வெளியேற்றல் கோளாறுகள் (Elimination Disorders)!! (மருத்துவம்)
சிறு குழந்தைகள் தொடர்ந்து சிறுநீரையோ / மலத்தையோ கழிப்பறையைத் தவிர்த்து சற்றும் சம்பந்தமில்லாத இடத்தில் கழித்தால், அது ஒரு வித மனநலப் பிரச்னையாக இருக்கலாம். குழந்தையாக இருக்கும்போது அடக்க முடியாமல் இம்மாதிரி தவிர்க்க முடியாமல் அவ்வப்போது நடப்பது சகஜமே. அதுவே தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் காணப்பட்டால், அது கவனிக்கப்பட வேண்டிய விஷயமே. பொதுவாக, இந்நோய் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளிடையே காணப்படும்.
சிறு குழந்தையாக இருக்கும்போது எல்லாக் குழந்தைகளுமே சிறுநீர் / மலத்தை அடக்க முடியாமல் கண்ட இடத்தில் போய் விடுவதுண்டு. குறிப்பிட்ட வயதுக்குப் பின்னர், தானாக கட்டுப்பாட்டில் வந்து விடும். வெளியேற்றல் கோளாறு பாதித்த குழந்தைகளுக்கு, அவ்வித கட்டுப்பாடு இருப்பதில்லை. அது மட்டுமின்றி, இம்மாதிரி பிரச்னையால் அவர்களின் பள்ளி, சமூக, குடும்ப சகஜ வாழ்க்கை பாதித்து, அதிக கஷ்டத்தைத் தரும்போதுதான் இது ‘வெளியேற்றல் கோளாறு’ எனப்படுகிறது.
இக்கோளாறு உருவாவதற்கு உடல்ரீதியான பிரச்னையோ (எ.டு. நீரிழிவு, வலிப்பு…) அல்லது மருந்துகளோ காரணமாக இருக்காது. இதுபோல தெரிந்தும் செய்வதுண்டு / தன்னை அறியாமலும் செய்வதுண்டு. சில குழந்தைகளுக்கு எனியூரிஸிஸ் மற்றும் என்கோப்பிரிஸிஸ் இரண்டுமே கூட இருக்கலாம். எனியூரிஸிஸ் (சிறுநீர் தானாகக் கழித்தல்)இந்தக் கோளாறினால் பாதிக்கப்படும் குழந்தைகள், தொடர்ந்து சிறுநீரை படுக்கையிலோ, துணியிலோ கழித்து விடுவார்கள். இப்படி குறைந்தது வாரம் இருமுறையேனும், தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் காணப்பட்டால், அது ‘எனியூரிஸிஸ்’ எனப்படும். இது 3 வகைப்படும்.
1. இரவு நேரங்களில் மட்டும் (Nocturnal) படுக்கையில் சிறுநீர் கழித்தல்.பொதுவாக இரவில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள், இரவின் முதல் பாதியில் அடக்க இயலாமல் கழித்து விடுவது வழக்கம். கடைசி பாதியில், அப்படி நேரும் போது, கனவில் சிறுநீர் கழித்தது போல் உணர்வது வழக்கம்.
2 .பகல் நேரங்களில் மட்டும் (Diurnal)விழித்திருக்கும் போதே சிறுநீர் கழித்தல் இதில் மேலும் 2 வகை உண்டு. ஒரு வகையில், குழந்தைகள், திடீரென அவசரத்தை அடக்க முடியாமல், கழிவறை செல்வதற்குள், இருந்த இடத்திலேயே சிறுநீர் கழித்துவிடுவது. இன்னொரு வகையில், சிறுநீர் கழிப்பதை வேண்டுமென்றே தள்ளிப் போட்டு கொண்டே போய், கடைசியில் அடக்க முடியாமல் அப்படியே போய்விடுவது.
3. இரவு மற்றும் பகல் நேரங்களில் (Both) இரு நேரமும் சிறுநீர் கழித்தல்குழந்தைக்கு சிறுநீர்ப்பை கட்டுப்பாடு ஏற்படுவதற்கு முன்னரும் எனியூரிஸிஸ் வரலாம் (Primary Enuresis). அல்லது ஏற்கெனவே கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னரும் கூட எனியூரிஸிஸ் வரலாம் (Secondary Enuresis). குழந்தைகள் பொதுவாக தன்னையறியாமலே சிறுநீர் கழித்து விடும் (Involuntary). சில குழந்தைகள் வேண்டுமென்றே, அப்படிச் செய்வதும் உண்டு (Voluntary). இந்த இருவகைகளுக்கும் வெவ்வேறு காரணிகள் உண்டு.
காரணிகள்
தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் வகை எனியூரிஸிஸ் ஏற்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன (Involuntary Enuresis).
