ஆளுமைப் பெண்கள்: நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும்! (மகளிர் பக்கம்)
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும் கொண்ட புதுமைப்பெண்களைக் கொண்ட தேசமாக நமது தேசம் மாறவேண்டும்’ என்று பாரதி கனவு கண்டார். அவர் கண்ட கனவு பலிக்கும் வகையில் இன்று பெண்கள் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். அவர்களுள் தாம்பரம் சேலையூரில் உள்ள சீயோன் மேனிலைப்பள்ளியின் முதல்வராகத் தனது பணியைச் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கும் முனைவர் சாந்தியும் ஒருவர்.
அண்மையில் இந்த ஆண்டிற்குரிய தமிழக அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருதினைப் பெற்றுள்ளார். இவரைப் போன்ற பெண் ஆளுமைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதும் அவரது சாதனைகளின் பாதைகளை அறிவதும் பலரை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும். ‘‘சொந்த ஊர் திருநெல்வேலி. அப்பா சாலமன் ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல் அலுவலர், அம்மா ஹெலன் ஓய்வு பெற்ற ஆசிரியர். கணவர் யூஜின் மைக்கேல் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் கணிதப் பேராசிரியர். இரண்டு பெண்கள்.
திருநெல்வேலியில் கல்லூரி படிப்பு (இயற்பியலில் முதுகலை) முடித்துவிட்டு ஆசிரியர் பணியினை தொடர வேண்டும் என்பதற்காக B.Ed, M.Ed மற்றும் M.Phil பட்டங்களைப் பெற்றேன். அமெரிக்காவைச் சேர்ந்த யுனிவர்சல் குளோபல் பீஸ் என்னும் அகாடெமி எனக்கு முனைவர்(Ph.D) பட்டம் அளித்தது.
எங்கள் குடும்பத்தில் நான்கு தலைமுறையாக ஆசிரியப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அம்மா, பாட்டி, கொள்ளுபாட்டி அனைவருமே ஆசிரியர்கள்தான். இவர்களைப் பார்த்து வளர்ந்ததால், சிறுவயதில் இருந்தே ஆசிரியராக வேண்டுமென்கிற அந்த ஆசை தான் என்னை ஆசிரியர் பணியில் முழுமையாக ஈடுபட வைத்துள்ளது. முதலில் திருநெல்வேலியில் ஆசிரியர் பணியினை ஆரம்பித்த நான், தூத்துக்குடியில் உள்ள பள்ளிக்கு முதல்வராக நியமனமானேன்.
இதற்கிடையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால், அவருக்கு வேலை சென்னையில் என்பதால் இங்கேயே குடி வந்தோம். என் நிர்வாக திறமையைக் கண்ட பள்ளித் தாளாளர் மற்றும் முனைவர் விஜயன் அவர்கள், இருவரும் குழுமப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தத் தேவைப்படும் இடங்களில் இடமாற்றம் செய்து என் திறமையை நிலைநிறுத்த வாய்ப்பளித்தனர்.
‘ஆசிரியப்பணியே அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி’ என்ற வாக்கிற்கேற்ப கல்விப் பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, பள்ளியின் மேம்பாட்டிற்காக எனக்கென்று தனி சவால்களை உருவாக்கி அதனை நோக்கிய தெளிவான திட்டங்களோடு பயணித்து வருகிறேன். மாணவர்களுக்கு கல்வி மட்டுமல்லாமல், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கி தருகிறேன். மேலும் படிப்பு முக்கியம் ஆனால் அதை விட ஒழுக்கம் அவசியம் என்பதை மாணவர்கள் மனதில் பதியவைத்து அதனை முறைப்படுத்தி வருகிறேன்.
கல்விப் பாடங்களைத் தவிர்த்து பொறியியல் அல்லது மருத்துவம் போன்ற துறையில் சேர குறிப்பிட்ட (IIT/JEE/NEET) தேர்வுகள் அவசியம் என்பதால், அந்த சவாலான தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன். திறமையான மாணவர்கள் உருவாக ஆசிரியர்களுக்கு பெரும் பங்குண்டு. அதனால் அவர்களுக்கும் கற்பித்தல் முறையில் புதுமைகளை புகுத்தி ஆலோசனை வழங்கவும் செய்கிறேன்’’ என்றவர் தங்களின் கல்வி திட்டத்தில் அறிமுகம் செய்துள்ள புதுமையான பாட வழிமுறைகளைப் பற்றி விவரித்தார்.
