உண்ணுதல் கோளாறுகள் (Eating Disorders)!! (மருத்துவம்)

Read Time:12 Minute, 14 Second

பசியற்ற உளநோய் மற்றும் பெரும்பசி உளநோய் ஏற்படுவதற்கான காரணிகளை அலசுவோம். குறிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு, பல்வேறு காரணிகள் கூட்டாக சேர்ந்து, உண்ணுதல் கோளாறை (Anorexia and Bulimia) உருவாக்க வாய்ப்பிருக்கிறது (உளவியல், மரபியல், சமூக, குடும்ப). இக்கோளாறினால் கஷ்டப்படும் குழந்தை மற்றும் டீனேஜருக்கு, வேறு சில பிரச்னைகளும் சோ்ந்து காணப்படுகிறது. அவை…

1. துயரம் / மன உளைச்சல்
2. எடை அதிகரித்து விடுவோமோ என்ற பயம்
3. ஆதரவற்ற உணர்வு / உதவியற்ற நிலை
4. தாழ்வு மனப்பான்மை
5. வீட்டுப் பிரச்னைகள் / குடும்பத் தகராறு.

இதுபோன்ற பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் (சரியான வழிமுறை தெரியாமல்), இக்குழந்தைகள் தவறான உணவுப் பழக்கங்
களில் ஈடுபட ஆரம்பித்துவிடுகின்றனர். ஆரம்பத்தில், இப்பழக்கம் இவர்களுக்கு ஆறுதலளித்தாலும், பின்னர் அதுவே பெரிய பிரச்னையாகி விடுகிறது. மேலும், உண்ணுதல் கோளாறுடன், முக்கிய மனநலப் பிரச்னைகளான பதற்றக் கோளாறுகள் (Anxiety Disorders), மனச்சோர்வு (Depression) மற்றும் போதைப் பொருள் அடிமை (Substance Abuse) ஆகியவையும் சேர்ந்தே காணப்படுகிறது.

உண்ணுதல் கோளாறுக்கு, சமூகக் காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. விளம்பர மாடல், சினிமா நடிகர் / நடிகைகளின் ஒல்லியான தோற்றம், ‘பார்பி’ டால் மோகம், சிக்ஸ்பேக் மோகம் போன்ற விஷயங்கள் ஒல்லியான தோற்றம் / தேகம்தான் அழகு என்னும் சிந்தனையை இளைஞர்கள் மத்தியில் ஆழமாக பரப்பி விட்டது. எல்லா திசையிலும் இருக்கும் உடற்பயிற்சி மையங்கள் (Gym), எடை குறித்த அதீத விழிப்புணர்வு, இணையதளத்தில் குவிந்திருக்கும் டயட்டிங் தகவல்கள் போன்றவை இளைஞர்களை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்குகின்றன. இளைஞர் மட்டுமல்ல… 9-10 வயது சிறுவர் / சிறுமிகள் கூட எடை குறித்து அதிக கவனம் செலுத்துவது சாதாரணமாகிவிட்டது.

மிதமிஞ்சி உண்ணும் கோளாறு

இவ்வகை கோளாறு, பெரும்பசி நோயைப் போலவே இருக்கும். ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில், பாதிக்கப்பட்டவர், அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பின், அதை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட மாட்டார். இது பெண்களை விட, ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டவர் பொதுவாகவே பருமனாக காணப்படுவார்கள். சரியான எடை இருப்பவர்களுக்கும் இந்நோய் இருக்கும் வாய்ப்புண்டு.வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகள், பொதுவாக நிறைய சாப்பிடுவது இயல்புதான். ஏதாவது விசேஷம் என்றால், அளவுக்கு அதிகமாக உண்பதும் இயற்கைதான். ஏனெனில், பிடித்த உணவை நிறைய உண்பது, எப்போதுமே ஒரு சந்தோஷமான விஷயம்தான். இப்படியான ஆரோக்கிய பசிக்கும், மிதமிஞ்சி உண்ணும் கோளாறுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. இதன் அறிகுறிகள் குறித்துப் பார்ப்போம்.

