கலிங்கமாகன் பற்றிய முக்கிய கல்வெட்டு: அண்மையில் கண்டறியப்பட்ட தமிழர் வரலாறு!! (கட்டுரை)
திருகோணமலை மாவட்டத்தில் கொமரன்கடவெல (குமரன்கடவை) என்னும் இடத்திலுள்ள காட்டில் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் (யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) தலைமையில் ஓர் ஆய்வுக் குழுவினர் முக்கிய கல்வெட்டு ஒன்றை அண்மையில் கண்டு வெளிப்படுத்தியுள்ளனர்.
தொடக்கத்தில் உள்ள சில சம்ஸ்கிருத வரிகளைத் தவிர ஏனைய வரிகள் தமிழில் உள்ளன. பாறையில்எழுதப்பட்டுள்ள இக்கல்வெட்டின் பல சொற்கள் அழிந்துவிட்டன. கோவில் ஒன்றுக்குக்கொடுக்கப்பட்ட சில தானங்களைப் பதிவுசெய்வதே கல்வெட்டின் நோக்கம். இக் கோவிலின் அழிபாடுகள்அங்கு காணப்படுகின்றன.
தானங்களை வழங்கி, இக்கல்வெட்டைப் பொறிப்பித்தவன் பெயர் ஸ்ரீகுலோத்துங்க சோழகாலிங்கராயன் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இவன் ‘ஈழமண்டலமான மும்முடிசோழ மண்டலம் எறிந்து’ அதாவது, இலங்கையை கைப்பற்றி, கங்கராஜகாலிங்க விஜயவாகு தேவர் என்பவருடைய வீராபிஷேகத்தையும் செய்தான் என்ற செய்தியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இச்செய்திதான்இக்கல்வெட்டுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது.
கங்கராஜா
யார் இந்தக் கங்கராஜகாலிங்க விஜயவாகு தேவர்? நீண்ட காலமாக இந்தியாவின் பல பாகங்களில்கங்கவம்சத்தைச் சேர்ந்தோராகத் தம்மைக்கருதிய சிலர் கங்கராஜா என்ற பெயரைப்பெற்றிருந்தனர். வணிகம் வழியாக இந்தியச் செல்வாக்கு வெளியே பரவிய காலத்தில், தென்கிழக்காசியாவிலும் இப்பெயர் பரவியிருந்தது.
ஐந்தாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சம்பா என்ற வியட்நாமிய அரசில் ஆட்சி செலுத்திய முதலாம் பத்திரவர்மனுடைய மகன் ஒருவன் இப்பெயரைத் தரித்திருந்தான். இந்தியாவில் கங்கவம்சத்தினர் ஆட்சிசெய்த இடங்களில் பலர் இப்பெயரைத் தாங்கியிருந்தனர்.
எடுத்துக்காட்டாக, 12ஆம் நூற்றாண்டில் ஒரு ஹொய்சள (போசள) மன்னனுக்கும் பதினாறாம் நூற்றாண்டில் கர்நாடகத்து உம்மத்தூரு என்ற இடத்தின் நாயக்கச்சிற்றரசனுக்கும்இப்பெயர் இருந்தது. கங்க வம்சத்தைச் சேர்ந்தோராய் கிழக்கு இந்தியாவில் (இன்றைய ஒடிஷா மாநிலத்தில்) ஆட்சி புரிந்தோரைக் கீழைக்கங்கர் என்பர்.
பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பதின்மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொலன்னறுவை அரசியலில் முக்கியத்துவம் பெறும் பல இளவரசர்களும்இளவரசியரும் கலிங்கத்திலிருந்து வந்த கங்கவம்சத்தினர். கல்வெட்டுக்களில் சிலருடைய பெயருடன் வம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது (எடுத்துக்காட்டாக, நிஸ்ஸங்கமல்லனுடைய அரசியருள் ஒருவர் கங்க வம்ஸ கல்யாண மஹாதேவி எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்). ஆகவே கங்கராஜா என இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுபவர் கங்க வம்சத்தைச் சேர்ந்தவர் என்பது தெளிவு.