‘‘எழுத்தாக படிப்பதைக் காட்டிலும் அதை காட்சியாக விவரிக்கும் போது, எளிதாக மனதில் பதியும். இதை உணர்ந்து ஒவ்வொரு வகுப்பறைகளிலும், ஸ்மார்ட் போர்ட் அமைத்துள்ளோம். மேலும் பள்ளிகளில் அறிவியல் ஆய்வகம் விரிவாக்கம், நவீன வசதி கொண்ட கணினி ஆய்வகம், மேடைப் பேச்சு திறன் உள்ளவர்களுக்கு சிறப்புப் பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாணவிகளுக்கு நேப்கின்கள் இயந்திரம் கொண்ட சுகாதார கழிவறைகள், ஆசிரியர்களுக்கான மின்னணு நூலகம்… என தொழில்நுட்பத்தின் மாற்றத்திற்கு ஏற்ப அவ்வப்போது பள்ளியினையும் வடிவமைத்து வருகிறோம்’’ என்றவர் ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள தனிப்பட்ட பயிற்சிகளும் அளித்து வருகிறார்.
‘‘கொரோனாவால், உலகமே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியதால், மாணவர்கள் பலரால் கல்விக் கட்டணம் செலுத்த இயலாமல் போனது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதால், கட்டணம் செலுத்த முடியாத 40% மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்தோம். அதே சமயம் மாணவர்களின கற்றல் பாதிக்காத வண்ணம் இணைய வழியில் பாடங்களைக் கற்பித்தோம். அதற்குறிய பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு அளித்து, முறைப்படி கண்காணித்தோம்.
மேலும் அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் தொலைக்காட்சி மற்றும் நீக்கப்பட்ட பாடங்களை மட்டும் யுடியூப் வாயிலாக மாணவர்களுக்கு நடத்தினேன்’’ என்றவர் செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஒரே தனியார் பள்ளி முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
‘‘என்னுடைய 29 ஆண்டு கால கல்விப் பணியில் மாணவர்கள் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற வழிகாட்டியாக இருந்தேன். மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும், படிப்பில் மட்டுமன்றிப் பல்வேறு கலைகளிலும் சிறந்து விளங்க பயிற்றுவித்தமையாலும், எனது தலைமைப் பொறுப்பில் எவ்வித இடையூறுகளும் ஏற்படா வண்ணம் பள்ளி நிர்வாகம், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றதனாலும், மாணவர்களை ஓர் அன்னையின் அரவணைப்போடு வழிநடத்திச் சென்றமையாலும், மாணவர்களுக்குக் கற்றல் கற்பித்தலில் பலவித புதுமைகளைப் புகுத்தி அனைத்து வகைப் போட்டித் தேர்வுகளிலும் சிறந்த முறையில் வெற்றி பெற வழிவகை செய்தமையாலும்… இவ்வாறு பல திட்டப்பணிகளை நான் திறம்பட செய்ததற்காக என்னை தேர்வு செய்து இந்த விருதினை வழங்கியுள்ளனர்’’ என்றவர் நல்லாசிரியர் விருது, சிறந்த பெண் சாதனையாளர் விருது, சிறந்த நிர்வாகி விருது என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
‘‘என் மாணவர்களின் லட்சிய பாதை தான் என்னுடைய லட்சியம் என்று தான் சொல்லணும். என்னைப் பொறுத்தவரை என் மாணவர்கள் உலகின் சிறந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்களாகவும், மனித சமுதாயத்துக்குத் தேவையான கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்பவர்களாகவும், நோபல் பரிசை பெறுபவர்களாகவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் அவர்கள் இருக்க வேண்டும் என்று மாணவர்களை பற்றி என்னுள் பல கனவுகள் உள்ளன’’ என்றார் சாந்தி. ‘தூக்கத்தில் வருபவை அல்ல கனவுகள். நம்மைத் தூங்க விடாமல் செய்பவை தான் கனவுகள்’ என்ற அப்துல்கலாமின் வார்த்தைகள் போல் இவரின் கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் என்று கூறி விடை பெற்றோம்.
Average Rating