ஏ சாமி… வாய்யா சாமி… !! (மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 27 Second

‘புஷ்பா’ திரைப்படத்தில் ‘ஏ சாமி… வாய்யா சாமி…’ பாடலை தெறிக்கவிட்ட நாட்டுப்புறப் பாடகி ராஜலெட்சுமி செந்தில்கணேஷிடம் பாடல் வாய்ப்பு குறித்து கேட்டபோது, நிகழ்ச்சி ஒன்றுக்காக மேட்டுப்பாளையம் கிளம்பிக்கொண்டிருந்தவர் நமக்காக நேரம் ஒதுக்கி புன்னகைத்தபடியே பேசத் தொடங்கினார்.கேட்கும்போதே பாடல் ஹைபிட்சுல ஆடவைக்கிறதே எப்படி இந்த மேஜிக் என்றதற்கு? அது அக்டோபர் மாதம் இரண்டாவது வாரம். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் அலுவலகத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. கைபேசியில் எங்களை அழைத்தது அவரது மேனேஜர். பீமேல் வாய்ஸ் பாட்டு ஒன்னு இருக்கு. மேடத்தோட வாய்ஸ் ட்ரை பண்ணிப் பார்க்கலாமா? அவுங்களை ஸ்டுடியோவுக்கு வரச் சொல்றீங்களா என்றார். அப்போது நானும் அவரும் திண்டுக்கல்லில் என் அம்மா வீட்டில் இருந்தோம்.

டிஎஸ்பி சார் அலுவலகத்தில் இருந்து கால் என்பதே முதலில் எங்களுக்கு பெரிய சர்ப்ரைஸ். இதுவரை நாங்கள் பாடாத இசை அமைப்பாளர் அவர். கூடவே நான் அவரோட பயங்கர ஃபேன். அவர் இசையில் பாட என்னை அழைக்கிறார் என்றதும் எனக்கு எதுவுமே ஓடலை. உடனடியாக கிளம்ப முடியாத சூழல் வேறு. மேனேஜரிடத்தில் இரண்டுநாள் டைம் கேட்டு, அதன்பிறகே ஸ்டூடியோவுக்குப் போனோம்.

அங்கு பாடலின் தெலுங்கு வெர்ஷனை எனக்கு ப்ளே செய்து காட்டினார்கள். அந்தப் பாட்டைக் கேட்கும்போதே எனக்கு எனர்ஜிடிக்கா ரொம்ப பிடிச்சிருந்தது. இந்தப் பாட்டுக்கு உங்க வாய்ஸ் தமிழில் செட்டாச்சுன்னா ரெக்கார்டிங் போயிரலாம்னு சொன்னாங்க. நான் பாட ஆரம்பித்தபோது ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்குள் சவுண்ட் எஞ்சினியர்ஸ் மட்டும்தான் இருந்தார். பல்லவியை மட்டும் இரண்டு மூன்று மாடுலேசன்களில் பாடிக் காட்டினேன். டிஎஸ்பி சார் வந்ததுமே ப்ளே பண்ணிப் பார்த்தவர், உங்க வாய்ஸ் இந்தப் பாட்டுக்கு ரொம்பவே செட்டாகுது. கேட்கும்போதே நல்லா ஃபீல் ஆகுதுன்னு சொன்னார். கண்டிப்பாக நீங்களே பாடுங்க. ஆனால் நல்லா எனர்ஜியா பாடுங்கன்னு மட்டும் சொன்னார். அவர் அப்படி சொன்னதுமே இந்தப் பாட்டை பாடுற வாய்ப்பு எனக்குத்தான்னு கன்ஃபார்ம் ஆச்சு. 80 சதவிகிதம் பாடலையும் அன்னைக்கே பாட வச்சு பதிவு பண்ணிட்டாங்க.

