3 மாதங்களில் கண் சிமிட்ட வேண்டும்! (மருத்துவம்)

Read Time:11 Minute, 48 Second

சுகப்பிரசவமோ, சிசேரியனோ, ஆயுதப் பிரசவமோ… குழந்தை பிறந்ததும் அதன் ஒட்டுமொத்த உடல் வளர்ச்சியும் சரியாக இருக்கிறதா எனப் பார்க்க அருகிலேயே ஒரு குழந்தை நல மருத்துவர் இருப்பார். உறுப்புகள் எல்லாம் சரியாக வளர்ச்சியடைந்திருக்கின்றனவா, ஏதேனும் குறைகள் உள்ளனவா என்றும் பார்ப்பார். குழந்தை அழுகிறதா என்று பார்ப்பார். அதே நேரம் குழந்தையின் கண்களிலும் டார்ச் அடித்துப் பார்த்து அதன் கண்கள் முழுமையாக உருவாகியிருக்கின்றனவா எனப் பார்க்க வேண்டும்.

சில குழந்தைகள் கண்களின் வளர்ச்சி சரியின்றியும் பிறப்பதுண்டு. அதற்கு Anophthalmos என்று பெயர். An என்றால் இல்லை என அர்த்தம். அதாவது, கண்களே இல்லாமல் பிறக்கும் நிலை அல்லது Microphthalmia பிரச்னை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். அதாவது, குழந்தைகள் கண்கள் குட்டியாக பிறப்பார்கள். கருவிழியில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம். சில நேரம் குழந்தைகளுக்கு கண்ணின் வெள்ளைப் பகுதியே நீல நிறமாக இருக்கும். அதை Sclerocornea என்று சொல்வோம்.

அதே போல கருவிழியும் வெள்ளையாக இருக்கும். கண்களில் டார்ச் அடித்துப் பார்த்தால் உள்ளே உள்ள பாப்பா தெரியும். டார்ச் அடித்ததும் அது உடனே சுருங்கும்.சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகள் சிலருக்கு பிறக்கும் போதே கண்களில் ஊளை தட்டிக் கொண்டே இருக்கும். பிறப்புறுப்பு வழியே வரும் போது தொற்று உருவாகியிருக்கும். அது உடனே தெரியாவிட்டாலும் சில குழந்தைகளுக்கு சில மணி நேரம் கழித்துத் தெரியும். அதற்குப் பெயர் Ophthalmia neonatorum.

சில நேரம் இந்தக் குழந்தைகளுக்குக் காய்ச்சல்கூட வரும். முறையாக கவனித்துக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தத் தொற்றானது மூளைக்குப் பரவி அங்கேயும் பாதிப்பை ஏற்படுத்தலாம். நரம்பு வழியே ஆன்டிபயாடிக் கொடுக்கும் அளவுக்குத் தீவிரமாகக் கூடும். சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே கண்களுக்குள் வெள்ளையாக இருக்கும். அப்படி இருந்தால் கேட்டராக்ட் எனப்படுகிற கண்புரை இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். குழந்தையின் அம்மாவுக்கு ருபெல்லா பாதித்திருந்தாலோ, அவர் எடுத்துக் கொண்ட மருந்துகளின் விளைவினாலோ குழந்தைக்கு கேட்டராக்ட் வரலாம்.

சிலருக்கு அது பரம்பரையாகவே தொடரும். உறவுகளுக்குள் திருமணம் செய்திருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கும் அப்பிரச்னை தொடரலாம். சில நேரங்களில் கண்களின் பின்பகுதியான ரெட்டினா சரியாகவளர்ச்சியடையாவிட்டாலும் கூட அது கேட்டராக்ட் மாதிரி தெரியும். ரெட்டினாவே வெள்ளையாகத் தெரிந்து, அதை கேட்டராக்ட் என நினைத்துக் கொண்டு நிறைய குழந்தைகளை பரிசோதனைக்கு அழைத்து வருகிறார்கள். முதலில் அது கேட்டராக்ட் தானா அல்லது வளர்ச்சியடையாத ரெட்டினாவா என்பதை கண் மருத்துவரால்தான் கண்டுபிடிக்க முடியும்.

