கனவு காணுங்கள்! ! (மகளிர் பக்கம்)
“சிறு வயதிலிருந்தே நான் ஒரு நடிகையாக ஆவதைப்போல கனவு கண்டேன். என் கனவை பெற்றோரிடம் தெரிவித்தபோது அவர்கள் அதிர்ந்து போனார்கள்! ‘உன்னுடைய ஆசை கனவிலும் நடக்காது. உன் அக்காவைப் போல நன்றாகப் படித்து ஒரு நல்ல வேலைக்குப் போகும் வழியைப் பார்’ என்று சொல்லிவிட்டார்கள்” என்று தான் நடிகையான கதையை பகிர்ந்துகொள்கிறார்-அண்மையில் இ.வி. கணேஷ்பாபு இயக்கி நடித்திருக்கும் ‘கட்டில்’ படத்தில் கதாநாயகியாக – வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே.
‘கனவு காணுங்கள்’ என்று அப்துல்கலாம் சொன்ன வார்த்தைகளின் அர்த்தம் புரியாத வயதிலிருந்தே ‘தான் ஒரு நடிகையாக ஆகிவிட்டதைப்போல’ கனவு காணத்தொடங்கியிருந்தார் ஸ்ருஷ்டி டாங்கே. மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் மத்தியத் தரக் குடும்பம் ஒன்றில் பிறந்த அவரின் குடும்பத்திலோ, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குடும்பத்திலோ யாருமே நடிப்புத்துறையில் இல்லாதபோதும், அவருக்கு ‘அந்தக் கனவு’ வந்தது!
“நடிகையாகும் எனது கனவுக்கு ஆதரவளிக்க வீட்டில் யாருமே தயாராக இல்லை. நானும் அதே அளவு பிடிவாதத்தோடு இருந்து, பலநாள் போராடி எனது கனவை பெற்றோருக்குப் புரிய வைத்தேன். அதன்பிறகு ஒருவழியாக சம்மதித்த அவர்கள் என்னை மும்பையில் உள்ள ‘அனுபம் கெர் நடிப்பு பள்ளியில்’ சேர்த்துவிட்டனர். அங்கு நான் நன்றாக நடிப்பதைப் பார்த்து, ஆசிரியர்களும் நண்பர்களும் பாராட்டினார்கள்” என்கிறார் ஸ்ருஷ்டி.
முதன்முறையாக இவருக்கு ‘காதலாகி’ என்ற தமிழ் படத்தில் – இரண்டு நாயகிகளில் ஒருவராக நடிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அதன்பின் மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தார். ஓரிரு ஆண்டுகளில் ‘ஏப்ரல் ஃபூல்’ என்ற தெலுங்கு படத்திலும் அறிமுகமானார். அதே ஆண்டில், கார்த்திக் ரிஷி இயக்கத்தில் இளையராஜா இசையில் ‘மேகா’ என்ற ரொமான்டிக் த்ரில்லர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
“காதல் படங்களில் நடிப்பதுதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இதுவரை நான் நடித்த படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் மேகாதான்” என்கிறார் ஸ்ருஷ்டி. தமிழில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டது. அதன்பின் சையது இம்ரஹிம் எழுதி இயக்கிய ‘புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்’ என்ற ரொமான்டிக் டிராமா படத்திலும், ஆர். சரவணன் இயக்கிய ‘கத்துக்குட்டி’ என்ற ரொமான்டிக் காமெடி படத்திலும் கதாநாயகியாக நடித்தார்.
கத்துக்குட்டி படத்தில் இவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததோடு ‘சிறந்த நடிகைக்கான எடிசன் விருதும்’ கிடைத்தது. இப்படியாக டார்லிங், எனக்குள் ஒருவன், ஜித்தன்-2, தர்மதுரை, சரவணன் இருக்க பயமேன்? உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும், ஒரு சில மலையாளப் படங்களிலும் நடித்துப் பிரபலமாகி -தான் கண்ட கனவை நனவாக்கிவிட்டார் ஸ்ருஷ்டி டாங்கே.
தற்போது ‘கட்டில்’ படத்தில் பாரம்பரியம் மிக்க தமிழ்க்குடும்பத்தின் தலைவியாக அவதாரம் எடுத்திருக்கிறார். “புனே மற்றும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சிறந்த தென்னிந்திய திரைப்படமாகவும் பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மிகுந்த
மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார்.
கட்டில் படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பேசிய ஸ்ருஷ்டி, ‘‘தமிழ்க் குடும்பத்தில் ஒரு மனைவி எத்தனை கஷ்டங்களைத் தாங்க வேண்டியிருக்கிறது; எவ்வளவு தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது?” என்பதையெல்லாம் இந்தப் படத்தின் மூலமாகத்தான் அறிந்துகொண்டேன். இந்தப் படத்தில் கர்ப்பிணியாகவும் நான் நடித்திருக்கிறேன்… அந்தக் காட்சிகளை படமாக்கி முடியும் வரை எப்போதும் என்னை நிறைமாத கர்ப்பிணியாகவே நினைத்துக்கொண்டு நடிக்கத் தொடங்கினேன்.
அதைப் பார்த்த இயக்குநர் ‘ஷூட்டிங்தான் இன்னும் தொடங்கலையே? அதற்குள்ளாக ஏன் இப்படி நடக்கறீங்க?’ என்று கேட்பார்கள். ‘திடீரென கேமரா முன்பு போனவுடன் மாற்றிக்கொள்வது கஷ்டம், எப்போதும் அதே மனநிலையில் இருந்தால்தான், கேமரா முன்பு நிற்கும்போதும் இயல்பாக வரும்’ என்று சொல்வேன். எந்தக் கதாபாத்திரத்திலும் நூறு சதவிகிதமும் ஈடுபாட்டோடு நடிக்கும் நான், இந்தப் படத்தில், தமிழ்க் குடும்பப் பெண்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் விதமாக நடித்திருக்கிறேன்” என்கிறார்.
“அப்பாவுக்கு விமான நிலையத்தில் பணி, அம்மா குடும்பத் தலைவி. எனது ஒரே சகோதரி தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார்” என்று சுருக்கமாக முடித்துக்கொண்டவரிடம், நன்றாகத் தமிழ் பேசுகிறீர்களே எனக் கேட்டதற்கு, “தமிழ்ப் படங்களில் அதிக நாட்கள் பணி செய்ததால் தமிழை எளிதாக கற்றுக்கொள்ள முடிந்தது. அடுத்த கட்டமாக திரைப்படங்களிலும் எனது சொந்தக் குரலில் பேசி நடிக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த நடிகர் தனுஷ். அவருடன் ஜோடியாக நடிக்க வேண்டுமென்பது எனது நீண்டநாள் ஆசை’’ என்றார் ஸ்ருஷ்டி.
Average Rating