முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரை ஏமாற்றுகின்றார்கள்? (கட்டுரை)

Read Time:13 Minute, 7 Second

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு தொடர்புடைய இரண்டு செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலாவது செய்தியில், “மக்கள் எதிர்பார்த்த எதுவும் இல்லாத, வரவு செலவுத் திட்டமாகவே இது அமைந்திருக்கின்றது” என்று, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது செய்தியில், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வரவு செலவுத் திட்டத்துக்கும் ஆதரவளிக்க உள்ளதாகத் தெரியவருகிறது. மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனும் கிட்டத்தட்ட இதே நிலைப்பாட்டிலேயே இருப்பார் என அனுமானிக்கலாம்.

தலைவர்கள் இப்படியிருக்கையில், கட்சியின் உறுப்பினர்கள் அதற்கு முரணாகச் சிந்திப்பது, அல்லது முஸ்லிம் எம்.பிக்கள் இதனை இவ்விதம் நோக்குகையில், ஹக்கீம் போன்ற தலைவர்கள் வேறு கோணத்தில் நோக்குவதும், இரண்டு பார்வைக்கும் பின்னர் காரணங்கள் கூறுவதும் என்ன வகையான அரசியல் என்றுதான் புரியவில்லை.

நாட்டு மக்கள், பெரும் நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுள்ளனர். அதிலிருந்து வெளியில் வர முடியாதவாறு, வாழ்க்கைச் சுமை அவர்களை அழுத்திப் பிடிக்கின்றது. எனவே, இந்த பட்ஜெட்டில் கொஞ்சமாவது நிவாரணம் கிடைக்கலாம் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.

2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைத் தயாரித்த போது, மக்கள் மீது சுமையை ஏற்றக் கூடாது என்பதில், மிகக் கவனமாக இருந்ததாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிவாரண முன்மொழிவுகளை, அரசாங்கம் முன்வைக்கவில்லை என்ற விடயம் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தக் காரணங்களுக்காக, முஸ்லிம் எம்.பிக்கள் இந்தப் பட்ஜெட்டை எதிர்க்க வேண்டும் என்று, இப்பத்தி வலியுறுத்தவில்லை. இவர்கள் ஐந்தாறு பேர் எதிர்ப்பதாலோ ஆதரிப்பதாலோ, பெரிதாக எதுவும் நடந்து விடப் போவதில்லை.

யாரை எப்படி வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்பது, ராஜபக்‌ஷர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆகவே, பட்ஜெட் என எழுதப்பட்ட ஒரு வெறும் பெட்டியைத்தான் கொண்டு வந்தாலும் (பலமான ஓர் எதிர்க்கட்சி இல்லாத சூழலில்) அதனை வெற்றிபெறச் செய்யும் கலை, அவர்களுக்குத் தெரியும். இந்த விடயத்தில், முஸ்லிம் எம்.பிக்கள் ஒரு பொருட்டல்ல!

இதற்கு முன்னைய காலங்களில், முஸ்லிம் எம்.பிக்கள் எடுத்த முரண்நகைத் தீர்மானங்களுக்கு ஓர் உதாரணமாகவே, இங்கே இவ்விடயம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம், இன்றைய அரசாங்கம் உள்ளடங்கலாக, பல அரசாங்கங்களில் சட்டத் திருத்தங்கள், பிரேரணைகள், தேசிய அரசியல் சார்ந்த முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட வேளையில், ஒவ்வொரு முஸ்லிம் கட்சியும் அணியும் வெவ்வேறு நிலைப்பாடுகளையே எடுத்தன. சமூகத்துக்காகவே இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, இரண்டு தரப்பும் கூறியது.

இந்தப் போக்கு விஸ்வரூபம் எடுத்து, கட்சிக்குள் இரு நிலைப்பாடுகளை எடுக்குமளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. கடந்த ஏழெட்டு வருடங்களில், இதுதான் ‘ட்ரெண்ட்’ ஆக ஆகியிருக்கின்றது.

