நியுஸ் பைட்ஸ்: குழந்தை திருமணம் உலகளவில் 60 சிறுமிகள் உயிரிழப்பு!! (மகளிர் பக்கம்)
உணவு டெலிவரி செய்யும் பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு
மக்களுக்கு ஆன்லைன் மூலம் வீட்டிற்கே உணவு வினியோகம் செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, தன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பணியில் பெண்களையும் நியமித்துள்ளது. வெயில், மழை என்று பாராமல், டெலிவரி செல்ல வேண்டும் என்பதால் பெண்களுக்கு இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் இதுவரை 1000 பெண் உணவு வினியோகிப்பவர்கள் இந்நிறுவனத்தில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.
குழந்தை திருமணம் உலகளவில் 60 சிறுமிகள் உயிரிழப்பு
உலகளவில் ஒவ்வொரு நாளும் 60 சிறுமிகள், குழந்தை திருமணத்தால், சிறு வயதிலேயே கர்ப்பம் தரித்து குழந்தைப் பிறப்பின் போது இறப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. தென் ஆசியாவில் மட்டும் ஒரு நாளைக்கு 6 சிறுமிகள் உயிரிழக்கின்றனர். இந்த அதிர்ச்சி தகவல்களை, ‘சேவ் தி சில்ட்ரன்’ எனும் அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.
வனவிலங்கு மேம்பாலம்
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உலகின் மிகப்பெரிய வனவிலங்கு பாலம், பத்து வழிச் சாலையின் நடுவே கட்டப்படவுள்ளது. மலைப் பகுதியில் மனிதர்கள் சாலைகளை உருவாக்கும் போது, அது வனவிலங்குகளின் பாதையை அடைப்பதால், அவைகள் பாதுகாப்பாக தங்கள் பாதையில் செல்ல பாலம் அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது விலங்கு ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பெண் குழந்தை பிறந்ததை பெட்ரோல் தந்து கொண்டாடிய உரிமையாளர்
மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் பங்க் ஒன்றை ராஜேந்திர சாய்னானி என்பவர் நடத்தி வருகிறார். இவருக்கு வாய் பேச முடியாத சகோதரி உள்ளார். அவருக்கு சமீபத்தில், பெண் குழந்தை பிறந்தது. மருமகள் பிறந்த சந்தோஷத்தில் அன்று தனது பெட்ரோல் நிலையத்திற்கு வந்த அத்தனை வாகன ஓட்டிகளுக்கும் இலவச பெட்ரோல்-டீசலை அளித்துள்ளார். இவரது கொண்டாட்டத்தை குடும்பத்தினரும் வரவேற்று ஆண் குழந்தை பிறக்கும் போது இருக்கும் அதே மகிழ்ச்சி, பெண் குழந்தை பிறக்கும் போதும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கலைஞர்களுக்கு அடிப்படை வருமானம்
பொதுவாகவே கலைஞர்கள் போதுமான வருமானம் இல்லாமல் சிரமப்படுவது நமக்கு தெரிந்ததுதான். இதனால் பல கலைஞர்கள் திறமை இருந்தும் வருமானம் இல்லாததால் வேறு வேலையில் ஈடுபடும் சூழ்நிலைதான் நிலவி வருகிறது. இது போன்ற கலைஞர்கள் வருமானத்தை எண்ணி துவண்டு போகாமல் தங்கள் கலையில் மட்டும் ஆர்வம் செலுத்த அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் அடிப்படை வருமானம் கொடுக்கப்படும் என அயர்லாந்து அரசு அறிவித்துள்ளது.
எகிப்தில் முதல் முறையாக 98 பெண் நீதிபதிகள்
எகிப்தில் நீதித்துறையில் பிரத்யேகமாக ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில், பெண்கள் பல முறை விண்ணப்பித்தும் நிராகரிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் சிசி, சில மாதங்களுக்கு முன், நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என அறிவித்ததை அடுத்து, 98 பெண் நீதிபதிகள் முறையான பயிற்சி பெற்று பதவியேற்றுள்ளனர்.
மியாமி பள்ளிகளில் மின்சார பேருந்துகள்
ஹோலி த்ரோப், 14 வயது சிறுமி தனது பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியின் மூலமாக டீசலால் வெளியாகும் கார்பன்டையாக்சைட் புகையினை சுவாசிப்பதால் ஏற்படும் விளைவுகள் குறித்த புராஜெக்ட் செய்துள்ளார். இதன் மூலம் தனது பள்ளி பேருந்தில் அதிகப்படியான கார்பன்டையாக்சைட் வாயு வெளியாவதை அறிந்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட, மியாமியில் பள்ளி பேருந்துகள் அனைத்தும் மின்சார பேருந்தாக மாற்றப்பட்டுள்ளது.
Average Rating