ஃப்ரான்சைஸியில் தொழில் தொடங்கலாம்… நிரந்தரமான வருமானம் ஈட்டலாம்!!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 38 Second

ஒரு தொழில்முனைவோர் ஆக வேண்டும், நாமும் நம் குடும்பத்திற்கான வருமானம் ஈட்ட வேண்டும் என ஒவ்வொரு பெண்களும் நினைக்கின்றனர். தொழில் தொடங்க ஆசை இருக்கிறது. ஆனால் இதற்குமுன் தொழில் அனுபவம் இல்லையே என்பவர்களுக்கு பொருத்தமானது ஃப்ரான்சைஸி தொழில் வாய்ப்பு. என்ன தொழில், எப்படி தொடங்குவது என்கிற குழப்பம் இதில் இல்லை. இதுதான் தொழில். இதை இப்படி நடத்த வேண்டும். இவ்வளவு லாபம் வரும். என்று எல்லா கணக்குகளும் அந்த தொழிலைத் தொடங்கி நடத்துபவர் மூலம் தெளிவாகக் கிடைத்துவிடும்.

தொழிலை ஏற்று நடத்தி அதிலிருந்து வரும் லாபத்தை பகிர்ந்துகொண்டால் போதும். தொழில் தொடங்குவதில் உள்ள ஆரம்ப பயம் கிடையாது. முதலீடு செய்வதற்குத் தயாராக இருந்தால் போதும் என்பதுதான் இதன் சிறப்பு. ஏற்கெனவே மக்களின் மனதில் பதிந்த, வியாபார வாய்ப்புள்ள நிறுவனமாக பார்த்து இந்த உரிமையை வாங்கினால் போதும். அவ்வாறு சென்னையில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஜூஸ் வேர்ல்டு ( Juice World) உரிமையை வாங்கி மயிலாப்பூர், கே.கே.நகர், தரமணி போன்ற இடங்களில் தொழிலைத் தொடங்கி தொழில்முனைவோராகி உள்ளனர் மூன்று பெண்கள். அவர்களிடம் பேசியதிலிருந்து….பைரவி, மயிலாப்பூர் சிவசாமி சாலையின் விவேகானந்தா காலேஜ் அருகாமையில் ஜூஸ் வேர்ல்டு கடை திறந்துள்ள பைரவி தொழில் தொடங்கிய சுவாரஸ்ய கதை. ரொம்ப நாட்களாகவே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என யோசித்தபடி இருந்தேன்.

ஆனால், என்ன தொழில் தொடங்குவது என்பது புரியாத புதிராக இருந்தது. தேடினேன்… தேடினேன்… அதில் கிடைத்தது என்றைக்குமே ஒரு நிரந்தரமான வருமானம் தரக்கூடிய உணவு சம்பந்தப்பட்ட குளிர்பானம் மற்றும் சிற்றுணவு குறித்த தொழில். இந்தத் தொழில் தொடங்க கணவரும் முழு ஒத்துழைப்பு அளித்து ஊக்கப்படுத்தினார். அப்புறம் என்ன ஜூஸ் வேர்ல்டு ஃப்ரான்சைஸ் எடுத்து நடத்துவது என முடிவு செய்தோம். இத்தனை வெரைட்டிகளுடன் இவ்வளவு சுவையான மாடர்ன் உணவுகள் மயிலாப்பூர் ஏரியாவில் இல்லாத குறையை தீர்த்து வெச்சிருக்கீங்கன்னு பலரும் பாராட்டி வருகின்றனர். தொழில் தொடங்குவது என்றால், லைசென்சுக்கு அலையணும், ஆர்டர் பிடிக்கணும், விளம்பரம் செய்யணும், ஆளுங்க செட் ஆகணும் என ஏராள ‘ணும்’ இருக்குமேனு ஆரம்பத்துல கலக்கமா தான் இருந்தது. ஃப்ரான்சைஸி தொழிலில் இந்த தொல்லை கிடையாது. இப்போது நானும் தொழில்முனைவோர்
ஆகிவிட்டேன்.

