பிரசவ கால வலிப்பு!! (மருத்துவம்)
கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் ஒவ்வொன்றுமே சவாலானதாகத்தான் இருக்கும். உயர் ரத்த அழுத்தம், தற்காலிக நீரிழிவு போன்ற பெரிய பிரச்னைகளும் சங்கடப்படுத்தும். இதில் சில பெண்களுக்கு கர்ப்ப காலம் மற்றும் பிரசவ காலத்தில் சிக்கலை ஏற்படுத்தும் விதமாக வலிப்பும் உண்டாகக் கூடும். கர்ப்பிணிகள் மட்டுமின்றி, அவரது குடும்பத்தினரும் இது பற்றி தெரிந்துகொள்வது அவசியம் என்பதால் நோய்க்குறியியல் நிபுணர் சுஜய் பிரசாத்திடம் இதுபற்றிப் பேசினோம்…
கர்ப்ப கால வலிப்பு ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?
‘‘கர்ப்ப காலத்தின் பிற்பகுதியில் தாய்க்கும், குழந்தைக்கும் கடும் வலிப்பு ஏற்பட்டு, அதனால் சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படுவதை பிரசவகால வலிப்பு நோய் எக்லாம்சியா(Eclampsia) என்கிறோம். மருத்துவத்துறையின் புள்ளிவிவரங்கள் எக்லாம்சியாவை கவலைக்
குரிய காரணியாகவும், விழிப்புடன் இருக்க வேண்டிய முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கின்றன.
உலக அளவில் 14 சதவீத பிரசவகால மரணங்கள் எக்லாம்சியாவால் நிகழ்கின்றன. ஏறக்குறைய, 50-ல் ஒரு பெண் எக்லாம்சியாவால் மரணிக்கிறாள். 23 சதவீத பெண்களுக்கு வென்ட்டிலேட்டர் தேவைப்படுகிறது. 35 சதவீத பெண்கள் குறைந்தபட்சம் நுரையீரல் வீக்கம், சிறுநீரக செயலிழப்பு, ரத்த உறைவு, கடுமையான சுவாசக்குழாய் நோய், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான சிக்கல்களையாவது சந்திக்க நேரிடுகிறது.
வயிற்றுக்குள்ளேயே குழந்தை இறப்பது அல்லது பிறந்தவுடன் இறப்பது போன்ற சிக்கல்களை 14-ல் ஒரு எக்லாம்சியா பிரச்னை உள்ளவர்கள் சந்திக்கிறார்கள்.எக்லாம்சியாவுக்கு முந்தைய ப்ரீ எக்லாம்சியா(Pre-eclampsia) என்ற கருவுற்ற 20 வாரங்களுக்குள் உள்ள நிலையில் காணப்படும் சில அறிகுறிகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் பிரசவ நேர வலிப்பால் ஏற்படும் தாய், சேய் மரணம் போன்ற ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும்.’’
ப்ரீ எக்லாம்சியா என்றால் என்ன?
‘‘ஒரு சில பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் உறுப்புகள் குறிப்பாக சிறுநீரகம் அல்லது ஈரல் செயலின்மை ஏற்படலாம். இதுபோன்ற பேறு காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை ப்ரீ எக்லாம்சியா என்கிறோம்.’’
ப்ரீ எக்லாம்சியாவுக்கான காரணங்கள் என்ன?
‘‘பேறு காலத்தில் ப்ரீ எக்லாம்சியா ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. கருப்பைக்குப் போதிய ரத்த ஓட்டம் இல்லாமை. (இந்நிலை பொதுவாகப் பனிக்குடத்துடன் தொடர்புடையது.) சில நேரங்களில் நோய் எதிர்ப்பு அமைப்பின் இயக்கமின்மை காரணமாகலாம்; ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு, வளரும் கரு மற்றும் கருப்பையின் ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்; சில பெண்களின் மரபணுக்களும் ப்ரீஎக்லாம்சியா பாதிப்புக்கு காரணமாகலாம்.’’
ப்ரீ எக்லாம்சியாவால் பாதிப்பிற்கு உள்ளாகும் பிரிவில் உள்ளவர்கள் யார்?
* இளம் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ப்ரீ எக்லாம்சியாவுக்கான வாய்ப்பு அதிகம்.
