குழந்தைகளுக்கு கார்ட்டூன்கள் ஏன் பிடிக்கிறது!! (மருத்துவம்)
‘‘குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோருக்கு உறுதுணையாக இருப்பவை காட்சி ஊடகமான கார்ட்டூன் சேனல்கள். நாணயத்துக்கு இரண்டு பக்கம் போல, இவற்றிலும் நன்மை, தீமை இரண்டும் கலந்துள்ளன. குழந்தைகளின் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல், அவர்களின் எதிர்கால நலனைக் கவனத்தில் கொண்டால், கார்ட்டூனால் உண்டாகும் மகிழ்ச்சி நீடிக்கும்’’ என்கிறார் குழந்தைகள் மனநல மருத்துவர் ஜெயந்தினி.
குழந்தைகள் கார்ட்டூன் சேனலை விரும்பி பார்த்து மகிழ்ச்சி அடைவதற்கு என்ன காரணம்?
‘‘பொதுவாகவே, மழலைப்பருவத்தினருக்கு கதைகள் கேட்பது மிகவும் பிடிக்கும். 30, 40 வருடங்களுக்கு முன்னால் இப்போது உள்ளது போல நிறைய டி.வி.சேனல்களோ சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பார்க்கும் கார்ட்டூன் சேனல்களோ எதுவும் கிடையாது.
அப்போது இருந்த ஒரே பொழுதுபோக்கு சாதனம் கதைதான். வீட்டில் இருந்த பெரியவர்களும் அதற்கேற்ற வகையில் கதைகள் சொல்வார்கள். பல சமயங்களில் கடவுள், விலங்குகள், கோமாளி, அரக்கர்கள் மாதிரி நடித்தும், விதவிதமான ஓசைகள் எழுப்பியும் குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்தனர். அதன் தொடர்ச்சியாகவே, இன்றைய கார்ட்டூன் சேனல்கள் இருக்கின்றன.
இவற்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் கண்கவர் வண்ணங்கள், சுட்டி எலி, முட்டாள் பூனை, பிரம்மாண்ட யானை, தங்கள் மனதுக்குப் பிடித்த ஹீரோக்கள் சூப்பர் மேன், பேட்மேன் என சுவாரஸ்யமாகவும், விதவிதமாகவும் உலா வருவதால் குழந்தைகள் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை விரும்புவதும், அவற்றைப் பார்த்து சந்தோஷமாக இருப்பதும் நாளுக்குநாள் அதிகரிக்கிறது.’’
கார்ட்டூன் சேனல்களைக் குழந்தைகள் பார்ப்பதற்கு எதுவும் வரையறை உண்டா?
‘‘இன்று வீட்டில் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்கள் யாரும் கிடையாது. பெற்றோர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். எனவே, குழந்தைகளின் தனிமையைப் போக்க கார்ட்டூன் சேனல்களைப் பார்க்க தாராளமாக அனுமதிக்கலாம். அதேநேரத்தில் வன்முறை சம்பவங்கள், திகிலூட்டும் அதிரடி காட்சிகள், தவறாக வழிநடத்தி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் மற்றும் தேவையற்ற தீய பழக்கவழக்கங்களைச் சிறுவர், சிறுமியரிடையே ஏற்படுத்தும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கக் கூடாது. பெற்றோருக்கு இந்தத் தெளிவு வேண்டும்.
குழந்தைகள் பார்த்து ரசிக்கும் கார்ட்டூன்கள் என்ன வகையாக இருக்கிறது என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். அவர்களுடன் அமர்ந்தும் ரசிக்கலாம். இதன்மூலம் குழந்தைகளின் மகிழ்வும் கூடுதலாகும். குழந்தைகள் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கவும் இது உதவியாக இருக்கும். சராசரியாக, ஒரு நாளில் 45 நிமிடங்கள் கார்ட்டூன்கள் பார்க்க அனுமதிக்கலாம். நேரம் காலம் அறியாமல், மணிக்கணக்காக கார்ட்டூன்கள் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.’’
45 நிமிடங்கள் என்பது அனைத்து வயது குழந்தைகளுக்கும் பொருந்துமா?
‘‘நேர வரையறை குழந்தைகளின் வயதைப் பொறுத்து சற்று மாறும். 3 வயது வரை உள்ள குழந்தைகள் கார்ட்டூன் பார்க்காமல் இருப்பது சிறந்தது. 3 முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளை 20 நிமிடங்களும், 5-லிருந்து 8 வயது வரையுள்ள குழந்தைகளை 30 நிமிடங்கள் முதல் 40 நிமிடங்கள் வரையும், 8 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியரை 45 நிமிடங்கள் வரையிலும் அனுமதிக்கலாம்.
அதேபோல், இரவு நேரத்தில் தூங்கப் போகும் வரை கார்ட்டூன் பார்க்கவும் விடக்கூடாது. ஏனென்றால், கார்ட்டூன்களின் எதிரொலியாக உறக்கத்தில் கனவு ஏற்பட்டு அலறலாம். பயப்படலாம். தூக்கம் கெடவும் வாய்ப்பு உண்டு.’’‘குழந்தைகளை மகிழ்வித்தல்’ என்பதைக் கடந்து, கார்ட்டூன் சேனல்களால் பயன்கள் உண்டா?
‘‘கார்ட்டூன்கள் நிச்சயமாக குழந்தைகளிடம் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவை. அதனால், நல்லது, கெட்டது என இரண்டுமே இதில் உள்ளது. நேர்மறையான சூப்பர் மேன் கதாபாத்திரங்களைப் பார்க்கும்போது பிறருக்கு உதவ வேண்டும், ஆபத்தில் உள்ளவரைக் காப்பாற்ற முயற்சி செய்ய வேண்டும், சாகசங்கள் நிகழ்த்த முற்பட வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகள் மனதில் தோன்றும்.
சூன்யக்காரி, மந்திரவாதி போன்ற எதிர்மறை கதாபாத்திரங்களால் பாதிக்கப்பட்டால் மற்றவர்களைத் துன்புறுத்தவும் செய்வார்கள். அதனால்தான் குழந்தைகள் பார்க்கும் கார்ட்டூன்கள் விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்று சொன்னேன். கார்ட்டூன்களில் நடப்பவையெல்லாம்
நிஜமல்ல; நிஜ வாழ்க்கை வேறு. அவற்றில் இருந்து நல்ல விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்குப் புரியவைத்தால் கார்ட்டூனால் குழந்தைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சி ஆரோக்கியமாகவும் மாறும்!’’
Average Rating