பிரியா, தரமணி

கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் முதுநிலை படிப்பு மாணவியான பிரியா, ஜூஸ் வேர்ல்டை தேர்வு செய்த விதம் மிகவும் மாறுபட்டது. காரப்பாக்கத்தில் இளநிலை படிப்பு படித்தபோது, தொழில்முனைவோராக உருவாகும் நிகழ்ச்சிகளை கல்லூரியில் நடத்துவார்கள். அப்படி ஒரு நிகழ்ச்சியில், ஆவின் பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கி லாபத்துக்கு விற்றேன். மற்றொரு நிகழ்ச்சியில் பாவ் பாஜி, பானிப்பூரி போன்ற நொறுக்குத்தீனி விற்றேன். ஓரிரு நாட்கள் கல்லூரியில் நடக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நம்மால் ஓரளவுக்கு கல்லா கட்ட முடிகிறது என்றால், நாமே ஏன் தொழில் செய்யக்கூடாது என உள்ளுக்குள் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. சொந்த தொழில் தான் நமக்கு ‘செட்’டாகும் என அப்போதே தீர்மானித்தேன்.

அதற்கு உகந்தபடி எழும்பூர் பல்லவா அம்பாசிடர் ஓட்டலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் ஃப்ரான்சைஸி தொழில் ஆலோசனை வழங்கும் ஸ்ட்ராட்டஜைசர் நிறுவன இயக்குநர் ஐயப்பன் ராஜேந்திரன் அவர்கள் ஜூஸ் வேர்ல்டு பற்றி கூறினார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஃப்ரான்சைசி எடுத்து தொழில்முனைவோர் ஆகியுள்ளேன். தரமணியில் அட்வான்ஸ் கொடுத்த கடையில், இப்போது இன்ட்டீரியர் வேலை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. நல்ல நாள் பார்த்து திறக்க உள்ளேன்.

செரில் மகேஷ், கே.கே.நகர்

கே.கே. நகர் முனுசாமி சாலையில் ஜூஸ் வேர்ல்டு கடை தொடங்கியுள்ள செரில் மகேஷ், தொழிலுலகில் தடம் பதித்தது சற்று வித்தியாசமானது. தொழில் தொடங்க வேண்டும் என அடிக்கடி மனதில் எண்ணம் துளிர்விட்டாலும், 20 ஆண்டுகளை அலுவலக பணியில் அர்ப்பணிப்பு செய்தேன். உழைத்தது போதும் என அலுத்துவிட்டது. போதாக்குறைக்கு பிள்ளைகளும் வளர்ந்துவிட்டனர். பெண் பத்தாவது படிக்கிறாள். இப்போதாவது சொந்த தொழில் செய்து பார்க்கலாமே என தீர்மானித்தேன்.

அப்படித்தான் ஜூஸ் வேர்ல்டு ஃப்ரான்சைஸ் கிடைத்தது. தொழில் தொடங்கியாச்சு. கஷ்டம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. சம்பளம் என இன்னொருத்தரை எதிர்பார்க்காமல், என்னாலும் சுயமாக சம்பாதிக்க முடிந்துள்ளதை அடிக்கரும்பின் இனிப்பாக கருதுகிறேன். வியாபாரம் சூடு பிடிக்கத்தொடங்கி உள்ளது. அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கியதால், இங்கு கஷ்டம் இல்லை. மேலும், எல்லாமே ஆல்மோஸ்ட் ரெடிமேடு நிலையில் உள்ள உணவுகள் தான். எதனோடு எதை கலக்க வேண்டும் என்ற தொழில் டெக்னிக்கும் இப்போது அத்துப்படி. அப்புறம் என்ன.. இனி எல்லாமே ஜோருதான்.

இந்த மூன்று மகளிரும் குறிப்பாக ஜூஸ் வேர்ல்டு நிறுவனத்தை தேர்வு செய்திருப்பது நமக்கும் புருவம் உயர்த்தியது. நிறுவனத்தின் உரிமையாளர் அரவிந்த் கதிரைச் சந்தித்தோம். அவரது வெற்றியின் பின்னணி மலைப்பாக உள்ளது. அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள ஜெமினி பார்சன் வளாகத்தில் ஜூஸ் கடை வைத்துள்ள மாமா (அக்கா கணவர்) கடையில் தொழிலாளியாக நுழைந்து 20 ஆண்டுகளில் வியக்கத்தக்க சாதனை படைத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‘‘நான்காண்டுகளாக வேலை பார்த்த பின்னர் சொந்தமா கடை வைக்க நெனக்கிறேன் மாமா என்றேன். எனது உழைப்புக்கு ஒன்னேகால் லட்ச ரூபாய் கொடுத்து வாழ்த்தினார்.

