கோட்டை வாசலில் ‘காலக்கண்ணாடி’ !! (கட்டுரை)

Read Time:10 Minute, 30 Second

இலங்கையின் சிறந்த அரணாக விளங்குவது திருகோணமலை; அன்று இலங்கையைப் பிடிக்கும் நோக்கமாக வந்த போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரும், முதன் முதலாகக் கால்பதித்த இடம் திருகோணமலைதான்.

இலங்கையில் தமிழர்கள் முதல் முதலாகக் கால் பதிந்த பிரதேசம், வாழ்ந்த பிரதேசம் திருகோணமலைதான். இங்ஙனம், தமிழர் நாகரிகம் பரவியிருந்த பிரதேசத்தில், அதன் நடுநாயகமாக ஒரு சைவ நகரம் (கோவில்) இருந்திருத்தல் இயல்புதான்.

இத்தகைய புராதனப்பெருமை வாய்ந்த ஸ்தலத்தின் வரலாறு முமுவதும் கிடைக்கப் பெறாமை, தமிழர் தம் தவக்குறையென்றே சொல்லலாம். பண்டைய வரலாறு, காலத்திரையல் மூடப்பட்டுக் கிடக்கின்றது. ஆனாலும் கிடைத்த வரலாற்று விடயங்களை, கல்வெட்டுகளைக் கூட பாதுகாக்க முடியவில்லை என்பது மிகவும் கவலையான விடயம்.

ஈழத்தில் பாடல் பெற்ற சிவஸ்தலங்களாயிருப்பன திருக்கோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம் என்னுமிரண்டுமாகும். தமிழ் நாட்டுத் திருத்தலங்களின் வரலாறுகள், பன்னெடுங்காலமாக அகில உலகச் சைவமக்களின் நெஞ்சில் நிலைபெற்றிருப்பது போன்று, ஈழ நாட்டுத் திருத்தலங்களும் இந்துக்களின் இதயத்தில் இருந்து வருகின்றன.

திருக்கோணேஸ்வரம், இலங்கையின் கிழக்கே, கிழக்கு மாகாணத்தில் உலகப் பிரசித்திபெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் அமைவதற்குச் சாதகமாயுள்ள மலைகளொன்றின் உச்சியில் இருக்கின்றது.

மூன்று மலைகளைக் கொண்டு முக்கோண வடிவில் அமைந்திருப்பதால் திருக்கோணமலை, திருகோணமலை என்று இந்த நகரம் பெயர் பெற்றது. இந்த நகரத்தில் பிரசித்தி பெற்ற திருத்தலம், கோணேஸ்வரம் ஆதலால் திருகோணமலை எனவும் இந்த நகரம் பெயர் பெறுகின்றது.

இற்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இந்துக்களின் திருத்தலமாகிய திருக்கோணேஸ்வரம் புனித சேஷத்திரமாக இருந்து வந்ததைப் புராண, இதிகாச வரலாறுகள் கூறுகின்றன.

எனவே இந்தத் தலத்தின் இயல்பான தெய்வீக விசேடத்தாலே, இந் நகரம் திருக்கோணமலை என்ற பெயரால் வழங்கி வருகின்றது. மேலும், இலங்கையை அரசாண்ட தேவனம்பியதீசன் காலத்தில், புனித வெள்ளரசு மரக் கன்றுடன் சங்கமித்தை இந்தத் தலத்தில் வந்திறங்கியதாயும் அப்பொமுது கோகர்ணம் என்று இதற்குப் பெயர் வழங்கி வந்ததென்றும் மகாவம்சத்திலிருந்து அறியக்கிடக்கிறது.

போர்த்துக்கேயர் 1505 ஆம் ஆண்டு இலங்கையில் கால்தடம் பதித்தனர். போர்த்துக்கேயரின் வருகையின் பொழுது, திருகோணமலை மாவட்டம் நான்கு பிரிவுகளாக இருந்து. கொட்டியாரம்பற்று, தம்பலகாமம் பற்று, கட்டுக்குளப்பற்று, திருகோணமலை நகர் ஆகிய நான்கு பிரிவுகளாகும். இவற்றை தமிழ் வன்னிய குறுநில மன்னர்கள் ஆட்சி செய்தனர்.

யாழ்ப்பாண இராச்சியத்தின் ஆளுகைக்குள் திருகோணமலை உட்பட்டிருந்தது. ஆனாலும், கொட்டியாரம் பற்று காலத்துக்குக் காலம் கண்டிய மன்னர்களின் ஆட்சியிலும் இருந்தது. 1551 ஆம் ஆண்டில் சங்கிலியனின் ஆட்சி அஸ்தமிக்கத் தொடங்கிய பொழுது, கண்டி இராச்சியம் எமுச்சி பெற்றது.

இலங்கையின் கரையோரப் பகுதிகளை கைப்பற்றிய போர்த்துக்கேயரை அகற்றுவதற்காக, கண்டிய மன்னன் செனரத் விடாமுயற்சி கொண்டான். அதற்காக டச்சுக்காரருடன் ஒப்பந்தம் செய்து கொண்டான். இச் சூழ்நிலையில் டச்சுக்காரர் திருகோணமலையைப் பிடிக்க முடியாமல் தடுப்பதற்கு போர்த்துக்கேயர் நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

கோட்டை ஒன்றை கட்டுவதற்கு போர்த்துக்கேய தளபதி கொன்ஸரன்ரைன் டி சா, கோணேஸ்வர ஆலயம் அமைந்திருந்த மலைப்பகுதியை தெரிவு செய்தான் என்பது வரலாறு.

