படுக்கையை நனைக்கும் குழந்தைகள்! (மருத்துவம்)
எதுவும் அளவோடு இருந்தால் ஆபத்தில்லை. நேரத்தோடு நடந்தால் பாதிப்பில்லை. இந்த ‘வைர வரிகள்’ எதற்குப் பொருந்துகிறதோ, இல்லையோ, சிறுநீர் கழிப்புக்கு ஏகப்பொருத்தம். சிறுநீரை அடக்கினாலும் கஷ்டம்; அவசரமாக வந்தாலும் அவதி; நேரங்கெட்ட நேரத்தில் ரெஸ்ட்ரூம் போக வேண்டுமென்றாலும் இம்சை.சாதாரணமாக நமக்கு பகலில் சிறுநீர் பலமுறை போகும்; இரவில் அவ்வளவாக போகாது. வீட்டுக்காரருக்குக் கட்டுப்படும் வளர்ப்புப் பிராணி மாதிரி, நாம் உறங்கி எழும் வரை சிறுநீர் நமக்குக் கட்டுப்பட்டுக் காத்திருக்கும். ஆனால், சிலருக்கு மட்டும் இந்தக் கட்டுப்பாடு தளர்ந்து விடும். இதனால், தன்னிச்சையாகச் சிறுநீர் பிரிந்துவிடும். இது பகல், இரவு இரண்டு வேளைகளிலும் ஏற்படுவது ஒரு வகை.
இரவில் மட்டும் ஏற்படுவது இன்னொரு வகை. இரண்டாவதாகச் சொல்லப்பட்டது, பிரதானமாகக் குழந்தைகளின் பிரச்னை. இவர்கள் உறக்கத்தில் படுக்கையை நனைத்துவிடுவார்கள். இந்தப் பாதிப்பின் பெயர் ‘நாக்டெர்னல் எனுரெசிஸ்’ (Nocturnal Enuresis). இன்றைய வாழ்க்கைச் சூழலில் இந்தப் பாதிப்பு குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது. இது பெண்களைவிட ஆண் குழந்தைகளுக்குத்தான் அதிகம் ஏற்படுகிறது.
‘சிறுநீர்க் கழிப்பை நாம்தான் கட்டுப்படுத்துகிறோம்’ என்று காலரைத் தூக்கிக்கொள்கிறோம். உடலில் மூளை – நரம்பு மண்டலம் என்ற ‘நெட் – ஒர்க்’ மட்டும் வேலை செய்யாவிட்டால், நமக்குப் பகலென்ன, இரவென்ன, எல்லா நேரமும் ‘உச்சா’ போய் உள்ளாடை நனைந்துவிடும். சிறுநீரகத்திலிருந்து சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வந்து சிறுநீர்ப்பை நிரம்பியதும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வை மூளை நமக்குத் தெரிவிக்கிறது. அதற்கு நாம் தயாராகவில்லை என்றால், சிறுநீர்ப்பையின் அடியிலிருக்கும் ‘வால்வுகளுக்கு’ (Sphincters) ‘அடுத்த கட்டளை வரும்வரை ‘வாய்’ திறக்க வேண்டாம்’ என்று மூளை ‘144 தடை உத்தரவை’ நரம்புகள் மூலம் அனுப்பி வைக்கிறது.
எப்போது நாம் சிறுநீர் கழிக்கத் தயாராகிறோமோ, அப்போது தடை உத்தரவை மூளை ‘வாபஸ்’ வாங்கிக் கொள்ள, வால்வுகள் திறக்கின்றன. சிறுநீர் ரிலீஸாகிறது. சிறுநீர்ப்பை அளவுக்கு மீறி நிரம்பி விட்டாலும், மூளை அந்தத் தடை உத்தரவை உடனே வாபஸ் பெற்றுக்கொள்ளும். அப்போது நம்மால் சிறுநீர்க் கழிப்பைக் கட்டுப்படுத்த முடியாது. இப்படிச் சிறுநீர் கழிக்க சிறுநீர்ப்பை மட்டும் ஒத்துழைத்தால் போதாது; வயிற்றுத் தசைகளும் இடுப்புத் தசைகளும் ஒருங்கிணைந்து அழுத்தம் தர வேண்டும்.
அப்போதுதான் சிறுநீர்ப்பை முழுவதுமாகக் காலியாகும். பொதுவாகவே, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குச் சிறுநீர் கழிக்கும் உணர்வைக் கட்டுப்படுத்தும் சக்தி குறைவாக இருக்கும். இதனால் அவர்கள் படுக்கையை நனைப்பார்கள். அவர்களை நினைத்துப் பெற்றோர் கவலைப்படத் தேவையில்லை; சிகிச்சையும் அவசியமில்லை. பிரச்னை தானாகவே சரியாகிவிடும். ஐந்து வயதுக்கு மேல் அது தொடர்ந்தால், உடனே கவனிக்க வேண்டும்.