1.சிறிய சிறுநீர்ப்பை
2.அடிக்கடி சிறுநீர் பாதையில் நோய் தொற்று ஏற்படுதல்
3.வளர்ச்சியில் தாமதம்
4.ஒழுங்கற்ற / தாமத கழிப்பறையைப் பயிற்சி (Improper/delayed toilet training) குழந்தை கழிப்பறையைப் பயன்படுத்தும் போது திட்டுதல் / அருவெறுப்பு காட்டுதல்
5.அதீத மன உளைச்சல்
6.மரபணு (குடும்பத்தில், பெற்றோருக்கு இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் ஏற்படும் வாய்ப்பு).
வேண்டுமென்றே சிறுநீர் கழித்தல் கோளாறு (Voluntary Enuresis) உளவியல் காரணங்களால் ஏற்படுகிறது. மேலும், மற்ற மனநலப் பிரச்னை உடனும் (உணர்ச்சி மற்றும் நடத்தை கோளாறு) இது சேர்ந்து காணப்படலாம். எ.டு. பதற்ற கோளாறு, இணக்கமற்ற கோளாறு (Oppositional-Defiant Disorder) மனஉளைச்சல் தரக்கூடிய விஷயங்களான, குடும்பத்தில் சண்டை / தகராறு, வீடு மாறுவது, பள்ளி மாறுவது போன்ற தருணங்களிலும், சில குழந்தைகள் திடீரென படுக்கையில் சிறுநீர் கழிப்பது
ஆரம்பித்து விடுகிறது.
கண்டறிவது எப்படி?
சிறுநீரை அடக்க முடியாமல் கழிப்பதற்கு, வேறு உடல்ரீதியான காரணங்கள் இருக்கின்றதா என்பதை முதலில் மருத்துவ சோதனையின் மூலம் தெரிந்து கொள்வது அவசியம். ஏனெனில், நீரிழிவு, நோய் தொற்று, ஒழுங்கற்ற சிறுநீரக அமைப்பு, சிறுநீர் குழாய் அடைப்பு மற்றும் சில மருந்துகள் காரணமாகவும், இவ்வாறு குழந்தைகள் தன்னையறியாமல் சிறுநீர் கழிப்பதுண்டு. இவ்வாறு எந்த மருத்துவக் காரணங்களும் இல்லாத பட்சத்தில், உளவியல் நிபுணர், குழந்தையின் அறிகுறிகள் மற்றும் நடத்தையை வைத்து, எனியூரிஸிஸ் என்பதை நிர்ணயிப்பார்.
சிகிச்சை
பொதுவாக, குழந்தை வளர வளர டீனேஜ் பருவத்தை அடைவதற்குள் இப்பிரச்னை தானாக மறைந்து போய் விடக் கூடும். ஆனால், இடைப்பட்ட காலத்தில், குழந்தையின் மனநிலைப் பாதிப்பதற்கு இது முக்கிய காரணமாகி விடுகிறது. இக்காரணங்களினால், குழந்தைக்கு தன்னம்பிக்கை / சுயமரியாதை குறைந்து, அவமானமாகவும் உணர்கிறது. பெற்றோரின் கோபம், தண்டனை, கடுமையான பேச்சுக்கும் ஆளாக வேண்டியிருக்கும். உறவினர், நண்பர் வீட்டுக்குச் சென்று தங்குவது கூட பெரிய பிரச்னையாகவே தெரியும். பள்ளியில் நண்பர்களின் கேலிப்பேச்சுக்கு ஆளாகவும் நேரிடும். இப்படி பல்வேறு விஷயங்களில் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால், ஆரம்பத்திலேயே சிகிச்சை அளிப்பது நல்லது.
எனியூரிஸிஸ் பிரச்னைக்கு தீர்வு காண பல சிகிச்சைகள் உண்டு. இரவு நேரத்தில் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு ‘அலாரம்’ நுட்பம் நல்ல பயனைத் தரும். படுக்கை ஈரமாக ஆரம்பித்தவுடன் ஒலிக்கும் உரத்த அலார ஒலியால் குழந்தையை விழிக்கச் செய்யும். இதோடு, நடத்தை சிகிச்சையின் பல்வேறு உத்திகள் நிரந்தர தீர்வையும் அளிக்கின்றன.
1.குழந்தை சிறுநீர் வரும்போது சரியாக எழுந்து கொண்டு கழிப்பறையை பயன்படுத்தும்போது, குழந்தையை அச்செயலுக்காக பாராட்ட வேண்டும்.
2.காலையிலிருந்தே சரியான இடைவெளியில், குழந்தைகள் கழிவறையைப் பயன்படுத்த பெற்றோர் பழக்க வேண்டும். அதை ஒரு பழக்கமாகவே ஆக்க வேண்டும்.
