1000 போர் தந்திரங்கள் கொண்ட அடிமுறை! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 40 Second

தமிழ்நாட்டின் தற்காப்புக் கலை விளையாட்டுகளில் ஒன்று அடிமுறை. இவ்விளையாட்டில் கையாலும், காலாலும் தாக்கி எதிராளியை வீழ்த்துவர். தமிழர் மரபுக் கலைகளான சிலம்பம், வர்மம், ஓகம் போன்றவைகளுடன் அடிமுறை, பிடிமுறை போன்ற கலைகளும் முக்கியமானதாகும். ஆயுதமும் இல்லாத நிலையிலும் எதிராளியின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த மரபுக்கலையாகும். இந்தக் கலைக்குள் ஆயிரம் போர் தந்திரங்கள் ஒளிந்துள்ளது. இவ்வாறு போற்றுதலுக்குறிய கலையினை நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘பட்டாசு’ என்ற திடைப்படத்தில் வந்த பின் தான் நிறைய தமிழர்களுக்கு தெரிய ஆரம்பித்தது.

‘‘வெளிநாடுகளில் கொண்டாடப்படும் நம் பாரம்பரிய கலையான அடிமுறையினை, தமிழ்நாட்டுக்கு உரியது என்று நினைத்து ஒவ்வொரு தமிழரும் பெருமைப்பட வேண்டும்” என்கிறார் தன் கணவர் செல்வனுடன் இணைந்து ‘லெமுரியா’ என்ற தற்காப்பு பயிற்சி பள்ளியை நடத்தி வரும் சுசிலி செல்வன்.

‘‘கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள மேலசூரங்குடி தான் எங்கள் ஊர். என் கணவர் 13 ஆண்டுகளுக்கு மேலாக கைப்போர் எனப்படும் நாட்டு அடிமுறை தற்காப்புக் கலையில் தேர்ந்தவர். அவர் தான் என் ஆசான். சிறு வயதிலிருந்தே தற்காப்புக் கலைகள் எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையும், ஆர்வமும் இருந்தது. ஆனால் அதற்கு உரித்தான இடம் அமையவில்லை. வீட்டில், ‘பெண் பிள்ளைங்க என்னத்துக்கு இதெல்லாம் கத்துக்கணும்’ என்கிற கட்டுப்பாடு வேறு. ஆனால் இன்று பெண்களுக்கு நடக்கும் அவலங்கலை பார்க்கும் போது எல்லா பெண்களும் குழந்தையிலிருந்தே இது போன்ற ஒரு தற்காப்பு கலை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் இருக்கிறது’’ என்றவர் திருமணத்திற்கு பிறகு இந்த கலையினை முழுமையாக கற்றுள்ளார்.

‘‘என் கணவர் தான் என்னை இந்த கலையினை கற்றுக் கொள்ள ஊக்கமளித்தார். ‘நீ ஒரு பெண்ணாக இருந்து இந்த கலையினை கற்றுக் கொண்டால் நிறைய பெண்கள் ஆர்வமாக வருவார்கள்’ என்று உத்வேகம் கொடுத்தவரும் அவர்தான். என்னுடைய சிறு வயது ஆசை நிறைவேறியது என்ற மகிழ்ச்சியில் நானும் ஆர்வமாக கற்றுக் கொண்டேன். அதுமட்டுமில்லாமல் இந்த கலையினை நான் கற்றுக் கொள்வதைப் பார்த்து நிறைய பெண்களும் கற்றுக் கொள்ள முன் வர வேண்டும் என்கிற ஆர்வத்தில் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதற்கு பலனாக பல பெண்கள் இன்று அடிமுறை கலையினை கற்று வருகிறார்கள்” என்கிற சுசிலி, அடிமுறை கலையின் சிறப்பு அம்சங்களை விளக்கினார்.

“உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளுக்கும் தனிப்பட்ட மருத்துவர்களை அணுகுகிறோம். அதற்கு பதிலாக நம் உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் பிரச்னைகளை சரி செய்வதற்கான வழிமுறைகள் அனைத்தும் அடிமுறை கலையில் இருக்கிறது. மேற்கத்திய கலைகள் பலதும் நம் அடிமுறை கலைகளிலிருந்து பிரிந்து போனது தான். உடல் வலுவிற்காகவும், கட்டுமஸ்திற்காகவும் ஜிம்மிற்கு போகிறோம். முகம் அழகு பொலிவு பெற அழகு, நிலையம் செல்கிறோம். உடலையும், மனதையும் சரி செய்வதற்காக உடல் மசாஜ் எடுக்கிறோம். இந்த விஷயங்கள் எல்லாம் தனி தனியாக போய் செய்வதற்கு பதில் அடிமுறை கலையை கற்றுக் கொண்டால், உடல் வளைவு தன்மை, அழகு, ஆரோக்கியம், சோம்பேறித்தனம் இல்லாத நல்ல ஒரு ஆரோக்கியமான மனிதராக வாழலாம்.

அடிமுறை பயில்வதால் ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் பல நன்மைகள் உள்ளது. பொதுவாக இப்போது உள்ள உணவுப் பழக்கவழக்கங்களினால் மாதவிடாய் பிரச்சனையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். அதற்கான தீர்வு இதில் கிடைக்கும். மாதவிடாய் பிரச்சினை காரணமாக மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் மருத்துவத்துக்கு செலவு செய்துவந்த ஒரு பெண் குழந்தை, அடிமுறை கலை காரணமாக மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்தியது மட்டுமில்லாமல் அவரின் பிரச்சினையும் குணமானது. அதே போல் உடல் எடை குறைப்பது பெண்களுக்கு இன்று பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அந்த டயட் இந்த டயட் என உடலை தேவையில்லாமல் வருத்திக் கொள்கிறார்கள். அடிமுறை மூலம் பின் விளைவுகள் இல்லாமல் ஆரோக்கியமான முறையில் உடல் எடையினை குறைக்கலாம்.

ஒரு நாள் எங்களை பற்றி தெரிந்து மதுரையிலிருந்து 70 வயதான லட்சுமணன் என்பவர் தொடர்பு கொண்டார். ‘பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். டாக்டரிடம் பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்ட போது, நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு பயிற்சி எடுத்துக் கொள்கிறீர்களோ அதற்கு ஏற்ப உடல் நிலை சீராகும்’ என்று அவரின் நிலையை கூறினார். மருத்துவ ரீதியாக மருந்தில் ஏதும் செய்ய முடியாதுன்னு சொன்னவருக்கு எங்களின் கலையின் வசைவுகள் தலைப்பில் யூடியூபில் வெளியிட்டிருந்த வீடியோவினை பரிந்துறை செய்தோம். வசைவுகள் என்பது உடலை வளைத்து செய்யக்கூடிய உடற்பயிற்சி. அதைப் பின்பற்றியவர், ‘இன்று பழைய சகஜமான நிலைக்கு திரும்பிவிட்டேன்’ என்று எங்களை மீண்டும் அழைத்து வாழ்த்தினார். இது போல் அடிமுறை கலை, தற்காப்புக்கு மட்டுமின்றி மருத்துவத்திற்கும் பயன்படுத்தலாம்” என்கிற சுசிலி அடிமுறை பற்றிய வரலாறு குறித்து விளக்கினார்.

‘‘அடிமுறையை இணையம் வழியாக ஒரு பாடதிட்டமாக 26 நாடுகளில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலம்பம், குத்துவரிசை, வாள்வீச்சு, களறி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வடிவமே நாட்டு அடிமுறை. இதை வர்ம அடிமுறை என்றும் கைப்போர் என்றும் கூறுகிறார்கள். முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தை சேர்ந்த மன்னர் மார்த்தாண்டவர்மனின் தளபதி அனந்த பத்மநாபன் இந்த தற்காப்புக் கலையை உருவாக்கினார். இதற்காக நாடு முழுவதும் 108 களறி பயிற்சி மையங்களை அமைத்திருந்தார். பண்டைய காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டிற்கு ஒருவர் இக்கலையில் சிறந்து விளங்கினர். இப்போது குமரி மாவட்டத்தில் ஊருக்கு 4 பேர் இந்தக் கலையை பயின்று வருகிறார்கள்.