* முதல் பேறுகாலத்தின் போது ப்ரீ எக்லாம்சியாவுக்கான அபாயம் அதிகபட்சமாகும்.
* அதீத எடை உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
* இரட்டைக் கரு அல்லது அதற்கும் மேற்பட்ட கருக்களைச் சுமக்கும் பெண்களும் கவனமுடன் இருக்க வேண்டும்.
* குடும்பத்தில் யாருக்கேனும் ப்ரீஎக்லாம்சியா தனிப்பட்ட அல்லது குடும்ப வரலாறு இருப்பின் முன் எச்சரிக்கை தேவை.
* நாள்பட்ட ரத்த அழுத்தத்துக்காக ஏற்கனவே சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால் ப்ரீஎக்லாம்சியா வாய்ப்பு அதிகரிக்கும்.
* இன்விட்ரோ ஃபெர்டிலைசேஷன் முறையில் கருத்தரிப்புக்கான சிகிச்சை மேற்கொண்டிருக்கும் பெண்களுக்கும் ப்ரீ எக்லாம்சியா பிரச்னை
ஏற்படக் கூடும்.
ப்ரீ எக்லாம்சியா அடையாளங்கள் மற்றும் நோய்க்குறிகள் என்னென்ன?
‘‘சில நேரங்களில் ப்ரீஎக்லாம்சியா எந்த விதமான அடையாளங்களோ, நோய்க்குறிகளோ இன்றி தாக்கும். நோய்க்குறிகள் இருந்தால் அவை ரத்த அழுத்தம் இரு முறைகளுக்கு மேல் 140/90 அளவைத் தாண்டும். தலை சுற்றல் அல்லது வாந்தி, கடுமையான தலைவலி, குறைந்த அளவு சிறுநீர் வெளியேறுதல், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைதல், ஈரல் செயல்பாடு பரிசோதனை இயல்பற்று இருத்தல், மூச்சுத் திணறல், சிறுநீரில் புரதச்சத்து அதிகரித்தல், வலது பக்கம் விலா எலும்புக்குக் கீழே மேற்பகுதியில் வயிற்று வலி, திடீர் எடை அதிகரிப்பு மற்றும் வீக்கம். இயல்பான பேறுகாலத்தின் போதும் இது ஏற்படலாம் என்பதால் மேற்கொண்ட பரிசோதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும்.’’
மருத்துவரை எப்போது பார்ப்பது?
‘‘மருத்துவ நிபுணர் ஒவ்வொரு பேறுகாலத்தின் போதும் கர்ப்பிணிப் பெண்ணை கண்காணிக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும், நோய்க் குறிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் தொடர்ந்து மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறும் போது ப்ரீஎக்லாம்சியா இருப்பின் எச்சரிக்கையாக இருக்க முடியும். மருத்துவரைச் சந்திக்கும் போது, மேற்கண்ட நோய்க்குறிகள் குறிப்பாக, முதல் பேறுகாலத்தில் தோன்றினால் உடனடியாக அவற்றின் விவரங்களை மருத்துவருக்குத் தெரிவிக்க வேண்டும்.’’
ப்ரீ எக்லாம்சியாவுக்கான பரிசோதனைகள் என்னென்ன?
‘‘ரத்தப் பரிசோதனைகள் செய்வதன் மூலம் ஈரல், சிறுநீரகம், ரத்தத் தட்டணுக்கள் ஆகியவை இயல்பாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். சிறுநீரகப் பகுப்பாய்வு பரிசோதனை மூலம் சிறுநீரில் 24 மணி நேரத்தில் புரதச்சத்தின் அளவைத் தெரிந்து கொள்ளலாம். புரதம் கிரியேடினைன் விகிதத்தை சிறுநீர் ரேண்டம் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம். கரு அல்ட்ரா சவுண்ட், அழுத்தம் இல்லா நிலைக்கான பரிசோதனை அல்லது பயோ பிசிகல் புரொஃபைல் மூலம் கண்டுபிடிக்கலாம்.’’
ப்ரீ எக்லாம்சியாவின் அபாயம்?