தேவைப்பட்டால் இந்தக் குழந்தைகளுக்கு நரம்பு எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள B Scan என ஒரு ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். அதில் கேட்டராக்ட் இருந்தால் தெரிந்துவிடும். ஒருவேளை குழந்தைக்கு கேட்டராக்ட் இருந்து, அதிலும் இரண்டு கண்களிலும் அதிகமாக இருந்தால், அக்குழந்தையின் கண்கள் சோம்பேறிக் கண்களாக மாறிவிடும். எனவே, இப்படிப்பட்ட பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அறுவை சிகிச்சைதான் பரிந்துரைக்கப்படும். குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்கிற போது பெரியவர்களைப் போல லென்ஸ் வைக்க மாட்டோம்.

ஒரு வருடம் கழித்துதான் லென்ஸ் வைப்போம். ஏனென்றால், குழந்தையின் கண்கள் மிகவும் சிறியதாக இருக்கும். அதில் லென்ஸ் வைத்தால் கண்களின் பவர் இன்னும் அதிகமாகி விடும். எனவே மறுபடி அந்த லென்ஸை எடுத்துவிட்டு வேறு லென்ஸ் வைக்க வேண்டியிருக்கும். கேட்டராக்ட் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சையை செய்யச் சொல்வோம்.

ஏனென்றால், கண்களில் இருந்து மூளைக்கு காட்சிகள் சென்றால்தான் வளர்ச்சி சரியாக ஒழுங்காக இருக்கும். மூளைக்கு அனுப்பப்படாவிட்டால், பிறகு கண்கள் நன்றாக மாறிய பிறகு மூளைக்குக் காட்சிகள் அனுப்பப்பட்டாலும் மூளை அவற்றை எடுத்துக் கொள்ளாது. பிறந்த குழந்தைக்கு இரண்டு கண்களிலும் கேட்டராக்ட் இருந்தால் ரொம்பவே சிரமம். அதை உடனே அகற்றியாக வேண்டும். மயக்க மருந்து கொடுத்துதான் இதைச் செய்ய வேண்டும்.

சில குழந்தைகளுக்கு ஒரு முறை செய்தாலே போதுமானதாக இருக்கும். சிலருக்கு மறுபடி தடிமனான சவ்வுப்பகுதி வளரக்கூடும். அப்படி வளரக்கூடாது என்பதற்காக இப்போது நவீன தொழில்நுட்பங்கள் மூலம்தான் சிகிச்சை அளிப்போம். அதையும் மீறி வளர்ந்தால் லேசர் மூலம் சரிப்படுத்தலாம். பிறகு 1 வருடத்துக்கு மேல் கண்களுக்குள் பெரியவர்களுக்கு வைப்பது போல இன்ட்ராக்குலர் லென்ஸ் வைக்க வேண்டும்.

ஒரு வருடம் வரை குழந்தைக்கு தடிமனான கண்ணாடி போட்டாக வேண்டும். அதைப் போட முடியாவிட்டால் குழந்தைக்கு கான்டாக்ட் லென்ஸ் போட வேண்டியிருக்கும். அதை உபயோகிக்கிற முறை பற்றி பெற்றோருக்கு சொல்லித் தந்து விடுவோம். கண்ணுக்குள் லென்ஸ் வைத்தாலும் குழந்தை படிக்க, எழுதவெல்லாம் கண்ணாடி போட்டுத்தானாக வேண்டும். அதிலும் முழு பவர் உள்ள கண்ணாடியை பரிந்துரைக்க மாட்டோம். குழந்தை வளர வளர, அதன் கண்களின் பவர் மாறும். பிறந்த குழந்தைக்கு கண்ணாடியா என மலைக்க வேண்டாம். மிக மிக மென்மை யாக, பொம்மை மாதிரி குட்டியாக இருக்கும் அந்தக் கண்ணாடி.

