சிசுவின் சீரற்ற பாதம்…பெற்றோர்களே கவனியுங்கள்!! (மருத்துவம்)
உலகளவில் இன்று பிறக்கும் குழந்தைகளில் பதினைந்து சதவிகிதம் குழந்தைகள் ஏதேனும் ஒரு வகை குறைபாட்டுடன் பிறக்கிறது என உலக சுகாதார நிலையம் ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு குழந்தைகளுக்கு உண்டாகும் உடல் மற்றும் மூளை வளர்ச்சி சார்ந்த குறைபாடுகள் ஏராளம் எனலாம். அவ்வகையில் சிசுவின் கால் பாத அமைப்பு உருக்குலைந்து பிறப்பதை நாம் கண்டிருக்கிறோம். இவ்வகை பாதிப்புகள் இப்போது குறைந்துவிட்டது என்றாலும், நம் உறவினர் மற்றும் நட்பு வட்டாரத்தில் இப்படியானக் குறைப்பாட்டுடன் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதால் இந்தக் குறைபாடு பற்றி இங்கே நாம் தெரிந்துகொள்வோம்.
க்ளப் ஃபூட்…
*க்ளப் ஃபூட் (Club foot) என்று மருத்துவ உலகால் அழைக்கப்படும் இந்த பிரச்சினை குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதம் சார்ந்த கோளாறு. இது பிறந்ததிலிருந்தே குழந்தையிடம் காணப்படும் ஒன்றாகும்.
*இதில் குழந்தையின் கால் பாதமானது சாதாரணமாக இருக்கும் இயல்பு வடிவத்திலிருந்து உள் பார்த்தவாறு திருப்பி (twist) இருக்கும்.
*பாதம் வளைந்து கீழ் நோக்கியும், உள் நோக்கியும் இருக்கும். இதனால் பாதத்தின் உட்புற வளைவானது அதிகரித்து காணப்படும்.
ஆய்வுகள் சொல்வது…
*பிறக்கும் ஆயிரம் குழந்தைகளில் இரண்டு குழந்தைகள் இதனால் பாதிப்படைகின்றனர்.
*ஆண் குழந்தைகள்தான் பெண் குழந்தைகளைக் காட்டிலும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
*இதில் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் அதிகமானோருக்கு இரு கால்களிலும் பாதிப்பு இருக்கும்.
காரணங்கள்…
*இதற்கானக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
*மரபணு மற்றும் சுற்றுப்புறச்சூழல் ஆபத்துக் காரணிகளாக இருக்கலாம் என ஆய்வுகள் சொல்கிறது.
*குடும்பத்தில் யாருக்கேனும் இவ்வகை பிரச்சினை இருந்தால் அது பின்னர் பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கலாம்.
*கர்ப்பக் காலத்தில் புகை பிடிக்கும் பழக்கம் உள்ள தாயின் குழந்தைக்கு இப்பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
*போதுமான அளவு பனிக்குட நீர் இல்லையென்றாலும் இப்பிரச்சினை வர வாய்ப்பு அதிகம்.
*மது அருந்துவதாலும் மகப்பேறு மருத்துவர் அறிவுரையின்றி கர்ப்பக் காலத்தில் மாத்திரைகள் எடுத்துக் கொள்வதாலும் வரக்கூடும்.
*குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை வாதம், போலியோ போன்ற நோய்களில் இந்தக் கோளாறு அதிகமாகக் காணப்படும்.
அப்படியே விட்டால்…
*பாதம் உட்புறமாக திருப்பி இருப்பதால் கணுக்கால் (ankle) கொண்டுதான் நடக்க முடியும். அதனால் நடப்பதற்கு சிரமம் ஏற்படும்.
*காலில் ஆணி உண்டாகும்.
*எலும்புகள் சீக்கிரம் தேய்ந்து கொண்டே வரும்.
*குழந்தையின் சுயநம்பிக்கை குறைவதால் மன அழுத்தம் உண்டாகும்.
கண்டறிதல்…
*கர்ப்பக் காலத்தின் இருபதாம் வாரத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை மூலமாக இதனைக் கண்டறிவார்கள்.
*அதில் தெரியவில்லை என்றால் குழந்தை பிறந்ததும் மருத்துவர்கள் சோதித்து கண்டறிவர்.
*மேலும் அதன் முழு அமைப்பையும் தன்மையையும் தெரிந்துக்கொள்ள எக்ஸ்ரே எடுக்க பரிந்துரை செய்வார்கள்.
தீர்வு…
* கண்டறிந்ததும் குழந்தைகள் நல மருத்துவர் முதலில் மெனிப்புலேஷன் (manipulation) எனும் நுட்பம் கொண்டு வளைந்த பாதத்தினை நேராக மாற்றுவார்கள்.
*பின் காஸ்டிங் (casting) செய்து நேராக வளைந்த பாதத்தினை தொடர்ந்து நேராக இருக்கும்படி செய்வார்கள்.
*குழந்தையின் எலும்புகள் மிருதுவாய் இருக்கும் என்பதால் எளிதில் இந்தக் குறைபாட்டினை இவ்வகை சிகிச்சை மூலம் எண்பது சதவிகிதம் சரி செய்ய முடியும். இதனை குழந்தை பிறந்த முதல் ஆறுமாதம் வரை முயற்சிக்கலாம்.
*பின் அது தோல்வியுற்றால் அறுவை சிகிச்சை மூலம் இறுக்கமாய் இருக்கும் கண்டக்கால் தசை நாணினை தளர்த்துவர். இதனை நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பரிந்துரைப்பார்கள்.
இயன்முறை மருத்துவம்…
*மேலே சொன்ன எல்லாவற்றுடனும் இயன்முறை மருத்துவப் பயிற்சிகளை மேற்கொண்டு வர வேண்டும்.
*இந்தப் பயிற்சிகள் சுற்றியுள்ள இறுக்கமான தசைகளையும், இணைப்பு திசுக்களையும் இலகுவாக மாற்றும்.
*மேலும் பாதத்தின் வடிவமைப்பு மோசமாகாமல் பாதுகாக்கும்.
*சரியான சீரான நடைபயிற்சியை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பர்.
*சரி செய்த பின் சிலநேரம் மீண்டும் இப்பிரச்சினை வரக்கூடும் என்பதால் ஐந்து வயது வரை இயன்முறை மருத்துவ உபகரணங்களை (braces, splints) பகலிலும், இரவிலும் அணிவது, இதற்கென வடிவமைக்கப்பட்ட காலணிகளை (shoes) பயன்படுத்துவது போன்றவற்றை பின்தொடர வேண்டும். இத்துடன் இயன்முறை மருத்துவப் பயிற்சிகளையும் தொடர வேண்டும்.
எனவே குழந்தையின் கால் பாத அமைப்பு உருக்குலைந்து பிறப்பதைக் கண்டு அச்சப்படாமல், உடனே அதைக் கண்டறிந்து தக்க சிகிச்சையினை அளிப்பதன் மூலம் வளைந்த பாதத்தினை சீர் செய்து பட்டாம்பூச்சிகளான மழலை செல்வங்களை குழந்தைகளோடு குழந்தைகளாய் பறக்கவிடலாம்.
Average Rating