சோப் ஆயில், பேஸ்ட் தயாரிக்கலாம்…மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)
பெண்கள் வீட்டிலிருந்தபடியே சிறிய முதலீட்டில் தொடங்கி நிரந்தர வருமானம் பார்க்கக்கூடிய பல தொழில்கள் உள்ளன. அந்த வகையில், துணிகளை துவைக்க வேண்டாம், வாஷிங்மெஷின் தேவையில்லை, ஊறவைத்து அலசினால் போதும் என்ற அடிப்படையில் சேலம் அம்மாப்பேட்டையில் அமலா சோப் ஆயில், சோப் பேஸ்ட் ( Amala Washing Cream& Liquid ) என்ற பெயரில் சிறுதொழில் செய்துவரும் சசிகலா சம்பத் அத்தொழில் குறித்து நம்மிடம் பேசினார்…
‘‘நாங்கள் நெசவாளிகள். சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதிகளில் நெசவுத்தொழில் சிறப்பாக நடைபெற்று வந்த காலகட்டத்தில் எனது கணவர் சம்பத் டெக்ஸ்டைல் கடை வைத்து தொழில் செய்து வந்தார். நான் அவருக்கு உதவியாக இருந்தாலும், மற்றொரு சிறுதொழில் செய்தால் நன்றாகயிருக்குமே என வீட்டில் வைத்து சோப் மற்றும் சோப் ஆயில் தயாரித்து விற்பனை செய்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாயப்பட்டறை கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுப்படுவதாக அத்தொழிலுக்கு பல்வேறு இடையூறுகள் வந்தது. இதில், லட்சக்கணக்கான மக்கள் தொழிலை இழந்து அடுத்த வேலை சாப்பாட்டிற்குக்கூட வழி தெரியாமல் வாட்ச்மேன் மற்றும் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், வீட்டில் வைத்து நான் செய்து வந்த சோப் மற்றும் சோப் ஆயில் தொழிலில் ஏதாவது வித்தியாசமாக செய்தால்தான் நம்மால் இத்தொழிலில் நல்லதொரு வருமானம் பார்க்க முடியும் என முயற்சித்தேன். அதுதான், சோப் ஆயில் மற்றும் சோப் பேஸ்ட். தமிழகத்தில் ஏற்கனவே சோப் மற்றும் சோப் ஆயில் 100க்கும் மேற்பட்ட பிராண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிட்ட சில பிராண்ட்கள் பிரபலமானவை. மீதமுள்ள பிராண்ட்கள் தயாரிக்கப்படும் பகுதியில் மட்டுமே பிரபலமாக இருக்கும், அங்கு மட்டுமே நன்றாக விற்கும். அதில் சில பொருட்கள் துணிகளுக்கும் கைகளுக்கும் தீங்கு விளைவிக்கும். ஒரு சில பொருட்கள் பயன்படுத்தும் போது துணிகள் சீக்கிரமே வெளுத்து பழைய துணி போல் மாறிடும். ஆனால், இதில் சில விதிமுறைகளைக் கையாண்டு வருகிறோம்.
இதனால் நாங்கள் தயாரிக்கும் சோப் ஆயில் மற்றும் சோப் பேஸ்ட் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்தாது. இந்தியாவிலேயே முதன்முறையாக நாங்கள் தான் இந்த சோப் பேஸ்டை தயாரித்துள்ளோம்’’ என்றவர் வாஷிங் மெஷினுக்கான அவசியம் இருக்காதாம். ‘‘பொதுவாக, நகரப் பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வாஷிங் மெஷின் மூலம் வாஷிங் பவுடர் அல்லது சோப் ஆயில் பயன்படுத்தி சலவை செய்கின்றனர். வாஷிங்மெஷினில் துவைத்தாலும் சட்டைகளின் காலர் போன்ற இடங்களில் உள்ள அழுக்கு முழுவதுமாக போவதில்லை. இதனால் மீண்டும் சோப் போட்டு துவைக்கின்றனர். அல்லது வாஷிங் மெஷினில் போடுவதற்கு முன் கழுத்து பட்டையில் சோப் கொண்டு நன்கு துவைத்து விட்ட பிறகு அதில் துவைக்கிறார்கள். கிராமங்களை பொறுத்தவரை மக்கள் துவைப்பதற்கு சோப்களையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
ஆனால், நான் தயாரித்துள்ள இந்த சோப் ஆயில் மற்றும் பேஸ்ட் கொண்டு துணிகளை சலவை செய்ய வாஷிங் மெஷின் தேவையில்லை. அனைத்து வகை துணிகளுக்கும் சோப் ஆயில் ஊற்றி துணிகளை கைகொண்டு கசக்கிப் பிழிந்து அலசினால் அழுக்குப் போய்விடும். அதேபோல் வெள்ளைத் துணிகளுக்கு சோப் பேஸ்டைப் போட்டு தேய்த்து தண்ணீர் ஊற்றி அலசினால் துணிகள் பளிச்சென ஆகிவிடும். கைகளால் துவைக்கும் போது அழுக்கு நீங்கி விடுகிறது என்பதால், அதிகப்படியான ரசாயனம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது என தவறாக நினைத்துவிடக்கூடாது. நம் கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒரு விதிமுறையை கண்டுபிடித்து இவற்றைத் தயாரித்துள்ளோம். துணிகளுக்கும் சரி, நம் சருமங்களுக்கும் சரி எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. அதேநேரத்தில், விளம்பரப்படுத்தி விற்கப்படும் சோப்புகளைவிட நன்றாகவே தரமானதாக இருக்கும். அதனால், ஒருமுறை வாங்கியவர்கள் பின்னர் எங்களின் அன்றாட வாடிக்கையாளர்களாக மாறிவிடுகின்றனர்’’ என்றவர் பெண்களுக்கு இந்த தொழில் ஒரு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தி தருவதில் சந்தேகமில்லையாம்.
