பொங்கலுக்கு களைகட்டும் ரேக்ளா பந்தயம் !! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 31 Second

சங்கத் தமிழர்களின் முக்கிய தொழிலாக இன்றும் இருந்து வருவது உழவுதான். அந்த உழவுத் தொழிலுக்கு உதவியாய் இருந்த சூரியனுக்கும், தங்களோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் நன்றி கூறுவதற்குத்தான் தைப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் கொண்டாட்டத்தில் முக்கிய அங்கம் வகிப்பது ஜல்லிக்கட்டு போட்டிகள். அதிலும் 2017 ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பின், உலக அளவில் இந்த விளையாட்டு அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. அதே சமயம் பொங்கல் பண்டிகையின் போது காளையை வைத்து ஜல்லிக்கட்டு தவிர மஞ்சுவிரட்டு, ஏறு தழுவுதல் மற்றும் ரேக்ளா ரேஸும் நம் கிராமங்களில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.

மதுரை, புதுக்கோட்டை, தேனி போன்ற மாவட்டங்களில் வாடி ஜல்லிக்கட்டு மிகவும் பிரபலம். ஆனால் சிவகங்கை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டும், ரேக்ளா பந்தயமும்தான் பிரபலம். நகரங்களில் வாழும் மக்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றி மட்டுமே தெரிந்திருக்கும். வாடிவாசல் எனப்படும் வழியாகக் காளைகள் ஒரு வேலி போட்ட இடத்திற்குள் திறந்துவிடப்படும். சீறிப் பாயும் அந்த காளையின் திமிலை பிடித்து அடக்கி, குறிப்பிட்ட தூரம் வரை வீரர் செல்ல வேண்டும். காளையை வீரர் அடக்கிவிட்டால், பரிசு வீரருக்கு வழங்கப்படும். காளையை அடக்க முடியாத பட்சத்தில், காளையின் உரிமையாளருக்குப் பரிசு அளிக்கப்படும்.

மஞ்சி விரட்டு அல்லது மஞ்சு விரட்டு எனப்படும் விளையாட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டிலிருந்து சற்று மாறுபட்டது. அதே போல, இந்த ரேக்ளா ரேஸ் பந்தயங்களும் ஜல்லிக்கட்டு தடை நீங்கிப் பின், மீண்டும் நம் கிராமங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த ரேக்ளா ரேஸ் பந்தயங்களைப் புகைப்படம் எடுத்து அந்த பந்தயத்தின் சிறப்பைப் பற்றி உலகுக்கு வெளிப்படுத்தி வரும் சிவகங்கை மாவட்டம், வாள்கோட்டை நாடு பாகனேரி எனும் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் ராஜாவிடம் பேசினோம்.

‘‘துபாயிலிருந்து சொந்த ஊர் திரும்பிய போது, பல ஆண்டுகள் கழித்து மஞ்சுவிரட்டு போட்டியையும், ரேக்ளா பந்தயங்களையும் காண வாய்ப்பு கிடைத்தது. எங்க ஊரில் ரேக்ளா ரேஸ்தான் பிரபலம். பொங்கலை தாண்டி, ஊர் திருவிழாவின் போது நடக்கும் பந்தயத்தைக் காண வெளிநாடுகளில் இருக்கும் எங்கள் கிராமத்து இளைஞர்கள் உட்பட பல ஆயிரம் மக்கள் வருவார்கள். போட்டோகிராஃபி என்னுடைய பொழுதுபோக்குதான். ஒரு நாள் எதேச்சையாக ரேக்ளா பந்தயத்தைப் படங்களாகவும், வீடியோவாகவும் பதிவேற்றியபோது, பல ஆயிரம் மக்கள் அதைப் பார்த்து மகிழ்ந்தனர். நேரில் வர முடியாதவர்கள், ஆன்லைனில் நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். அதனால் ஒவ்வொரு முறை பந்தயமும், மஞ்சுவிரட்டும் நடக்கும் போது அதை ஆவணப்படுத்தி சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வருகிறேன்” என்கிறார்.

