பெண்களின் கண்ணோட்டம் பற்றி எனக்குத் தெரியாது!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 42 Second

“கலைஞர்கள் ஒரு மீடியமாக இருக்கிறார்கள். ஒரு விஷயம் உலகிற்கு சொல்ல வேண்டும் அல்லது மக்களிடம் ஒரு விஷயம் கொண்டு செல்ல வேண்டுமென்றால் அந்த பாத்திரத்தை கலைஞர்கள் ஏற்கிறார்கள். அதில் எந்த விஷயம் சொல்ல வேண்டும்; அதை எப்படி சொல்ல வேண்டும்; எது வேண்டுமானாலும் சொல்லிவிடலாம் என்றில்லாமல், அது யாருக்கெல்லாம் சென்றடைகிறது என்பதை நிதானமாக யோசித்து கலைஞருக்கான பொறுப்பை சரிவர செய்ய வேண்டும்” என்கிறார் நடிகை நந்தினி.

‘பிளாக்‌ஷிப்’ யூ டியூப் தளத்தை தனக்கான ஆயுதமாக எடுத்துக் கொண்டு, நாம் அன்றாடம் கடந்து செல்லக்கூடிய நபர்களை, எளியவர்களை நின்று பார்ப்பதற்கான சூழலை உருவாக்கி இருக்கும் நந்தினி தனது கதையை தோழியரோடு பகிர்கிறார்.“இதை யாருமே நம்ப மாட்டாங்க. ஆனால், அது தான் உண்மை. ஒன்பதாவது, பத்தாவது படிக்கும் போதே எழுத்தாளர்-இயக்குநர் ஆக வேண்டும் என்கிற ஆசை மனதுக்குள் பட்டாம்பூச்சியாக சிறகடித்தது.

கே.பாலச்சந்தர் சாரின், ‘எதிர்நீச்சல்’ தான் நான் பார்த்த முதல் திரைப்படம். இதை பார்த்த பின் எழுத்து இன்னும் பிடிக்க ஆரம்பித்தது. குட்டி குட்டியா எழுத ஆரம்பித்து, அதை புத்தகங்களுக்கும் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் போது ‘நாளைய இயக்குநருக்கு’ சும்மா எழுதி அனுப்பினேன். எனது முழு கவனமும் மீடியா சார்ந்து இருந்ததால் பள்ளி படிப்பை முடித்ததும் கல்லூரியில் மீடியா சம்பந்தமாகவே படிக்கலாம்னு எலக்ட்ரானிக் மீடியா எடுத்தேன். அதில், பிஹைண்ட் த ஸ்கிரீன் கேமரா, எடிட்டிங் எல்லாம் இருந்தது.

கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது இன்டர்ன்ஷிப்பிற்காக பிளாக்‌ஷிப் அறிமுகமானது. அங்கு அப்படியே ரேடியோ ஒர்க் பண்ண ஆரம்பித்தேன். பின் அவர்கள் வீடியோவிலும் கால் பதித்து இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்றுள்ளனர். அதில் பெண்கள் சம்பந்தமான முதன்மை கதாபாத்திரத்தில் என் முகம் பரிட்சயமாக ஆரம்பித்தது. எழுத்து-இயக்கம் என்றிருந்ததால், நடிப்பதில் எனக்கு பெரிய ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் அவர்கள் நடிக்க சொல்லிக் கேட்டதால், முயற்சி செய்து பார்க்கலாம்னு தான் போனேன். நடிக்க ஆரம்பிச்சதும், கொஞ்சம் கொஞ்சமா நடிப்பதிலும் ஈடுபாடு அதிகமானது. அவர்களின் வீடியோக்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பிச்சு, என் பயணம் இப்போது மகிழ்ச்சியாக தொடர்ந்து வருகிறது” என்கிற நந்தினி, தான் நடிக்கும் கதாபாத்திரங்களின் கரு பற்றி பகிர்ந்து கொண்டார்.

“பெண்கள் சம்பந்தமான விஷயங்களை பேசவே யோசிக்கிற இந்தக் காலத்தில் அது குறித்து வீடியோக்கள் என்றால் சொல்லவா வேண்டும். நாம் தினசரி பலதரப்பட்ட மக்களை நம் வாழ்வில் சந்திப்பது மட்டுமில்லாமல் அவர்களை பற்றி கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக பெண்கள். ஆனால் அவர்களை நம்முடைய வாழ்க்கையில் அப்படியே ஜஸ்ட் லைக் தட் கடந்திருப்போம். அப்படிப்பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும்.