3.படுக்கை நனைந்து விட்டால், அதை சுத்தம் செய்யும் போது குழந்தையை உதவி செய்ய சொல்லி பழக்க வேண்டும்.
4.குழந்தை படுக்கையை நனைத்து விட்டாலோ, துணியிலேயே சிறுநீர் கழித்துவிட்டாலோ, உடனேயே அதற்கு மறுப்பு தெரிவிக்கவும், அதிருப்தி காட்டவும் வேண்டும். அதே நேரத்தில், உரக்கக் கத்துவதோ, திட்டுவதோ, அடிப்பதோ நிச்சயம் உதவாது. அது, இப்பழக்கத்தை அதிகமாக்கிவிடக் கூடும்.
சிறுநீர்ப்பையில் அதிகநேரம் சிறுநீரை தக்க வைக்கும் பயிற்சியும் கொடுக்கப்படும் (Bladder Training).சில நேரங்களில், மருந்துகளும் பரிந்துரைக்கப்படலாம். மருந்து மட்டுமே கொடுத்தால், இப்பிரச்னை குறைவதுபோலத் தெரிந்தாலும், திரும்பவும் வந்துவிடும் (Relapse).
மனஉளைச்சலால் இப்பிரச்னை ஏற்பட்டிருந்தால், அதை சமாளிக்க குழந்தைகளுக்கு கற்றுத் தருவது அவசியம். அன்பு, அனுசரணை, ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் பெற்றோர் குழந்தையை அணுகி, நடத்தை சிகிச்சையின் உத்திகளை கடைப்பிடித்தால், இப்பிரச்னையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.அடுத்த இதழில், மற்றொரு வகை வெளியேற்றக் கோளாறான என்கோப்பிரிஸிஸ் (Encopresis) குறித்துப் பார்ப்போம்.
ரவி ஏன் இப்படிச் செய்தான்?
ரவிக்கு வயது 8. அவன் 4 வயதாகும் போதே, படுக்கையை நனைப்பதை நிறுத்தி விட்டான். ஆனால், சில மாதங்களாக, வாரம் இருமுறையாவது படுக்கையிலேயே சிறுநீர் கழிக்க ஆரம்பித்திருந்தான். விஷயம் தெரிந்தவுடன் பெற்றோர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். ‘ரவி வேண்டுமென்றே இப்படி செய்கிறான், சோம்பேறித்தனம், சொல் பேச்சு கேளாமை என நினைத்தார் அம்மா.
அப்பாவும், அவன் தன் பக்கம் கவனம் ஈர்க்கவே இப்படி செய்வதாக எண்ணி கோபப்பட்டார். ரவி இதனாலேயே எப்போதை விடவும் மிகவும் அமைதியானான்… மற்றவருடன் பேசுவதையும் குறைத்துக் கொண்டான். அவன் தொடர்ந்து, படுக்கையில் சிறுநீர் கழிக்கவே, குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். எந்த உடல்ரீதியான தொந்தரவும் இல்லையென தெரிய வந்தது. சிறுநீரைக் கட்டுப்படுத்தும் மருந்துகளை கொடுத்தனர். முதலில் சரியானது. திரும்பவும் அதே பிரச்னை வரத்தான் செய்தது.
பின்னர் உளவியல் ஆலோசகரிடம் அழைத்துச் செல்லப்பட்டான். அவனுக்கு உளவியல் காரணங்களால், எனியூரிஸிஸ் இருப்பது கண்டறியப்பட்டது. பெற்றோருக்கும் இத்தகைய பின்னடைவு சிலநேரங்களில் நடக்கக்கூடியதுதான் என்பது புரிய வைக்கப்பட்டது. காரணங்களை அலசி ஆராயும் போது, சமீபத்தில் ரவிக்கு தங்கை பிறந்திருப்பது தெரிய வந்தது. இது அவனின் பிரச்னைக்குக் காரணமாக இருக்கலாம் என ஆலோசகர் தெரிவித்தார். உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆலோசகர் தெரிவித்தார்.
உளவியல் நிபுணரின் ஆலோசனைப்படி, பெற்றோர் அவனை ஏற்றுக்கொண்டு அன்பாக நடத்தினார்கள். இரவு படுக்க செல்லும் முன் தண்ணீர் உட்கொள்வதை தவிர்க்கவும் ஆலோசனை வழங்கப்பட்டது. ஒவ்வொருமுறையும் படுக்கையை நனைக்காத போதும் ரவிக்கு, அவனுக்கு பிடித்த விஷயங்களை பெற்றோர் செய்து கொடுத்தனர். அவன் மனம் விட்டுப் பேசுவதற்கும் நேரம் ஒதுக்கி, அவனோடு விளையாடவும் செய்தார்கள். சில வாரங்களிலேயே, ரவியின் இப்பழக்கம் மறைந்து போனது.
Average Rating