பிரைடல் ரென்டல் ஜூவல்லரி பிசினஸ்!! (மகளிர் பக்கம்)
உடைகளின் டிரெண்டுக்கு ஏற்ப ஃபியூசன் ஜூவல்லரிகளை அணிவதை எப்போதும் வழக்கமாகக்கொண்டிருந்தார் மஞ்சு. எம்.ஏ. ஆங்கிலம் படித்து விட்டு தனியார் வங்கியில் வேலை பார்த்தார். ஆனாலும் ஜூவல்லரியின் அழகு அவரை ஈர்த்தது. இன்கம்டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ் பிராக்டிஷ்னராக இருந்த தன் கணவருக்கு பக்கபலமாக இருந்த மஞ்சுவுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மனைவியாக, தாயாக தனக்கான பொறுப்புகளை கவனித்த போதும் மஞ்சு தனக்குள் ஒரு வெற்றிடத்தை உணர்ந்தார். அப்படியான நேரங்களில் ஆன்லைனில் ஜூவல்லரி பற்றித் தேட ஆரம்பித்தார். ஜூவல்லரி விற்பனைக்கான முகநூல் பக்கம் துவங்கி அதன் வழியே மொத்த விற்பனையாளர்களிடம் ஜூவல்லரிகளைப் பெற்று விற்கத்தொடங்கினார்.
தனக்குப் பிடித்த விஷயத்தில் கால்பதித்த மஞ்சு படிப்படியாக வளர்ந்து சேலத்தில் ‘சாய் சஞ்சனா’ என்ற பிரைடல் ஜூவல்லரி பிசினசை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இனி மஞ்சு, ‘‘புடவை, நகை மேல பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டினா யாரும் அதை ஊக்கப்படுத்த மாட்டாங்க. அதே தான் எனக்கும். நான் ஆன்லைன்ல ஜூவல்லரி பிசினஸ் ஆரம்பிச்சப்போ பெரிய அளவுல விற்கல. ஆனா மனசு முழுக்க ஜூவல்லரிய தேடிட்டு இருக்கும். சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், டெல்லின்னு மெட்ரோ சிட்டிகள்ல டிரெண்ட் ஆகுற நகைகளை வாங்க ஆரம்பிச்சேன். அவங்க வச்சிருக்கிற அதே செட்டை வாங்கிடாம வித்தியாசமாவும், கிரியேட்டிவாவும் இருக்கிற நகைகள வாங்கி மிக்ஸ் மேச் பண்ணினேன். அதனால நான் கொடுக்குற நகை செட் வேற எங்கேயும் கிடைக்காது. இந்திய அளவுல தேடித் தேடி வாங்குறதால டிசைன்லதான் ஈடுபாடு காட்டினேன்.
10 செட் நகைகள வெச்சு பிரைடல் ரென்டல் ஜூவல்லரி பிசினஸ்ல இறங்கினேன். பியூட்டி பார்லர்ஸ் ஏறி இறங்கினேன். ஆன் லைன்ல தினமும் புதுப்புது போஸ்ட் போடுவேன். ஈசிவெட்ன்ற திருமண ஏற்பாட்டு நிறுவனம் எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. என்னோட ஜூவல்லரிய வெச்சு மாடல் சூட் நடத்தி அத ஃபேஸ்புக் பேஜ்ல போட்டு சந்தைப்படுத்தினேன். அந்த நகையை மணப்பெண் கல்யாணக் கோலத்துல அணியும்போது கிடைக்கிற அழகே அழகு தான். என்னோட நகைகள் மேல மக்களுக்கு நம்பிக்கை வர ஆரம்பிச்சது. ஃபேஸ்புக் வழியாத்தான் நிறைய கஸ்டமர்ஸ் கிடைச்சாங்க. அவங்க திருப்தியும் சந்தோஷமும் வாய் வார்த்தையா மாறி எனக்கான புரொமோஷனைப் பண்ணுச்சு. பியூட்டி பார்லர்கள் கஸ்டமர்களை என்கிட்ட அனுப்பினாங்க. ஆரம்பத்துல பிசினஸ்ல கிடைச்ச தொகையை நகைகள் வாங்கறதுக்கே செலவழிச்சேன். இன்னிக்கு என்கிட்ட நூறு வகையான ரென்டல் ஜூவல்லரிகள் இருக்கு. பல லட்சங்கள் இதுல முதலீடு பண்ணியிருக்கேன்.
நகைகள்ல மட்டும்தான் முதலீடு செய்தேன். ஷோரூம் போடலை. வீட்ல வச்சுத்தான் பிசினஸ் பண்றேன். பல நேரங்கள்ல வீட்டு வேலைகளைக் கூட கவனிக்க முடியாது. முகூர்த்த மாதங்கள்ல காலையில இருந்து இரவு வரைக்கும் கஸ்டமர்ஸ் வந்துட்டே இருப்பாங்க. அப்போ வீட்ல இருக்கிறவங்க எனக்காக அட்ஜஸ்ட் பண்ணிக்கிறதும் என் வளர்ச்சிக்குக் காரணம். வருஷத்துல ஆறு மாதம் பிசியா இருக்கும். ஆறு மாசம் கல்யாண முகூர்த்தங்கள் இல்லாதப்போ ரென்டல் ஜூவல்லரி பிசினஸ் டல்லடிக்கும். ஃப்ரீயா இருக்கும் போது பர்சேஸ்க்கு கிளம்பிடுவேன்.
முதன் முதலா 750 ரூபாய்க்கு நகை வாடகைக்குக் கொடுத்தேன். இப்போ ஒரு செட் 7000ம் ரூபாய் வரைக்கும் வாடகைக்குக் கொடுக்கறேன். முகூர்த்த காலங்களில் லட்சங்களில்சம்பாதிக்கிறேன். இப்போதான் தனியா ஷாப் திறக்க ஐடியா வந்திருக்கு. அதுக்கான முயற்சியில் இருக்கேன். திருச்சி, சென்னையில் கிளைகள திறக்கும் திட்டமும் இருக்கு. சாய் சஞ்சனா ஜூவல்லரின்ற ஃபேஸ்புக் பக்கத்துக்கு வந்து என்னோட கலெக்சன்ஸ் பற்றித் தெரிஞ்சுக்கலாம்’’ என்று அழைக்கிறார் மஞ்சு. ஆம் தோழிகளே…நமக்கு விருப்பம் உள்ள துறையில் பிசினஸ் வாய்ப்புகளை உருவாக்குவது கூட சவால் தான். ஆனால் அந்த சவாலை சமாளிப்பது இனிது.
Average Rating