அவர்கள் இந்த சமூகத்தை எந்த கோணத்தில் பார்க்கிறார்கள், யோசிக்கிறார்கள் என்பதை மையமாக கொண்டு ‘இவள்’ என்ற தலைப்பில் சீரீஸ் செய்யலாம்ன்னு முடிவு செய்தோம். இதற்கு மூலக் காரணம் நான் கல்லூரி படிக்கும் போது விலை மாதுக்கள் குறித்து ஒரு பிராஜக்ட் செய்திருந்தேன். அதில் அவர்களின் வாழ்க்கை முறை, எண்ணம், சிந்தனை, மனநிலை, போராட்டங்கள் என அனைத்தும் குறித்து ஆய்வு செய்து எழுதி இருந்தேன். அந்த கண்ணோட்டம் தான் ‘இவள்’ உருவாக காரணம். என்னுடைய எண்ணத்தை விக்கி அண்ணாவிடம் சொன்னேன். அவர் இதே மாதிரி நான்கைந்து தலைப்பில் ஸ்கிரிப்ட் கொடுங்க ஏதாவது பண்ணலாம்னு சொன்னாங்க.

அதற்கான தேடுதலில் இறங்கும் போது சமூகத்தின் கண்ணோட்டம், மனிதர்கள் என எல்லாமே புதிதாக இருந்தது. இத்தனை நாள் இவர்களை எல்லாம் கவனிக்காமல் நாம் கடந்து சென்றிருக்கிறோம் என்று நினைச்ச போது எனக்குள் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது. அதை மற்றவர்களுக்கும் கடத்த முயற்சித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அதையே கொஞ்சம் பெரிதாக பண்ணலாம்னு ‘பெண் குயின்’ சீரீஸ் பண்ண ஆரம்பித்தோம். அதில் நாம் அன்றாட வாழ்வில் பார்க்கிற ஆட்கள், அம்மாக்கள், வேலை பார்க்கும் அக்காக்கள், தங்கைகள்… என எல்லோரையும் முன் நிறுத்தினோம். இவர்களை எல்லாம் நமக்கு தெரிந்திருந்தாலும் அவர்களை எப்படி பார்க்கிறோம்.

அவர்கள் மற்றவர்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதை நாம் யாருமே உற்று நோக்குவதில்லை. அவர்களை நாம் யாருமே பெரியதாக பார்ப்பதில்லை. சொல்லப்போனால் கண்டுகொள்வதில்லை என்றுதான் சொல்லணும். அவர்களும் சராசரி மனிதர்கள் தானே! இந்த சமூகத்தில் எல்லோரும் சமம் தான். ஏதோ ஒரு சூழல் காரணமாக அவர்கள் அங்கு இருக்கிறார்கள். நாம் இங்கு இருக்கிறோம். எனவே எல்லோரையும் சமமாக பார்க்க வேண்டும் என்கிற விஷயத்தை வலியுறுத்தியே எங்கள் வீடியோக்கள் பெரும்பாலும் அமைந்துள்ளது. எங்களின் வீடியோக்களை பார்த்து பலர் நேர்மறையாக கருத்துக்களை சொல்கிறார்கள்.

அது எங்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல ஒரு தூண்டுதலாக அமைந்துள்ளது. ஏதோ ஒரு விஷயம் சரியாக செய்கிறோம் என்கிற மன நிறைவு கிடைக்கிறது. நம்மால் முடிந்த விஷயங்களை சமூகத்திற்கு தெரியப்படுத்துவோம். மாறுவது மாறாதது அவரவர் விருப்பம். ஆனா, மாறினால் நல்லா இருக்கும் என்பது தான் நாங்க ஒவ்வொரு வீடியோ எடுக்க காரணம்’’ என்கிற நந்தினி, இந்த பார்வை தனக்கு எங்கிருந்து வந்தது என்பது பற்றி பேசினார்.

