குழந்தைகள் மரம் செடி கொடிகளோடு மனம்விட்டுப் பேசட்டும்..!! (மருத்துவம்)

Read Time:9 Minute, 3 Second

குழந்தைகள் இன்பமாக வளர என்ன செய்ய வேண்டும்?

அவர்களை இயற்கையோடு இணைக்கவேண்டும். இயற்கையோடு குழந்தைகள் இணைந்தால் அவர்களிடம் அமைதியும், அன்பும் தவழும். இந்த உலகமும் செழிப்புமிக்கதாக மாறும். பூமி செழித்தால்தான் மனித வாழ்க்கை செழிக்கும். பூமி செழிக்கவேண்டும் என்றால், இயற்கையை குழந்தைகள் நேசிக்கும் அளவுக்கு அவர்களை பழக்கவேண்டும். குழந்தைகள் இயற்கையை நேசித்தால் அது அவர்களது வாழ்க்கையை சுவாரசியமாக்கும்… சுகமாக்கும்..! அவர்கள் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாகவும் வளர்வார்கள். இயற்கையை நேசிக்கும் குழந்தைகளிடம் சுத்தம், சுகாதாரம், தூய்மை போன்ற நல்ல பழக்கங்கள் உருவாகும். இதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் தோன்றும். இயற்கையை நேசிக்கும் குழந்தைகளிடம் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றலும் உருவாகிறது. அது அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு சிறப்பாக கைகொடுக்கும். டி.வி.யில் ஒளிபரப்பாகும் சோப்பு விளம்பரம் ஒன்றில் நாலைந்து குழந்தைகள் ஒருங்கிணைந்து இன்னொருவர் வீட்டை சுத்தப் படுத்துவார்கள். அதனை மற்ற குழந்தைகள் டி.வி.யில் பார்க்கும்போது அவர்களது சிந்தனை வளப்படும். சுத்தம், சுகாதாரம், ஒருங்கிணைந்து பணியாற்றுதல், அடுத்தவர்களுக்கு உதவுதல் போன்றவைகளின் சிறப்புகளை அதன் மூலம் உணர்வார்கள்.

அதுபோல் இயற்கையை மேம்படுத்தவும் அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும். ஒரு செடியை நட்டு வளர்க்கக்கூட குழந்தைகளில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒருங்கிணைய வேண்டியதிருக்கும். அதனால்தான் இப்போது சில பள்ளிகளில் குழந்தைகளை குழுகுழுவாக பிரித்து, அவர்களுக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்கிக்கொடுத்து, ஒருங்கிணைந்து செடி, கொடிகளை வளர்க்கத் தூண்டுகிறார்கள். இந்த பூமி நாம் வாழும் இடம். எதிர்காலத்தில் நமது சந்ததிகளும் வாழவேண்டிய இடம். இதனை காப்பாற்ற வேண்டியது நமது பொறுப்பு. ஆனால் அதை உணர்ந்து கொள்ளாதவர்களாகத்தான் நம்மில் பலரும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்போது நிறைய பேர் ‘யூஸ் அன்ட் த்ரோ’ பொருட்களை பயன் படுத்திக்கொண்டிருக்கிறோம். ஒருமுறை பயன்படுத்திவிட்டு, அப்படியே தூக்கி வீசிவிடுகிறோம். அதன் மூலம் இந்த பூமி எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா! யூஸ் அன்ட் த்ரோ பொருட்கள் அதிகம் உருவாகாத பழைய காலத்தில் மனிதர்கள் இயற்கை சூழல் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். அவர்களை சுற்றி மரம், செடி, கொடிகள், மலைகள், குளங்கள், ஏரிகள் இருந்தன. இன்று நாமே அவைகளை புறக்கணித்து அழித்துக் கொண்டிருக்கிறோம். மரம், செடி, கொடிகளை ஏதோ கண்காட்சியில் வைப்பது போல் நாம் வீட்டில் சிறு தொட்டிகளில் வைத்து பராமரிக்கிறோம். அதனால் தாவர இனங்கள் மட்டுமல்ல, பறவை இனங்களும் அழிந்துவிட்டன.

