கல்வி மட்டுமே மாற்றத்தைத் தரும்!! (மகளிர் பக்கம்)
பல நோய்களால் எங்க கிராம மக்கள் கஷ்டப்படறதை நான் நேரில் பார்த்திருக்கேன். அதனாலதான் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டேன். நான் மருத்துவராகி இங்குள்ள மக்களுக்கு இலவசமாக மருத்துவ வசதி அளிக்க வேண்டும் என்பதே என் கனவு…மலசர் பழங்குடி சமூகத்திலிருந்து முதன்முதலாக நீட் தேர்வில் வெற்றி பெற்ற சங்கவியின் குரலில் தன்னம்பிக்கையும் நிதானமும் நிரம்பி வழிகிறது.
கோவை திருமலையம்பாளையம் ரொட்டிகவுன்டனூர் அருகே நஞ்சப்பனூர் என்ற கிராமத்தின் பழங்குடி மக்களின் நம்பிக்கையாய் உருவாகி இருக்கிறார் சங்கவி. நமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பை நாம் நழுவ விடக் கூடாது. எந்தத் தடை வந்தாலும் நாம் கடந்து வரவேண்டும் என்கிறார் மிகவும் அழுத்தமாய்.கோவை அருகிலேயே நாங்கள் வசித்து வந்தாலும் எங்கள் குடியிருப்புகளில் மின்சாரம், கழிப்பறை வசதிகள் கிடையாது. மேல் படிப்பு படிக்க எங்களுக்கு சாதிச்சான்றிதழ்களும் கிடையாது என்றவர், எனது மேல் படிப்புக்கு சாதிச் சான்றிதழ் இல்லாதது எனக்கு சிக்கலாகவே இருந்தது. இந்த நிலையில், என்னால் படிப்பைத் தொடர முடியாமலே போனது. அப்போது எனது அப்பாவும் திடீரென இறந்துவிட, உடல் நிலை சரியில்லாத அம்மாவை கவனிக்க வேண்டிய பொறுப்பு என்னிடம் சேர்ந்து கொண்டது.
எனது ஆழ்மனதில் எப்படியாவது நாம் படித்துவிட வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்துகொண்டே இருந்தது. அம்மாவும் படிப்புதான் உன் அடையாளம் என்று என்னை விடாமல் ஊக்கப்படுத்திக் கொண்டே இருந்தார். நான் படித்து ஜெயித்துவிட்டால் என்னைப் பார்த்து இங்குள்ள மற்ற குழந்தைகளும் படிப்பை ஆர்வமாக கையில் எடுப்பார்கள் என்று நான் நினைத்தேன். மேல் படிப்பைத் தொடர எங்களுக்கு சாதிச் சான்றிதழ் இல்லை என்கிற செய்தி ஊடகங்களில் வெளியாக, எனக்கு சாதிச்சான்றிதழ் கிடைத்தது. இந்த மாற்றம் என்னை நீட் தேர்வை நோக்கி நகர்த்தியது என்கிறார் சங்கவி.
+2 முடிந்து 2018-ல் நான் நீட் தேர்வு எழுதும்போது 6 மதிப்பெண்ணில் வெற்றியை நழுவவிட்டேன். உடனிருந்தவர்கள் கொடுத்த ஊக்கத்தாலும், சில பல நல்ல உள்ளங்கள், தொண்டு நிறுவனங்கள் செய்த தொடர் உதவியாலும் தனியார் நீட் பயிற்சி மையத்தில் இணைந்து மீண்டும் நீட்தேர்வுக்கு தயாராகத் தொடங்கினேன். இந்தநிலையில் கொரோனா நோய் தொற்றில் ஏற்பட்ட தொடர் ஊரடங்கில் பயிற்சி வகுப்பிற்கு செல்ல முடியாத நிலை வர, மீண்டும் நான் வெகுவாக பாதிக்கப்பட்டேன்.
என்னிடத்தில் கைபேசி வசதியோ இணைய வசதியோ இல்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகளிலும் பங்கேற்கவும் முடியவில்லை. இருந்தாலும் அவர்கள் வழங்கிய பயிற்சிப் புத்தகம் மற்றும் மாநில பாடத்திட்டப் புத்தகங்களைக் கொண்டு தொடர்ந்து தெருவிளக்கு வெளிச்சத்திலும் எனது குடிசைக்குள் இருந்த சிமினி விளக்கு வெளிச்சத்திலும் விடாமல் படிக்க ஆரம்பித்தேன். இந்த முறை மிகவும் நம்பிக்கையோடு நீட் தேர்வை எதிர்கொண்டேன். விளைவு, நீட் தேர்வில் 202 மதிப்பெண்கள் எடுத்து வெற்றி கிடைத்தது.
உங்களால் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று உறுதியாக இருந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்றவர், ஒருவேளை நீட் தேர்வில் வெற்றி கிடைக்கவில்லையா? வருத்தம் வேண்டாம். அச்சம் தேவையில்லை. நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொள்வதை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது. நிறைய வாய்ப்புகள் இங்கே இருக்கின்றன நமக்குப் பிடித்த பிற துறைகளில் கவனம் செலுத்தலாம் என்கிறார் நம்பிக்கையான வார்த்தைகளை பிற மாணவர்களுக்கு வழங்கியவாறு.
எங்கள் மலசர் பழங்குடியில் நான் முதல் தலைமுறை மருத்துவர் என்பதால் எனது கிராமமே இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகிறது. எனது வெற்றி என் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு படிப்பின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறது என்கிறார். நான் மட்டுமே படித்து முன்னேறிவிட்டால் போதாது. என்னைப் பார்த்து என் சமூகத்தில் இருக்கும் மற்ற குழந்தைகளும் படிப்பதே உண்மையான வெற்றி என்கிறார். என் சமூகத்தில் இன்னும் நிறைய பேர் படிக்க வேண்டும். அவர்கள் ஏதாவது ஒரு துறையில் ஜெயித்துவிட்டால் அவர்கள் மேலும் நான்கு குழந்தைகளுக்கு வழிகாட்டுவார்கள். கல்வி மட்டுமே எங்களுக்கு மாற்றத்தைத் தரும் என்கிறார் மிகவும் ஆணித்தரமாக.
எங்களின் மலசர் இன மக்களைப் பொறுத்தவரை அவ்வளவு எளிதாக வெளியுலகத்துக்கு வரமாட்டார்கள். கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிவதில்லை. குழந்தைகளும் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழல் தொடர்கிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றால் அது அரசாங்கத்தால் மட்டுமே முடியும் என்கிறார் தனது டாக்டர் கனவை கண்களில் தேக்கி.
Average Rating