பழைய புடவைகளை புதுசாக்கலாம் பணமும் கைநிறைய சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 46 Second

வீட்டில் இருந்து என்ன செய்வது எனத் தெரியாமல் பொழுதைப்போக்கிக் கொண்டிருந்த பெண்களில் பலர் இன்று தங்களுக்கு பிடித்த தொழிலை தேர்ந்தெடுத்து, அதில் பயிற்சி பெற்று, அந்த தொழிலை திறம்பட செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், சென்னை தியாகராயநகரில்
‘ ஸ்ரீவாரி பட்டுப் புடவை பாலிஷ் சென்டர்’ நடத்துவதோடு சுயதொழில் தொடங்க நினைக்கும் பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார் கனகவள்ளி.

‘‘புடவை பாலிஷிங், பெண்களுக்கு ஏற்ற எளிமையான கலைத் தொழில். பல கடைகள் ஏறி இறங்கி பெண்கள் தங்களுக்கு விருப்பமான ஒரு புடவையைத் தேர்ந்தெடுப்பார்கள். வாங்கி, உடுத்தி வருடங்கள் சில ஆகிவிட்டாலும் அதன் மீது அவர்கள் வைத்திருக்கும் ஆசை குறையாது. ஆனால் புடவை பழையதாகியிருக்கும். அத்தகைய புடவைகளை குறைந்த செலவில் அவர்களது மனதுக்கு பிடித்ததுபோல் பாலிஷிங் செய்து கொடுக்கலாம்.

பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி வருமானம் ஈட்டும் போது குடும்பத்தில் அவர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைக்கிறது. தன்னம்பிக்கை அதிகமாகி தங்கள் வாழ்க்கை தரத்தையும் உயர்த்துகிறார்கள். தோற்றத்தில் கம்பீரமும், உற்சாகமும் தென்பட வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் பெண் தொழில்முனைவோர்கள்’’ என்று பேசத் துவங்கினார் கனகவள்ளி.

‘‘எனது சொந்த ஊர் கும்பகோணம். பிளஸ்2 வரை படித்த நான், ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்தேன். 12 மணி நேர வேலையில் குறைவான ஊதியம். நெசவு செய்வது எங்களது குடும்பத் தொழில். எனவே, நமக்குத்தான் கைவசம் தொழில் இருக்கிறதே, பிறகு ஏன் இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என நினைத்து சுயமாக ஒரு தொழில் செய்ய பட்டுப் புடவை பாலிஷைத் தேர்ந்தெடுத்தேன்.

தொழில் தொடங்கியபோது பாலிஷ் செய்யக்கொடுத்தால் சாயம் போய்விடுமோ அல்லது கிழிந்துவிடுமோ என பலரும் அச்சப்பட்டனர். எந்தப் புடவையும் பாலிஷ் செய்வதால் புடவையின் நிறம் மாறாது, புதியப் புடவைப்போல் ஆகிவிடும் என மக்களுக்கு முதலில் புரிய வைத்தேன். அதை புரிந்து கொண்டவர்கள் தொடர்ந்து கொடுக்க ஆரம்பித்தார்கள்.

பட்டுப் புடவைகளைப் பராமரிப்பது என்பது பெண்களுக்கு ஒரு சவால்தான். பட்டுப் புடவைப் பாழாகிவிட்டது என்று சிறுபிள்ளைத் தனமாக அழும் பெண்களும் இருக்கிறார்கள். கவலை வேண்டாம், பட்டுப் புடவைகள் எந்த மாதிரி வீணாகி இருந்தாலும் சரி செய்துத் தருகிறோம். பட்டுப் புடவைகளை வீட்டில் துவைத்துப் பராமரிப்பது என்பது கஷ்டம்தான். அதனால, புடவையைத் துவைக்க வேண்டும் என்றால் எங்களிடம் கொடுத்துவிடலாம்.