‘‘வீட்டிலிருந்தபடியே நிரந்தரமான ஒரு வருமானம் தரக்கூடிய தொழிலாக இதனை நான் பார்க்கிறேன். ஏனெனில், இத்தொழிலுக்கு என்றென்றைக்கும் வரவேற்பு இருந்து கொண்டேயிருக்கும். எனவே, புதிதாக தொழில் தொடங்குபவர்கள் முதலில் குடும்பமாக உழைத்து, உற்பத்தி செலவை குறைத்து, குறைந்த விலையில் விற்றால்தான் இப்போதைய போட்டிக்கு தாக்குப்பிடிக்க முடியும். தொழில் செய்ய வேண்டும், ஆனால் அதுபற்றி தெரியவில்லை, முடியவில்லை என்பவர்களுக்கு விற்பனை வாய்ப்பை வழங்கி வருகிறோம். ஒரு திறமையான பெண் இப்பொருட்களை வாங்கி அந்தந்தப் பகுதிகளில் விற்றாலே மாதம் இருபதாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் வரை சம்பாதிக்க முடியும்.
மேலும், குறிப்பிட்ட பகுதிக்கு டீலர்கள் நியமித்து விற்பனை செய்யலாம். டீலர்களிடம் தொகை பெற்றுக்கொண்ட பின், ஆர்டரை தயாரித்து கொடுக்கும் அளவுக்கு கிராக்கி உள்ளது. சில்லரை கடைகளுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்கலாம். கடைகளில் வினியோகித்த பொருட்களுக்கு அடுத்த வினியோகத்தின் போது தொகை கிடைக்கும். இது தாமதமானாலும் கூடுதல் லாபம் உள்ளது. புதிதாக தொழில் துவங்குபவர்கள் முதலில் சில்லரை கடைகளில் வியாபாரத்தைப் பெருக்கி, பின்னர் டீலர்களுக்கு விற்கலாம். ஓட்டல்கள், லாட்ஜ்கள், மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரி விடுதிகள், வீடுகளுக்கு நேரில் விற்கலாம். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிலான பொருட்களை எளிதில் விற்றுவிடலாம். சோப் ஆயில் தரத்தை வாடிக்கையாளர் அறிந்துவிட்டால், தொடர்ந்து ஆர்டர் கொடுப்பார்கள். மார்க்கெட்டில் பிராண்டட் சோப் ஆயில்களைவிட பல மடங்கு விலை குறைவாகவும், தரமானதாகவும் இருப்பதால் அதிகமானோர் விரும்பி வாங்குவார்கள்.
மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு ஒரு ஆண்டுக்கு தேவையான சோப் ஆயில் உள்ளிட்ட கிளீனிங் பொருள்கள் கொள்முதல் செய்ய டெண்டர் விடுவார்கள். அதிலும் விண்ணப்பித்து டெண்டர் பெற்று சப்ளை செய்யலாம். அதற்கேற்ப உற்பத்தி அளவையும் பெருக்கி கொள்ளலாம். சோப் ஆயிலோடு சோப் பேஸ்ட்டும் சேர்த்து சப்ளை செய்தால் லாபம் அதிகரிக்கும். மக்களுக்கு தேவைப்படும் பொருட்களைத் தயாரித்துக் கொடுக்கும் தொழில் என்பதால் நிரந்தரமான வருமானம் பார்க்கலாம், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழலாம்’’ என்றார் சசிகலா சம்பத்.
Average Rating