தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவைதானா ?! (மருத்துவம்)

Read Time:7 Minute, 58 Second

சர்வதேச நோய்த்தடுப்பு தினம் நவம்பர் 10

ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 10-ஆம் தேதி சர்வதேச நோய் தடுப்பு தினமாக(World Immunization Day) கடைபிடிக்கப்படுகிறது. தடுப்பு மருந்தால் தடுக்கப்படக் கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பு மருந்து அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவே இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

நோய்த் தடுப்பு மருந்து என்பது…

நோய்த் தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் ஒருவருக்கு தொற்று நோய்த் தடுப்பை அல்லது எதிர்ப்பை உருவாக்குவதற்கு நோய்த்தடுப்பு என்று பெயர். உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி உயிருக்கு ஆபத்தான நோய்களைத் தடுப்பதற்கும் ஒழிப்பதற்கும் நோய்த்தடுப்பு முறை நிரூபிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் இதன் மூலம் 20 லட்சம் முதல் 30 லட்சம் வரையிலான மரணங்கள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால், 1 கோடியே 87 லட்சம் குழந்தைகளுக்கு அடிப்படையான தடுப்பு மருந்துகள் அளிக்கப்படுவதில்லை என்றும் அந்த புள்ளி விவரத்தில் கணக்கிடப்பட்டுள்ளது.

நோய் தடுப்பு மருந்தானது ஒரு வகை உயிரியல் தயாரிப்பாக உள்ளது. இந்த மருந்து ஒருவருக்கு ஏற்பட்டிருக்கும் குறிப்பிட்ட நோய்க்கு எதிரான உடலின் நோய்த் தடுப்பாற்றலை வலுப்படுத்தி, அவரை நோயிலிருந்தும், தொற்றிலிருந்தும் பாதுகாக்கிறது.

நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் போன்றதொரு பொருள் தடுப்பு மருந்தில் உள்ளது. பெரும்பாலும் இப்பொருள் பலவீனமடைந்த அல்லது இறந்த நுண்ணுயிரில் இருந்தோ அல்லது அதற்கெதிரான நச்சில் இருந்தோ அல்லது அதனுடைய ஒரு மேற்பரப்புப் புரதத்தில் இருந்தோ உருவாக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு தடுப்பு மருந்து கொடுப்பதின் அவசியம்குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழியாக சிறிது நோய் தடுப்பாற்றல் கிடைக்கிறது. குழந்தையின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைந்து, பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களின் நோய்த் தடுப்பாற்றலை அதிகரிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

உங்கள் குழந்தைக்கு ஓரிரு வேளை தடுப்பு மருந்தை அளிக்கத் தவறி இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பு மருந்து அட்டவணையைப் பின்பற்றி அதை கொடுக்கலாம். இதன் மூலம் உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஒரு குழந்தையைப் பாதுகாப்பதோடு, பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கலாம்.

நோய் தடுப்பு திட்டம்

உலகளவிலான நோய்த்தடுப்பு திட்டம் 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தாலும் 65 சதவிகித குழந்தைகளுக்கே முதல் ஆண்டுக்குள் தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் நோய்த்தடுப்பினை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்திய அரசு டிசம்பர் 2014-ல் இந்திர தனுஷ் திட்டத்தைத் தொடங்கி உள்ளது.

2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் அனைத்து தடுப்பு மருந்துகளையும் அளிப்பதே இதன் முக்கிய நோக்கம். இத்திட்டத்தின் கீழ் அனைத்துத் தடுப்பு மருந்துகளும் அரசு சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவைதானா?

தடுப்பு மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவையே. ஒரு சிலருக்கே வீக்கம், சிவப்பாதல், சிறு காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். இந்த பிரச்னைகள் இரண்டொரு நாட்களுக்கு நீடிக்கும். மருத்துவரின் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளால் இந்த பக்கவிளைவுகளை சரிசெய்யலாம். நோய் உருவாகும் முன்னரே தடுப்பு மருந்து அதற்கு எதிரான தடுப்புக் கவசத்தை அளிக்கிறது. நோய் வந்த பின் தடுப்பு மருந்து எடுப்பது தாமதமான ஒன்று. எனவே வரும்முன் காப்பதே நலம்.

தடுப்பு மருந்து கொடுப்பதில் சில நிபந்தனைகள்

அதிக காய்ச்சல் உடைய குழந்தை, வேறு ஒரு தடுப்பு மருந்தால் மோசமான பக்க விளைவு ஏற்பட்ட நபர், முட்டை சாப்பிட்ட பின் கடுமையான பாதிப்பு ஏற்பட்ட நபர், ஏற்கெனவே வலிப்பு உண்டான நபர், புற்றுநோய் அல்லது நோய்த் தடுப்பு மண்டலத்தைப் பாதிக்கும் எய்ட்ஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நபர் போன்றவர்களுக்கு தடுப்பு மருந்து உடனடியாக கொடுப்பதில்லை. மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவர் பரிந்துரைப்படி சிறிது தாமதப்படுத்தி தடுப்பு மருந்தை கொடுக்கலாம்.

நோயாளிகளின் கவனத்துக்கு…

* ஒரே ஊசி, ஒரே சிரிஞ்ச், ஒரே வேளை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். பயன்படுத்தப்பட்ட ஊசியையும் சிரிஞ்சையும் களைந்து விட வேண்டும். ஊசியை மட்டும் மாற்றிவிட்டு ஒரே சிரிஞ்சை பலமுறை பயன்படுத்துவது பாதுகாப்பற்றது. இதனால் நோய் பரவும் ஆபத்திருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

* பாதுகாப்பற்ற முறையில் ஊசி மருந்துகளை எடுப்பது தங்கள் உடல்நலத்துக்கு ஆபத்தானது என்பதை நோயாளிகள் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் அல்லது ஊசிமருந்து ஏற்றும் நபர்கள் போன்ற சுகாதாரப் பராமரிப்பு வழங்குபவர்கள் நோயாளிகளுக்கு ஊசி போடும்போது அது குறித்து நோயாளிகளுக்கு எச்சரிக்கை அளிக்க வேண்டும்.

* எந்த ஒரு தடுப்பு மருந்து எடுக்கும்போதும் மருத்துவரைக் கலந்தாலோசித்து அவருடைய ஆலோசனைப்படியே தடுப்பு மருந்து அட்டவணை பின்பற்றப்பட வேண்டும். இந்த அட்டவணையில் பதிவு செய்து வைப்பதோடு, ஒவ்வொரு முறையும் தடுப்பு மருந்து எடுக்கும் போதும் அதை உடன் எடுத்துச் செல்லவும் வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜனவரி 28 போலியோ சொட்டு மருந்து தினம் ! (மருத்துவம்)
Next post ஒரே ஒரு தடுப்பூசி போதும்! (மருத்துவம்)