வருமானத்திற்கு வருமானம், ஆசைக்கு ஆசை, ஹாபிக்கு ஹாபி..!! (மகளிர் பக்கம்)
ஒரு சிலரது வீட்டிற்குச் செல்லும்போது வீட்டின் உரிமையாளர்களுக்கு முன் அவர்களது செல்லப் பிராணிகள் நம்மை வரவேற்கும். எவ்வளவு அலுப்புகளுடன் நாம் சென்றிருந்தாலும் அந்த பிராணிகளின் வரவேற்பில் அத்தனையும் காணாமல் போய்விடும். கிளி, புறா, லவ்பேர்ட்ஸ், நாய், பூனை என ஒவ்வொரு செல்லப்பிராணிகளும் தங்களின் அன்பை அவர்களுக்கான மொழியில் நம்மிடம் பகிர்வார்கள். சிலர் நாய் மட்டுமே வளர்ப்பார்கள், சிலருக்கு பறவை மேல் காதல் இருக்கும். ஆனால் இவை அனைத்தையுமே வளர்த்து வருகிறார் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன். இதனை வளர்ப்பது மட்டுமல்லாமல் விரும்பி கேட்பவர்களுக்கு விற்பனையும் செய்து வருகிறார்.
‘‘என்னோட சொந்த ஊர் வேலூர் மாவட்டத்தில் ராணிப்பேட்டை. அப்பா, பெரியப்பா எல்லாரும் இந்த வேலை தான் செய்திட்டு இருந்தாங்க. சின்ன வயசில் இருந்தே புறாக்கள் மற்றும் அதன் சத்தத்தில் வளர்ந்த எனக்கு அப்பாவைப் போல் நானும் இந்த தொழிலில் என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபடுத்த ஆரம்பித்தேன். எங்க புறா பண்ணை ரொம்ப பெரிசு. இங்க ஆயிரத்துக்கும் மேற்பட்ட புறாக்கள் உள்ளன. இந்த 26 வயது காலமாக புறாக்கள், நாய், ஆடு, மாடு, கிளிகளுடன் தான் சேர்ந்து வளர்ந்தேன்னு சொல்லணும். இங்க நம்ம நாட்டு புறாக்கள் மட்டுமல்ல வெளிநாட்டு புறாக்களும் உள்ளன. உலகளவில் பல நாடுகளுக்கு எங்க பண்ணையில் இருந்து புறாக்கள் விற்பனை செய்து வருகிறோம். தமிழ்நாட்டில் யாராவது விரும்பினால், அவர்களுக்கு மட்டுமே நேரடியாக கொண்டு போய் கொடுத்து வருகிறோம்.
ஷார்ட்டின், ஹவுல், முஷ்கின்… என்று பல வகையான புறாக்கள் நம்மிடம் உள்ளது’’ என்று கூறும் மோகன், புறா வளர்ப்பதற்குத் தனிப்பட்ட பயிற்சி ஏதும் தேவையில்லை என்கிறார். “பழக்கம் இல்லாதவர்கள் ஆரம்பத்தில் ஒரு ஜோடி புறாக்களை வளர்க்கும் போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். போகப் போக அந்த புறாக்கள் நம்முடன் குழந்தைப் போல் பழகிடும். அதன் பிறகு அவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்று நமக்கு புரிந்திடும். நம்ம வீட்டில் ஒரு குழந்தையை வளர்க்கும் போது எப்படி பார்த்து பார்த்து வளர்க்கிறோம். அப்படித்தான் புறாக்களையும் வளர்க்க வேண்டும். கோதுமை மற்றும் கம்பு தான் உணவு. எல்லா பறவைக்கும் நோய் தொற்று ஏற்படும். இதற்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும். பொதுவாக புறாக்களுக்கு கோழிகளுக்கு வருவது போல் வெள்ளைக் காய்ச்சல் நோய் ஏற்படும்.
சில புறாக்களுக்கு தலையாட்டி நோய் மற்றும் அம்மை நோயின் தாக்கமும் இருக்கும். இதற்காக பயப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த நோய்களுக்கான தடுப்பூசிகள் உள்ளன. அவற்றை நாம் முறையாக போட்டுவிட்டாலே போதும், எந்த நோயும் நம் புறாக்களை அண்டாது. எல்லாவற்றையும் விட அது வசிக்கும் இடத்தினை சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும், புறாக்கள் ஆரோக்கியமாக இருக்கும். நாம் எப்போது வெளியே சென்று விட்டு சோர்வாக வந்தாலும், மன உளைச்சலில் இருந்தாலும், இவர்களுடன் ஒரு பத்து நிமிட நேரம் கழித்தால் போதும், எல்லா சோர்வும் பஞ்சாக பறந்திடும். அப்படி ஒரு மன நிம்மதி ஏற்படும். இதை ஆசைக்காக மட்டும் இல்லை பிசினஸ் நோக்கத்தோடுதான் வளர்க்கிறோம்.
அதன் தீனி பராமரிப்பு போக கையில் ஒரு கணிசமான தொகையை பார்க்கலாம். சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் நான் விற்பனை செய்து வருகிறேன். அப்பா காலத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் இருப்பதால், அவர்கள் மூலமாக இன்னும் பலர் என்னுடைய வாடிக்கையாளர்களாக உள்ளனர். எந்த ஒரு தொழிலாக இருந்தாலும் அதன் மேல் தனி ஈர்ப்பு இருந்தாலே போதும், கண்டிப்பாக அந்த தொழிலில் நம்மால் முன்னேற முடியும். இதை நான் என் புறாக்கள் மூலம் கற்றுக் கொண்டேன்னுதான் சொல்லணும்’’ என்றார் மோகன்.
Average Rating