அரிசியில் ஆரோக்கிய ஐஸ்கிரீம்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 4 Second

தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியிலிருந்து நூடுல்ஸ், பாஸ்தா, குக்கீஸ் உட்பட மதிப்பு கூட்டப்பட்ட ஏராளமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் தின்பண்டமான ஐஸ்கிரீமை தயாரித்து அசத்தி வருகிறார் சென்னை, கோடம்பாக்கத்தில் மண்வாசனை என்ற பெயரில் இயற்கை விளைபொருட்களால் ஆன உணவுப்பொருட்களை விற்பனை செய்துவரும் மேனகா திலகராஜன்.

‘‘அரிசிகளின் அரசன் என்ற பெயருடைய கருப்பு கவுனி அரிசி மன்னராட்சி காலத்தில் அரசர்கள் மற்றும் அரசிகள் சாப்பிடும் சிறப்பு பெற்றிருந்தது. கவுனி அரிசியைத் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடலில் அதிக பலம் ஏற்படும் என்பதால் மன்னர்களும் போர் வீரர்களும் பெரும்பாலும் சாப்பிட்டு வந்தனர். இன்றைக்கும் இந்த அரிசியின் மகத்துவம் பற்றி தெரிந்ததனால், சீனாவில்தான் அதிக
அளவில் பயிரிட்டு சாப்பிட்டு வருகின்றனர்.

நம்முடைய பாரம்பரிய அரிசியான கவுனி அரிசியை வாரத்தில் 2 முறை சமைத்து சாப்பிட்டாலே போதும். இதனால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் அபரிமிதம். புதிதாக திருமணம் ஆன ஆண்கள் இந்த கவுனி அரிசியை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் பெறலாம். இந்த அரிசியில் வடித்த சோற்று கஞ்சியை குடித்து வந்தால் குதிகால் வலி நீங்கும். இந்த கவுனி அரிசியில் உள்ள ஆன்தோசயானின் என்ற நிறமி நமது இதயம், மூளை மற்றும் ரத்தக் குழாய் செயல்பாடுகளை புத்துணர்ச்சியாய் வைக்க உதவுகிறது. மேலும் கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட குறைபாடுகளை போக்கும்.

கவுனி அரிசியில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது. இதனால் சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான பிரச்னை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும். மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது. இந்த கவுனி அரிசியில் செய்த இனிப்பு பொங்கல் அவ்வளவு சுவையாக இருக்கும். செட்டிநாடு சமையல் விருந்துகளில் முதலிடத்தில் இந்த கவுனி அரிசி பொங்கல் இருக்கும்’’ என்று அரிசியின் பெருமைகளை பற்றி விவரித்தார் மேனகா.

புல் வகையைச் சேர்ந்த தாவரமான நெல் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்களின் உணவாகப் பயன்பட்டு வருகிறது. இந்தியா உள்பட உலக அளவில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான நெல் வகைகள் இருந்ததாக அறியப்படுகிறது. நில அமைப்பு, காற்று, சூழல், வறட்சி, பனிப்பொழிவு, வெள்ளப் பாதிப்பு மற்றும் பல்வேறு இயற்கைச் சீற்றங்களை தாங்கி வளரும் பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன. வறட்சியைத் தாங்கி விளையும் வாடன் சம்பா, வளர்ந்து விளையும் வரப்புக் குடைஞ்சான், உடல் உழைப்பு குறைந்தோர் விரும்பி உண்ணும் கிச்சடி சம்பா, நெல்லை மக்கள் தலைமுறை தலைமுறையாக பயிரிட்ட கொட்டாரஞ்சம்பா, அகிலம் போற்றும் ஆற்காடு கிச்சடி மற்றும் சீரகச் சம்பா என ஏராளமான நெல் ரகங்கள் நம்மிடம் உண்டு. ஆனால், பசுமைப் புரட்சியின் காரணமாக பாரம்பரிய நெல் ரகங்களில் பல அழிந்துவிட்டன.

பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மை விட்டுப்போனதால் புதிய நெல் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. பெரும்பாலும் அவை பட்டை தீட்டப்பட்ட அரிசிகள் என்பதால் அவற்றை உண்ணும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இந்தச் சூழலில் மறைந்த நெல் ஜெயராமன் போன்றவர்கள் பாரம்பரிய நெல் ரகங்களை புத்துயிர் பெறச் செய்தனர். இதற்காக ஆண்டுதோறும் அவர் நெல் திருவிழாவை நடத்தி பாரம்பரிய நெல் ரகங்களை உற்பத்தி செய்யுமாறு விவசாயிகளை கேட்டுக் கொண்டார். அவரை போன்று பல்வேறு நல விரும்பிகள் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கினர்.

