குழந்தைகளுக்குமா ஆர்த்ரைட்டிஸ்? (மருத்துவம்)
‘‘ஆர்த்ரைட்டிஸ் பிரச்னை வயதானவர்களை தாக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால், குழந்தைகளையும் இந்தப் பிரச்னை விட்டுவைப்பதில்லை. இதில் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடு இல்லை என்பதால் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்’’ – அதிர்ச்சி செய்தியுடன் பேசத் தொடங்குகிறார் குழந்தைகள் முடநீக்கியல் மருத்துவரான சித்ரா சுந்தரமூர்த்தி
‘‘மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் அல்லது அழற்சியையே கீல்வாதம் (Arthritis) என்கிறோம். வயதானவர்களிடம் ஏற்படக்கூடிய ஆர்த்ரைட்டிஸ் வகைகளிலிருந்து, சிறுவர்களுக்கு ஏற்படுகிற கீல்வாதத்தின் வகை பெரிதும் மாறுபட்டது. சிறுவர்களிடம் அதிகமாக காணப்படுகிற கீல்வாதத்தை Juvenile Idiopathic Arthritis (JIA) என்கிறார்கள்.
‘நோய்மூலம் அறியப்படா இளம்பருவ கீல்வாதம்’ என்கிற இந்நோய் லட்சம் சிறுவர்களில் 90 பேரை பாதிக்கக்கூடியது. உடலின் எந்தப் பகுதியையும் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. நோய்த் தொற்றுகள், புற்றுநோய் மற்றும் நோய் எதிர்ப்புக் குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களினால் கீல்வாதம் ஏற்படலாம்’’ என்கிற சித்ரா, குழந்தைகளின் ஆர்த்ரைட்டிஸை அடையாளம் காணும் வழிமுறைகளைச் சொல்கிறார்.
‘‘மூட்டுவலி, மூட்டுவீக்கம், உடல் உறுப்பு களை அசைக்க சிரமம், காரணம் இல்லாத தொடர் காய்ச்சல் மற்றும் உடல் தடிப்பு போன்றவை இந்நோய்க்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. படுக்கையைவிட்டு குழந்தையால் எழ முடியாத நிலை, காலையில் தானாக நடக்காமல் தூக்கிச் செல்லுமாறு குழந்தைகள் அடம் பிடிப்பது, வளர்ந்த குழந்தைகள் காலை வேளையில் விந்தி நடப்பது, காரணம் இல்லாமல் மெதுவாக நடப்பது, கடுமையான முதுகுவலி அல்லது குதிகாலில் வலி போன்றவையும் முக்கியமான அறிகுறிகள்.
சோரியாசிஸ் என்கிற சரும நோய் பாதிப்புள்ள சிறுவர்களுக்கு கைவிரல்கள் அல்லது கால் விரல்களில் வீக்கம் ஏற்படுவதை வைத்தும் அடையாளம் காண முடியும். 16 வயதுக்கு முன்பாக தொடங்குகிற அழற்சி கீல்வாதம், 6 வாரங்களுக்கும் அதிகமாக நீடிக்குமானால் அது JIA என மருத்துவர்கள் முடிவு செய்வார்கள். இது பரம்பரை நோய் அல்ல… ஆனால், மரபணு காரணிகள் மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் (அநேகமாக தொற்றுகள்) பாதிப்பு ஆகிய இரண்டின் கலவையால் ஏற்பட வாய்ப்புண்டு. சில சிறுவர்களிடம் கண்களில் அழற்சி / வீக்கம் என்பதோடும் JIA காணப்படலாம். இதை ரத்தப் பரிசோதனை, எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், எம்.ஆர்.ஐ ஸ்கேன் போன்ற பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்த முடியும்.
ஆரம்ப நிலையிலேயே நோயின் தீவிரத்தைக் குறைப்பது, மூட்டு சேதமடையாமல் கட்டுப்படுத்துவது, முறையான சிகிச்சையினால் உடல் பாகங்களின் இயக்கத்தைப் பராமரிப்பது ஆகியவையே இப்போது இந்நோய்க்கான முக்கியமான சிகிச்சைகளாக இருக்கிறது. JIA பாதிப்பு ஏற்பட்டிருப்பது ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படும் சிறுவர்களிடம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது என்கின்றன ஆய்வுகள். அதனால், ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையை தொடங்கி விடுவதே நல்லது’’ என்கிறார்.குழந்தைகளின் கீல்வாதத்துக்கு
சிகிச்சை என்ன?
