஸ்கெட் கலவை மேல் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும். கலவைச் சற்றுக் கெட்டியானவுடன் மாம்பழத்துண்டுகளை மேலே தூவி கட் செய்து பரிமாறவும். தேவைப்பட்டால் பிரஷ் கீரீம் கொண்டும் அலங்கரிக்கலாம்.
போன்விடா கேக்
தேவையானவை:
மைதா- 1 கப்,
போன்விடா – 5 ஸ்பூன்,
சர்க்கரை- 1 கப்,
நெய்- ¼ கப்,
ஏலக்காய் பொடி- ¼ ஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் நெய்விட்டு அடுப்பில் வைத்து மைதாவை நன்கு வறுக்கவும். மாவு ஆறியவுடன் போன்விடாவை நன்குக் கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரைப் போட்டு ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து பாகுக் காய்ச்சவும். பாகு கொதிவரும் போது சிறிது சிறிதாக மைதா மாவைத் தூவி நன்கு கிளறவும். எல்லா மாவும் சேர்த்தப் பிறகு நெய் ஊற்றி ஏலக்காய் பொடிப் போட்டுக் கிளறவும். கலவைப் பாத்திரத்தில் ஒட்டாமல் திரண்டு வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டிச் சிறிது ஆறியவுடன் கட் செய்து பரிமாறலாம்.
ஈஸி பட்டர் கேக்
தேவையானவை:
மைதா மாவு – 500 கிராம்,
சர்க்கரை – 500 கிராம்,
முட்டை – 8,
ப்ளம்ஸ் – சிறிதளவு,
பட்டர் – 500 கிராம்(உருக்கியது),
வெனிலா எசன்ஸ் – 4 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 4 டீஸ்பூன்,
முந்திரி – பொடித்தது சிறிதளவு.
செய்முறை:
முதலில் சர்க்கரை, முட்டை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு கரையும் வரை நன்றாக அடிக்க வேண்டும். ஒரு வாணலியில் உருக்கிய பட்டர், அடித்த சர்க்கரை, முட்டைக் கலவை ஆகியவற்றைப் போட்டு நன்றாக கேக் அடிக்கும் பீட்டரினால் 20 நிமிடங்கள் அடிக்கவும். தயாரித்த கலவையுடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து கேக் பீட்டரினால் மீண்டும் அடித்துக் கலக்கவும். அதனுடன் வெனிலா எசன்ஸ், ப்ளம்ஸ், பொடித்த முந்திரி ஆகியவற்றைப் போட்டு கலக்கவும். அளவான கேக் தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் ½ பங்கு உயரத்திற்கு ஊற்றி நன்றாகப் பரப்பி 250 டிகிரியில் 20 நிமிடங்கள், அதன் பின் 200 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். தயாராகிய கேக்கை விரும்பிய வடிவில் வெட்டி அதனை ஒரு தட்டில் அடுக்கிப் பரிமாறவும்.
உருளைக்கிழங்கு கேக்
தேவையானவை:
உருளைக்கிழங்கு – 200 கிராம்,
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்,
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும். பின் தோலுரித்து மசித்துக் கொள்ளவும். மசித்து வைத்துள்ள உருளைக் கிழங்குடன் மாவு, வெண்ணெய் மற்றும் உப்புக் கலந்து பிசைந்துக் கொள்ளவும். பிறகு அதனை நீள உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். பிறகு அதனை மெல்லிய வட்ட வடிவத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நெய் தடவிய தவாவில் துண்டுகளைப் போட்டு இருபுறமும் நன்கு பொன்னிறமாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் மீது லேசாக வெண்ணெய் தடவி பரிமாறவும். இந்த கேக்குக்கு சாஸ், புதினா சட்னியுடன் சாப்பிட சுவை அருமையாக இருக்கும். இதை தவாவில் வேகவைக்காமல், அவன் டிரேயில் வட்டமாக அடுக்கி பேக் செய்யலாம்.
ஐஸிங் கேக்
தேவையானவை :
ஆப்பிள் – ½ கிலோ,
மைதா – 500 கிராம்,
வெண்ணெய் – 400 கிராம்,
ஐஸிங் சர்க்கரை – 200 கிராம்,
மில்க் மெய்ட் – 50 கிராம்,
பால் – 50 மில்லி,
சர்க்கரை – 100 கிராம்,
பட்டைத் தூள் – 5 கிராம்,
ப்ரெட் தூள் – 100 கிராம்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன் வெண்ணெய், ஐஸிங் சர்க்கரை, 40 கிராம் மில்க் மெய்ட், பால் அனைத்தும் ஊற்றிக் கலந்து (நன்றாகக் கலக்கி) வைக்கவும். ஆப்பிளை பொடியாக நறுக்கி அதனுடன் சர்க்கரை, பட்டை தூள், வெண்ணெய் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து வேகவைக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கவும். ஆப்பிள் வெந்து மிருதுவாகிடும். ஆறிய பின் இதனுடன் ப்ரெட் தூள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள மைதாக் கலவையை அரை சென்டி மீட்டர் தடிமனாகும் வரை உருட்டவும். வட்டமான மோல்டில் வெண்ணெய் தடவி இந்த மாவை வைத்து அதன் மேல் ஆப்பிள் கலவையை வைக்கவும். இதன் மேல் மீதமுள்ள 10 கிராம் மில்க் மெய்ட்டைப் பரவலாகச் சேர்த்து 180 டிகிரி சென்டிகிரேடில் 25 நிமிடத்திற்கு பேக் செய்து இறக்கவும்.