அடுத்து குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு விழித்திரை சிறப்பு மருத்துவர் வந்து பார்க்க வேண்டும். Retinopathy of Prematurity (ROP) எனப்படுகிற பிரச்னை இருக்கிறதா என்பதை அவர் கண்டறிவார். இதை குழந்தை பிறந்து ஒரு மாதத்தில் பார்க்க வேண்டியது அவசியம்.சில குழந்தைகளுக்கு பிறக்கும் போது ஒரு கண்ணில் இருந்தோ, இரண்டு கண்களிலுமோ ஊளை தட்டிக் கொண்டே இருக்கும். கண்களையும் மூக்கையும் இணைக்கிற ஒரு குழாய் இருக்கும். அது அடைபட்டால் கண்ணீரானது கண்களுக்குள் சேர்ந்து இன்ஃபெக்‌ஷனை உண்டாக்கும்.

அதற்குப் பெயர் Congenital nasolacrimal duct obstruction. இதற்கு lid massage என ஒன்றை அம்மாக்களுக்குக் கற்றுத் தருவோம். கண்ணுக்கும் மூக்குக்கும் உள்ள இணைப்பில் மூக்கு திறக்கும் இடத்தில் ஒரு சின்ன சவ்வுப் பகுதி இருக்கும். அங்கேதான் கண்ணீர் சேர்ந்து இன்ஃபெக்‌ஷன் ஆகும். எனவே, இந்த சவ்வுப் பகுதியை மசாஜ் செய்கிற போது அந்த அழுத்தத்தில் சவ்வுப்பகுதி உடைந்து, அடைப்பு சரியாகும். Probing என்கிற குச்சி மாதிரியான கருவியை உள்ளே செலுத்தி மயக்கம் கொடுத்து சரியாக்க வேண்டும்.

அதுவும் தோல்வியடைந்தால் பெரிய அறுவை சிகிச்சை தேவைப்படும். ஆனால், இந்த லிட் மசாஜ் மிகவும் அருமையான விஷயம். அந்தக் காலத்தில் பாட்டிகள் எல்லாம் பிறந்த குழந்தைகளின் மூக்கை வெளியே நீவி விடுவதைப் பார்த்திருப்போம். சப்பை மூக்கை சரியாக்க செய்யப்படுவதாக சொல்லப்பட்டாலும் அதன் உண்மையான காரணம் இதுதான்.

இன்னும் சில குழந்தைகளுக்கு பாப்பா உள்ள இடம் கருப்பாக இருப்பதற்கு பதில் மஞ்சளாகத் தெரியலாம். கண்கள் வீங்கிப் போய் பிறக்கலாம். கட்டிகள் இருக்கலாம். அதை Retinoblastoma என்கிறோம். இது தீவிரமாகும் போது கண்களையே எடுக்க வேண்டி வரலாம்.குழந்தை பிறக்கும் போது அதற்கு பார்வை நல்லபடியாக இருக்கிறதா என்பதை உடனே தெரிந்து கொள்ள முடியாது. நிறை மாதங்களில் பிறக்கும் குழந்தைக்கும் இப்படித்தான். அதற்கு பிறந்த உடன் பார்வை மங்கலாகத்தான் இருக்கும்.

3 மாதங்களில்தான் அது கண்களை சிமிட்டுவதையும், நேராகப் பார்ப்பதையும் வைத்து பார்வை சரியாக உள்ளது என்பதை உறுதிப்படுத்த முடியும். இதையெல்லாம் குழந்தை நல மருத்துவரே கவனித்து விடுவார். ஒருவேளை பிரச்னை தீவிரமாக இருப்பது தெரிந்தால் கண் மருத்துவர்களுக்குத் தகவல் சொல்வார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குறை மாத கண்மணிகளுக்கு கூடுதல் கவனம் தேவை! (மருத்துவம்)