குழந்தைகளின் மனப் பதற்றம்!! (மருத்துவம்)

Read Time:20 Minute, 10 Second

உளவியல்

மனப்பதற்றம், மன அழுத்தம் போன்றவையெல்லாம் பெரிய மனிதர்களின் பிரச்னை என்றுதான் நினைப்போம். ஆனால், குழந்தைகளும் உளவியல்ரீதியாக பல சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் குழந்தைகளிடத்தில் மனச்சோர்வோ அல்லது பிற மனநலக் கோளாறுகளோ இருந்ததாகத் தெரியவில்லை அல்லது கவனிக்கப்படவில்லை என்று சொல்லலாம். ஏனெனில், இதுபோன்ற மனப்பிரச்னைகளை அனுபவிக்கும் அளவிற்கு மன முதிர்ச்சியோ அல்லது அறிவாற்றல் அமைப்போ இருக்காது என்றே நாம் நினைத்தோம். மருத்துவ வல்லுனர்களும் அதையேதான் நம்பினர்.

ஆனால், இப்போதுள்ள குழந்தைகளிடத்தில் காணப்படும் மனச்சோர்வைப்பற்றி புரிந்துகொள்வது சமுதாயத்திற்கும் சரி, சுகாதார வல்லுநர்களுக்குமே கூட மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இங்கிலாந்தின் National Institute for Health and Care Excellence (Nice) ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வில் உலகம் முழுவதும் குழந்தைப்பருவம் மற்றும் வளர் இளம் பருவத்தில் உள்ள மாணவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு உள்ளாவது அதிகரித்து வருவதாக எச்சரிக்கிறது. குழந்தைகளின் மனநிலையைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்று உளவியலாளர் வீணா வாணியிடம் பேசினோம்…

‘மூன்று, நான்கு வயது குழந்தைகளுக்கு அப்படி என்ன பிரச்னை இருக்கப் போகிறது. ஸ்ட்ரெஸ் ஆவதற்கு?’ என்று நினைக்கலாம். குழந்தை வளர வளர அதனுடன் சேர்ந்து மனநிலையும் வளரும். பிறந்ததிலிருந்து மனித வளர்ச்சியில் வயதுக்கேற்ற பருவங்களை வகுத்துள்ளனர் உளவியலாளர்கள்.
அதன்படி பிறந்ததிலிருந்து 3 வயது வரையான காலம் குழந்தைப் பருவம்(Childhood); 3 முதல் 6 வயது வரை முன் பிள்ளைப் பருவம்(Pre-Childhood); ஆறிலிருந்து 8 வயது வரை பிள்ளைப்பருவம்(Childhood); 8-லிருந்து 12 வயது வரை முன் முதிர் பருவம்(Pre-mature); 12-லிருந்து 18 வயது வரை வளரிளம்பருவம்(Teenage) என பிரித்துள்ளனர்.

இதில் 3 வயது வரை உள்ள குழந்தைகளின் முதல் உணர்வு பசி. இந்த தேவையை அம்மா தீர்த்து வைப்பதாக இருப்பதால், பாதுகாப்பையும், அரவணைப்பையும் அம்மாவிடம்தான் குழந்தை எதிர்பார்க்கும். 3 வயது வரை பெரும்பாலும் அது குழந்தைகளுக்கு கிடைத்துவிடுகிறது. அதன்பின் பள்ளியில் சேரும்போது புதிய சூழல், புதிய மனிதர்கள் என்று வரும்போது, ஏற்கெனவே இருந்த மனப்பிரச்னைகள் வெளியில் தெரிய ஆரம்பிக்கும். இதை Separation Anxiety என்று கூறுவோம்.

பெரும்பாலும், பெற்றோர்கள் 3 வயது வரை உள்ள குழந்தைப் பருவத்திற்கும், அதன்பின் வளர்இளம் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இடைப்பட்ட நிலையில் இருக்கும் முன்பிள்ளைப்பருவம், பிள்ளைப்பருவம் மற்றும் பால்முதிர்பருவத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு கொடுப்பதில்லை.