காலிங்க விஜயவாகு
பொலன்னறுவையில் இருந்து ஆட்சி நடத்திய காலிங்க மன்னர்கள் முன்பு இருந்த சிங்கள மன்னர்களைப்போல், ‘வாகு’ என முடியும் பெயர்களையும் பொதுவாகச் சூடியிருந்த்தனர். நிஸ்ஸங்கமல்லன், பராக்கிரமவாகு என்ற பெயரையும், அவனுக்குப் பின் ஆண்ட இருவர் வீரவாகு, விக்கிரமவாகு என்ற பெயர்களையும் பெற்றிருந்தனர். நிஸ்ஸங்கமல்லன் சகோதரனாகிய ஸாஹஸமல்லன் எனப்படும் மன்னன் காலிங்க விஜயவாகு எனக் கல்வெட்டு ஒன்றில் குறிபிடப்பட்டுள்ளான்.
கொமரன்கடவெலக் கல்வெட்டில் வரும் விஜயவாகு இவனா? இக்கல்வெட்டின் காலம் என்ன என்று தெரிந்தால் இவ்வினாவுக்கு விடை காண்பது இலகு. துரதிர்ஷ்டவசமாக கல்வெட்டின் ஆண்டைக் கூறும் தொடக்கப் பாகம் தெளிவற்றுக் காணப்படுகின்றது. எனினும் ஸாஹஸமல்லனுடைய கல்வெட்டின் சான்றினை வைத்து இப்பிரச்சினையைத் தீர்க்கலாம்.
இதன்படி, இங்கு ஆராயப்படும்கல்வெட்டின் விஜயவாகுஸாஹஸமல்லன் அல்லன் என்று கூறமுடியும். கல்வெட்டில் ஸாஹஸமல்லன் கூறுவது இதுவாகும்: நிஸ்ஸங்கமல்லனுக்குப் பின் பொலன்னறுவையில் ஆட்சி நடத்துவதற்கு அவனுடைய சகோதரன் (ஒரே தகப்பன், தாய் வேறு) ஸாஹஸமல்லனுக்கு (கலிங்கநாட்டு ஸிங்ஹபுரத்துக்கு) இரு சிங்கள அமைச்சர்கள் தூது அனுப்பினர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, அவன் இலங்கைக்குப் புறப்பட்டான். வரும்போது சோழநாட்டுத் துறை ஒன்றில் சிறிது காலம் தங்கி இலங்கைக்கு வந்து முடிசூட்டப்பெற்றான்.
தன்னை அழைத்து மன்னனாக்கியதற்காக அமைச்சர் இருவருக்கும் தானங்கள் வழங்கி, ஒருவனுக்கு முதல் அமைச்சர் பதவியையும் ஸாஹஸமல்லன் வழங்கினான். தனக்குச் சோழர் படையுதவி கிடைத்தது பற்றி எதுவுமே அவன் கல்வெட்டில் இல்லை. இதற்கு முற்றிலும் மாறாக, கொமரன்கடவெலக் கல்வெட்டில் வரும் காலிங்க விஜயவாகு முடிசூட்டப் பெற்ற சூழ்நிலை காணப்படுகின்றது.
அப்படியாயின் யார் இந்த விஜயவாகு? இவ்வினாவுக்கு விடைகாணச்சிங்கள இலக்கியச் சான்று உதவுகின்றது. பொலன்னறுவை அரசை 1215இல் கைப்பற்றிய கலிங்கமாகனுக்குக் காலிங்கவிஜயவாகு என்ற பெயரும் இருந்தது என்பது நிகாயஸங்க்ரஹய மற்றும் ஸத்தர்ம-ரத்னாகரய ஆகிய நூல்களில் இருந்து தெரியவந்த விஷயமாகும்.
அத்துடன், இலக்கிய மூலாதாரங்கள் அனைத்தும் தென்னிந்தியப் படைகளின் உதவியுடன் மாகன் வெற்றிபெற்றான் என்று கூறுகின்றன.
