நம்பிக்கை அளிக்கும் தீப ஒளி திருநாள்!! (மகளிர் பக்கம்)
‘ஹமாரி ஆஷா’ எனும் இந்தி வார்த்தைக்கு எங்கள் நம்பிக்கை என்று பொருள். ஹரியானாவில் இயங்கி வரும் இந்த திட்டம், கிராமப்புற பெண்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி அவர்களது மேம்பாட்டிற்கு உதவும் ஒரு முயற்சியாகும்.ஹமாரி ஆஷா, ராமன் காந்த் முன்ஜால் அறக்கட்டளையால் வழி நடத்தப்படுகிறது. மிகவும் பின் தங்கிய கிராமங்களில் வாழும் அனைத்து பெண்களும் ஒன்றிணைந்து பொருளாதார ரீதியான சுதந்திரத்தைப் பெற இந்த திட்டம் உதவி வருகிறது. பெண்கள் இந்த திட்டங்களில் இணைந்து மாஸ்க்குகள், தீபாவளி பண்டிகை அகல்விளக்குகள், மெழுகுவர்த்தி, டேபிள் நாப்கின்கள் மற்றும் பல பரிசுப் பொருட்களை உருவாக்கி விற்கின்றனர்.
பெண்கள் உருவாக்கும் இந்த பொருட்கள் ஹமாரி ஆஷா இணையதளத்தில் விற்பனையாகின்றன. மேலும், பிரத்யேகமாக இந்தியாவிற்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கும் ஸ்டால் அமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் பங்குபெறும் பெண்கள் பலர், சுயமாகச் சிறுதொழிலில் பயிற்சி பெற்று, தங்கள் கிராமங்களில் தொழில்முனைவோராகவும் மாறியுள்ளனர்.
2009ல் ஆரம்பிக்கப்பட்ட ஹமாரி ஆஷா திட்டத்தின் மூலம், ஹரியானாவில் உள்ள தாருஹேரா நகரைச் சுற்றியுள்ள பல கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அவர்கள் உருவாக்கும் அகல்விளக்குகள் கணிசமான வருமானத்தை அளித்து பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவர்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. தீபாவளி பரிசு பொருட்களும், அகல்விளக்குகளும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு பல கார்ப்பரேட் நிறுவனங்களிலும் ஸ்டால்கள் அமைக்கப்பட்டு மொத்தமாகவும் விற்கப்படுகிறது. பண்டிகை காலங்கள் அல்லாத மற்ற நேரங்களில் ஜூட் பைகள், டேபிள் துணிகள், லஞ்ச் பேக்குகள், சிட்ரோனெல்லா எனப்படும் கொசுக்களை அழிக்கும் தாவரத்திலிருந்து உருவாக்கப்படும் மெழுகுவர்த்திகள் என பல பொருட்களை செய்து நிலையான வருமானத்தை ஆண்டு முழுவதும் பெறுகின்றனர்.
1992ல் உருவாக்கப்பட்ட ராமன் காந்த் முன்ஜால் அறக்கட்டளை, இதுவரை சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கான பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதில் குறிப்பிடும்படியாக அவர்களது ராமன் முன்ஜால் வித்யா மந்திர் எனும் பள்ளி, ஹரியானாவில் கிராமப்புற மாணவர்களுக்குக் குறைந்த விலையில் தரமான கல்வியை அளித்து வருகிறது. இந்த பள்ளியிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1600 மாணவர்கள் தங்கள் பள்ளிக் கல்வியை வெற்றிகரமாக முடிக்கின்றனர்.
பெண்களுக்கென தொழிற்பயிற்சி/ திறன் மேம்பாடு வகுப்புகளையும் இவர்கள் நடத்தி வருகின்றனர். தையல் வகுப்புகள் மூலம் நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தற்போது சொந்தமாகவே பொட்டிக் கடைகளை திறந்து நடத்தி வருகின்றனர், சிலர் ஆடை உற்பத்தி நிலையங்களிலும் வேலை செய்கின்றனர். 2017ல் தொடங்கப்பட்ட 6 மாத அழகு பயிற்சி வகுப்புகள் மூலம் சொந்தமான அழகு நிலையங்களை நிறுவியோ அல்லது வேறு அழகு சாதன நிறுவனங்களில் வேலை செய்யும் வாய்ப்போ உருவாக்கிக் கொடுக்கப்படுகிறது. இதுதவிர கணினி படிப்பிற்கான டிப்ளமோ வகுப்புகளும் கிராமப்புறங்களில் நடத்தப்படுகிறது. இதில் குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பினரும் பங்குபெற்று பலன் அடைகின்றனர்.
மேலும் கொரோனாவின் கோரத் தாண்டவத்தின் போது 100 ஆஷா பெண்கள் இணைந்து ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் தொலைதூர கிராமங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட துணி மாஸ்க்குகளை உருவாக்கியுள்ளனர். தங்களுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் மூலம் அதை இலவசமாகவும் எளியவர்களுக்கு அளித்துள்ளனர்.
இந்த திட்டத்தில் இணைந்திருக்கும் பெண்கள் பொதுவாக வருடத்தில் 4-5 மாதங்கள் மட்டும் பண்டிகை காலங்களில் வேலை செய்வார்கள். சிலர் ஆண்டுதோறும் மற்ற கைவினைப் பொருட்களையும் செய்து பழகுவார்கள். ஹமாரி ஆஷாவில் விற்பனையாகும் ஒவ்வொரு பொருளும் ஒரு குடும்பமே முன்னேற உதவுகிறது.
Average Rating