இந்தப் பிரச்னைக்குப் பெற்றோரின் கவனக் குறைவு ஒரு முக்கியக் காரணம். காலையில் எழுந்தவுடன் எப்படி பல் துலக்க வேண்டும், உணவை எப்படிச் சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என ஒவ்வொரு விஷயத்தையும் குழந்தைக்கு நாம்தான் கற்றுக் கொடுக்கிறோம். இதேபோல் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால், ‘எப்படிக் கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டும்’ (Toilet training) என்பதை இரண்டு வயதிலிருந்தே கற்றுத் தர வேண்டும்.
எத்தனை பேர் இதைச் செய்கின்றனர்? இப்போது பெற்றோர் இருவருமே வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதால், குழந்தையுடன் அவர்கள் செலவிடும் நேரம் குறைவு. ஆகவே, படுக்கையை நனைக்கும் குழந்தைக்குத் தேவையான பயிற்சிகளை அவர்கள் கற்றுத் தருவதில்லை. இதனால், ஐந்து வயதைத் தாண்டியும் சில குழந்தைகள் இந்தப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். நொறுக்குத் தீனிகளையும் கொழுப்பு மிகுந்த உணவுகளையும் சாப்பிடும் பழக்கம் இன்றைய குழந்தைகளிடம் அதிகரித்து வருகிறது.
இவற்றில் நார்ச்சத்து ரொம்பவே குறைவு. இதனால் அவர்களுக்கு அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறது. குடலில் இறுகிய மலம் சிறுநீர்ப்பையை அழுத்தி, படுக்கையை நனைக்க வைக்கிறது. சிறுநீர்ப் பை சரியாக வளர்ச்சி பெறவில்லை என்றாலும் இதே நிலைமைதான். குழந்தைப் பருவத்தில் பெற்றோருக்கு இந்தப் பிரச்சினை இருந்திருந்தால், அவர்களின் வாரிசுகளுக்கும் இது ஏற்படலாம். சிறுநீர்க் கழிப்பைக் கட்டுப்படுத்துவதில் ADH ஹார்மோனுக்கும் பங்கு உண்டு. சில குழந்தைகளுக்கு இரவில் இது கொஞ்சமாகச் சுரக்கும்.
அதனால் அவர்களுக்கு சிறுநீர்க் கட்டுப்பாடு குறைந்து படுக்கையை நனைப்பார்கள். இப்படிப் பல காரணங்களால் ஏழு வயது வரை இந்தப் பிரச்சினை தொடர்வதை ‘பிரைமரி எனுரெசிஸ்’ (Primary enuresis) என்கிறோம். இது தானாகவோ, சிகிச்சையாலோ சரியாகிவிட்ட குழந்தைகள், சில வருடங்களில் திடீரென்று மீண்டும் படுக்கையை நனைக்க ஆரம்பிப்பார்கள். இதை ‘செகண்டரி எனுரெசிஸ்’ (Secondary enuresis) என்கிறோம். இதற்கு மனம் சார்ந்த பிரச்சினைதான் அடிப்படைக் காரணமாக இருக்கும்.
ஆறாம் வகுப்பு அகிலாவுக்கு இந்தப் பாதிப்பு இருந்தது. சில சிகிச்சைகள் கொடுத்து சரி செய்தேன். அகிலாவின் குடும்பம் அடுத்த ஊருக்குக் குடிபெயர்ந்தது. அவளையும் வேறு பள்ளிக்கு மாற்றினர். அப்போது மண்புற்றில் மறைந்த நாகம் மறுபடியும் சீறியதுபோல், அகிலா மீண்டும் படுக்கையை நனைக்க ஆரம்பித்தாள்; அலறியடித்துக்கொண்டு அவளை அழைத்து வந்தனர். பரிசோதித்தபோது, அவள் உடலில் பிரச்சினை இல்லை. மனப்பிரச்சினை இருக்கலாமென விசாரணையில் இறங்கினேன். காரணம் தெரிந்தது.
அகிலாவின் வகுப்பாசிரியை அவள் செய்யும் சிறு தவறுக்கெல்லாம் கடுமையான தண்டனை தந்திருக்கிறார். அது அவளைப் பெரிய அளவில் பாதித்துவிட்டது. பெற்றோரிடம் அதைத் தெரிவித்து, வகுப்பை மாற்றச் சொன்னதும், அகிலாவின் பிரச்னை முடிவுக்கு வந்தது. இதுபோல் பள்ளியில் ஏற்படுகிற பாடச் சுமை, எழுதும் சுமை, பரீட்சை பயம், ஆசிரியர் மீதான பயம் போன்ற பல பிரச்னைகள் இந்தப் பாதிப்புக்குப் பாதை போடுகின்றன.
இவை தவிர, பெற்றோர் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வது, அதிகக் கண்டிப்பு, பாலியல் வன்முறை, இரவில் பேய், பிசாசு, வன்முறை மிகுந்த படங்களைப் பார்க்கும் பழக்கம்….. இந்தச் சூழல்கள் குழந்தையின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் தங்களுக்குள்ள பிரச்சினையை வெளியில் சொல்லமாட்டார்கள்; அதே நேரம் பயத்துடன் கூடிய ‘ஸ்ட்ரெஸ்’ அதிகரித்துக் கொண்டே போய், படுக்கையை நனைக்கும் பழக்கத்தில் வந்து முடியும்.