இதன் விளைவாக நம் மக்கள் புத்தெழுச்சி பெற்று இன்றைக்கு ஓரளவு நமது பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகின்றனர். அந்த வகையில் மாப்பிள்ளை சம்பா, சீரகச் சம்பா, குள்ளக்கார், சிவப்பு கவுனி, கருப்பு கவுனி, தூயமல்லி என பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்றைக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக அவற்றுக்கான வரவேற்பும் அதிகரித்து வருகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள பாரம்பரிய நெல் ரகங்கள் அதிகம் உண்டு. இந்த நெல் வகைகளில் குறிப்பாக மக்கள் மத்தியில் இன்றைக்கு அதிகமாக பேசப்படும் கருப்பு கவுனியை மதிப்புக்கூட்டி மக்களுக்கு வழங்க நினைத்தேன்.

அதிக சத்துக்களை கொண்டதுடன் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள இந்த கருப்பு கவுனி அரிசியை நாட்டுக்கோட்டை செட்டியார் தங்களது வீட்டு திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவார்கள். இனிப்பு பொங்கல், பாயசம் தயாரித்து வழங்கி தங்களது பெருமையை பறைசாற்றினர். மேலும் பல்வேறு சத்துகள் நிறைந்தது என்ற ரகசியத்தை அறிந்து அரசர்கள் மட்டுமே இந்த கருப்பு கவுனியைபயன்படுத்தி வந்தனர். அத்தகைய பெருமைக்குரிய கருப்பு கவுனி உணவுக்குழாய் புற்றுநோய் வராமல் பாதுகாப்பு அளிக்கிறது. நாள்பட்ட சர்க்கரை நோய்க்கு எதிராகச் செயல்படுவதுடன் இதயக் கோளாறிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

தேவையற்ற கொழுப்புகளை கட்டுப்படுத்துகிறது. இன்னும் பல சிறப்புகளை உடைய கருப்பு கவுனி அரிசியைக் கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கினேன். தவிடு நீக்கப்படாத கருப்பு கவுனி அரிசியில் நிறைய சத்துகள் உள்ளன. அத்துடன் இதில் மாவுச்சத்து அதிகம் இருப்பதுடன் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருக்கிறது’’ என்றவர் ஐஸ்கிரீம் தயாரிப்பு குறித்து விவரித்தார். ‘‘பொதுவாக ஐஸ்கிரீம் தயாரிக்கும்போது வெள்ளைச் சர்க்கரை சேர்ப்பார்கள். ஆனால், நான் அதற்குப் பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கிறேன். ஐஸ்கிரீம் மிருதுவாக இருப்பதற்காக ஸ்டெபிலைசர் என்னும் கெமிக்கல் பயன்படுத்துவார்கள். இன்னும் பல ரசாயனப்பொருட்களைச் சேர்த்துதான் ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுகிறது. இதனால்தான் சிலருக்கு சளி பிடிக்கிறது. ஆனால், நாங்கள் தயாரித்துள்ள ஐஸ்கிரீமில் ரசாயனங்கள் எதுவும் சேர்க்கவில்லை.

இந்தியக் குழந்தைகள் சத்து குறைவாக இருப்பதாக ஒரு சர்வே தெரிவித்துள்ளது. அந்தவகையில் நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஐஸ்கிரீமை தயாரித்துள்ளேன். எனக்கும் சின்னக் குழந்தைகள் இருப்பதால் அவர்களைப் போன்ற குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் சில தியாகங்களைச் செய்து ஐஸ்கிரீமைத் தயாரித்துள்ளேன். இந்நிலையில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த நெல் ஜெயராமனின் நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் கருப்பு கவுனி அரிசியில் செய்த ஐஸ்கிரீமை அறிமுகப்படுத்தினேன்.

ஐயா நெல் ஜெயராமனுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த நிகழ்வை நடத்தியதில் பெருமை கொள்கிறேன். தமிழகத்தில் ஏன் இந்திய அளவில் முதல்முறையாக நமது பாரம்பரியமான கருப்பு கவுனி அரிசியைக் கொண்டு ஐஸ்கிரீமை தயாரித்துள்ளேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும்விதமாக இந்த ஐஸ்கிரீம் இருக்கும். இது 100 சதவிகிதம் இயற்கை பொருட்களால் ஆனது. கருப்பு கவுனி அரிசியுடன் பனங்கற்கண்டு, நாட்டு மாட்டுப்பால் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளது என்பதால் எந்தவிதமான உடல் நலக்கோளாறுகளும் ஏற்படாது.

பனங்கற்கண்டுக்கென நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன என்பதால் அது கூடுதலாக பலன் தரும். மேலும் இன்றைக்கு பல்வேறு ரசாயனங்கள் நிறைந்த பாலைத்தான் நாம் அருந்திக்கொண்டிருக்கிறோம். ஆகவேதான் பசு மாட்டுப் பாலைக் கொண்டு ஐஸ்கிரீம் தயாரித்துள்ளேன். தாராளமாக உண்ணலாம். சுப நிகழ்ச்சிகள் மற்றும் இயற்கை விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சிகளில் இது போன்ற இயற்கை முறையிலான பாரம்பரிய உணவுப்பொருட்களை வாங்கிப் பயன்படுத்தலாம்’’ என்றார் மேனகா திலகராஜன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அது ஒரு ஹைக்கூ காலம்!! (மகளிர் பக்கம்)
Next post கண்ணே அலர்ஜியா? (மருத்துவம்)