தினை லட்டு சாமை மிக்சர் மாப்பிள்ளை சம்பா அதிரசம்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 36 Second

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு. ஏ.சி அறையில் அமர்ந்து லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும், விவசாயி நிலத்தில் இறங்கவில்லை என்றால் நம் அனைவருக்கும் உணவு என்பது அரிய பொருளாக மாறி இருக்கும். இப்போது விவசாயி மட்டுமில்லாமல்… படிச்ச பட்டதாரிகளும் ரசாயனம் அற்ற விவசாயம் செய்ய வேண்டும் என்பதில் தங்களின் கவனத்தை செலுத்தி வருகிறார்கள் என்பது வரவேற்கக் கூடிய விஷயம். இவர்கள் இயற்கை முறையில் விவசாயம் செய்வது மட்டுமில்லாமல் மற்ற விவசாயிகளுக்கும் அந்த வழியினை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் திருவள்ளூரில் 60 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயத்தினை செய்து வருகிறது ‘நம்ம FARM’.

“நல்ல காற்று, ரசாயனமற்ற இயற்கையான நிலம்… இதை உருவாக்கி வருங்கால சந்ததியினருக்கு நல்ல உணவு கிடைக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் விவசாயிகளுக்கு நல்லதொரு வருமானம் ஏற்படுத்தி தரணும், விவசாயம் பொய்த்துவிட்டது என்று அவர்கள் தற்கொலை செய்வதை தடுத்து அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கணும். இது தான் எங்களின் குறிக்கோள்’’ என்று பேசத் துவங்கினார் ‘நம்ம FARM’ அமைப்பினை சேர்ந்த காயத்ரி.

‘‘எங்க அமைப்பின் நிறுவனர் ஹிமா கிரண். அவருடன் சேர்ந்து நான் மற்றும் னிவாசன் என மூவர் இதில் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இந்த அமைப்பு மட்டுமில்லாமல், ‘நிலா ஃபுட்ஸ் & ஹெல்த்’ என்ற பெயரில் ஆன்லைன் முறையில் ஆர்கானிக் உணவுகளை விற்பனை செய்து வருகிறேன். எங்களின் 60 ஏக்கர் நிலத்தில் எந்த வித ரசாயனம் கலப்பு இல்லாத 100% ஆர்கானிக் முறையில் தான் விவசாயம் செய்கிறோம். அதில் இருந்து விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் கொண்டு இனிப்பு மற்றும் கார ஸ்னாக்ஸ் உணவுகளை தயாரித்து ஆன்லைன் மூலமாக விற்பனை செய்கிறோம்’’ என்றவர் 60 ஏக்கர் நிலத்தில் எவ்வாறு விவசாயம் செய்ய துவங்கினார் என்பதைப் பற்றி விவரித்தார்.

‘‘எங்க மூவருக்குமே சேர்த்து திருவள்ளூரில் 60 ஏக்கர் நிலம் இருக்கு. அதில் தான் முதலில் இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்தோம். நாங்க செய்யும் விவசாயத்தை பார்த்த மற்ற விவசாயிகள் அவர்களின் நிலத்தையும் ஆராக்கியமாக மாற்றித்தரும்படி கேட்டாங்க. அவங்களுக்கு மாற்றி அமைத்து தந்தது மட்டுமில்லாமல் விவசாயம் செய்ய வழிகாட்டி வருகிறோம். தற்போது திருவள்ளூர் மட்டுமில்லாமல், திண்டிவனம், ஆற்காடு பக்கத்திலும் செய்து வருகிறோம்.

சிலர் விவசாயம் செய்ய தயாராக இருப்பார்கள். ஆனால் அவர்களிடம் நிலம் இருக்காது. நிலம் வைத்திருப்பார்கள் ஆனால் அவர்களுக்கு விவசாயம் மேல் ஈடுபாடு இருக்காது. அவங்க அந்த நிலத்தை எந்த பயனும் செய்யாமல் வைத்திருப்பார்கள். இவர்கள் இருவரையும் இணைத்து அதில் விளையும் பொருட்களில் இருந்து கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தில் பிரித்துக் கொடுத்திடுவோம். இதனால் இருவருக்குமே ஒரு கணிசமான வருமானம் கிடைக்கும்.

இது போல் விவசாயிகள் குழு, விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிற குழுக்களிடமிருந்தும் அவர்களின் தயாரிப்புகளை பெற்று விற்பனை செய்கிறோம். அதாவது, இயற்கை முறையில் செயல்பட்டு வரும் விவசாய குழுக்களிடம் இருந்து விதைகளை சேகரித்து, அதை விளைவிக்கும் படி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். இந்த அமைப்பினை ஆரம்பித்து ஒரு வருடமாகிறது. கரெக்ட்டா சொல்லணும்ன்னா போன வருடம் தீபாவளியின் போது ஆரம்பித்தோம். இன்று வரை வெற்றிகரமாக இயங்கி வருகிறோம்’’ என்றவர் பாரம்பரிய உணவுகளை சேகரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.