“என் வாழ்க்கையில் பெரும்பாலும் பெண்களின் பாத்திரம் கிடையாது. அப்பா தான் வளர்த்தாங்க. அண்ணாவோடு சேர்ந்து தான் வளர்ந்தேன். இப்போது நான் வேலைப் பார்க்கும் இடத்திலும் அண்ணன்களோடு தான் வேலைப் பார்க்கிறேன். ஆண்களுடனே நான் பயணித்ததால், பெண்களின் கண்ணோட்டம் எப்படி இருக்கும்ன்னு எனக்கு தெரியாது. சொல்லிக் ெகாடுக்கவும் யாரும் இல்லை. அது குறித்தான தேடலில் தான் நான் பல விஷயங்களை தெரிந்து கொண்டேன் என்று சொல்வதை விட கற்றுக் கொண்டேன் என்று சொல்லணும்.

எனக்கு, விக்னேஷ் அண்ணா, தூள் விக்கி இரண்டு பேருமே மெண்டார்கள். தூள் விக்கியோடு பேசும் போது அவர் சொல்கிற பெரியாரிய சிந்தனைகள் எனக்கு பிடித்திருந்தது. இப்போது முழுமையாக நடிப்பில் இயங்கிக் கொண்டிருந்தாலும் வரும் காலங்களில் இயக்கம் என்பதை தாண்டி, நான் எழுதி மற்றவரை இயக்க வைக்க வேண்டும் என்ற யோசனையில் இருக்கிறேன். இப்போது வெப் சீரீஸ், குறும்படங்கள் என சின்னச் சின்ன வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரும் போது அதையும் சரியாக பயன்
படுத்திக் கொள்கிறேன்.

இதுவரை பல கதாபாத்திரங்களில் நான் நடித்திருந்தாலும், மறக்க முடியாத பெரிய அங்கீகாரம் என்று பார்த்தால் கல்லூரி பிராஜெக்ட்டுக்காக முதன் முதலாக பண்ணின ‘கால் கேர்ள்’ பற்றியது. அவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் போது மனசுக்கு பாரமாகத்தான் இருந்தது. அவர்களுக்கும் தனிப்பட்ட உணர்வுகள், சூழல் எல்லாமே இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க போகும் போது உண்மையாலுமே அவர்கள் என்ன உணர்கிறார்களோ அதை புரிந்து கொள்ள முடிந்தது. என்னை ரொம்ப பாதித்த, என் மனதுக்கு ரொம்ப நெருக்கமான ஸ்கிரிப்ட் அதுதான்.

இதற்காக அவர்களிடம் பேசும் போது, மற்ற நாடுகளில் இருப்பது போல் சட்டமாக்குவது, அவர்களுக்கான அங்கீகாரம் இதை எல்லாம் தாண்டி எங்களை கடினமாக பார்க்காதீங்க என்பதுதான் எல்லோரும் சொன்ன ஒத்த கருத்து. ‘இது ஒரு வேலை… எங்களின் வாழ்வாதாரத்திற்காகவும் சூழல் காரணமாகவும் நாங்க இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறோம்… அவ்வளவுதான். இந்த வேலை வெளிநாடுகளில் எப்படி என்று தெரியவில்லை.

ஆனால் இங்கு தவறாகத்தான் பார்க்கிறார்கள். நாங்க யாரும் இதனை விரும்பி செய்யவில்லை. இந்த வேலை தான் செய்ய வேண்டும் என்று எங்களுக்கு ஆசையும் கிடையாது. சூழல்… வேறு வழி இல்லை… இந்த இடத்தில் இருக்கிறோம். அதைப் புரிந்து கொண்டு சக மனிதர்களாக பாருங்கள். பார்வையாலையே எங்களை கொலை செய்யாதீர்கள். உடல் ரீதியாக நாங்க ஒவ்வொரு முறையும் கொலை செய்யப்படுகிறோம். அதைகூட தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் பார்வையால் செய்யும் கொலை தான் எங்களை மேலும் ரணமாக்குகிறது…’ என்று அவர்கள் சொல்லும் போது, அவர்களையும் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை அவர்கள் சார்பாக முன் வைக்கிறோம்” என்கிறார் நந்தினி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுகதை-மனித நேயத்தின் மறுபதிப்பு!! (மகளிர் பக்கம்)
Next post அனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…? (அவ்வப்போது கிளாமர்)