ஓடி ஆடி விளையாடினால்தான் எலும்பும் வலிமையாகும்!! (மருத்துவம்)
‘ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது’ என்ற பழமொழி கேட்டிருப்போம். இதை எலும்பின் ஆரோக்கியத்துக்கும் பொருத்தமான மொழியாக எடுத்துக் கொள்ளலாம். ‘இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது, தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகளைத் தவிர்க்க முடியும்’ என்கிறார் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் ஸ்டெம் செல் நிபுணரான ஏ.கே.வெங்கடாசலம்.
‘எப்படி’ என்று கேட்டால், ‘ஒரே விஷயம்தான்… அதுவும் ரொம்ப சிம்பிள்…’என்கிறார் சிரித்தபடியே…
‘‘குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை. மக்களிடம் ஓரளவு விழிப்புணர்வும் வந்துவிட்டது. மருத்துவ வசதிகளும் பெருகிவிட்டன. அதனால், குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதிலும் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள்.
எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் நிறைந்துள்ள பால், முட்டை போன்ற உணவுகளைக் கொடுக்கிறார்கள். பாலின் நிறம், சுவை பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மாதிரியும் கொடுத்து சமாளித்துவிடுகிறார்கள். சிலர் பாலில் சாக்லெட் கலந்து கொடுப்பதையும் கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களை அதீத கவனம் எடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட விடுவதில்லை. இதை சரிசெய்தால் போதும். இதைத்தான் சிம்பிளான விஷயம் என்று சொன்னேன்’’என்கிறார்.
குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது, நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும், சிறுகாயம்கூட ஏற்படாமல் வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை விளையாட அனுமதிக்காதது தவறு என்பதை முக்கியமாக சுட்டிக்காட்டுகிறார். “குழந்தைகள் தவழும் நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக நடக்க ஆரம்பிக்கிறார்களோ, எந்த அளவுக்கு ஓடி ஆடி விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய எலும்புகள் வலிமை உள்ளதாக இருக்கும். பெரும்பாலான பெற்றோர் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள்.
இது சமீபத்திய ஆய்வு ஒன்றிலும் உறுதியாகி உள்ளது. லண்டன் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் குழந்தைகளின் எலும்பு வலிமை பற்றி ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 1990ம் ஆண்டில் பிறந்த சுமார் 2 ஆயிரத்து 327 குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் 18 மாதங்களுக்குள் நடக்க ஆரம்பித்த குழந்தைகளின் எலும்புகள் மற்ற குழந்தைகளின் எலும்புகளைவிட அதிக வலிமையுடன் இருக்கின்றன. அதனால், முன்னதாக நடக்கத் தொடங்கும் குழந்தைகளின் எலும்புகள் பிற்காலத்தில் பலவீனம் அடையாமல், முறிவு ஏற்படாமல் வலிமையாக இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தைப் பருவத்தில் எலும்புகளின் அமைப்பு மாறிக்கொண்டே இருக்கும். குழந்தைகள் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப, ஏற்கெனவே உள்ள எலும்புகள் மாறி புதிய எலும்புகள் உருவாகும். குறிப்பாக, எலும்புகளில் உள்ள திசுக்களின் அமைப்பு மாறிக்கொண்டு இருக்கும். இந்த மாற்றத்தை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், இது வங்கியில் பணம் சேமிப்பதை போன்றது. எலும்புக்கூடு அமைப்பு என்ற வங்கியில் கால்சியம் போன்ற சத்துகள் சேரச் சேர, எலும்புக்கூட்டின் அளவு, அடர்த்தி வளர்கிறது. இந்தக் கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
எத்தனை சீக்கிரம் நடக்கிறார்களோ அதைப் போல அவர்களின் உடல் சார்ந்த விளையாட்டிலும் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சின்ன வயதில் அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதே உடற்பயிற்சிக்கு இணையானது. வெயிலில் விளையாடும்போது அவர்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து போதுமான வைட்டமின் டியும் கிடைக்கும். இதன்மூலமும் எலும்பு பலமாகும்.‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாரதியார் சொன்னதைப் போல, குழந்தைகள் விளையாட்டை நாம் ஊக்கப்படுத்தும்போது எலும்புக்கூட்டில் இருக்கும் திசுவின் அடர்த்தி அதிகரிக்கும். இது சிம்பிளான விஷயம்தானே?’’ என்று நம்மிடமே மீண்டும் கேள்வி கேட்கிறார் ஏ.கே.வெங்கடாசலம்.
Average Rating