ஹைபிட்சுல 7 மணி நேரத்தை தாண்டிப் பாடினேன். அதனால் என் த்ரோட் கொஞ்சம் க்ராக் ஆயிடுச்சு. இரண்டு நாள் கழித்து மீண்டும் வரவைத்து மீதியிருந்த வரிகளையும் பாடச்சொல்லி பதிவு செய்தார்கள். பாடி முடித்து படம் பெயர் கேட்டபோது, ‘புஷ்பா’ என்றார்கள். எனக்கு அந்த படத்தின் பிரமாண்டம், அதில் மிகப் பெரிய நடிகரான அல்லு அர்ஜுன் சார் நடிக்கிறார் என்பதெல்லாம் எதுவுமே தெரியாது. தெலுங்கு படங்கள் பார்க்கும் பழக்கமும் எனக்கில்லை. தெலுங்கில் இருந்து டப்பாகும் படங்களையும் நான் பார்த்ததில்லை. மிகப் பெரிய பேனர் படத்தில் பாடியிருக்கேன் என்பதே எனக்கு மிகத் தாமதமாகவே தெரிந்தது.

தெலுங்குப் படத்திலிருந்து மொழி மாற்றம் என்பதாலயோ என்னவோ என் பாடல் மற்றும் மேக்கிங் வீடியோ வெளியாகி பத்து நாள் வரை பெரிசா எந்த ரீச்சும் கிடையாது. தெரிஞ்ச சர்க்கிள் மட்டுமே யு-டியூபில் பார்த்துட்டு பாட்டு ரொம்ப நல்லா வந்துருக்கு. சூப்பரா இருக்குன்னு சொன்னாங்க. பத்து பதினைந்து நாளுக்குப் பிறகே பாட்டு மாஸா ரீச்சாகி, யாரைப் பார்த்தாலும் ‘ஏ சாமி..’ பாட்டு சூப்பரா இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க. பாராட்டுக்களைக் கேட்டும், லிங்கில் வந்த கமெண்ட்ஸ்களை படித்தும் எனக்கு சந்தோசமா இருந்தது. ஒரு மாஸான படத்தில் என்னுடைய சாங் வரப்போகுதென ஹேப்பியாக இருந்தேன்.

ராஷ்மிகா மந்தனா டான்ஸ்க்கும் உங்க பாட்டுக்கும் தியேட்டரில் விசில் அள்ளுதே என்றதற்கு.? ஆமாம். சோலோவா ஒரு பாட்டு என்பது எனக்கு இதுவே முதல் முறை. என்னோட மொத்த எனர்ஜியையும் மொத்தமா கொடுத்துப் பாடுன ஒரு ஃபீல் இந்தப் பாட்டில் எனக்கு இருந்தது. இது எனக்கு மிகப் பெரிய சந்தோசம். எப்படா பாட்டை ஸ்கிரீன்ல பார்ப்பேன்னு ஆர்வமாய் இருந்தேன். படம் ரிலீஸ் ஆனதும் எங்கள் ஊரான திண்டுக்கல்லில் உள்ள தியேட்டர் ஒன்றில் பாக்ஸில் அமர்ந்து குடும்பத்தோடு பார்த்தோம். என் பாட்டு வந்ததுமே பயங்கரமாக விசிலடிச்சு ரசிச்சு எல்லோரும் பார்த்தாங்க. அந்த மொமென்டை எங்க குடும்பமே செமையா என்ஜாய் பண்ணுனோம்.

என் கணவரோடு இரண்டு மூன்று பாடல்களை திரைப்படத்தில் ஏற்கனவே இணைந்து பாடியிருக்கேன். சார்லி சாப்ளின்-2 படத்தில் வந்த, ‘சின்ன மச்சான்..’ பாடலும் ‘விஸ்வாசம்’ படத்தில் வந்த ‘டங்கா.. டங்கா..’ பாடலும் அவரோடு நான் பாடியது. ‘அசுரன்’ படத்தில் வேல்முருகன் அண்ணாவோடு ‘கத்தரி பூவழகி’ பாடலை பாடினேன். இதற்கு முன்பெல்லாம் நான் பாடிய பாடலை திரையில பார்க்கும் எண்ணம் வந்ததில்லை. காரணம், தியேட்டர் ஸ்கிரீன்ல நான் பாடிய பாடல் எப்படி இருக்கும். நல்லா பாடியிருக்கேனா என்கிற பயமிருக்கும்.