தேன் கேக்
தேவையானவை:
மைதா – 100 கிராம்,
தேன் – 60 மில்லி,
முட்டை – 5,
கேஸ்டர் சுகர் – 150 கிராம்,
பேக்கிங் பவுடர் – ¾ டீஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் – ¼ டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடித்துக் கொள்ளவும். மைதா மாவைச் சலித்துக் கொள்ளவும். முட்டையுடன் கேஸ்டர் சுகரைச் சேர்த்து அடிக்கவும். அதன் பின் இந்தக் கலவையில் தேனைச் சேர்த்து நன்கு அடிக்கவும். கலவை ரிப்பன் பதத்திற்கு வரும் வரை சுமார் 10 நிமிடங்கள் அடிக்கவும். மேலும் இதனுடன் எசன்ஸ் ஊற்றிக் கலந்து அதில் மைதா மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவிக் கலக்கவும். மாவை கலக்க மட்டும் பீட்டரைப் பயன்படுத்தாமல் ஸ்பாடுலாவைக் கொண்டு மென்மையாகக் கலக்கவும். ஓவனை பிரீ ஹீட் செய்யவும். கலவையை ஒன்றாகச் சேரும்படி நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் வெண்ணையை தடவி அதில் கலவையை ஊற்றி, 30 நிமிடம் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கவும். பின் தேவைக்கேற்ப கட் செய்து பரிமாறவும். தித்திக்கும் ‘தேன் கேக்’ தயார்.
ஆப்பிள் பான் கேக்
தேவையானவை:
மைதா – 1 கப்,
சர்க்கரை – ¾ கப், முட்டை – 1,
ஆப்பிள் – 1,
பாதாம் – 10,
பட்டர் – 2 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – 2 சிட்டிகை,
முந்திரி பொடித்தது – ½ கப்.
செய்முறை:
முதலில் பாதாமை ஊறவைத்து தோலுரித்து மிக்ஸியில் பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். ஆப்பிளை தோல் நீக்கி துருவி வைக்கவும். ஒரு கப்பில் முட்டையைப் போட்டு அதில் சர்க்கரை, பட்டர், பேக்கிங் பவுடர், அரைத்த பாதாம் விழுது, மைதா போட்டு பீட்டரால் நன்கு அடிக்கவும். அடித்தக் கலவையில் ஆப்பிள் துருவலைப் போட்டு மீண்டும் நன்றாக அடிக்கவும். பின்னர் பேக்கிங் ட்ரேயில் பட்டர் சிறிது தடவி அதில் கலவையை ஊற்றவும். அதை அவனில் 5 நிமிடம் வைத்து பின் அதில் பொடியாக நறுக்கிய முந்திரியை மேலே தூவி விட்டு பின் 180 டிகிரியில் 25 நிமிடம் பேக் செய்யவும். ஆறிய பின் பரிமாறவும்.
மரவள்ளிக்கிழங்கு கேக்
தேவையானவை:
மரவள்ளிக்கிழங்கு – 1 கிலோ (தோல் நீக்கியது),
கண்டஸ்ட் மில்க் – ½ டின்,
மைதா – 5 டேபிள் ஸ்பூன்,
பட்டர் – 125 கிராம்,
ஜவ்வரிசி மாவு – 5 டேபிள் ஸ்பூன்,
வெனிலா பவுடர் – 1 டீஸ்பூன்,
தேங்காய்ப்பால் – 400 மில்லி,
முட்டை – 3,
சர்க்கரை – தேவைக்கேற்ப.
செய்முறை:
கேரட் துருவியில் மரவள்ளிக் கிழங்கை துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, தேங்காய்ப்பால், வெனிலா பவுடர், மைதா மாவு, ஜவ்வரிசி மாவு, கண்டஸ்ட் மில்க் ஆகியவற்றைச் சேர்த்துக் கட்டி இல்லாமல் பிசறவும். துருவிய மரவள்ளிக் கிழங்கையும் உருக்கியப் பட்டரையும் சேர்த்துக் நன்றாக கலக்கி கலவையாக வைக்கவும். முன்னரே சூடு செய்த அவனை 200 டிகிரியில் செட் செய்யவும். பின் கேக் செய்யும் தட்டில் பட்டர் தடவி அதில் கலவையை கொட்டி பரப்பி அவனில் ½ மணி நேரம் பேக் செய்யவும். பிறகு எடுத்து கட் செய்து பரிமாறவும்.
Average Rating