அந்த பணத்தில் 1999ல் எனது 19வது வயதில் ஸ்பென்சர் பிளாசாவில் ஜூஸ் வேர்ல்டு என்ற பெயரில் கடை தொடங்கினேன். எதையாவது வித்தியாசமா செய்யணும் எனும் சிந்தனையில், ஆர்வத்தில் நானாக கற்றுக்கொண்டது தான் ஸ்மூத்தி, பலூடா உள்ளிட்ட மாடர்ன் உணவுகள். இந்த பாஸ்ட்புட் உணவுகளுடன் ஜூஸ் வேர்ல்டு புதிய பரிணாமத்துடன் தனது தொழிலில் 2005-க்கு பின்னர் வேகம் பிடித்தது. ஸ்பென்சர் பிளாசாவில் இருந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனம் எங்களது தயாரிப்புகளால் கவரப்பட்டு, அவர்களது அலுவலகத்தில் கிளை அமைக்கச் சொன்னார்கள். அதன்படி அங்கு ஒரு கிளையை திறந்தேன். அதிலிருந்து மேலும் சில கார்ப்பரேட் நிறுவனங்களில் கடை திறக்க வாய்ப்பு தானாக வந்தது. சிகரமாக, பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி.பார்க்கில் கிளை துவக்கினேன்.

வேறு எங்கும் இல்லாத வகையில் 150 வகைகளில் ஸ்மூத்தி, பலூடாக்கள் இங்கு கிடைக்கும். அதுபோல் எந்த ஜூஸ் கேட்டாலும் தருகிறோம். தரத்தில் நாங்கள் சோடை போனதும் கிடையாது. போகவும் விடமாட்டேன். ஃப்ரெஷ்ஷாவும் இருக்கும். ருசியாகவும் இருக்கும். அதனால் தான் கஸ்டமர்கள் அதிகரித்தபடி உள்ளனர். 15 ஆண்டுகளில் சென்னையில் பல இடங்களில் ஜூஸ் வேர்ல்டு கிளை பரப்பி உள்ளது. தேனாம்பேட்டையில் உள்ள ஸ்ட்ராட்டஜைசர் எனப்படும் தொழில் வழிக்காட்டி ஆலோசனை நிறுவனம் கைகாட்டும் நபர்களுக்கு ஃப்ரான்சைஸ் கொடுத்து வருகிறேன். அந்த வகையில் தற்போது மூன்று பெண்கள் ஃப்ரான்சைஸ் எடுத்து தொழில் தொடங்கியுள்ளனர். இதுபோன்று ஏராளமான பெண்கள் தொழில்முனைவோர் ஆக வழிகாட்ட வேண்டும் என தொடர்ந்து செயல்படுவேன்’’ என்றார் அரவிந்த்.

மூன்று பெண்களின் பேச்சிலிருந்து, ஃப்ரான்சைஸ் தொழிலை பெண்கள் மிகவும் விரும்புகின்றனர். ஏனென்றால், தொழிலுக்கே உரிய கஷ்ட, நஷ்டங்கள் இல்லை, உற்பத்தியில் குறை ஏற்படுமோ என அச்சப்பட வேண்டாம், விளம்பரத்தையும் நிறுவனமே பார்த்துக்கொள்ளும், விலையும் நிறுவனம் நிர்ணயம் செய்துவிடும், நிறுவனத்தின் தலைமையிடம் எப்படி இருக்குமோ அதே வடிவமைப்பில் வெளித்தோற்றம், உள்கட்டமைப்புகளும் இருக்கும் என்பதால் எளிதில் கண்ணைக் கவரும். ஃப்ரான்சைஸ் அளிப்பதற்கு முன் தொழிலில் பயிற்சி அளிக்கப்படுவதால் சிக்கலே இல்லாமல் சிறந்த தொழில்முனைவோர் ஆகமுடியும். என்ன, ஃப்ரான்சைஸ் எடுக்கும் நிறுவனத்தின் தயாரிப்புகள், மார்க்கெட் மற்றும் மக்கள் மத்தியில் அதற்கு இருக்கும் வரவேற்பு போன்ற சில முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தினால் போதுமானது. ஃப்ரான்சைசில் லாபம் என்பது பங்கீடுதான் என்றாலும், பூரண மன நிறைவுடனும், நிம்மதியுடனும் தொழில் நடத்த முடிகிறதே என்பது தான் பெண்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுகவாழ்வு தரும் சுயதொழில்!! (மகளிர் பக்கம்)
Next post சிலம்பம் கற்று உனக்கான வருமானத்தை ஈட்டு! (மகளிர் பக்கம்)