இங்கு ஆராயப்படும் கல்வெட்டில், காலிங்கவிஜயவாகு குலோத்துங்க சோழ காலிங்கராயன் தலைமையிலான படையின் உதவியுடன் அரசைக் கைப்பற்றி மன்னனாகிய செய்தி கூறப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு, இந்த காலிங்கவிஜயவாகு வேறு யாரும் அல்ல; கலிங்கமாகனே என அடையாளம் காணமுடிகின்றது.
காலிங்கராயன்
காலிங்கவிஜயவாகு ஆகிய கலிங்கமாகனின் படையெடுப்பில் மூன்றாம் குலோத்துங்க சோழன் (1178 – 1218) ஆகிய சமகாலச் சோழ மன்னனுக்கும் பங்கு உண்டு என்று தோன்றுகிறது. விஜயவாகுவுக்கு உதவிய படைத்தலைவன் ஒரு சோழத் தளபதி என்று கொள்ள இடமுண்டு. இவன் முழுப் பெயர் ‘குலோத்துங்க சோழகாலிங்கராயன். இப் பெயர், சோழமன்னர் தங்கள் படைத்தலைவர்கள், குறுநிலமன்னர், அதிகாரிகள் ஆகியோருக்கு பொதுவாக வழங்கிய விருதுப்பெயர்களை ஒத்துள்ளது.
எடுத்துக் காட்டாக, குலோத்துங்க சோழகாட வராயன், குலோத்துங்க சோழகச் சியராயன், குலோத்துங்க சோழவாணக் கோவரை யன், குலோத்துங்க சோழசாம்பு வராயன், குலோத்துங்க சோழதக டாதிராயன் போன்ற பெயர்களை ஒத்திருப்பது கவனிக்க த்தக்கது.
முதலாம் குலோத்துங்க சோழனு டைய தளபதிகளுள் மிகவும் வெற்றி ஈட்டிய ஒருவனாகிய நரலோக வீரனுக்கு காலிங்க ராயன் என்ற விருது வழங்கப்பட்டிருந்ததையும் கவனிக்கலாம். அத்துடன், மூன்றாம் குலோத்துங்கசோழன் இலங்கையைக் கைப்பற்றப் பல தடவை முயன்றிருந்தான் என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும். பொலன்னறுவை அரசு பொதுவாகச் சோழ அரசை எதிர்த்துப் பாண்டிய அரசுக்கு உதவிபுரிந்தது. இக்குலோத்துங்க சோழன் காலத்திலும் இந்த நிலைமை தொடர்ந்தது.
ஈழத்துப் படைகளை வெற்றி கொண்டதாகக் குலோத்துங்கன் தன் கல்வெட்டுக்களில் பல தடவை கூறுகின்றான். சோழருக்கு எதிராகப் பாண்டியருக்கு உதவிசெய்ய இலங்கை மன்னன் தென்னிந்தியாவுக்கு அனுப்பிய படையை 1187இல் வெற்றிகொண்டதாகக் கூறும் குலோத்துங்கன், அதன் பின்னர் இலங்கைக்குத் தன் படையை அனுப்பி வெற்றிகொண்டதாகக் கல்வெட்டுக்கள் வாயிலாகத் தெரிவிக்கின்றான்.
‘ஈழத்தாந் முடி வாழ வாழத்தாளிணை சூட்டி…மதிரையும் ஈழமுங் கொண்டு’ (திருமாணிக்குழிக் கல்வெட்டு) என்றெல்லாம் சோழமன்னன் தன் வெற்றியைப் புகழ்ந்து கூறுகின்றான். இலங்கையைத் தாக்குமாறு 1194இல் குலோத்துங்கன் தன் படைகளுக்கு ஆணை இட்டான் என்றும், பின்னர் 1199இல் மீண்டும் இலங்கைக்குப் படை அனுப்பப்பட்டது என்றும் அறிகின்றோம்.
இக் காலகட்டத்தில் இப்படிப்படையெடுப்புகள் நடந்தன என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அக்காலத்தில் எழுதப்பட்ட ‘ஸஸதாவத’ என்ற சிங்கள நூல் சோழநாட்டில் இருந்து மூன்று படையெடுப்புகள் நடந்தன என்று கூறுகின்றது. மினிபே மற்றும் போபிட்டிய ஆகிய இடங்களில் கிடைத்த சிங்களக் கல்வெட்டுகளிலும் சூளவம்ஸத்திலும் இப்படையெடுப்புகள் பற்றிய சான்று வெளிப்படுகின்றது.
