பாதவெடிப்பை குணப்படுத்தும் மருத்துவம்!! (மருத்துவம்)
நமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான, பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், ஆண், பெண் என இருபாலருக்கும் ஏற்படும் பாதவெடிப்பு பிரச்னைக்கான மருத்துவத்தை பார்க்கலாம். இப்பிரச்னைக்கு குப்பைமேனி, மஞ்சள்பொடி, இஞ்சி ஆகியவை மருந்தாகிறது. பாத வெடிப்பால் ரத்தக்கசிவு ஏற்படும். வெடிப்பில் தூசி புகுந்து துன்புறுத்தும். வலியை ஏற்படுத்தும். இதை பித்த வெடிப்பு என்றும் சொல்வது வழக்கம். பித்தத்தை சமன்படுத்தும், பாதவெடிப்பை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: இஞ்சி, சீரகம், தனியா, பனங்கற்கண்டு. செய்முறை: இஞ்சி ஒரு துண்டு நசுக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிக்கட்டி இந்த தேனீரை குடித்துவர ரத்த ஓட்டம் சீராகும். பித்தம் அதிகமாக சுரப்பதை தடுத்து பித்தசமனியாக விளங்குகிறது. பசியை முறைப்படுத்துகிறது. தோல் ஆரோக்கியம் பெற்று வெடிப்புகள் விலகிபோகும்.குப்பைமேனியை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்: குப்பைமேனி, விளக்கெண்ணெய், மஞ்சள் பொடி. ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுக்கவும். இதனுடன் மஞ்சள் பொடி, குப்பைமேனி இலை பசையை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு இரவு நேரத்தில் தூங்க செல்லும் முன்பு பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பாதம் அழகுபெறும். குப்பைமேனி உடலை பொலிவுபெற செய்ய கூடியது. நுண்கிருமிகள், பூஞ்சை காளான்களை அழிக்கும். அத்திமரப்பட்டை, புங்கமரப்பட்டையை பயன்படுத்தி பாதவெடிப்புக்கான மருந்து தயாரிக்கலாம்.
அத்திமரப்பட்டை, புங்கமரப்பட்டை ஆகியவற்றை துண்டுகளாக்கி வெயிலில் காயவைத்து பொடியாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது மஞ்சள், புங்க எண்ணெய் சேர்த்து கலந்து பூசிவர பாதவெடிப்பு சரியாகும். பட்டைகள் பச்சையாக இருக்கும்போது இடித்து பசையாக்கி பாதவெடிப்பு உள்ள இடத்தில் கட்டிவைத்தால் வெடிப்பு சரியாகும். சாலையோரங்களில் வெயிலுக்காக வளர்க்கப்படும் மரம் புங்கன். இது மருத்துவ குணங்களை உடையது. அத்தி மரத்தின் பாகங்கள் பல்வேறு நன்மைகளை கொண்டவை. அத்தி பழம் உணவாக பயன்படுகிறது. அத்தி பால் மருந்தாகிறது.
அத்திமரப்பட்டை பாதவெடிப்பை சரிசெய்கிறது. மஞ்சள் பொடியுடன் சிறிது சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து பாதவெடிப்பு உள்ள இடத்தில் இரவு நேரத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து காலையில் கழுவிவர பாதவெடிப்பு சரியாகும். வெடிப்பு மாறி தோல் மென்மையாகிறது. பாதம் அழகு பெறும். சுண்ணாம்பு பாதவெடிப்புக்கு மருந்தாகிறது. பாதவெடிப்புக்கான இந்த மருந்துகளை பயன்படுத்தும் முன்பு இளம்சூட்டில் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும். இதையடுத்து மேல்பூச்சு மருந்துகளை போடும்போது நல்ல பலன் தரும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு பிரச்னையை தீர்க்கும் மருத்துவத்தை பார்க்கலாம். அதிக உஷ்ணத்தால் வெள்ளைப்போக்கு ஏற்படுகிறது. இதனால் இடுப்பு வலி, அடி வயிற்று வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படும். இப்பிரச்னைக்கு அத்திக்காய் அற்புதமான மருந்தாக பயன்படுகிறது. துவர்ப்பு சுவை உடைய அத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. நோயை விலக்க கூடியது. அத்திக்காயை எடுத்து நன்கு அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்துவர வெள்ளைப்போக்கு பிரச்னை சரியாகும்.
Average Rating