‘‘கீல்வாத நோயின் தீவிரம், பாதிப்பு சார்ந்த நிலை, ஆரம்ப காலத்தில் சிகிச்சை தொடங்கப்பட்ட விதம் மற்றும் பின்பற்றப்பட்ட சிகிச்சை முறை போதுமானதாக இருந்ததா ஆகிய அம்சங்களை சார்ந்ததாக சிகிச்சை இருக்கும். அழற்சியைத் தடுக்கக்கூடிய நவீன மருந்துகளின் பயன்பாடு, மூளையின் செயல்பாட்டைப் பாதுகாக்கக்கூடிய மறுசீரமைப்பு செய்முறைகள் ஆகியவற்றை சார்ந்தும் இந்த சிகிச்சைகள் அமையும்.
சில மூட்டுகள் மட்டும் பாதிக்கப்பட்டிருக்குமானால், மூட்டுகளில் ஸ்டீராய்டுகளை ஊசி மூலம் உட்செலுத்துவதன் வழியாக சிகிச்சையளிக்கலாம். பல மூட்டுகள் பாதிக்கப்படும் நிலையில் வேறு முறைகளிலான சிகிச்சை அவசியமாக இருக்கும். இதன்மூலம் எதிர்காலத்தில் குழந்தைக்கு ஊனம் ஏற்படாமல் தடுக்க முடியும்.
முக்கியமாக, நோய் பாதிப்புள்ள சிறுவர்களுக்கு பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவும், நேர்மறையான அணுகுமுறையுமே மிகவும் முக்கியமானது. நோய் பாதிப்பு இருந்தாலும் முடிந்தவரை தனித்து சுதந்திரமாக இயங்குபவர்களாக குழந்தைகளை வளர்க்க வேண்டும். சிரமம் நிறைந்த சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளவும், சக வயது நபர்களோடு பழகவும், சமநிலையுள்ள ஆளுமைத்திறனை உருவாக்கிக் கொள்ளவும் பெற்றோர்களின் நேர்மறையான அணுகுமுறை இந்த சிறுவர்களுக்கு பெரிதும் உதவும்.
கடந்த 1990களின் இறுதியில் Biologics சிகிச்சை முறை அறிமுகமானது. இதன்மூலம் குழந்தைகளின் JIA நோய்க்கான சிகிச்சை இன்னும் புரட்சிகரமானதாகி இருக்கிறது. மருந்துகள் மற்றும் சிகிச்சைகளின் இத்தகைய சமீபகால சிகிச்சை முன்னேற்றங்களினால், கீல்வாதம் என்பது பயப்படக் கூடிய அளவில் இருந்து மாறியிருக்கிறது. சக்கர நாற்காலியில் வாழ்க்கையை முடக்கிவிடும் என்ற பயம் இப்போது பழைய விஷயமாக மாறிவிட்டது’’ என்கிறார் சித்ரா, நம்பிக்கை தரும் குரலில்!
குணமாகும் வரை சிகிச்சையை தொடருங்கள்!
குழந்தைகளின் கீல்வாத நோயின் கால அளவை முன்னரே கணிக்க முடியாது. நோய் தீவிரமாக இருக்கிற நிலை அல்லது பாதிப்பு குறைந்திருக்கிற அளவைப் பொறுத்து சிகிச்சைகள் தேவைப்படும். முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மூட்டுக்குருத்து, எலும்பு சேதமாகலாம். இதன் பின்விளைவாக கடுமையான மூட்டுவலி போன்ற நீண்டகால பிரச்னைகள் ஏற்படும். இது எதிர்காலத்தில் ஊனத்துக்கும் வழிவகுக்கும் அபாயம் உண்டு. அதனால், நோய் முழுமையாக குணமாகும் வரை சிகிச்சையை தொடர வேண்டும். நிறுத்தக் கூடாது
Average Rating