பொதுவாக இந்த வயது குழந்தைகளை பாதிக்கும் மனநோய்கள்

* குழந்தைகள் பள்ளி செல்ல பயப்படுதல்
* படிப்பில் கவனம் குறைதல்
* அதிக கோபம் கொள்தல்
* அடிக்கடி எரிச்சல் அடைதல்
* படுக்கையில் சிறுநீர் கழித்தல்
* மிகமிக அதிக சுறுசுறுப்போடு ஆனால் கவனம் இல்லாமல் இருத்தல்(ADHD)
* கீழ்ப்படியாமை
* அடிக்கடி பொய் சொல்வது
* திருடுவது
* குழந்தைக்கு திடீரென்று மூச்சு நின்றுபோய் திரும்ப வருதல்(Breath holding spell)
* சாம்பல், மண், பேப்பர், பென்சில் போன்ற பொருட்களை சாப்பிடுவது
* பிடிவாதம் பிடித்து தரையில் உருண்டு புரள்வது (Temper Tantrums)
* நன்றாகப் படிக்கும் மாணவன் திடீரென்று படிப்பில் பின்தங்குவது
* பள்ளியில் சேர்க்கும்போது பிரிதலால் வரும் பதற்றம்(Seperation Anxiety)
குழந்தை மனப் பதற்றத்தோடு இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

எல்லா குழந்தைகளும் விரல் சூப்பும் என்றாலும், மனப்பதற்றம் இருக்கும் குழந்தைகளிடம் நீண்ட நாட்களுக்கு அந்த பழக்கம் இருக்கும். இந்தப் பழக்கத்தை அவ்வளவு எளிதில் விடாது. வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் குறிப்பிட்ட நேரத்தில் அம்மா தன்னை விட்டுவிட்டு போய்விடுவாள் என்பதை தெரிந்துகொண்டு, தான் சாப்பிடாமல் இருந்தால் அம்மா தன் கூடவே இருப்பாள் என்று நினைத்து சாப்பிட அடம்பிடிப்பார்கள். சில குழந்தைகள் பயம் வந்தவுடன், அவர்களையே அறியாமல் சிறுநீர் கழித்து விடுவர். இன்னும் சில குழந்தைகள் ஒரே காரியத்தை திரும்பத்திரும்பச் செய்வார்கள். இதற்கு Autism spectrum disorder என்று பெயர்.

பதின்பருவத்திற்கு முந்தைய நிலையில் இருக்கும் பிள்ளைகளுக்கு வரக்கூடிய மனப்பிரச்னைகளில் பொதுவானது இந்த பிரிதல் பதற்றம்(Separation Anxiety). இதில் பல வகைகள் உண்டு. முதன்முறையாக எல்.கே.ஜி படிக்க பள்ளிக்குச் செல்லும் போது பெற்றோரைப் பிரிய மனமில்லாமல் அழுது அடம்பிடித்து பள்ளி செல்ல மறுப்பார்கள்.

இது ஒரு வகை. வீட்டில் நடக்கும் பிரச்னை காரணமாக, பெற்றோர் பிரிந்துவிடுவார்கள் என்ற பதற்றத்திலேயே இருக்கும் குழந்தைகளும் பள்ளி செல்ல விரும்ப மாட்டார்கள். இது இரண்டாவது வகை. மூன்றாவது வகையில் சில பெற்றோர்கள் 5-ம் வகுப்பு முதல் ஒரு பள்ளியில் படிக்க வைத்துவிட்டு, 6-ம் வகுப்பு முதல் வேறு பள்ளிக்கு மாற்றிவிடுவார்கள். அப்போது, தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் பிடித்த ஆசிரியர்களை விட்டுப் பிரிய நேரும்போது அந்தக் குழந்தைக்கும் இந்த Separation Anxiety பிரச்னை வருகிறது.

முதல் வகையில் 3 வயது வரை தாயின் அரவணைப்பில் அல்லது கவனிப்பாளரின் பொறுப்பில் இருக்கும் குழந்தை முதன்முறையாக குடும்பத்தை விட்டு பள்ளிக்கூடம் என்ற சமூகத்துக்குச் செல்கிறது. பெற்றோரை விட்டு, பழகிய இடத்தை விட்டு புதிதாக ஒரு இடத்துக்குச் செல்லும் குழந்தை பாதுகாப்பின்மையை உணர்கிறது. பயத்திலும், பாதுகாப்பின்மையாலும்தான் பெரும்பாலான குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்லப் பிடிக்காமல் அழுவதும் அடம் பிடிப்பதுமாக தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.

இரண்டாவதில் பெற்றோரின் சண்டை, விவாகரத்து, குடும்ப சச்சரவுகள் போன்றவற்றைப் பார்க்கும் குழந்தை பாதுகாப்பின்மையை உணர்கிறது. தான் வீட்டில் இருந்தால் அம்மா, அப்பாவிற்கு சண்டை வராது, அவர்கள் எங்கேயும் பிரிந்து செல்லமாட்டார்கள், நான் பள்ளிக்குப்போகும் நேரத்தில் ஏதாவது ஆகிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலேயே பள்ளிக்குச் செல்ல பயப்படுவார்கள். விவாகரத்தான Single parent என்றால் யாராவது ஒருவரிடத்தில் வளரும் குழந்தையின் மனநிலை மிகவும் பாதிக்கப்படும்.