சாமி பாடல் மேக்கிங் வீடியோவிலும் உங்கள் எக்ஸ்பிரஷன் வேற லெவலில் இருந்ததே என்றதற்கு, நான் மேடைகளில் பாடும்போது பாடுற பாட்டை நடிச்சுக்கிட்டேதான் பாடுவேன். அது எனக்கு பழக்கமான விசயம். எனக்கான அடையாளமாக அதை எப்போதும் நான் செய்வேன். ‘ஏய் சாமி..’ பாடலை முழுவதும் பாடி முடித்த பிறகு ஒரு நாள் கரெக் ஷன் பாட வரச் சொல்லியிருந்தாங்க. அதற்காக கிளம்பும்போது அப்படியே மேக்கிங் வீடியோவும் எடுத்திடலாம் என்றார்கள்.

அப்போதுதான் பாடலின் முக்கியத்துவம் புரிய, வெறித்தனமா சிறப்பா பண்ணுவோம்னு நினைத்தேன். அன்னைக்குதான் நான்கு மொழியிலுமே மேக்கிங் வீடியோவை ஒரே இடத்தில் வரவைத்து எடுத்தார்கள். பிற மொழிகளில் பாடியவர்கள் மைல்டா ப்ளாக் கலர் மிக்ஸ்டு டி ஷர்ட் போட்டு வந்திருந்தார்கள். பாடல் கேட்கும்போது மூடியா பெப்பியா இருப்பதால் அதற்கேற்ப சிகுசிகுன்னு ஒரு புடவைய எடுத்து நான் கட்டிக்கிட்டு போயிருந்தேன் எனச் சிரித்தவர், மேக்கிங் வீடியோ எடுக்கும்போது என்னோடு கேமராமேன் மட்டுமே இருந்தார். முடிந்ததும் சவுண்ட் எஞ்சினியர்ஸ் நான் பாடியிருப்பதை பார்த்து, ‘என்ன மேடம் நடிக்கிற அளவுக்கு பயங்கர பெர்ஃபார்மென்ஸ் கொடுத்துருக்கீங்கன்னு சொன்னாங்க. தவிர அந்த பாட்டில் வரும் அத்தனை வரிகளும் எனக்கு பொருந்திப் போகும். அதனால்தான் நான் அனுபவிச்சு பாடுனேன்னு நினைக்கிறேன் எனப் புன்னகைக்கிறார்.

மல்டி லிங்குவல் மூவி என்பதால் ‘புஷ்பா’ படத்தின் இந்த சோலோ பாடல் எனக்கு கிடைத்த பெரிய கிஃப்ட். பிற மொழி பேசுபவர்களிடமும் என் குரலை, என் முகத்தை கொண்டுபோய் சேர்த்திருக்கு. இரண்டு நாள் முன்பு மலையாள செய்தி பேப்பரில் இருந்து என்னை அழைத்து இங்கு எல்லோரும் நீங்க பாடின ‘ஏய் சாமி..’ தமிழ் வெர்ஷனைத்தான் ரொம்ப விரும்பி கேக்குறாங்க. எக்ஸ்பிரசனோடு செமையா இருக்கு மேடம் என்றார்கள். தெலுங்குலையும் அதே மாதிரி சொல்லி என்னிடம் பேசினார்கள்.

கிராமியப் பாடல்களைப் பாடுறவுங்களுக்குன்னு ஒரு மாடுலேஷன் இருக்கும். அது பாடும்போதே தெரிய வரும். அதே மாதிரிதான் இந்த ‘ஏ சாமி.. ஐயா சாமி..’ பாடல் வரிகளும். ‘சாமி.. சாமி..’ ன்னு இழுத்து பாடினால் அது ஃபோக் ஸ்டைல். இது தெலுங்கு மொழி மாற்று பாடல் என்பதால் சாமிக்குப்பிறகு லைட்டா மூச்சு விட்ட மாதிரி ஒரு கட் கொடுத்து குரலை கொஞ்சம் மாடுலேசன் செய்து பாடினேன். இப்படி பாடியது இதுதான் எனக்கு முதல் முறை. நீங்க திரும்பி அந்தப் பாட்டைக் கேட்கும்போது அது உங்களுக்கு புரியும் என சிரித்தபடியே விடைபெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2021ல் பெண்கள்!! (மகளிர் பக்கம்)
Next post அலைபேசியில் அலையும் குரல்!! (அவ்வப்போது கிளாமர்)