1. பெரும்பாலானோரை விட நிறைய உணவை வேகமாக சாப்பிடுவது (எ.டு: 2 மணி நேர இடைவெளியில்…)

2. மனஉளைச்சல் தரும் உணர்ச்சிகரமான தருணங்களின் போது, அதிகமாகச் சாப்பிடுவது (எ.டு: குடும்பத் தகராறு, படிப்பில் பின்தங்கும் போது, நண்பர்கள் ஒதுக்கும் போது, கோபம், கவலை, சலிப்புத்தட்டும் வேளையில் அதிகமாக சாப்பிடத் தோன்றும்.).
3. குழந்தையின் அறையில் சாப்பிட்ட பொருட்களின் அடையாளங்கள் பெற்றோரால் கண்டுபிடிக்கப்
படுவது. அடிக்கடி சமையலறையில் / ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்கள் அதிக அளவில் காணாமல் போவது.
4. அதிகரிக்கும் ஒழுங்கற்ற உணவு பழக்கவழக்கங்கள்… உணவைத் தவிர்ப்பது, ஜங்க் உணவை அதிகமாகச் சாப்பிடுவது, வழக்கத்துக்கு மாறான நேரத்தில் சாப்பிடுவது.
இப்படி அவர்கள் சாப்பிடும் போது, சுயக்கட்டுப்பாடு இல்லாததுபோல உணர்வதுண்டு (என்ன சாப்பிடுகிறோம் / எவ்வளவு சாப்பிடுகிறோம் போன்றவற்றை கட்டுப்படுத்த முடியாத உணர்வு).இந்த அறிகுறிகள் சராசரி வாரம் ஒருமுறை, 3 மாதங்கள் தொடர்ந்து காணப்படும். அளவுக்கு அதிகமாகச் சாப்பிடும் வேளையில், கீழே உள்ளவற்றில் 3 அறிகுறிகளாவது இருந்தால்தான் அது ‘மிதமிஞ்சி நோய்’ எனப்படும்.

1. இயல்பை விட வேகமாக சாப்பிடுவது.
2. வயிறு அசவுகரியமாகும் அளவுக்கு உண்பது.
3. பசி எடுக்காத போதும் அளவுக்கு அதிகமாக உண்பது.
4. அதிகம் சாப்பிடுவதை யாரும் பார்த்தால் அசிங்கமென நினைத்து தனியாகச் சாப்பிடுவது.
5. அதிகமாகச் சாப்பிடுவது குறித்து தன்னைத் தானே வெறுப்பது… அல்லது அதை நினைத்து, பிறகு மிகுந்த குற்றவுணர்ச்சி / கவலையடைவது.

விளைவுகள்

மிதமிஞ்சி உண்ணும் நோய் அரிதுதான் எனினும், இது மிகவும் கடுமையான நோய். இதனால் பாதிக்கப்பட்டவர் பெரும் துன்பத்துக்கு ஆளாவதோடு, வேறுபல உளவியல் சார் பிரச்னையுடனும் காணப்படுவார். இவர்கள் தங்களின் பிரச்னையை (பதற்றம், மனச்சோர்வு) நினைத்து வெட்கி, பள்ளி, அலுவலகம், நண்பர்களை தவிர்ப்பதும் உண்டு. இவர்களுக்கு இதய நோய், அதிக ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

காரணி மற்றும் சிகிச்சை

பொதுவாக, மிதமிஞ்சி உண்ணும் கோளாறால் பாதிக்கப்பட்ட பலருக்கு மனச்சோர்வும் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளனர். சரியான காரணங்கள் அறியப்படவில்லை என்றும், இதற்கு பலவகை சிகிச்சை முறைகள் உதவுகின்றன. அறிவாற்றல்-நடத்தை சிகிச்சை (Cognitive-behavior therapy), நடத்தை மாற்று சிகிச்சை (Behavior modification), மனச்சோர்வுக்கு மருந்து (Antidepressants), உளவியல்சார் சிகிச்சை முதலியவை கொடுக்கப்படலாம். முக்கியமாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு, தாங்கள் உண்ணும் பழக்கத்தை கண்காணிக்கவும், எப்போதெல்லாம் அதிகம் சாப்பிட தோன்றுகிறது என்பதை கண்காணிக்கவும் சொல்லித்தரப்படும். பெற்றோருக்கும் நோய் குறித்த
விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் பிரச்னைகளை ஆரோக்கியமான முறையில் சமாளிக்கும் திறன் வளர்க்கப்படும். இதனால் தேவையற்றதற்கெல்லாம் உணர்ச்சிவசப்படாமல் மன ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். பதற்றத்தை ஏற்படுத்தும், மனஉளைச்சலை சமாளிக்கும் உத்திகள், உறவுகளை மேம்படுத்தும் உத்திகள் போன்றவையும் பயிற்றுவிக்கப்படும்.