ஆனால், இவ்வாறு இரு வேறு பார்வைக் கோணங்களில் தீர்மானங்களை எடுக்கும் அரசியல்வாதிகள், தமது நகர்வு முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்கே என்று கூறுகின்றனர். அதைச் சமூகத்தின் பெரும்பாலான தரப்பினர் நம்புகின்றனர்; அவர்களுக்கு வேறு வழியில்லை.

இப்படியான நிறையச் சம்பவங்களைப் பட்டியலிட முடியும். இதற்கு மிகப் பிந்திய நல்ல உதாரணம், அரசியலமைப்பின் 20ஆவது திருத்தமாகும்.

20 திருத்த வாக்கெடுப்பின் போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் எதிர்த்து வாக்களித்தார்கள். முசாரப் எம்.பி 20 இனை மேலோட்டமாக எதிர்த்து விட்டு, அதில் உள்ளடங்கியிருந்த இரட்டைப் பிரஜாவுரிமை தொடர்பான ஏற்பாட்டை ஆதரித்தார். இவ்விரு கட்சிகளின் ஏனைய உறுப்பினர்கள் அனைவரும் தலைவருக்கு மாற்றமான முடிவை எடுத்தனர்.

இங்கே, ஆதரிப்பதோ எதிர்ப்பதோ பிரச்சினையல்ல; அது வேறுவிடயம். ஆனால், ஒரு கட்சிக்கு (கொள்கை என்று ஏதாவது இருந்தால்) இரு கொள்கைகள் இருக்க முடியாது. எனவே, இரு நிலைப்பாடுகளும் எடுக்கப்பட முடியாது.

இவ்வளவு நடந்த பிறகும், அவர்கள் எல்லோரும் ஒரே கட்சியில் தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவுமே இருக்கின்றார்கள். ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப் போவதாக, கட்சி சார்பாக அறிக்கைகள் வெளியாகின.

ஆனால், தலைவரின் விருப்பமின்றித் தாம் இந்த முடிவை எடுக்கவில்லை என்ற கருத்தை, சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் சாடை மாடையாகக் கூறத் தொடங்கியதும் வழக்கம்போல, எல்லாம் அடங்கி விட்டது.

சாதிக்க முடியாதததை எல்லாம் செய்து காட்டும் கலைதான் அரசியல் என்று, முஸ்லிம் அரசியல்வாதிகள் சொல்வதுண்டு. ஆனால், செய்யக் கூடியவற்றைக் கூட, காத்திரமாகச் செய்யத் தவறிய வரலாறுகளே அதிகமுள்ளன. ஆகமொத்தத்தில், மக்களைச் சிறப்பாக ஏமாற்றும் கலையே இன்று, ‘அரசியல் சாணக்கியம்’ என்றாகியிருக்கின்றது.

சரி! முஸ்லிம் அரசியல்வாதிகள் எல்லாம், சமூகத்திற்கான தீர்மானம் என்று சொல்வதே உண்மையாகவே இருக்கட்டும் என்று வைத்துக் கொள்வோம்.

அப்படியாயின், முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரின் அகால மரணத்திற்குப் பிறகு, அக் கட்சியின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டு, பின்னர் தலைவரான ரவூப் ஹக்கீம், இணைத் தலைவர்களுள் ஒருவரான திருமதி பேரியல் அஸ்ரப், அதன் பின்னர் கட்சிகளைத் தொடங்கிய ரிஷாட் பதியுதீன், ஏ.எல்.எம். அதாவுல்லா உள்ளடங்கலாக, கடந்த 20 வருடங்களில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள், இவ்வாறான நகர்வுகளின் மூலம், சமூகத்துக்கு எதைப் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள், என்ன சாதனையை நிகழ்த்தி இருக்கின்றார்கள்?

ஒன்றுக்கும் உதவாதவர்கள் கூட, நாடாளுமன்ற உறுப்பினராகியது; அமைச்சு, பிரதியமைச்சுப் பதவிகளை வகித்தமை; பணம், பொருள் சம்பாதித்தமை; அதிகாரத்தையும் வரப் பிரசாதங்களையும் சுகித்தமை என, முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அனைத்து எம்.பிக்களும், முஸ்லிம் சமூகத்துக்கு ஒருசில அபிவிருத்திகளைத் தவிர, வேறு எதைச் செய்திருக்கின்றார்கள்?