அடிமுறை கலையின் பிறப்பிடம் ‘குமரி’ என்பதால், பயிற்சியும், உடல் அசைவும் தனித்துவமாக இருக்கும். 21 நாட்கள் தொடங்கி 90 நாட்கள் வரை, அடிமுறையின் நிலைக்கு ஏற்ப, பயிற்சி காலம் மாறுபடும். ஆசான் வரை பயிற்சி பெறலாம். அதற்கு மேல் இருக்கும் அகத்தியர்-திருமூலர்-சித்தர் இவை மூன்றுமே ஆராய்ச்சி நிலைகள். வர்மம், அதுதொடர்பான வைத்தியம் உள்ளிட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளக்கூடிய நிலைகள் இவை. அடிமுறையினை, நான்கு வயது குழந்தை முதல் வயது வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் கற்கலாம். இருப்பினும் 12 முதல் 25 வயதில் பழகும்போது, வேகமாக கற்றுக்கொள்ள முடியும்.

இதில் மழலை வீரன், வீரன், மாவீரன், இளமல்லன், மல்லன், மாமல்லன், சூரன், அசூரன், ஈஸ்வரன், ராவணன், ராஜராஜன், பரணிவீரன், களரிவீரன், பரந்தலைவீரன், முதுநில வீரன், அருகன், மூதன், ஆசான், அகத்தியர், திருமூலர், சித்தர் என பல நிலைகள் கொண்ட பாட திட்டங்கள் உள்ளது. கலை ரீதியாக படிக்கிறார்கள் என்றால் 18 பாடங்கள் அடிமுறையிலும், மூன்று பாடங்கள் மருத்துவம், சிகிச்சை சார்ந்து வர்ம வைத்தியம் குறித்து சொல்லி கொடுக்கப்படும். ‘லெமூரியா உலக கூட்டமைப்பு’ என்ற பெயரில் பாட திட்டத்தினை ஆறு நாடுகளில் பதிவு செய்து கற்று கொடுத்து வருகிறோம்.

நம் பாரம்பரிய கலையான அடிமுறை உலகம் முழுக்க சென்றடைய வேண்டும் என்கிற நோக்கத்தில் பள்ளியில் கற்றுக்கொடுப்பது போல், வரிசைப்படுத்தி முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு என நடத்தி வருகிறோம். இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பயிற்சி எடுத்துள்ளனர். மேலும் இந்த கலையினை குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ‘தாய் களம்’ என்கிற கோயில் அமைப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். 37 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயில் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதற்காக பலர் நிதியுதவியும் செய்துள்ளார்கள். கன்னியாகுமரி என்றால் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என்கிற அடையாளம் தாண்டி, அடிமுறை கலைக்கான கோயிலாக தாய்களத்தை உருவாக்கணும். இந்த கோயில் அமைவதற்கு பல்வேறு நாடுகளிலிருந்தும் உதவி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்” என்கிறார் சுசிலி செல்வன்.

அடிமுறை…

தமிழர்கள் காப்பாற்றத் தவறிய ஒரு கலைதான் அடிமுறை. சிவபெருமானிடமிருந்து பார்வதி கற்றுக்கொண்டார். அவரிடமிருந்து முருகன், அகத்தியர், போகர், சித்தர்கள் வழியாகத் தமிழர்களிடம் வந்து சேர்ந்ததுதான் இந்தக் கலை என்று நம்பப்படுகிறது. இத்தாலிய பாரம்பரியமான க்ளாடியஸ் (Gladious), குங்ஃபூ, கராத்தே, கேரளாவில் சொல்லித்தரப்படும் களரி உள்ளிட்ட வர்மக் கலைகள் எல்லாமே இந்த ‘அடிமுறை’ கலையிலிருந்து வந்ததுதான். பண்டைய காலத்தில் சிறுவர்கள் முதல் போர் புரியும் வீரர்கள் வரை இந்தக் கலையைக் கற்று வைத்திருப்பார்கள். புத்த மதத்தைப் பரப்புவதற்காகத்தான் போதி தருமர் இங்கிருந்து சீன தேசத்துக்குப் பயணித்தார். அந்த சமயத்தில்தான் அவர் இந்தக் கலையை அங்கு உள்ளவர்களுக்குக் கற்பித்தார். இந்தக் கலை குறித்த பல ஓலைச்சுவடிகள் அழிந்துவிட்டன. சில ஓலைச்சுவடிகள் சீனாவிலும் கேரளாவிலும் இன்றும் இருக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அனிமல் பிரின்ட் ஜார்ஜெட் புடவை… காஞ்சிபுரம் பட்டு பார்டர்!! (மகளிர் பக்கம்)
Next post ஃபேஷன் A – Z!! (மகளிர் பக்கம்)