கிச்சன் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)
*ஒரு கப் பால்பவுடர், ஒரு கப் வெண்ணெய், ஒரு கப் சர்க்கரை சேர்த்துக் கிளறி பூத்து வரும் பொழுது இரண்டு ஸ்பூன் கோகோ பவுடர் தூவி தட்டில் கொட்டி வில்லைகள் போட்டால் சாக்லேட் கேக் ரெடி.
*உக்காரை செய்யும் போது இளக்கி ஆறிவரும் போது வறுத்த தேங்காய்த் துருவலைச் சேர்த்துக் கிளறினால் சுவை சூப்பராக இருக்கும்.
*அச்சு முறுக்கு செய்ய மாவு அரைக்கும் போது அரை கப் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்தால் முறுக்கு கரகரப்பாக இருக்கும்.
– ஆர். பத்மப்பிரியா ஸ்ரீரங்கம்.
*ஸ்வீட் சோமாஸ் செய்யும் போது, பொட்டுக்கடலையை மிக்சியில் நைசாகப் பொடி செய்து அத்துடன் வறுத்த முந்திரிப்பருப்பு, துருவிய கொப்பரை, சர்க்கரை, ஏலக்காய் தூள் இவற்றைச் சேர்த்து சோமாசில் பூரணமாக அடைத்து வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்க வேண்டும்.
*குலோப் ஜாமூன் கோலி போல் கடினமாக இருக்கிறதா? ஜீராவுடன் குலோப் ஜாமூன்களை அடுப்பில் வைத்து உடையாமல் சிறிது நேரம் கிளறிக் கொடுத்தால் மென்மையாகி விடும்.
*தீபாவளி பண்டிகைக்கு ஒரு வித்தியாசமான ஆனால் சுவையான ஜவ்வரிசி காரா பூந்தி செய்யலாம். ஜவ்வரிசியை எண்ணெய் விட்டு பொரித்து எடுக்க வேண்டும். உதிரி உதிரியாய் இருக்கும். இத்துடன் சிறிது வற்றல்தூள், பெருங்காயத்தூள், தேவையான உப்பு, மூன்று தேக்கரண்டி நெய் சேர்த்து நன்றாக கலந்தால் சுவையாக இருக்கும்.
– ஆர்.ராமலெட்சுமி, திருநெல்வேலி.
*ரவா லாடு, பாசிப்பருப்பு லாடு செய்யும் போது கொஞ்சம் மில்க் பவுடர், கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நெய்யை உருக்கி லாடு பிடித்தால் நன்றாக இருக்கும். சர்க்கரை பாகு செய்யும்போது சில துளிகள் எலுமிச்சம் பழச் சாறு விட்டால் பாகு முறியாமல் பதமாக இருக்கும்.
*தேங்காய் பர்ஃபி தயாரிக்கும் போது சில நேரம் பதம் தவறி முறுகி விடும். அப்போது பாலில் ஊறவைத்து, மறுபடியும் கிளறிவிட்டு இறக்குவதற்கு முன்னால், நெய்யில் வறுத்த கடலை மாவை சிறிதளவு (இரண்டு ஸ்பூன்) தூவி இறக்கினால் தேங்காய் பர்ஃபி பதமாக வந்து விடும்.
– எம்.வசந்தா, சென்னை.
தீபாவளி லேகியம்
தேவையானவை:
அரிசி திப்பிலி- 2 டேபிள்ஸ்பூன்,
சுக்கு- 10 சிறு துண்டு,
மிளகு- 1 டேபிள் ஸ்பூன்,
ஓமம்- 1 டேபிள்ஸ்பூன்,
கிராம்பு- 6,
தனியா- 1 டீஸ்பூன்,
விரளி மஞ்சள்- 1,
வெல்லத்தூள்- 1 கப்,
நல்லெண்ணெய்- 2 டேபிள்ஸ்பூன்,
நெய்- 5 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய்- 3,
சித்தரத்தை- 1 சிறிய துண்டு.
செய்முறை:
வெல்லம், எண்ணெய், நெய் தவிர மற்றவற்றை தனித் தனியாக மிக்ஸியில் பொடிக்கவும். தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் அரைத்தப் பொடியை சேர்த்து சிம்மில் வைத்து கிளறவும். 3 நிமிடம் கிளறி பின் எண்ணெய், நெய்யை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும். அது கெட்டியாகி ஓரத்தில் எண்ணெய் பிரிந்து பாகு பளபளப்பாக வரும்போது லேகியப் பதத்துக்கு சுருண்டு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும். தீபாவளி பலகாரம் சாப்பிடுவதால் அஜீரணம் வராமலும், இருமல், சளி தொல்லை ஏற்படாமல் இருக்கவும் உதவி புரியும்.
– மகாலெஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
கற்கண்டு வடை
தேவையானவை:
உளுத்தம் பருப்பு- 1 கப்,
கற்கண்டு- 100 கிராம்,
ஏலக்காய் பொடி- சிறிது,
நெய் அல்லது எண்ணெய் – பொரிக்க.
செய்முறை:
உளுத்தம் பருப்பை நீரில் களைந்து நல்ல நீரில் ஊறவைத்து, நன்கு ஊறியதும் நீரை வடித்துவிட்டு கற்கண்டு சேர்த்து நைசாக கெட்டியாக அரைக்கவும். மாவில் ஏலக்காய்ப் பொடி சேர்த்து வடையாகத் தட்டி பொரித்து எடுக்கவும்.
Average Rating