‘‘இயற்கை விவசாயத்தை துறந்து எப்போது ரசாயனத்தை பின்பற்ற ஆரம்பித்தோமோ அப்போது இருந்தே நம்முடைய பாரம்பரியத்தை நாம் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விட்டோம். இப்போது எல்லாருக்கும் இயற்கை விவசாயம் மேல் நம்பிக்கை வந்துள்ளது. அதனால் விவசாயிகள் பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள். அவ்வாறு விவசாயம் செய்பவர்களிடம் இருந்து பாரம்பரிய அரிசி வகைகளை சேகரிக்கிறோம்.

அந்த வகையில் சம்பா, சீரக சம்பா, பூங்கர், மாப்பிள்ளை சம்பா, குள்ளக்கார், வெள்ளை பொன்னி போன்றவைகளை எங்கள் தோட்டத்திலேயே விளைவிக்கிறோம். குள்ளக்கார் அரிசி, நரம்பு மண்டலத்திற்கு தேவையான பிராணவாயு, புரதம், எண்ணெய் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புக்கள் தொடங்கி பலபல சத்துக்களும், மருத்துவக்குணங்களும் கொண்டது. பூங்கர் அரிசி பெண்களின் ஹார்மோன் பிரச்சினைகளை குணப்படுத்துவதால், இது ‘பெண்கள் அரிசி’ என்றும் அழைக்கப்படுகிறது. இது கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது. இவைகள் போக மீதமுள்ள அரிசிகள் யாராவது கேட்டால் மற்ற விவசாயிகளிடமிருந்து பெற்றுப் தருகிறோம்” என்கிற காயத்ரி, இதன் மூலம், விவசாயிகளுக்கு உரிய விலையினை கொடுக்க முடிகிறது என்கிறார்.

‘‘பொதுவாக விவசாயிகள் விளைவிக்கிற பொருட்களுக்கு அவர்களால் அதற்கேற்ற விலையினை நிர்ணயிக்க முடிவதில்லை. என்ன விலைக்கு எடுக்கிறார்களோ அந்த விலைக்கு தான் கொடுக்கிறார்கள். இதனால் அவர்களால் குறைந்த அளவிலும் லாபம் ஈட்ட முடிவதில்லை. உதாரணமாக கத்திரிக்காய் சந்தையில் ரூ.40-க்கு விற்பனையாகிறது என்றால், அதை விவசாயிகளிடமிருந்து ரூ.5-க்கு கொள்முதல் செய்திருப்பார்கள். வழியில் இருக்கிற மண்டி, போக்குவரத்து, இடைத்தரகர் என எல்லாம் முடிந்து வாங்குபவருக்கு பல மடங்கு விலை உயர்ந்து நிற்கிறது. எனவே நாங்கள் இடைத்தரகர்கள் ஏதும் இன்றி, விவசாயிகளுக்கே உரிய விலை கிடப்பது மாதிரியான நிலையினை உருவாக்குகிறோம். எங்களிடம் வெளிப்படைத் தன்மை இருப்பதால் விவசாயிகளிடமும், அதை சந்தைக்காக வாங்குபவர்களிடமும் ஒரு நல்ல உறவு நீள்கிறது.

அதே நேரத்தில் எங்களுடன் இணைந்து விவசாய உற்பத்தியில் ஈடுபட்டிருப்பவரும் இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் இதை பார்த்து அருகில் இருப்பவர்களும் இதற்கு மாறி வருகின்றனர். இது எங்களுக்கு கிடைத்த ஒரு வெற்றியாக பார்க்கிறோம். நாங்கள் என்ன நோக்கத்திற்காக ஆரம்பித்தோமோ அது நிறைவேறி வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மரபு சார் விவசாயத்தில் நல்ல விளைச்சலும் இருப்பதை விவசாயிகள் உணர ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் நல்ல உணவுகளை மற்றவர்களுக்கு கொடுக்கிறோம் என்கிற திருப்தியோடு, அவர்களுக்கான ஒரு வருமானமும் கிடைக்கும் போது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது.

இந்த அரிசி மற்றும் மற்ற விவசாய பொருட்களோடு, பாரம்பரிய அரிசி, சிறு தானியங்கள் கொண்டு தீபாவளி மற்றும் மற்ற பண்டிகை காலங்களில் பலகாரங்களும் செய்து கொடுக்கிறோம். இதற்கு நாட்டுச் சர்க்கரை, மரச் செக்கு எண்ணெயில் ஆட்டின கடலை எண்ணெய் மற்றும் நாட்டு மாடு பசு நெய் தான் பயன்படுத்துகிறோம். தினை லட்டு, சாமை மிக்சர், மாப்பிள்ளை சம்பா-சிகப்பரிசி அதிரசம், வரகு முறுக்கு என தீபாவளி நேரங்களில் மட்டுமே கொடுக்கிறோம். வாரத்தின் இறுதி நாட்களில் தமிழகத்தின் மற்ற பகுதி, சென்னை மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்களை அனுப்பி வைக்கிறோம்” என்கிறார் காயத்ரி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post கண்ணை சிமிட்டி கேட்கும் போது என் மனசு ஐஸ்கிரீம் போல உருகிடும்! (மகளிர் பக்கம்)