‘‘பல அபாய அம்சங்கள் சொல்லப்பட்டாலும், ரத்தத்தில் உள்ள ஒரு சில குறியீடுகளே ப்ரீ எக்லாம்சியா நோயைக் கண்டறியும். இதை கண்டறிவதற்கும், மற்றும் அதற்கான சிகிச்சையை தொடங்குவதற்கும் பனிக்குடம் க்ரோத் ஃபேக்டர் (Placenta Growth Factor- PLGF ) சோதனை மிக முக்கியப் பரிசோதனை ஆகும். ப்ரீஎக்லாம்சியா நோய்க்குறி அறிதலின்போதும், நோய் முற்றிய நிலையிலும், பெண்களின் சீரம் மற்றும் சிறுநீரக PLGF பரிசோதனை அளவுகள் குறைந்தே காணப்படும்.’’
இதிலுள்ள சிக்கல்கள் என்ன?
‘‘ப்ரீஎக்லாம்சியா கடுமையாக இருக்கும் பட்சத்தில் தாய், சேய் ஆகிய இருவரையும் காப்பாற்ற முன் கூட்டியே குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதா என்று கண்டறிய வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாக கருப்பையிலிருந்து பனிக்குடம் பிரிந்து செல்வதற்கான அபாயம் அதிகம். ப்ரீ எக்லாம்சியாவுக்கு சரியான சிகிச்சை அளிக்காமல் முற்றிய நிலையில் வலிப்பு நோய் ஏற்படக் கூடும். ப்ரீ எக்லாம்சியா காரணமாகப் பனிக்குடத்துக்குப் போதிய ரத்தம் செல்லாமல் குறையும் நிலையில், கருவுக்குக் குறைந்த அளவே ஊட்டச்சத்து கிடைக்கும். இது கருவின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும்.’’
ப்ரீ எக்லாம்சியாவைத் தடுப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு?
‘‘ப்ரீ எக்லாம்சியாவைக் குறிப்பாக அதிக அபாய கட்டத்தை சிறப்பாக மேலாண்மை செய்யத் தொடக்கத்திலேயே அதைக் கண்டுபிடித்துச் சிகிச்சை எடுத்துக் கொள்வது ஒன்றுதான் சிறந்த வழி. மருத்துவரைக் கலந்து ஆலோசிக்காமல் மாத்திரை, மருந்துகளையோ, வைட்டமின், மினரல் மாத்திரைகளையோ எடுத்துக் கொள்ள வேண்டாம். கர்ப்பகால முழுவதுமே மருத்துவ ஆலோசனை முக்கியமாகும்.’’
ப்ரீ எக்லாம்சியா பாதிப்பு இருக்கும்போது, தாயையும், சேயையும் அது எவ்வாறு பாதிக்கும்?
‘‘தாயைப் பொருத்தமட்டில் உடலுறுப்பு பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், வலிப்பு போன்ற பாதிப்புகளும், குழந்தைக்கு மெதுவான கரு வளர்ச்சி, குறைப் பிரசவம், நஞ்சுக்கொடி தடங்கல்களும் ஏற்படலாம்.
’’ப்ரீ எக்லாம்சியாவுக்கான சிகிச்சை…‘‘பிரசவம் ஆவதற்கு இன்னும் சில காலம் ஆகுமென்றால் மருத்துவர் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பேறு காலத்தில் ரத்த அழுத்தத்தை குறைப்பதற்காக கொடுக்கப்படும் பல மாத்திரைகள் ஆபத்தானவை என்பதால் சரியான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை மருத்துவர் உறுதிப்படுத்த வேண்டும்.
கடுமையான ப்ரீ எக்லாம்சியா சிண்ட்ரோம் இருப்பின் அவரது ஈரலைத் தற்காலிகமாக மேம்படச் செய்யவும், ரத்தத் தட்டணுக்கள் மேம்படவும், பேறு காலத்தை நீட்டிக்கவும் ஸ்டீராய்ட்ஸ் மருந்துகள் வேலை செய்யும். வலிப்பு இருந்தால், அதை சரிவர கையாள, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முழுமையான ஓய்வு முக்கியம். பிரசவத்துக்கு முன்பே மருத்துவமனையில் உள்ளிருப்பு நோயாளியாக இருந்து சிகிச்சை பெறுவது சிறந்தது.’’
Average Rating