இந்த நிலையில், கிழக்கில் திருகோணமலை மாவட்டத்தில் புராதன வரலாற்றுச் சாசனங்கள் நிறையவே காணப்படுகின்றன. காலத்தால் இன்றும் பேசப்படும் ஒரு விடயத்தை பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

சடையவர் மகன் வீரபாண்டியன், இலங்கை அரசனான முதலாம் புவனேகபாகுவை அடக்கித் திருகோணமலையில் தன் கயற்கொடியைப் பதின்மூன்றாம் நூற்றாண்டில் பொறித்தான் என்று தென்னிந்தியக் கோயில் சாசனங்களில் ஒன்றான குடுமியாமலைச் சாசனம் கூறுகின்றது.

இவ் வினைக் கயல் மீன்கள், திருகோணமலை பிரட்ரிக் கோட்டை நுழைவாயிலின் இரு மருங்கிலும் இப் பொமுதும் காணப்படுகின்றன. அத்துடன் அன்று ஆயிரங்கால் கோவில் என்று அழைக்கப்பட்ட கோணநாதர் கோவில் தூண் ஒன்றில் பொறிக்கப்பட்ட கல்வெட்டின் சிறு பகுதியொன்று, பிரட்ரிக் கோட்டை வாசல் தூணில் உள்ள மீன் சின்னத்துக்குக் கீழே இன்றும் சிதைந்த நிலைமையில் காணப்படுகின்றது. இக் கல் வெட்டானது குளக்கோட்ட மன்னன் காலத்து தீர்க்க தரிசன கல்வெட்டாகும்.

கல்வெட்டை போர்ச்சுக்கேய மூலத்துடன் ஒப்பிட்டு பிரபல தமிழ் பண்டிதர் ஒருவரின் உதவியுடன் முதலியார் ஸி. ராஜநாயகம் (யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற பிரபல நூலின் ஆசிரியர்) கீழ்க்கண்டவாறு திருத்தி எழுதினார்.

முன்னே குளக்கோட்டன் மூட்டு திருப்பணியை
பின்னே பறங்கி பிடிக்கவே- மன்னாகேள்
பூனைக்கண், செங்கன், புகைக்கண்ணன் போனபின்
மானே வடுகாய் விடும்.

குளக்கோட்டு மன்னன் இந்தக் கோவிலைக் கட்டுவித்த பொழுது, அதன் வரும் காலம் எப்படியிருக்கலாமென்ற சோதிடத்தை இப்படி கல்லில் எழுதி வைத்திருந்தார்கள். கோவிலை இடித்த போர்த்துக்கேயர்கள் இதைப்பார்த்து ஆச்சரியமடைந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது.

முன்னர், குளக்கோட்ட மகாராஜாவால் கட்டப்பட்ட இந்தக் கோவிலை, பிறகு ஒரு சமயம் பறங்கிகள் பிடித்துக் கொள்வார்கள்; பிறகு பூணைக்கண்ணர்கள், சிவப்புக் கண்ணர்கள், புகைக் கண்ணர்கள் ஆகிய பல சாதியினர் ஆதிக்கத்திலிருந்து விட்டு, கடைசியாக வடுகர்கள் (தெலுங்கர்) ஆதிக்கத்துக்குப் போய்விடும் என்பது இதன் கருத்தாம் என குறிப்பிடப்படுகின்றது.

காலவெள்ளத்தைக் கடந்து வந்த இந்தக் கல்வெட்டு, கோட்டையின் முகப்பில் இன்றைக்கும் தென்படுகிறது . எனவே திருகோணமலையின் வரலாற்றுடனும் ஈழத்தில் தமிழரின் அடையாள சின்னமாகவும் இவ் விடயம் திகழ்வதுடன், திருக்கோணேஸ்வரத்தின் வரலாறுகளை விவரிப்பதாகவும் காணப்படும் இச்சாசனங்களின் இன்றைய நிலை பற்றி பார்க்கின்ற போது மிகவும் கவலை அளிக்கின்றது.

வீதிகளுக்கு பூசப்படும் வர்ணங்கள், இச் சாசனக்கல் மீது பூசப்பட்டிருப்பதால், சாசனங்களின் தொன்மை சிதைக்கப்பட்டு இருப்பதுடன், அதன் சிறப்பும் அதன் அழகும் அழிக்கப்பட்டிருக்கின்றது. இச் சாசனம் அமைந்துள்ள பிரட்ரிக் கோட்டை வாசலின் ஊடாக தினமும் வாகனங்கள் பயணிப்பதால் அதன் அதிர்வுகளாலும், வாகனங்களின் புகைகளலும் சாசனங்கள் மேலும் சேதம் ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உண்டு.

வரலாற்றை அழிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா எனும் சந்தேகமும் இதனால் ஏற்படுகின்றது. தொல்பொருள் திணைக்களம், இந்தப் புராதன வரலாற்று சின்னங்களைப் பாதுகாக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது . இந்த நிலையில், இச்சாசனங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் திருக்கோணேஸ்வரத்தின் ஆலய பரிபாலன சபையினருக்கும் திருகோணமலை மண்ணின் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் இருக்கின்றது. இவ் விடயத்தில் இவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா……?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறே நாட்களில் நான்கு அரபு நாடுகளைத் தோற்கடித்த இஸ்ரேலின் யுத்தம்!! (வீடியோ)
Next post கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)