குலோத்துங்கன் இறுதியாக இலங்கைக்குப்படையனுப்பியது பற்றி 1212இல் பொறித்த கல்வெட்டால் அறிகின்றோம். கலிங்கமாகனின் தாக்குதல் இதற்கு மூன்று ஆண்டுகளின் பின் நடைபெற்றது. இவற்றை எல்லாம் நோக்குமிடத்து காலிங்கராயன் என்பவன் சோழ மன்னனின் தளபதியாகப் படையுடன் வந்தவன் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்கமுடியாதது. மேலும் ஒரு முக்கிய விஷயத்தை இம்முடிவுக்குச் சார்பாகக் கூறவேண்டும்.
இலங்கையைக் கைப்பற்றியது தன்னுடைய சாதனையாகக் காலிங்கராயன் கூறுகின்றான். அதுமட்டுமல்லாது, விஜயவாகுவுக்குமுடிசூட்டியதும் தன்னுடைய சாதனையாகக் கூறுகின்றான்.
இதைச்செய்வதற்கு அவனுக்கு எப்படி அதிகாரம் கிடைத்தது? பொதுவாக, நம்பப்படுவதுபோல், விஜயவாகு தென்னிந்தியாவுக்குச் சென்று படைதிரட்டி வந்து, பொலன்னறுவையைக் கைப்பற்றியிருந்தால், அவன் திரட்டிய படையின் தளபதிக்கு முடிசூட்டும் அதிகாரம் இருந்திருக்காது.
காலிங்கராயன் என்ற தளபதி சோழமன்னன் ஆணைப்படி இலங்கையைக் கைப்பற்றி, விஜயவாகுவுக்கு உதவிசெய்ய வந்த காரணத்தினாலேதான், வெற்றிக்குப் பின்னர் விஜயவாகுவுக்கு முடிசூட்டும் அதிகாரத்தை பெற்றிருந்தான் என்று வாதிக்க முடியும்.
யாழ்ப்பாண இராச்சியத்தின் தொடக்கம்
பொலன்னறுவையில் ஆட்சிசெய்த கலிங்க இளவரசர்களும் இளவரசியரும் காலிங்கச் சக்கரவர்த்தி பரம்பரையைச் சேர்ந்தோர் என அவர்களுடைய கல்வெட்டுகள் தகவல் தருகின்றன. எடுத்துக்காட்டாக, நிஸ்ஸங்கமல்லன் தன் பெயரைக் கல்வெட்டுக்களில் நிஸ்ஸங்கமல்ல ‘காலிங்கச் சக்கரவர்த்தி’ என்று பொறித்துள்ளான்.
பொலன்னறுவையில் ஆட்சிசெய்த பிற கலிங்கர்களைப் போலவே கலிங்கமாகனாகிய விஜயவாகுவும் இதே பரம்பரையைச் சேர்ந்தவன் என்று கொள்ளலாம். இதனால், இவன் பெயர் விஜயவாகு காலிங்கச் சக்கரவர்த்தி என்றும் வழங்கியிருக்கும்.
பதிமூன்றாம் நூற்றாண்டு இலங்கையின் வரலாற்றைத் திசை திருப்பிய இரு பெரும் நிகழ்ச்சிகள் நடைபெற்ற காலம். இவற்றின் முக்கியத்துவத்தை உணர்வதற்கு இக்கூற்றினை இன்னொரு விதமாக அமைத்துக் கூறலாம். அதாவது, இந்த இரு நிகழ்ச்சிகளும் நடைபெற்றிருக்காவிட்டால் இலங்கையின் வரலாறு முற்றிலும் வேறாகச் சென்றிருக்கும்.