மூளை வளர்ச்சிக் குறைவு, டயாபிடிஸ் இன்சிபிடஸ்/டைப் 1 டயாபிடிஸ் பாதிப்பு, உறக்கத்தில் மூச்சுத் திணறல், குறட்டை, உடற்பருமன், வலிப்பு போன்ற பிரச்சினைகள் உள்ள குழந்தைகள், அதிக கூச்ச சுபாவமுள்ள குழந்தைகள், கவனக்குறைவாகவும் பரபரப்பாகவும் உள்ள குழந்தைகள் (ADHD) அடுத்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள். சிறுநீர் வடியும் பாதையில் மாறுதல்/அடைப்பு ஏற்பட்டாலும், மூளை நரம்பு பாதிக்கப்பட்டாலும், சிறுநீர்ப் பையில்/முதுகில் பிரச்சினை என்றாலும், அடிக்கடி சிறுநீர்த் தொற்று/சிறுநீரகப் பிரச்சினை ஏற்பட்டாலும் இது நேரலாம்.
ஆனால், இவர்களுக்குப் பகல், இரவு இரண்டு வேளைகளிலும் (Diurnal enuresis) இந்தப் பாதிப்பு இருக்கும். குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சினை ஆரம்பித்ததும், ரத்த டெஸ்ட், யூரின் டெஸ்ட் என்று பல லேபுகளில் ஏறி இறங்குவதற்கு முன்னால், அந்தக் குழந்தைகளிடம் அன்புகாட்டுங்கள்; அதிகம் பேசுங்கள். அப்போது காரணம் தெரிந்துவிடும். அடிப்படைக் காரணத்தைக் களைந்தால் மட்டுமே நோய் குணமாகும்.
பாதிப்புக்குக் காரணம் மனம் சார்ந்தது என்றால், அவர்களுக்குக் கவுன்சலிங்தான் அதிகம் தேவைப்படும். கவுன்சலிங் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; பெற்றோருக்கும் சேர்த்துத்தான் என்பதை மறந்துவிடக்கூடாது. உடல் பாதிப்புகளைக் கண்டறிய ரத்த டெஸ்ட்டுகள், சிறுநீர் டெஸ்ட்டுகள், வயிற்று ஸ்கேன், முதுகு எக்ஸ்-ரே எடுக்க வேண்டும்.
சிகிச்சைக்குப் போவதற்கு முன்னால், குழந்தை பருகும் திரவ உணவின் அளவை சரி செய்யுங்கள். உடல் எடைக்கு ஏற்ப திரவ உணவு அமைய வேண்டும். குறிப்பாக, இரவில் தரப்படும் திரவ உணவு மிக முக்கியம். படுக்கப்போகும்போது காபி/டீ/சத்து பானம் அருந்தும் பழக்கத்தைக் கைவிட வேண்டும். 35 கிலோ எடையுள்ள ஒரு குழந்தைக்கு இரவு 7 மணிக்கு மேல் 60 மி.லி. தண்ணீர்தான் கொடுக்கவேண்டும்.
மனம் சார்ந்த பாதிப்பைக் குணப்படுத்த நல்ல மருந்துகளும் உள்ளன. அவற்றை மருத்துவரின் பரிந்துரைப்படி கொடுத்தால் பாதிப்பு சரியாகிவிடும். உடல் பாதிப்புதான் காரணம் என்றால், அந்தக் குழந்தைக்கு சர்ஜரி கூட தேவைப்படும். இந்தப் பிரச்சினை பெரியவர்களுக்கும் வருமா? வரும். எப்படி? அது அடுத்த வாரம்.
(இன்னும் பேசுவோம்…)
தடுக்கும் வழிகள்!
* குழந்தை உறங்குவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே திரவ உணவுகளைக் கொடுத்துவிடுங்கள்.
* சிறுநீர் கழித்துவிட்டுத் தூங்க வழக்கப்படுத்துங்கள்.
* செல்போனில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அலாரம் வைத்துக் குழந்தையை எழுப்பிச் சிறுநீர் கழிக்கச் செய்யுங்கள். அப்போது பெற்றோர் உடனிருக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைகள் அலாரத்தை அமர்த்திவிட்டுத் தூங்கிவிடும்.
* இதற்கென்றே ‘அலாரம் கருவி’ கிடைக்கிறது; பயன்படுத்தலாம்.
* குறட்டைக்குத் தீர்வு காண வேண்டும். உ-ம் அடினாய்டு சர்ஜரி.
* படுக்கையை நனைக்காத நாட்களில் குழந்தையைப் பாராட்டி, சிறு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்துங்கள்.
* இந்தக் குழந்தைகளுக்குத் தனிமை ஆகாது.
* அதிக கண்டிப்பு கூடாது. கோபப்படக்கூடாது. திட்டக்கூடாது.
* எவ்விதத்திலும் ஸ்ட்ரெஸ் இருக்கக்கூடாது.
* அன்பும் அரவணைப்பும்தான் முக்கியம்.
Average Rating