அதே ஊரைச் சேர்ந்த இவருடைய அண்ணன், திருஞானம் என்பவர் பல ஆண்டுகளாக பந்தயத்திலும், மஞ்சுவிரட்டிலும் பங்குபெற்று, காளைகளுக்கும் பயிற்சியளித்து வருகிறார். அவர், ‘‘ரேக்ளா ரேஸ் எனப்படும் பந்தயம் பொங்கல் பண்டிகையில் தொடங்கித் தொடர்ந்து 7 மாதங்கள் வரை நடக்கும். விவசாய வேலை தொடங்கும் சமயம் மாடுகளுக்கு ஓய்வளித்துவிடுவோம். சாதாரண ஓட்டப் பந்தயம் போன்ற அதே விதிகள்தான் ரேக்ளா ரேஸிலும். இரண்டு காளைகளை ரேக்ளா பந்தயத்திற்குப் பயன்படுத்தும் வண்டியில் பூட்டி, போட்டி நடக்கும். ஒரு முறை ஜோடி சேர்ந்த காளைகள், கடைசி வரை அதே ஜோடியாகத்தான் பந்தயங்களில் ஈடுபடும்.

சிவகங்கை மாவட்டத்தில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் பூஞ்சிட்டு என மாடுகளை நான்கு வகைகளாகப் பிரித்து பந்தயங்கள் நடக்கும். பெரிய மாடு என்றால் பத்து மைல் தூரம், நடு மாடு என்றால் எட்டு மைல், அடுத்த வகைகள் ஆறு மைல் மற்றும் ஐந்து மைல் தூரம் எனப் போக வர சேர்த்து கணக்கிட்டு மாடுகளைப் பிரித்து பந்தயத்தை ஏற்பாடு செய்வோம். பொதுவாக ஒரு மாட்டை பந்தயத்திற்குத் தயார் செய்து, அதை உள்ளூரில் ஓட விடும் போது, அதை பார்த்து சிலர் வாங்குவார்கள்.

கிராமத்தில் இருப்பவர்களுக்கு எந்த மாட்டை பந்தயத்திற்குப் பயன்படுத்த வேண்டும், எந்த மாட்டை விவசாயத்திற்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரியும். விவரம் தெரிந்தவர்களை வைத்து மாட்டை வாங்க வேண்டும்” என்கிறார்அடுத்து மாடுகளை பந்தயத்திற்கு எப்படி பழக்குவார்கள் என விவரிக்கிறார் திருஞானம், “மாடுகளை பந்தயத்திற்கு பழக்க, முதலில் விவசாயம் செய்யும் பெரிய வண்டியில் வைத்து அதை மண் பாதையில் பூட்டுவோம். தார் சாலைகளின் இரு புறங்களில் இருக்கும் மண் பாதையில் தடம் மாறாமல் செல்ல பழக்குவோம். புது மாடுகளை முதலில் புல் மேய விட்டு அதை கொஞ்சம் கொஞ்சமாக பந்தயத்திற்குத் தயாராகப் பயிற்சி அளிப்போம். அந்த மாட்டை பந்தயத்தில் ஓட்டலாம் என முடிவு செய்தபின் தான் தீவனம் வைப்போம். மாட்டைப் பொருத்து அதன் தீவனத்தின் அளவும் மாறுபடும்.

கொள்ளு, கொண்டைக் கடலை, கம்பு, சோளம் போன்றவற்றை கடைகளில் வாங்கி, வெயிலில் காயவைத்து அரைத்து, முதல் நாள் இரவு தண்ணீரில் ஊறவைத்த பருத்திக் கொட்டைகளுடன் கலந்து கொடுப்போம். பந்தய மாடுகள் ஒரு முறை ஓட ஆரம்பித்தால், அவைகளுக்கு தொடர்ந்து இந்த தீவனம் தான் தினமும் வழங்கப்படும். வருடத்திற்கு ஒரு முறை, சில மூலிகைகள் கலந்த மருந்தை உருண்டை பிடித்து காளைகளுக்கு வழங்குவது வழக்கம். பந்தயத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன், மாலை வேளையில், சுடு தண்ணீரில் தைலம், பிரத்யேக பொடிகள் கலந்து மாட்டைச் சுத்தம் செய்வோம். காலையில் ஒரு மணி நேரம் நீச்சலுக்குக் கொண்டு போவோம். பந்தயத்திற்கு முன் மாட்டிற்குக் கால் வலி, தசைப் பிடிப்பு இருக்கிறதா என பார்த்து நாட்டு மருந்து மூலம் அதையும் குணப்படுத்திவிடுவோம். ரேக்ளா ரேஸில், மாட்டை ஓட்டுபவரை சாரதி என்றும், துணைக்கு இருப்பவரைத் துணை சாரதி என்றும் சொல்லுவோம். ஓட்டாளி,
பக்கோட்டி என்றும் சில இடங்களில் அழைப்பார்கள்.