இன்றைய யதார்த்தத்தின் படி, அரசாங்கத்தை எதிர்த்து முஸ்லிம்கள் அரசியல் செய்வது, அவ்வளவுக்கு நடைமுறைச் சாத்தியமில்லை. ஏனெனில், அதற்கு ஏற்ற வகையில், தமிழ்த் தேசியத்தைப் போல, முஸ்லிம் தேசிய அரசியல் பலமாக அடித்தளமிடப்படவில்லை.

இந்த நிலையில், இணக்க அரசியல் நல்ல தெரிவாக அமையும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அந்த இணக்க அரசியலின் நன்மைகளை, சம்பந்தப்பட்ட எம்.பிக்கள் தலைவர்கள் மட்டுமன்றி, மக்களும் அனுபவிக்க வழி செய்ய வேண்டும்.

முஸ்லிம் சமூக அரசியல், இப்போது வெகுவாக மாறிவிட்டது. 1990களில் இருந்த சிந்தனையோட்டமும் தெளிவும் இப்போது இல்லை. அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி, உள்ளூரில் இருக்கின்ற இணைப்பதிகாரிகளுக்கு கூட, மேல் மட்டத்தில் இருந்து பதவி, பணம், வெகுமதி என ஏதாவது கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளது.

அதுமட்டுமன்றி, சில பிரதேசங்களின் வாக்காளர்கள் கையில், அதிகாரமும் ‘பசை’யும் உள்ள அரசியல்வாதிகளை, கண்மூடித்தனமாக நம்புகின்ற போக்கு, கடந்த பல வருடங்களாக அவதானிக்கப்பட்டுள்ளது. அதாவது, முஸ்லிம்கள் ஒரு சமூகமாகச் சிந்தித்து, தமது அரசியல்வாதிகளைத் திருத்துவதற்கு அல்லது மாற்றுவதற்கு முன்வரவில்லை என்பது கண்கூடு.

அதற்கு மாறாக, ஏமாற்றுக்காரர்கள், சமூக சிந்தனையற்றவர்கள், இவர்கள் நல்லது எதுவுமே செய்யமாட்டார்கள் என்று நன்றாக அறியப்பட்டவர்கள் போன்றோரை, முஸ்லிம் சமூகம் தொடர்ந்தும் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்கின்றது; தலைவர்களாக வைத்துக் கொண்டுள்ளது.

சாரதியும் நடத்துநரும் சரியில்லை என்று நன்றாகத் தெரிந்த பிறகும், அந்த பஸ்ஸில் இருக்கின்ற சொகுசான ஆசனங்களுக்காக, அதில் ஒலிக்கின்ற இடைக்காலப் பாடலுக்காக, ஆசுவாசமாக ஏறி அமர்ந்திருக்கும் பயணிகளைப் போல, முஸ்லிம்களைக் கருதலாம்.

முஸ்லிம் சமூகத்துக்காகவே தமது அனைத்துத் தீர்மானங்களும் நகர்வுகளும் எடுக்கப்படுகின்றன என்று கூறுகின்ற முஸ்லிம் அரசியல்வாதிகள், அதன் பிரதிபலனை சமூகத்துக்குப் பெற்றுக் கொடுத்தாகத் தெரியவில்லை. இத்தகைய போக்கைப் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, யாரும் தட்டிக் கேட்டதாகவும் தெரியவில்லை.

அப்படியென்றால், முஸ்லிம் அரசியல்வாதிகள் யாரைப் ‘பேய்க்காட்டி’க் கொண்டிருக்கின்றார்கள்? அரசாங்கத்தையா, பெருந்தேசியத்தையா, முஸ்லிம் சமூகத்தையா, மனச் சாட்சியையா? அல்லது, அவர்கள் தங்களைத் தாமே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார்களா?

ஆனால், ஒன்று மட்டும் நினைவிருக்கட்டும்!
ஏமாறுவதை விட, நாம் ஏமாற்றப்படுகின்றோம் என்பதை, ஒரு சமூகம் உணராமல் இருப்பதுதான், மிகப் பெரிய கைச்சேதமாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதலிரவு… சில யோசனைகள்…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post வீட்டிலேயே மழலையர் பள்ளி…!! (மகளிர் பக்கம்)