நம்மை வாழவைப்பது பசுமையான இயற்கைதான். ஆனால் நாம் இயற்கையை வாழ விடுவதில்லை. அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பற்றியும் சிந்திப்பதில்லை. சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வதின் மேன்மையை அவர்களுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். நம்மை சுற்றியிருக்கும் தாவரங்கள் நம் நண்பர்கள். அவைகளை நாம் நேசிக்க வேண்டும். வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதுபோல் சுற்றுப்புற தூய்மையையும் பாதுகாக்கவேண்டும். வீட்டிலுள்ள குப்பைகளை பொறுக்கி சுத்தப்படுத்தவும், பொருட்களை துடைத்து தூய்மைபடுத்தவும் கற்றுத்தர வேண்டும். வீட்டு சுத்தம் குடும்ப நலனைக்காக்கும். சுற்றுப்புற சுத்தம் நாட்டைக்காக்கும் என்று எடுத்துச் சொல்லுங்கள். பூமியின் நீர் வளங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தண்ணீரை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்று அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். வளர்ந்த பிள்ளைகளுக்கு சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொடுத்து பள்ளிக்கு செல்லவும், கடைக்கு பொருட்கள் வாங்கச் செல்லவும் பழக்கப் படுத்திட வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் புத்துணர்ச்சி பெறுவார்கள்.

அன்றாடம் உண்ணும் உணவில் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இதனால் ஏற்படும் பயன்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லவேண்டும். தனி மனிதனுக்கு இயற்கை எவ்வளவு அரிய கொடைகளை வழங்குகிறது என்பதை குழந்தைகள் உணரும்படி செய்யவேண்டும். குழந்தை பருவத்திலிருந்தே அவர்கள் இயற்கையை நேசிக்க கற்றுக் கொண்டால், அதை பாதுகாக்கும் திறன் தானே வந்து விடும். அதுவே அவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிவிடும். இந்த உலகில் நம்மைத் தவிர மற்றவர்களும் வாழ்கிறார்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். மற்ற உயிர்களை அழிக்கவோ, புகலிடங்களை சிதைக்கவோ நமக்கு எந்த உரிமையுமில்லை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும். நாளைய தலைமுறை நலமுடன் இருக்க, இன்று நாம் செய்யும் தவறுகளை நமது குழந்தைகள் செய்யாமல் இருக்கவேண்டும். அதுவே நாம் இந்த பூமிக்கு செய்யும் பெரிய நன்றிக்கடனாக இருக்கும். மண் வளம் காக்கவும், உயிர்களை நேசிக்கவும், பயிர் பச்சைகளை வளர்க்கவும் உங்கள் குழந்தைகள் கற்று, இயற்கையோடு இணைந்து வாழட்டும்!

அந்த வாழ்க்கை இனிமையாக அமையட்டும்! வீடுகளில் நமது குழந்தைகளுக்காக எத்தனையோ செல்வங்களை சேர்த்துவைத்தாலும், அத்தனையிலும் சிறந்தது இயற்கை செல்வம். குழந்தை களுக்கு அடிப்படை தேவையான அதனை அழித்துவிட்டு, பணத்தை சேர்த்துவைத்து எந்த பலனும் இல்லை. அதனால் மரம், செடி, கொடிகளை வளர்ப்பதில் முதலில் பெற்றோர் ஈடுபடவேண்டும். குழந்தை களையும் அதில் ஊக்கப்படுத்தவேண்டும். மரக் கன்றுகளை நடவும், செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றவும் பழக்குங்கள். நாளுக்கு நாள் அது வளர்ந்து பூப்பூத்து குலுங்குவதைப் பார்த்து அவர்களுக்கு உண்டாகும் ஆனந்தத்தை அனுபவிக்கச் செய்யுங்கள். இயற்கையை பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்துங்கள். தோட்டத்தில் சுற்றித் திரியும் வண்ணத்துப் பூச்சிகளை கையில் பிடித்து விளையாட நினைக்கும் குழந்தைகளுக்கு வண்ணத்துப் பூச்சியின் சிறப்பை எடுத்துக் கூறி அவைகளை பாதுகாக்க சொல்லிக் கொடுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குழந்தைகளுக்கு கழிப்பறை பயிற்சியை எப்போது தொடங்கலாம்? (மருத்துவம்)
Next post கூடையில் பூக்கள்…சூப்பர் பிசினஸ்!! (மகளிர் பக்கம்)