நாங்கள் புடவையை முதலில் ‘ஸ்டார்ச்’ போட்டு அழுக்குகளை போக்கிவிடுவோம். அடுத்து நன்றாக அலசி எடுத்து, ஒத்தையில் கீழும், மேலுமாக இழுத்து வைத்து மிக இறுக்கமாக வைத்து உலர்த்தி வைப்போம். அடுத்து ஜரிகைக்கு மட்டும் ஒரு ‘பாலிஷிங் ஜெல்’ தடவி மெருகேற்றி காயவிடுவோம். 10 அல்லது 15 நிமிடத்துக்குள் புடவை உலர்ந்துவிடும் என்றாலும், புடவை ‘ஸ்டிப்’ஆக இருக்க, ஒரு நாள் முழுவதும் அப்படியே விட்டுவிடுவோம்.

அடுத்த நாள் எடுத்து மடிக்கும்போது புதுப் புடவை போல எந்த இடத்திலும் சுருக்கம் இல்லாமல் சலவை செய்த புடவை மாதிரிகூட இருக்காது, அசல் புதுப் பட்டுப்புடவை போல இருக்கும். பட்டுப் புடவையில் பல நிறங்களில் ‘டிசைன்’ இருக்கும். ஒரு கலர் இன்னொரு கலரில் சேராத வகையில் பாலிஷ் செய்ய வேண்டும். சாயம் போய்விட்டது என்று சொல்லும் புடவைகளில் புது சாயம் சேர்த்து பின்னர் அதை புதுப் பட்டுப்புடவை போல் மெருகேற்ற வேண்டும்.

பட்டுப்புடவை மட்டும் இல்லாமல் காட்டன் புடவை, நூல் புடவைகளுக்கும் பாலிஷிங் செய்து தருகிறேன். வெளியூரில் இருந்து புடவைகளை கூரியர் மூலம் அனுப்பி பாலிஷ் செய்துத்தரச் சொன்னாலும் செய்து அனுப்பி வைக்கிறோம். இது ஒரு நல்ல தொழில் என்றுதான் நான் சொல்வேன். நிறைய பேர்
என்னிடம் வந்து கற்றுக்கொண்டு போகிறார்கள்.

பெண்கள் வெளியில் சென்று கஷ்டப்படுவதைத் தவிர்த்து வீட்டில் இருந்துகொண்டு, குடும்பத்தையும் பராமரித்து, தங்களுக்கான ஒரு வருமானத்தை ஈட்ட முடியும். நான் எனது பட்டுப்புடவை பாலிஷ் பயிற்சியில் பட்டுப்புடவை பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் எல்லாவிதமான புடவைகளையும் உலர் சலவை செய்வது குறித்த பயிற்சியும் அளித்து வருகிறேன். மேலும் இத்தொழிலை விரிவுபடுத்துவது பற்றியும் சொல்லித்தருகிறேன்.

ஜவுளிக் கடைகளில் புடவைகள் தேங்கி சுருக்கம் விழுந்து இருந்தால் கூட நாம் ‘ஆர்டர்’ எடுத்து சுருக்கத்தை நீக்குகிறோம். இதுவும் ஒரு தொழில் வாய்ப்புதான். கடைகளில் பாலிஷ் செய்வதற்கு உத்தேசமாக 350 ரூபாய் வாங்குவார்கள். பெண்களாகிய நாம் 200 ரூபாய்க்கு வீட்டில் வைத்தே பாலிஷ் செய்துகொடுக்கலாம். வீடுகளுக்கு நேரடியாகவே சென்று புடவைகளை வாங்கி, பாலிஷ் செய்து டோர் டெலிவரி கொடுத்தால் மாதம் எளிதாக 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம். எல்லா காலங்களிலும் வருமானம் தரக்கூடிய தொழில் இது” என நம்பிக்கை வார்த்தைகளுடன் முடித்தார் கனகவள்ளி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்! (அவ்வப்போது கிளாமர்)
Next post கிராமத்தில் திறமை மறைந்திருக்கு!! (மகளிர் பக்கம்)