இதுபோன்ற சமயங்களில் வாந்தி எடுத்தல், வயிற்றுப்போக்கு போன்ற சுகவீனமும் குழந்தைகளுக்கு ஏற்படும். நாளடைவில் இந்தப் பிரச்னைகள் தானாக சரியாகிவிடும். பெரும்பாலும் எல்லாக் குழந்தைகளும் வழக்கம் போல பள்ளிக்குச் செல்வர். ஆனால், இரண்டு மூன்று மாதங்களாக இதே பிரச்னை நீடித்தால் குழந்தை பள்ளி செல்ல மறுத்தால் அது பெற்றோரின் பிரிவு குறித்த மனப்பதற்றம்தான்(Seperation Anxiety). இது சில
குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படும்.

இந்த பிரிதல் மனப்பதற்றத்தில் உள்ள குழந்தைகளை சரிசெய்ய பிறந்தவுடன் குழந்தையை எந்த மாதிரி கவனிக்கிறோமோ அதே கவனிப்பைப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைக்கும் அளிக்க வேண்டும். வேலைக்குச் செல்லும் தாயாக இருந்தால், ‘அம்மா நம்மை விட்டு எங்கேயோ செல்கிறாள்’ என்ற கவலை குழந்தைக்குத் தொற்றிக்கொள்ளும். இந்த சந்தர்ப்பங்களை பெற்றோர் மிக சாமர்த்தியமாக கையாள வேண்டும்.
பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

குழந்தை பள்ளி முடிந்து வீட்டுக்கு சீக்கிரமே வந்துவிட்டாலும் வேலைக்குச் சென்ற அம்மா தாமதமாகத்தான் வருவார். இதனால் குழந்தை அம்மாவின் அன்புக்காக ஏங்கிப் போகும். அம்மாவின் அரவணைப்பு இல்லாததால் பாதுகாப்பின்மையை உணரலாம். கவன ஈர்ப்புக்காக சில விஷயங்களில் தேவையில்லாமல் ஈடுபடலாம். இதைத் தவிர்க்க பெற்றோர் குறிப்பாக அம்மாக்கள் குழந்தையிடம் தினமும் அரை மணி நேரமாவது பேச வேண்டும் அல்லது கதை சொல்தல், விளையாடுதல், பாடல்கள் பாடுதல், குழந்தையுடன் சேர்ந்து ஆடுதல் என்று பெற்றோர் ஈடுபடும்போது குழந்தை
பாதுகாப்பை உணரும்.

குழந்தை முன் பெற்றோர் சண்டையிடுவதோ, அடித்துக் கொள்வதோ கூடாது. பள்ளி மாற்றுவதாக இருந்தால் புதிய பள்ளியைப்பற்றிய பெருமைகளை சொல்லலாம். சேர்ப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே அந்தப் பள்ளிக்குக் கூட்டிச் சென்று அங்குள்ள கூடுதல் சிறப்புகளையும் அங்கு படிப்பதால் அவர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்.

அடுத்து கொஞ்சம் பெரிய வகுப்பு படிக்கும் குழந்தைகள் கல்வியிலோ, உடல்திறனிலோ வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும்போது நண்பர்களால் புறக்கணிக்கப்படும்போதும் ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும் தன்னைத்தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனநிலை மாறுபடுகிறது.

முன்பெல்லாம் பருவமடைதல் 15 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடக்கும். ஆனால், இப்போதெல்லாம் 6 வயதிலேயே பெண்குழந்தைகள் பருவமடைந்து விடுகிறார்கள். உயிரியல் ரீதியான மாற்றங்களும் குழந்தைகளை மனச்சோர்வு அடையச் செய்கிறது. தன் உருவம் ரீதியான தாழ்வு மனப்பான்மையும் இந்த வயது குழந்தைகளுக்கு வருகிறது. உதாரணத்திற்கு ஒரே வகுப்பில் மரபியல் ரீதியாக சிலர் அதீத வளர்ச்சியுடன் இருப்பார்கள். சிலரின் வளர்ச்சி தாமதமாகத்தான் இருக்கும். தன்னை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, தான் மற்றவர்கள் மாதிரி இல்லையே என்று தன்னைத்தானே குறைத்து மதிப்பிட்டுக் கொள்வார்கள்.

பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவர்களை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு, நடுநிலைப்பள்ளிப் பருவத்தில் இருக்கும் மாணவர்களை பெற்றோர்கள் கவனிப்பதில்லை. குடும்பத்தில் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும் வாய்ப்பே குறைந்து விட்டது. தாத்தா, பாட்டி இருக்கும் வீடுகளில் கூட, பேரக்குழந்தைகளோடு நேரம் செலவிடுவது குறைந்துவிட்டது. டிவி சீரியல் பார்ப்பதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பேரக்குழந்தைகளிடம் பாசம் காட்ட கொடுப்பதில்லை. தனிக்குடித்தனம் என்றால் பெற்றோர் இருவரும் வேலைக்குப் போகும் நிலை. இப்படி குழந்தைகள் தனித்து விடப்பட்டு மன உளைச்சலை அனுபவிக்கிறார்கள்.

இவர்களிடம் உள்ள மனப்பதற்றத்தை எப்படி தெரிந்து கொள்வது? தனிமையை விரும்புவது, ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை, படிப்பதைத் தவிர்ப்பது, தேர்வு நேரங்களில் வாந்தியெடுப்பது அல்லது வயிறு வலிப்பதாக சொல்வது, பெற்றோரின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துவது, பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுப்பது மற்றும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பது, சில நேரங்களில் தன்னைத்தானே தாக்கிக் கொள்வதுமாக தங்கள் மனப்பதற்றத்தை வெளிப்படுத்துவார்கள்.

குழந்தைகளின் இதுபோன்ற நடவடிக்கைகளைக் கண்டு மிரட்டியோ, அடித்தோ பணிய வைக்கக் கூடாது. மாறாக கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல், உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் இவற்றை பற்றிய புரிதலே நம் குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.

பருவ வயது குழந்தைகளுக்கு மட்டுமல்ல; எல்லா படிநிலையில் உள்ள குழந்தைகளுக்கும் உடல்தோற்ற மாறுபாடுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கும். அதைப்பற்றிய அச்சங்களையும் பெற்றோர் எடுத்துக்கூறி புரிய வைக்க வேண்டும்.

சமூகத்தால் வரக்கூடிய புறக்காரணிகளும் குழந்தைகளின் மனநிலையை பாதிக்கக் கூடியவைதான். இன்றைய காலத்தில், தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றால் பலதளங்களில் அபரிமிதமான வெளிப்பாடு கிடைக்கிறது. இதன் காரணமாக அவர்கள் தவறான பாதையில் செல்ல வாய்ப்பளிக்கிறது. அதை எப்படி கையாள்வது என்பதை பெற்றோர்கள்தான் சொல்லித்தர வேண்டும்.

இளம் பெற்றோர்கள் தங்களுக்கான நேரம் வேண்டுமென்று நினைக்கிறார்களே தவிர, குழந்தைகளின் மனநிலையை உணர்வதில்லை. தான் சீரியல் பார்க்க வேண்டும், படம் பார்க்க வேண்டும் தன்னை குழந்தை தொந்தரவு செய்யக்கூடாது என்று 2 வயது குழந்தையின் கையில் செல்போனை கொடுத்துவிடுகிறார்கள். அதில் வரும் தேவையற்ற பாலியல் படங்களைப் பார்த்து குழந்தைகள் குழப்பமடைகிறார்கள்.

பெரும்பாலான வீடுகளில் டி.வி பார்த்துவிட்டு, இரவு 11 மணிக்குமேல்தான் தூங்கச் செல்கிறார்கள். இதனால் மறுநாள் காலை லேட்டாக எழுந்து கொண்டு, பள்ளிக்கும், வேலைக்கும் அவசர அவசரமாக கிளம்பி, காலைநேரத்தில் வீடே போர்க்களமாக காட்சி அளிக்கிறது. இதுதவிர சரி வர தூங்காத குழந்தைகள் பள்ளியில் தூங்கி வழிந்துகொண்டு, பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை. பெற்றோரும், தூக்கமின்மையால் அலுவலகத்தில் திறம்பட செயல்பட முடிவதில்லை. குடும்பத்தோடு நேரத்தில் உறங்கச் சென்று நேரத்தில் எழும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேல் அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் மற்றும் தண்டனைகள் குழந்தையின் மனநிலையை மேலும் சிக்கலாக்குமே தவிர, பிரச்னைக்கான தீர்வாக இருக்காது. குழந்தையை அதன் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள்.

காரணம் இன்று வயது வந்த பெரியவர்களைவிட, அதிக மனநல சிக்கல்களை அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது. அதற்கு அவர்களை தயார்படுத்தும்போது ஒரு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும். உங்களால் சமாளிக்க முடியாத அளவிலான பிரச்னை என்றால் உளவியல் ஆலோசகரிடம் குழந்தையை அழைத்துச் செல்ல தயங்காதீர்கள்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமையலும் பாத்திரமும்!! (மகளிர் பக்கம்)
Next post குழந்தைகளின் கண்நலத்தை உறுதிப்படுத்துங்கள்! (மருத்துவம்)