உடனடியாக இந்நோய்க்கு தீர்வு கிடைக்காது. பாதிக்கப்பட்டவர் உணவு குறித்த ஆரோக்கிய பார்வையை வளர்த்துக் கொள்ள பல மாதங்களும் ஆகலாம். குடும்பத்தினர் விரக்தி அடையாமல்,நம்பிக்கையுடன், குழந்தைக்குப் பக்கபலமாக இருப்பது அவசியம். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நிபுணர்களின் உதவியுடன், குழந்தை மன உளைச்சலை சமாளிக்கும் திறன் பெற்று, ஆரோக்கியமான உணவை, சரியான அளவு உட்கொள்ள முடியும் என்பதில் ஐயமில்லை. குழந்தைகளை பாதிக்கும் வெளியேற்றக் கோளாறு (Elimination Disorders) குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

உண்ணுதல் கோளாறுள்ள குழந்தைக்கு குடும்பத்தினர் எப்படி ஆதரவாக இருக்கலாம்?

1. உண்ணுதல் கோளாறு தனக்கு உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள குழந்தைகள் / டீனேஜினர் தயக்கம் காட்டுவது வழக்கம். அவர்களுக்கு உதவி செய்யவும் / பிரச்னைக்கு செவிக் கொடுக்கவும் எப்போதும் இருப்பீர்கள் என்ற நம்பிக்கையை பெற்றோர் ஏற்படுத்துவது முக்கியம்.

2. பொதுவாகவே ‘ஒல்லியாக இருப்பதுதான் அழகு / ஆரோக்கியம்’ போன்று பேசுவதைத் தவிர்க்கவும்.

3. உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த ஆரோக்கிய பார்வையை அவர்களுக்கு ஏற்பட நீங்கள் எடுத்துக்காட்டாக திகழலாம் (எ.டு: ‘நான் குண்டாயிருக்கிறேன்… உடற்பயிற்சி செய்தும் எடை குறையவில்லை’ போன்ற வாசகங்களை குழந்தை முன் பேசுவதை தவிர்க்கலாம்).

4. எடை குறித்து பேசுவதை விட, ஆரோக்கியம் குறித்து பேசுவது நலம். குழந்தைகள் அவர்களுக்காகவே நேசிக்கப்படுகிறார்கள்… அவர்களின் உருவத்துக்காக இல்லை என்பதை உணர வைக்க வேண்டும்.

5. குழந்தைகள் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் தன்மையை வேரிலேயே முறித்து விட வேண்டும். தங்கள் உடலே ஆரோக்கியமானது, வலிமையானது, அழகானது என்பதை குழந்தைகள் ஆழமாக நம்புவதற்கு பெற்றோர் உதவ வேண்டும்.

6. டீனேஜ் பிள்ளைகளின் உணவுப் பழக்கவழக்கம் குறித்து சண்டை போடுவதைத் தவிர்க்கவும் (எ.டு: நீங்கள் அசைவம் எனினும், பிள்ளை சைவமாக மாற விரும்பினால் எதிர்ப்பு தெரிவிக்காதீர்கள். அவர்களின் முடிவுக்கு மரியாதை கொடுத்து, ஆதரவு தெரிவியுங்கள். அதிலுள்ள நல்லது, கெட்டதை பொறுமையாக எடுத்துக் கூறுங்கள். ஆரோக்கிய உணவை உட்கொள்ள அவர்களை ஊக்குவியுங்கள்.

7. தினசரி உடற்பயிற்சியை நீங்கள் உற்சாகமாக செய்வதன் மூலம், அது மகிழ்ச்சிகரமான பழக்கம் என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெளியேற்றல் கோளாறுகள் (Elimination Disorders)!! (மருத்துவம்)
Next post தையல் தொழில் தொடங்கலாம்… நிரந்தர வருமானம் பார்க்கலாம்!! (மருத்துவம்)