ஜெய் பீம் !! (மகளிர் பக்கம்)
நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது நடந்த உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம். பாவப்பட்ட மக்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்படிக் கொடுமைப்படுத்துகிறார்கள் என்பதை முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறது. எலி பிடிப்பது, பாம்பு பிடிப்பது, விஷமுறிவு மருத்துவம் ஆகியவற்றை வாழ்வாதாரமாகக் கொண்ட இருளர்களின் வாழ்வியலை அருகே இருந்து பார்ப்பதுபோன்ற மனநிலையை படம் நமக்கு கடத்துகிறது.
முதல் காட்சியிலே சிறையிலிருந்து சிலர் வெளியே வர, சிறை வாசலில் நிற்கும் காவலர் ஒவ்வொருவரின் சாதி குறித்துக் கேட்கிறார். அதில் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களை ஓரமாக நிற்கச் சொல்லிவிட்டு மற்ற சாதிக்காரர்களை செல்லுமாறு அவர் சொல்ல, நிலுவையில் இருக்கும் வழக்குகளில் இவர்களை சேர்க்க போலீசார் வாகனங்களுடன் அங்கே காத்திருக்கிறார்கள். மலைக் கிராமம் ஒன்றில் வசிக்கும் ராஜாக்கண்ணுவும் அவரது மனைவி செங்கேணியும் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை பழங்குடிகளான இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மனைவி மகளைப் பிரிந்து செங்கல் சூளை ஒன்றுக்கு கொத்தடிமையாக வேலைக்கு செல்கிறார் ராஜாக்கண்ணு.
அப்போது கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் பாம்பு பிடிக்க சென்ற காரணத்திற்காக ராஜாக்கண்ணுவை முக்கிய குற்றவாளியாக கருதி போலீசார் தேடுகின்றனர். அவர் கிடைக்காததால் அவரின் கர்ப்பிணி மனைவியான செங்கேணி மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்த சிலரை பிடித்துச் செல்கிறார்கள். வழக்கு விசாரணை என்கிற பெயரில் குரலற்ற எளிய மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் மனித உரிமை மீறல்கள் அதனால் சிதையும் அவர்கள் வாழ்க்கை அடுத்தடுத்த காட்சிகளாய் நம் கண்முன்னே விரிகிறது.
ராஜாக்கண்ணு மற்றும் இருவர் போலீசாரால் அனுபவிக்கும் கொடுமை எழுத்தில்கூட சொல்ல முடியாத ரகம். இந்த நிலையில் மூவரும் தப்பித்துவிட்டார்கள் என்றும், அவர்கள் இருக்கும் இடம் தெரியவில்லை என்றும் அறிந்த செங்கேணி எளிய மக்களுக்காக போராடும் வழக்கறிஞரான சந்துருவை அணுகுகிறார். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார் வழக்கறிஞர்
சந்துரு. அவரெடுத்த முயற்சிகள் எத்தகையது? ராஜாக்கண்ணு மீட்கப்பட்டாரா?
செங்கேணிக்கு நீதி கிடைத்ததா என்பதே மீதிக் கதை. ஓர் உண்மைக்கொடூரத்தை, திரைக்கு கொண்டுவந்ததற்காகவே இயக்குநர் த.செ.ஞானவேலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.‘யார் கேட்டாலும் எத்தனை முறை கேட்டாலும் உண்மையை மட்டும்தான் சொல்லணும்.. அதுதான் நம்மை காப்பாத்தும்’, ‘திருடன்ல சாதி இருக்கா? உங்க சாதி ஏன் சாதின்னு எல்லா சாதியிலும் பெரிய பெரிய திருடனுங்க இருக்காங்க’, ‘ஒருத்தர்ட்ட இருக்க திறமை.. எதுக்கு உதவுதோ அதை வச்சுதான் அதுக்கு மரியாதை’, ‘பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி.. அவர்களுக்கு நடந்த அநீதியை விட அதிக பாதிப்பு ஏற்படுத்தும்’ போன்ற அழுத்தமான வசனங்களுடன் படத்தில் வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடிப்புக்கு சிறப்பு சேர்த்திருக்கிறார்.
ராஜாக்கண்ணுவாக மணிகண்டன், செங்கேணியாக லிஜோமோல்ஜோஸ் இருவருமே வட்டார வழக்கை சிறப்பாக பேசி யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ‘ஏ கண்ணு முன்னாடியே எ வூட்டுக்காரர அடிச்சு இழுத்துகுனு போனாங்க.. தப்பிச்சு ஓடுச்சுன்னு சொல்றாங்க.. எங்க தேடியும் கிடைக்கல.. என் புள்ளைகளுக்கு அப்பாவ கண்டுபிடிச்சு கொடுங்க சார்..’ என கையிலும் வயிற்றிலும் குழந்தைகளை சுமந்து சோர்ந்த விழிகளோடு ‘காசும் உசுறும் ஒன்னா சார்.. அந்த போலீஸ்காரர் வந்தாக்கூட பார்த்துதான் அனுப்புவேன்’ எனும்போதும், எங்கள சாவடிச்சாலும் ஏன்னு கேட்க நாதியில்லதான், அதுக்குன்னு கொலைகாரங்க கொடுத்த காசுல சோறுதிங்க முடியாது’ என்ற வசனங்களோடு செங்கேணி கதாபாத்திரத்தில் இருளர் பெண்ணாக லிஜோமோல்ஜோஸ் அப்படியே வாழ்ந்திருக்கிறார். பாராட்டுக்கள்!
ஒடுக்கப்பட்ட பழங்குடிகள் மீதான பிற சமூகத்தினரின் அழுத்தம், பார்வை, புறக்கணிப்பு போன்றவற்றை காட்சிகள் வழியாக காட்டியிருப்பது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ‘எங்க அப்பா கிடைக்கலைன்னு என்ன கூட்டிபோயி ஸ்டேஷன்ல வச்சு அடிச்சாங்க சார். அப்பத்திலிருந்தே பள்ளிகூடத்தில் சின்ன லப்பர் காணலைன்னா கூட என் பையத்தான் சார் சோதனை போடுறாங்க’ என்ற சிறுவனின் வார்த்தைகள் படம் பார்ப்பவர்களை குற்றவாளிகளாக உணர வைக்கும் காட்சி.
நீதியரசர் சந்துரு 90-களில் வழக்கறிஞராக இருந்தபோது, விழுப்புரம் மாவட்ட மலைக் கிராமத்தில் வசிக்கும் பார்வதி என்னும் இருளர் இனப் பெண்ணுக்காக நடத்திய சட்டப் போராட்டமே திரைக்கதையின் மையக் கரு. ஒரு உண்மை சம்பவத்தை ரத்தமும், சதையுமாய் பல மடங்கு அதிர்வலைகளோடு பதிய வைத்திருப்பதுடன், குரலற்றவர்களின் குரலை அனைவரின்
உள்ளங்களிலும் ஒலிக்க வைத்திருக்கிறது ஜெய்பீம் திரைப்படம்.
Average Rating