ஊட்டச்சத்து பானங்களின் விளம்பர உதார்!! (மருத்துவம்)
ஊட்டமும் இல்லை… சத்தும் இல்லை…
உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா? உங்கள் குழந்தை விஞ்ஞானியாக வேண்டுமா? உங்கள் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் குறைவில்லாமல் கிடைக்க வேண்டாமா?- ஊடகங்களில் இதுபோன்ற ஹெல்த் ட்ரிங்க்ஸ் பற்றிய விளம்பரங்களைத் தவிர்க்கவே முடிவதில்லை. ஆனால், இந்த ஹெல்த் டிரிங்க்ஸால் ஊட்டமும் கிடைப்பதில்லை. சத்தும் கிடைப்பதில்லை. எல்லாமே விளம்பர, வியாபார உத்திதான் என்கிறார்கள் மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும்.
‘‘தொலைக்காட்சி விளம்பரங்களும், இணையதள, செய்தித்தாள் விளம்பரங்களும் நம் குழந்தைகளை குறி வைத்தே எண்ணற்ற ஊட்டச்சத்து பவுடர்களையும், பானங்களையும் வாங்கச்சொல்லி நம்மை திரும்ப திரும்ப வற்புறுத்திக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் வாங்கி கொடுத்தால்தான் நம் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்ற நம்பிக்கையும் நம் மனதில் ஊடுருவிவிட்டது.
ஆனால், அவற்றால் அதிக பருமன் உடையவர்களாகவும், செரிமான பிரச்னை உடையவர்களாகவும், கொலஸ்ட்ரால், நீரிழிவு, இதயம் போன்ற பாதிப்புகளுக்கு வாய்ப்புள்ளவர்களாகவுமே குழந்தைகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் முதல் 6 மாதம் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். அதன்பிறகே மெல்ல மெல்ல திட உணவுக்கு அவர்களை பழக்க வேண்டும்’’ என்கிறார் உணவியல் நிபுணர் சித்ரா மகேஷ்.
‘‘ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கக்கூடிய ஊட்டச்சத்து பவுடர் மற்றும் பானங்களை வாங்கிப் பயன்படுத்துவதால் அதில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள், என்னென்ன அளவில் உள்ளது, அதன் தயாரிப்பு தேதி போன்ற பல விபரங்கள் எந்த அளவுக்கு சரியானது என்று நமக்குத் தெரியாது. மேலும் அதை, பயன்படுத்தும் முறையும் தெரியாது. முக்கியமாக, ஏற்கெனவே நிறைய சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும் அந்த ஊட்டச்சத்து பானங்களைப் பாலில் கலந்து, அதில் மேலும் 4 ஸ்பூன் சர்க்கரையை நம்மவர்கள் சேர்ப்பார்கள்.
அதனால் விளம்பரங்களைப் பார்த்து ஊட்டச்சத்து பானங்களை கண்மூடித்தனமாக வாங்கிக் கொடுப்பதில் எந்த பெருமையும் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கொஞ்சம் சிரமம் பார்க்காமல், வீட்டிலேயே அதைவிட நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளைத் தயார் செய்து கொடுக்க முடியும்’’ என்பவர், அதற்கான வழிமுறைகளையும் கூறுகிறார்.
குழந்தைக்கு என்று உணவுகளை தனியாக தயார் செய்யாமல், அவர்களுக்கு அளிக்கும் ஆரோக்கியமான உணவுகளையே பெற்றோர்களும் சாப்பிட்டு குழந்தைக்குக் கொடுக்க வேண்டும். பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள், கடலை வகைகள், பால், அவித்த முட்டை போன்ற உணவுகளை வீட்டிலேயே தயார்செய்து குழந்தைக்கு கொடுக்க வேண்டும்’’ என்பவர், குழந்தைகள் ஊட்டச்சத்துக்கான மாற்று உணவுகளையும் பட்டியல் இடுகிறார்.
‘‘குழந்தைகளுக்கு பொட்டுக்கடலை வெல்லம் சேர்த்து கஞ்சி வைத்துத் தரலாம். சிறுதானிய கஞ்சி வகைகளை குழந்தைகள் விரும்பும் வண்ணம் பாலில் கலந்து சர்க்கரை சேர்க்காமல் தரலாம். இனிப்புக்கு பனைவெல்லம் சேர்த்துக் கொள்ளலாம். குளிர்பானங்களை குழந்தைகளுக்கு கொடுக்கவே கூடாது.
அவற்றில் அளவுக்கு அதிகமாக சர்க்கரை இருப்பதால் குழந்தையின் உடல் நலத்துக்கு எதிர்காலத்தில் பெரிய கேடு விளைவிக்கும். குளிர்பானங்களைப் போல குழந்தைகளுக்கு அதிக தேநீர் கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். தேநீரில் உள்ள Tannin என்கிற ரசாயனம் ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சி ரத்தசோகையை ஏற்படுத்தும் குணம் கொண்டது.
குழந்தைகளுக்கு தினம் ஒரு பழச்சாறு 100 மிலி அளவில் கொடுக்க வேண்டும். அதில் சர்க்கரை, ஐஸ், பால் என்று எதுவும் கலக்காமல் கொடுப்பது நல்லது. பற்கள் முளைத்த பிறகு மெல்ல மெல்ல பழங்களை அப்படியே மென்று சாப்பிட பழக்க வேண்டும். குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது, சாப்பிட மறுக்கிறது என்ற சிக்கல் வந்தால் மருத்துவர் ஆலோசனைப்படியே என்ன கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டும்.
முக்கியமாக உங்கள் குழந்தைக்கு எவ்வளவு ஊட்டச்சத்து தேவை, எப்போது தேவை என்பதை தெரிந்துகொள்ள குழந்தைகள் நல மருத்துவரை நாடி ஆலோசனை பெறுவதே நல்லது. உங்கள் குழந்தையின் செயல்திறனையும், வளர்ச்சி, எடை, உடல் ஆற்றல், பேச்சுத்திறமை, கவனிப்புத்திறன் ஆகியவற்றை விளக்கி உங்கள் குழந்தைக்கு ஊட்டச்சத்தை எவ்வாறு கொடுக்க வேண்டும், எப்படி கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு அதன்படி குழந்தைக்கு ஊட்டச்சத்து கொடுப்பதே சரியானது’’ என்கிறார்.
Average Rating