நியுஸ் பைட்ஸ்: உலக திருநங்கை அழகி பட்டம் வென்றார் ஸ்ருதி சித்தாரா !! (மகளிர் பக்கம்)
இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவரான டாக்டர் சாரதா மேனன், வயது மூப்பு காரணத்தால், சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. கர்நாடகத்தில் பிறந்த இவர், சென்னையில் தன் பள்ளி படிப்பை முடித்து, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தில் மனநலம் படித்தார். 1984ல், ஸ்கிசோஃப்ரினியா பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையை (SCARF India) சென்னையில் தொடங்கினார். இவரது மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உலக திருநங்கை அழகி பட்டம் வென்றார் ஸ்ருதி சித்தாரா
கேரளாவைச் சேர்ந்த ஸ்ருதி சித்தாரா, உலகளவில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குபெற்று அழகி பட்டத்தை வென்றுள்ளார். குயர் சமூகத்தின் உரிமைகள் மற்றும் சமத்துவத்திற்காகப் பல பணிகளில் ஈடுபடுபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் கனடாவைச் சேர்ந்த போட்டியாளர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர்.
கழிவிலிருந்து உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்
லாத்வியா நாட்டில், கழிவுப் பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம், மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி பரிசுப் பொருட்கள், உணவு, ஷாப்பிங் என மக்கள் அதிக குப்பைகளை உருவாக்குவதை தடுக்கவும், குப்பைகளை முறையாகப் பிரிக்க ஊக்குவிக்கும் விதமாக கழிவுகளாலான மரம் அமைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தில் 2008க்கு மேல் பிறந்தவர்கள் புகை பிடிக்க தடை
நியூசிலாந்தில், புகை பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக தடை செய்யும் விதத்தில் 2008 ஆம் ஆண்டுக்குப் பின் பிறந்தவர்கள் யாரும் சட்டப்பூர்வமாகக் கடையில் சிகரெட் வாங்க முடியாது. இதன் மூலம் தற்போது 14 வயதான குழந்தைகளும் அதற்கு குறைந்த குழந்தைகளும் இனி சிகரெட் வாங்கவே முடியாதபடி இந்த சட்டம் அமைந்துள்ளது. நியூசிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4500 பேர் புகை பிடிப்பதால் இறக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு நாடுகளில் நான்கரை நாட்கள் மட்டுமே வேலை
அடுத்தாண்டு ஜனவரி 1 முதல், ஐக்கிய அரபு நாடுகளில் இனி வாரம் நான்கரை நாட்கள் மட்டும் வேலை செய்து இரண்டரை நாட்கள் விடுமுறை அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி இனி திங்கள் முதல் வியாழன் வரை காலை 7.30 முதல் மாலை 3.30 மணி வரை நான்கு நாட்களும், வெள்ளிக்கிழமைகளில் காலை 7.30 முதல் நண்பகல் 12 மணி வரை அரைநாள் மட்டுமே வேலைநாட்கள் இருக்கும். தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியின் துறை மற்றும் தன்மையைப் பொறுத்து இதை மாற்றியமைத்துக்கொள்ளலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இந்தியா ஏழை, பொருளாதார சமத்துவமற்ற நாடு
World Inequality Report 2022ன் முடிவுகளின்படி, இந்தியாவின் மொத்த வருமானத்தில் 22 சதவீத தொகை 1 சதவீத செல்வந்தர்களிடம் உள்ளதாகவும், 57 சதவீத வருமானம் 10 சதவீத மக்களிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாட்டின் 50 சதவீத மக்களிடம் வெறும் 13 சதவீதம் வருமானம் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் செல்வந்தர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயான இடைவெளி மிகவும் அதிகரித்திருப்பது தெரிகிறது. ஒரு புரம் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேலையில், பணக்காரர்களின் செல்வமும் அதிகரித்து தனித்துவமாக தெரிவதாக இந்த அறிக்கை கூறுகிறது.
Average Rating