துணை சாரதி, வண்டி வேகமாக ஓடும் போது திருப்பங்களில் சாயாமல் இருக்கவும், மற்றொரு மாட்டு வண்டியை முந்திச் செல்ல மாடுகளை கட்டுப்படுத்தி முன்னேற்றிவிடவும், கீழே இறங்கி ஒரு தடியை வைத்து மாடுகளை கட்டுப்படுத்துவார். மாடுகளின் வேகத்தைக் கூட்ட துணை சாரதி வண்டியிலிருந்து இறங்கி இயக்கினால், வேகத்தைக் கூட்ட முடியும். பந்தயத்தில் வெற்றி பெறுபவர்களுக்கு போட்டியின் வகையைப் பொருத்து பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

ரேக்ளா பந்தயத்தை அடுத்து விரட்டு மஞ்சட்டு என பாகனேரியில் அழைக்கப்படும் மஞ்சுவிரட்டு இங்கு பிரபலம். பாகனேரியில் விரட்டு மஞ்சட்டு பொங்கலுக்கு மறுநாள் நடக்கும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மக்கள் இருப்பார்கள்.இந்த மஞ்சுவிரட்டு போட்டியில், எந்த எல்லையும் கிடையாது. மாடு போகும் இடமெல்லாம் அதை பின் தொடர்ந்து வீரர்கள் செல்வார்கள். இந்த வகை போட்டியில், மாடுகளின் கழுத்தில் ஒரு மணியை கட்டியிருப்போம்.

தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு இருப்போம். மஞ்சுவிரட்டில் மாட்டைப் பிடித்து, அதன் கழுத்தில் இருக்கும் மணியை கைப்பற்றியவர்தான் வெற்றியாளர். மணியை எடுத்து உரிமையாளரிடம் செல்வார்கள். உரிமையாளர் தன்னால் முடிந்த ஒரு பரிசைக் கொடுப்பார். பதினொறு ரூபாயில் தொடங்கி நூற்று ஒன்று, ஐநூற்றி ஒன்று எனக் காணிக்கையாக நினைத்து வெற்றியாளனுக்கு அளிப்பார்கள். மாடு வீடு திரும்புவதற்குள் மணியை வீட்டிற்குள் கொண்டு வந்துவிடுவார்கள்.

பந்தயம் அல்லது மஞ்சுவிரட்டு நடப்பதற்கு முன், எங்கள் ஊரில் தலைவர்கள் மூலம் காவல்துறையினர், மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றுவிடுவோம். மக்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் இருக்கும் இடத்தை அறிவித்துவிடுவோம். மாடுகளுக்கோ அல்லது வீரர்களுக்கோ ஏதாவது காயம் ஏற்பட்டால் உடனடியாக அதற்கான உரிய மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்படும். பாதுகாப்பு இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்தப்படாது” என்கிறார் திருஞானம்.

சிவகங்கைக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் வண்டிகளில் மாடுகள் பந்தயத்திற்கு வருமாம். மாடுகளைத் தவிர, சேவல், ஆடுகளை வைத்தும் போட்டிகள் நடைபெறும். தைத்திருநாளை ஒட்டி இப்போது பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு மற்றும் பிற விளையாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிருள்ள கார் நமக்கு கிடைத்தால்? (வீடியோ)
Next post ஊசிமுனை ஓவியங்கள்..!! (மகளிர் பக்கம்)