குழந்தைகளின் மனப்பதற்றம்!! (மருத்துவம்)
‘‘பதற்றம் என்பது பெரியவர்களை மட்டுமே பாதிக்கக் கூடிய பிரச்னை அல்ல. குழந்தைகளும் தற்போது மிக அதிகமாக மனப்பதற்றத்துக்கு ஆளாகிறார்கள். இதற்கு பெற்றோரும், ஆசிரியர்களுமே மறைமுகமான காரணமாக இருக்கிறார்கள். அது தெரிந்தோ அல்லது அவர்களுக்கே தெரியாமலோ…’’ என்கிறார் உளவியல் மருத்துவரான லீனா ஜஸ்டின். குழந்தைகளின் மனப்பதற்றத்தை ஏன் உடனடியாக கவனிக்க வேண்டும் என்பதற்கும், அதனைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்குமான ஆலோசனைகளை இங்கே முன் வைக்கிறார்.
முன்பெல்லாம் குழந்தைகளை, குழந்தைகளாகவே வளரவிட்டார்கள். ஆனால், இப்போது அப்படியா? அவர்களை என்ஜினியராக்கப் போகிறேன், டாக்டராக்கப் போகிறேன் என்ற பெருமையோடு பெற்றோர் அவர்களிடம் விலையாகக் கேட்பது குழந்தைகளின் குழந்தைமையை! ஒரு குழந்தை தன்னுடைய இயல்பை விட்டுவிட்டு படித்துக் கொண்டே இருக்க வேண்டும்;
சதா போட்டியிட்டு ஜெயித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற சிக்கலான நிலைமை இன்று. உணவு உண்பதிலும் கூட எதிர்வீட்டு குழந்தையோடு ஒப்பிடப்பட்டுக் கொண்டே இருக்கும் அந்த குழந்தை. இதுபோல் குழந்தைத்தனம் கருகிப்போகும்போது மனப்பதற்றம் இயல்பாகவே வந்துவிடுகிறது. இவையெல்லாம் இன்றைய போட்டி மிகுந்த உலகத்தில் கட்டாயமில்லையா என்று கேட்கலாம். நம் பிள்ளைகள் படிப்பதற்காகவும் ஜெயிப்பதற்காகவும் மட்டுமே பிறக்கவில்லை.
உலகின் அத்தனை மகிழ்ச்சிகளையும் அனுபவிக்கப் பிறந்தவர்கள் அவர்கள். அதற்கான உரிமைகள் உண்டு. எத்தனை பெற்றோர் தம் குழந்தைகளின் அறிவுத் திறனறிந்து அதற்கேற்ற கல்வித் திட்டத்தில் சேர்க்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள். சமச்சீர் கல்வியில் படிக்கவே சிரமப்படும் குழந்தையை, CBSE அல்லது ICSE படித்தால்தான் எதிர்காலத்தில் சிறந்து விளங்க முடியும் என்று தாங்களாகவே முடிவெடுத்து, அந்தக் குழந்தையையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவது எத்தனை பெரிய பிழை?
முயலாமலிருப்பது தவறுதான். ஆனால், பெரும்பான்மையான குழந்தைகள் தம் இயலாமையோடு போராடிக் கொண்டிருப்பதை கண்டிப்பாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் கவனிக்க வேண்டும்.தனக்கு கடினமாக இருக்கும் பாடங்களை படிப்பதில் அவர்கள் படும் சிரமங்களையும், அதை எதிர்கொள்ள இயலாமலும், தன்னுடைய பயத்தை பகிர்ந்து கொள்ள முடியாமலும் அந்தக்குழந்தை எதிர்கொள்ளும் அன்றாட சவால்களை பெரியவர்களான நாம் சரியாக கவனிப்பதில்லை.
பிடிக்காத செயலை, அது குழந்தையின் எதிர்காலத்துக்கு நன்மை தருவதாக இருந்தாலும் செய்யச் சொல்லி வற்புறுத்தும்போது குழந்தைகள் வாடித்தான் போகிறார்கள். கொஞ்சமும் இளைப்பாற நேரமின்றி, பள்ளி முடிந்ததும், மியூசிக், டான்ஸ், ட்ராயிங் என ஏதோ ஒரு பயிற்சி வகுப்பு, பின்னர் டியூஷன் என்று ஓடிக்கொண்டே இருப்பதால், பிள்ளைகள் விளையாட ஏங்குவதை யாரும் புரிந்து கொள்வதில்லை.
மனம் களைப்படையாமல் இருக்க, வீடியோ கேம் விளையாண்டு தனிமையை மறக்க முயற்சிப்பதால் ஏற்படும் விளைவு, மனப்பதற்றம். தன்னால் படிக்க முடியாது, எதிலும் சிறப்பாக செயல்பட முடியாது என்ற விரக்தியில் அடுக்கடுக்கான எதிர்மறை எண்ணங்கள் அவனை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் அதீத எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது.
இவர்களில் பெரும்பாலும் பதின்பருவத்துக்கு முந்தைய நிலையில் உள்ள குழந்தைகள் அதிக மனப்பதற்றத்துக்கு உள்ளாகிறார்கள். 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்தான் தம்மை சுயமதிப்பீடு செய்ய அறிந்த நிலையில் இருப்பார்கள். தமக்கென்று ஒரு நண்பர் கூட்டம் சேர்த்து கொள்வதும் அதில் தன் நிலையை ஒப்பிட்டுக் கொள்வதும் இந்த பருவத்தில்தான் வேகமெடுக்கிறது.
கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.
இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?
* உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறதா?
* ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறதா?
* தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்வதோ நடக்கிறதா?
* உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறதா?
* பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறதா?
* சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனபதற்றத்துடன் காணப்படுகிறதா?,
* உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறதா?
மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.பெற்றோர் செய்ய வேண்டியவைகல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.
அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து காத தூரம் பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். காரணம்… இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவன் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
சிகிச்சைகள்…
நோயின் தீவிரத்தைப் பொறுத்து கவுன்சிலிங் செய்யப்படும். Cognitive behavioral therapy என்னும் எண்ணங்களை சரிபடுத்தும் சிகிச்சை மற்றும் Sensory Enrichment Therapy போன்ற சிகிச்சைமுறைகள் குழந்தையை முழுவதுமாக மனப்பதற்றத்திலிருந்து மீட்டெடுக்கும்!
Average Rating