இந்த நிகழ்ச்சிகள் எவை? ஒன்று, பொலன்னறுவையின் வீழ்ச்சி. மற்றையது, வடக்கில் யாழ்ப்பாண இராச்சியத்தின் எழுச்சி. இவை இரண்டிலும் கலிங்கமாகனுக்குப் பங்கு உண்டு.
மாகனுக்கு இருந்த எதிர்ப்பின் விளைவாக அவன் நீண்ட காலம் பொலன்னறுவையில் ஆட்சி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவன் வடக்கு நோக்கி நகர்ந்து, இறுதியில் தூரவடக்கில் தன் ஆட்சி பீடத்தை நிறுவினான். இவன் தொடக்கிவைத்த அரசு, பின்னர் யாழ்ப்பாண இராச்சியம் எனப் பெயர் பெறுகின்றது. இதன் தோற்றம் பற்றிய தெளிவான விவரங்கள் கிடைக்காத காரணத்தால், இதை மட்டுமே ஊகிக்க முடிகின்றது.
கங்க வம்சக் குறியீடுகள்
வடக்கில் ஓர் இராச்சியத்தை அமைத்த கலிங்கமாகனுடைய வரலாற்று எச்சங்கள் எதுவும் உண்டா? உண்டு. முதலாவதாக, அவன் பெயர் மறக்கப்படவில்லை. விஜய(வாகு) காலிங்கச் சக்கரவர்த்தி என்ற அவன் பெயர் விசய கூழங்கைச் சக்கரவர்த்தி ஆகி, யாழ்ப்பாண வரலாற்று மரபில் மறைந்து இருக்கிறது. இதனை இற்றைக்கு ஏறத்தாழ நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சுவாமி ஞானப்பிரகாசர் எடுத்து விளக்கியுள்ளார். ஏட்டுப் பிரதியின் எழுத்தில் காலிங்கச் சக்கரவர்த்தி என்பது கூளங்கச் சக்கரவர்த்தி ஆகி, பின்னர் கூழங்கைச் சக்கரவர்த்தி ஆகியது என்பது அவர் விளக்கம்.
கங்கராஜா எனத் தன் கங்க வம்ச உறவினைப் பிரகடனப்படுத்திய காலிங்க விஜயவாகு வடக்கில் ஆட்சி செலுத்திய போது கங்க வம்சக் குறியீடுகள் சிலவற்றை அங்கு புகுத்தியிருந்தான். சிறப்பாக, கங்க வம்சத்தினர் பயன்படுத்திய நந்தியும் பிறையும் (இடபலாஞ்சனை) யாழ்ப்பாண அரசின் சின்னமாகியது. கீழைக் கங்கர்கள் செப்பேடுகளின் முத்திரையில் இதனைப் பயன்படுத்தினர்.
யாழ்ப்பாண அரசர்கள் தங்கள் நாணயங்களிலும் கொடியிலும் இச்சின்னத்தைப் பயன்படுத்தினர். வடக்கில் அமைக்கப்பட்ட புதிய ஆட்சிபீடம் சிங்கைநகர் எனப்பட்டது. இது கங்க வம்சத்தினருடைய ஸிங்ஹபுரத்தை மனதில் வைத்து இடப்பட்டபெயராக (ஸிங்ஹநகர்) கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தில் ஆட்சி நடத்திய மன்னர் கங்க வம்சத்தவர் என்பது மக்கள் மத்தியில் பதிந்திருந்தது என்பதற்கு அங்கு எழுதப்பட்ட தமிழ் நூல்களில் சான்று உண்டு. இவற்றில் சில சந்தர்ப்பங்களில் யாழ்ப்பாணத்து மன்னர் கங்கை ஆரியர், கங்கநாடன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளனர். மன்னனுக்கு உதவிய சில உயர் குலத்தவர் கங்கா குலத்தவராகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இவ்வாறாக, கங்க ராஜகாலிங்க விஜயவாகு பற்றியும் குலோத்துங்க சோழ காலிங்கராயன் பற்றியும் தகவல் தரும் கொமரன்கடவெலக் கல்வெட்டு வரலாற்று முக்கியத்துவம் உள்ள ஒரு கல்வெட்டாகக் காணப்படுகின்றது.
Average Rating